திரையுலகம் கண்ட அதிசயப் பிறவி! #47YearsOfRajinikanth

திரையுலகம் கண்ட அதிசயப் பிறவி! #47YearsOfRajinikanth

ஜினிகாந்த்…

தமிழ் சினிமாவில் 47 ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தில் நான்கே நான்கு காட்சிகளில் மட்டுமே வந்து போன ஒரு முகம்… அடுத்த இரண்டே ஆண்டுகளில் ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்ந்து, இன்று வரை அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். இந்திய சினிமா மட்டுமல்ல, உலகளவில் கொண்டாடப்படும் உன்னத கலைஞராகத் திகழும் ரஜினிகாந்த், திரைத்துறைக்கு வந்து 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கே பாலச்சந்தர் என்ற திரையுலக மேதையால் அபூர்வ ராகங்களில் அறிமுகமானவர் ரஜினிகாந்த், அந்தப் படம் வெளியானது 15 ஆகஸ்ட், 1975.

அறிமுகமான முதல் படத்திலிருந்தே தனது வித்தியாசமான உடல்மொழி, விதவிதமான ஸ்டைல்கள், யாரும் வராத வசன உச்சரிப்பு, மிக இயல்பான நடிப்பு, எந்த வேடம் என்றாலும் அந்த வேடமாகவே மாறிப் போகும் தன்மை போன்றவற்றால் மக்கள் மனதில் அழுத்தமாக இடம்பிடித்தார்.

ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்தாலும், அந்தப் படங்களின் ஹீரோவை விட அதிகம் கவர்ந்த, பேசப்பட்ட நடிகர் என்ற பெருமை ரஜினிக்கு மட்டுமே உண்டு.

ஒரு உதாரணம்… நான் வாழவைப்பேன் என்று ஒரு படம். நடிகை கேஆர் விஜயாவின் சொந்தப் படம். அதில் நாயகன் சிவாஜி கணேசன். அப்போது ரஜினிகாந்த் வேகமாக வளர்ந்து வரும் நடிகர். வில்லன் வேடங்களிலிருந்து நாயகனாக மாறியிருந்தார். நான் வாழவைப்பேன் படத்தில் ஏதாவது ஒரு வேடத்தில் ரஜினி தோன்ற வேண்டும், அது படத்தின் வர்த்தகத்துக்கு பெரும் துணையாக இருக்கும் என நினைத்த கேஆர் விஜயா, அதை ரஜினியிடமே கோரிக்கையாக வைக்க, மறுக்காமல் ஒப்புக் கொண்டார் ரஜினி. மைக்கேல் டிசூசா என்ற பெயரில் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளில் வருவது போன்ற பாத்திரம் அவருக்கு. படம் முடிந்த முன்னோட்டக் காட்சி பார்த்த நாயகன் சிவாஜி கணேசன், ‘இந்தப்பய (ரஜினி) என் பாத்திரத்தையே காலி பண்ணிட்டானேய்யா… இது தெரிஞ்சிருந்தா நானே அந்த வேஷத்தைப் பண்ணியிருப்பேனே!” என்று வாய்விட்டுச் சொன்னாராம்.

கமல் ஹாஸனுடன் இணைந்து 18 படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். அவற்றில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நட்புக்காக ஒரிரு காட்சிகள் வருவார் (உ.ம்: தாயில்லாமல் நானில்லை). மற்ற படங்களில் கமல்தான் நாயகனாக இருப்பார். ஆனால் எதிர் நாயகன் அல்லது குணச்சித்திர வேடங்களை ஏற்ற ரஜினிதான் மக்கள் மனங்களை அள்ளியிருப்பார். அவர்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், அவள் அப்படித்தான், அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது… இந்தப் படங்கள் அனைத்திலுமே ரஜினியின் கொடிதான் ஓங்கிப் பறக்கும்!

இந்திப் படமான கிராஃப்தாரில் அமிதாப், கமல் நாயகர்கள். ஹுசைன் என்ற பாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருவார் ரஜினிகாந்த் (சிகரெட்டை தூக்கிப் போட்டு துப்பாக்கியால் சுட்டு பற்ற வைப்பாரே அந்தக் காட்சி). ஆனால் அவரது அந்த சிறப்புத் தோற்றம் படத்தின் வசூலை தாறுமாறாக்கியது வரலாறு.

வில்லன், குணச்சித்திர வேடங்களை விட்டு, முழுமையாக நாயகனாக மட்டுமே நடிக்கத் தொடங்கிய பிறகு, ரஜினியின் திரைச் சந்தை மதிப்பு ஒருநாளும் பின்னடைவைச் சந்தித்ததே இல்லை. கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் அவர் மட்டுமே தமிழ் சினிமாவை ஆள்கிறார்… அவர் கொடி மட்டுமே உச்சத்தில் பறக்கிறது.

ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், ஜானி, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களுக்குப் பிறகு ரஜினி என்ற நடிகரை சூப்பர் ஸ்டார் பிம்பம் காலி செய்துவிட்டதாக சிலர் தொடர்ந்து புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள், படித்திருப்பீர்கள். உண்மையில் இதைவிட பெரிய அபத்தக் குற்றச்சாட்டு ஏதுமில்லை. அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த அண்ணாத்த வரை, தான் ஏற்றப் பாத்திரங்களாகவே மாறி ரசிகர்களை திரையில் கட்டிப்போட்ட சாதனையாளர் ரஜினிகாந்த் ஒருவர்தான். மிகை நடிப்பு அல்லது பாத்திரத்துக்கு தேவையில்லாத திணிப்புகள் என எதையுமே அவர் தனது படங்களில் செய்ததில்லை.

“ரஜினிகாந்தைப் போன்ற உண்மையான, திறமையான நடிகனை நான் பார்த்ததில்லை. இயக்குநர்களின் நடிகர் என்பார்களே… அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ரஜினிகாந்த். தனது யோசனையைக் கூட இயக்குநர் அனுமதி இல்லாமல் காட்சியில் திணிக்காதவர். அதே நேரம் அவர் சொல்லும் யோசனை நிராகரிக்க முடியாததாக இருக்கும். நான் அவருக்காக 10 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கேன். அதைவிட அதிகமான படங்களில் உடன் நடிச்சிருக்கேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன் அவர்,” என்று 12.12.12 கொண்டாட்டத்தின்போது தெரிவித்தவர் அமரர் இயக்குநர் விசு.

எழுபதுகளின் இறுதியில் நாயகனாக ஆனதிலிருந்து, எண்பதுகளில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, ரஜினி நடித்தாலே வெற்றிப் படம்தான் என்ற நிலை உருவான பின்னரும்கூட அவர் இயக்குநர்களின் நடிகராகவே நடந்து கொண்டார்.

எண்பதுகளில் மத்தி வரை ஆண்டுக்கு 5 தமிழ்ப் படங்கள், இரண்டு அல்லசு மூன்று இந்திப் படங்கள், சில தெலுங்குப் படங்கள் என நடித்துக் கொண்டிருந்த ரஜினி, பின்னர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்துக் கொண்டார். 1986 தொடங்கி 90 வரை ஆண்டுக்கு மூன்று தமிழ்ப் படங்கள் நடித்தவர், 1995-க்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே நடிப்பது என்ற தன் முடிவை அறிவித்தார். எத்தனையோ பேர் வற்புறுத்தியும் கூட அதை மாற்றிக் கொள்ளவே இல்லை. 1995-ல் முத்து வெளியானது. அடுத்த ஆண்டு எந்தப் படமும் லெளியாகவில்லை. ஒரு ஆண்டு இடைவெளி விட்டு அருணாச்சலம் படத்தை வெளியிட்டார் (1997 ஏப்ரல் 10). மீண்டும் ஓராண்டு இடைவெளி. 1999-ல் படையப்பா. பாபா படத்தின் தோல்வியால், அடுத்த படத்தை வெளியிட மூன்றாண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்ட ரஜினி, சந்திரமுகியில் குதிரையாக டக்கென்று எழுந்து விஸ்வரூபமெடுத்தார்.

அந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் சினிமா வர்த்தகமே முற்றாக மாறிப் போனது. சந்திரமுகிக்குப் பிறகு ஏவிஎம்முக்காக ரஜினி நடித்த படம் சிவாஜி. அன்றைய தேதிக்கு பிரமாண்டத்தின் உச்சம் அந்தப் படம். தமிழ் சினிமா வர்த்தகத்திலும் பணமழை கொட்ட வைத்த படம். வட நாட்டவர்களை வாய் பிளக்க வைத்தது அந்தப் படத்திஇன் வசூல். வெளிநாடுகளில் அதிகாலைக் காட்சிகளுக்காக மக்கள் வரிசையில் நின்ற அதிசயத்தை அந்தந்த நாட்டுக்காரர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தது வரலாறு. எந்திரன் இன்னுமொரு மைல்கல். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு படம் வந்திருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மிக விமரிசையாக செய்திருந்தார் ரஜினிகாந்த். அந்தப் படம் ராணா. ரஜினியே வர்ணித்த மாதிரி ‘தி அல்டிமேட் வில்லன்’ கதை. ஆனால் படத்துக்கான பூஜை போட்ட அன்றே ரஜினியின் உடல் நிலை பாதித்தது. கிட்டத்தட்ட மரணத்தின் எல்லைக்கே போனவரை மீட்டுக் கொண்டு வந்தனர் மருத்துவர்கள். ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷாரூக்கானின் ரா ஒன் படத்தில் ஒரே ஒரு காட்சியில் சிட்டி ரோபோவாக தோன்றினார் ரஜினி. அந்தக் காட்சிக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு, ஷாரூக்கானை மிரள வைத்தது. தொடர்ந்து தனது அடுத்த படத்தில் ரஜினி ரசிகனாக மாறி லுங்கி டான்ஸ் ஆடி வசூலை அள்ளினார் ஷாரூக்.

மீண்டும் மூன்றாண்டுகள் இடைவெளிவிட்டு கோச்சடையான், லிங்கா படங்களில் நடித்தார். அந்தப் படங்களை ஓடவிடாமல் செய்துவிட வேண்டும் என திரைத்துறையைச் சேர்ந்த ஒருசிலரே வரிந்து கட்டிக் கொண்டு வேலைப் பார்த்ததும் நடந்தது.

இரண்டாண்டுகள் கழித்து கபாலி வெளியானது. கலைப்புலி தாணு இந்தப் படத்தை விளம்பரப்படுத்திய விதம் சர்வதேச அளவில் விழிகளை விரிய வைத்தது. படம் மிகப்பெரிய வெற்றி. வெளியான முதல் வாரத்திலேயே ரூ 300 கோடி வசூல் என செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்தார் தாணு. அடுத்த படமான 2.0 வசூலில் புதிய உயரம் தொட்டது. ரூ 800கோடிக்கும் மேல் வசூல் குவித்த படம் அது. தமிழில் இன்று வரை உச்ச வசூல் 2.0தான். அதற்குப் பிறகு வந்த பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்கள் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், அவரது நடிப்பில், படங்களின் வசூலில் யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு அமைந்தன.

ரஜினியின் திரை வாழ்க்கையில் அவரை மனதளவில் பாதித்தது இரண்டு படங்களின் தோல்விகள். ஒன்று ஸ்ரீராகவேந்திரர். இன்னொன்று பாபா. இரண்டுமே அவரது சொந்த விருப்பத்தின்பேரில் எடுக்கப்பட்ட படங்கள். ராகவேந்திரரை ரஜினிக்காக கே பாலச்சந்தர் தயாரித்தார். பாபாவை ரஜினியே தயாரித்தார். ராகவேந்திரர் படத்தால் ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் பல மடங்கு தனது குருநாதருக்கு திருப்பிக் கொடுத்துவிட்டார் ரஜினி. பாபாவினால் ஒருவர் கூட நஷ்டம் என்று சொல்லக் கூடாது என நினைத்த ரஜினி, படம் வெளியான சில நாட்களிலேயே படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும், அவர்கள் நஷ்டம் என்று குறிப்பிட்ட தொகைக்கு மேல் சில லட்சங்களைச் சேர்த்து திருப்பிக் கொடுத்துவிட்டார். திரையுலக வரலாற்றில் இப்படியொரு நிகழ்வு எங்கும் நடந்ததில்லை, எந்த நடிகரும் செய்ததில்லை எனும் அளவுக்கு ஒரு செயலைச் செய்துகாட்டினார் ரஜினி. ஆனால் அதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சிலர், ரஜினி படம் வெளியாகும் போதெல்லாம் நஷ்டக் கணக்கு காட்டி அவரிடம் பணம் வசூலிக்கும் வேலையைச் செய்தனர். குசேலன், லிங்கா படங்களின் வெளியீட்டின்போது ரஜினியிடம் பணம் கேட்டு உண்ணாவிரதம், போராட்டம் என்றெல்லாம் மிகக் கீழ்த்தரமாக சிலர் நடந்து கொண்டபோதும், ரஜினி ஒருபோதும் தன் எண்ணங்களை வெளியிடவே இல்லை. அமைதியாகவே அனைத்தையும் கடந்துபோனார்.

இந்த 47 ஆண்டுகளில் பலருக்கும் தெரிந்தது ரஜினி வெற்றி மேல் வெற்றிகளாகப் பெற்றவை மட்டும்தான். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் வேறு எந்த நடிகரும் சந்தித்திராதவை. திரையுலகில் ரஜினி சந்தித்த அந்த பிரச்சினைகள் எதற்கும் அவரால் கோடிகளில் புரண்ட திரையுலகம் கைகொடுக்கவே இல்லை என்பதே உண்மை. ‘ரஜினியால் தமிழ் திரையுலகம் நன்மை அடைய வேண்டும்… தனிப்பட்ட முறையில் நமக்கு வருமானம் குவிய வேண்டும்…’ என்பதில் தெளிவாக இருந்த தமிழ் சினிமாக்காரர்கள், அவருக்கு, அவரது படங்களுக்கு பிரச்சினை என்று வரும்போது வாய்மூடி வேடிக்கைப் பார்த்தனர். காவிரி உண்ணாவிரதங்கள், பாபா, குசேலன் என அனைத்துப் பிரச்சினைகளையும் சில நண்பர்கள் துணையுடன் ரஜினியே சந்தித்து தீர்வு கண்டார் என்பதே வரலாறு.

இவற்றையெல்லாம் வெளியிலிருந்து வேடிக்கைப் பார்க்கும் மனப்பக்குவம் அவருக்கு வந்துவிட்டது. காரணம் அவர் தேர்ந்தெடுத்த ஆன்மீகப் பாதை. ‘எல்லாத்தையும் அவன் பாத்துப்பான்…’ என்ற மனநிலை. அதுவே அவரை தமிழ் சினிமாவின் சாதனை நாயகனாக மாற்றியது. தமிழ் சினிமாவின் நூறாண்டு வரலாற்றில் 45 ஆண்டுகள் உச்ச நட்சத்திரமாகவே ஜொலித்தவர்கள் யாருமில்லை. இனி அப்படி ஒருவர் திகழ வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை!

‘ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் போனா அங்க ஒரு மரம் இருக்கும். மரத்துல ஒரு கிளிக்கூண்டு. அதுக்குள்ளதான் மகாராஜாவோட உயிர் இருக்கு’ என்று அம்புலிமாமா கதைகளில் சொல்வார்களே… அப்படித்தான் ரஜினியின் உயிரும். ஆன்மீகத்தின் உச்ச நிலை, அரசியலின் உச்ச பதவி, ஏன் முதல்வர் பதவியே அவருக்கு முன் வைத்தாலும் அவரது தேர்வு சினிமாவாகத்தான் இருக்கும். காரணம் அவரது உயிர் இருப்பது இந்த சினிமாவில்தான். அதுதான் இந்த 72 வயதிலும் அவரை அண்ணாத்த, ஜெயிலர், அடுத்து… அடுத்து என படங்கள் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது!

வினோ

குறிப்பு: இந்த 47 ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தின் ஒரு மொத்தமான பார்வைதான் இந்தக் கட்டுரை. ரஜினியின் திரையுலக சாதனைகள், சந்தித்த பிரச்சினைகள். வசூல் விபரங்கள், திரைப்படங்களின் மொத்தப் பட்டியல் போன்றவை தனத்தனிக் கட்டுரைகளாக வெளிவரும்.

 

Leave a Reply

Your email address will not be published.