பொன்னியின் செல்வன் : கதையின் காலம், பின்னணி மற்றும் பாத்திரங்கள்

பொன்னியின் செல்வன் : கதையின் காலம், பின்னணி மற்றும் பாத்திரங்கள்

பொன்னியின் செல்வன் புதினம் கொஞ்சம் கற்பனை, நிறைய வரலாற்றுச் சம்பவங்களோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக இந்தக் கதையை அமைத்துள்ளார் அமரர் கல்கி.

இந்தக் கதையில்பல விதமான கதை மாந்தர்கள் வருகின்றனர்.

விஜயாலய சோழன்(கி.பி 847 – 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 – 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களில் புகழ்பெற்ற இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் போன்றவர்களுக்கு சோழப் பேரரசை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது.

முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையில் நடந்த இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அளவிலேயே நின்றது.

இந்தக் காலகட்டத்திற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன. ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது.

மாவீரனாகக் குறிப்பிடப்படும் ஆதித்த கரிகாலன் இராஷ்டிரகூடசர்களுடன் போரிட்டு தொண்டை மண்டலத்தை மீண்டும் கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்த பட்டத்திற்கான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கப்படுகிறது. (காட்டுமன்னார்கோயில் அருகில்)

திருவாலங்காட்டுச் செப்பேடுகள், “விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ரிய தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரச பதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்,” என்று தெரிவிக்கின்றன.

இந்தக் காலகட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது.

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார். வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயிலில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்திருக்கிறார்.

கேஏ நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், டிவி சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார் கல்கி. இதனை புதினத்தின் இறுதிப் பகுதியில் தன்குறிப்பாகக் குறிப்பிட்டுள்ளார் கல்கி.

கதாபாத்திரங்கள்

  • வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன்
  • அருண்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்
  • ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்
  • குந்தவை பிராட்டியார் (சுந்தரசோழரின் மகள்)
  • பெரிய பழுவேட்டரையர்
  • நந்தினி
  • சின்ன பழுவேட்டரையர்
  • ஆதித்த கரிகாலர்
  • சுந்தர சோழர்
  • செம்பியன் மாதேவி
  • கடம்பூர் சம்புவரையர்
  • சேந்தன் அமுதன்
  • பூங்குழலி
  • குடந்தை சோதிடர்
  • வானதி
  • மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)
  • கந்தமாறன் (சம்புவரையர் மகன்)
  • கொடும்பாளூர் வேளார்
  • மணிமேகலை (சம்புவரையர் மகள்)
  • அநிருத்த பிரம்மராயர்
  • மதுராந்தக சோழர்
  • தியாக விடங்கர்: பூங்குழலியின் தந்தை மற்றும் கோடிக்கரையிலுள்ள கலங்கரை விளக்கத்தின் காவலர். மந்தாகினி தேவி மற்றும் வாணி அம்மாளின் தமையனும் ஆவார்.

 

-தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published.