Breaking News

‘எழுத்துலகுக்கு மிகப் பெரிய உதவியை செய்திருக்கிறார் ரஜினி’

Monday, February 6, 2012 at 3:43 pm | 1,325 views

‘எழுத்துலகுக்கு மிகப் பெரிய உதவியை செய்திருக்கிறார் ரஜினி’ – இலக்கியவாதிகள் பாராட்டு

ஜினி படம் ரிலீசானால், அவர் அடுத்த படம் ஆரம்பிக்கும் வரை, அதைப் பற்றித்தான் பேசுவார்கள், எழுதுவார்கள். படம் என்றல்ல.. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் தாக்கமும் அப்படியே.

‘எஸ் ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழா மூலம் ரஜினி என்ற மிகப் பெரிய ஆளுமை, எழுத்தாளர்களை நோக்கி ஒரு பெரும் கூட்டத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இது தமிழுக்கு நல்லது’, என தமிழ் இலக்கியவாதிகள் பலரும் பாராட்ட ஆரம்பித்துள்ளனர்.

ரஜினியை வைத்து இலக்கியம் வளர்ப்பதா என ஆங்காங்கே சிலர் அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நிறையப் பேருக்குத் தெரியாமலிருந்தது, அப்படியொரு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யச் சொன்னவரே ரஜினிதான் என்பது. எஸ் ராமகிருஷ்ணன் பாராட்டு விழா கூட்டத்தில் அதை தன் வாயாலேயே கூறவும் செய்தார் ரஜினி.

“நான் குணமடைஞ்ச பிறகு நானே ராமகிருஷ்ணன் வீட்டுக்குப் போய், அவரை பிக்கப் பண்ணிக்கிட்டு, அப்படியே சென்னையையெல்லாம் காரில் ஒரு ரவுண்ட் அடிச்சி, அரசியல், சினிமா, கலை, புத்தகங்கள்லருந்து எல்லா விஷயமும் பேசிட்டு, ராகவந்திரா மடத்துக்குப் போய் சாப்பிட்டு வந்தோம்.

அப்ப நான் கேட்டேன், இந்த மாதிரி விருது கிடைச்சிருக்காமேன்னு. ஆமா கிடைச்சிருக்குன்னாரு. உடனே வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு, ‘இவ்வளவு பெரிய விருது கிடைச்சிருக்கே, யாருக்குமே தெரியலியேப்பா அது. எப்டி அது எனக்கு தெரியாம போச்சு… எதுவும் விழா எடுக்கலையா’ன்னு கேட்டேன். ‘இல்ல இல்ல ஒண்ணும் பண்ணல.. நீங்க வந்தா செய்யறேன்’னார். நான் சரின்னு சொன்னேன். அப்டிதான் இந்த விழா நடந்தது…”

விழாவில் ரஜினி பேசும்போது கூறிய இன்னொரு விஷயம், “நான் எஸ்எஸ்எல்சிதான் படிச்சிருக்கேன். ஆனா வேற புத்தகங்கள் நிறைய படிச்சேன். அவைதான் இன்னிக்கு வரைக்கும் என் வாழ்க்கல ரொம்ப உதவியா இருக்கு. …எழுத்தாளர்கள் கஷ்டப்படக் கூடாது. நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் நல்ல சூழலில் இருக்க நாமெல்லாரும் துணை நிற்க வேண்டும்,” என்றதோடு, இளைஞர்களை புத்தகங்கள் வாங்கிப் படிக்கும்படி கேட்டுக் கொண்டார் ரஜினி.

புத்தகச் சந்தையில் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி, ‘இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நிலை தொடரணும்’, என்றார்.


“ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆளுமை கொண்ட ரஜினி இப்படிப் பேசியிருப்பது, மிக முக்கியமானது. இளைஞர்களிடையே பெரும் மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியது,” என இலக்கியவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய வாசகர்களை ஈர்க்கும்…

இதுகுறித்து, அன்றைய விழாவில் பங்கேற்ற பேராசிரியர் கு ஞானசம்பந்தன் கூறுகையில், “இளைஞர்கள் நிறைய படிக்கணும்னு சூப்பர் ஸ்டார் கேட்டுக்கிட்டார். ரஜினி அன்றைக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இலக்கிய உலகுக்கே தனி கவன ஈர்ப்பு கிடைச்சிருக்கு. தன்னுடைய பட வேலைகளுக்கிடையில், ஒரு எழுத்தாளனைக் கவுரவிக்க அவர் வந்தது அவர் எந்த அளவு  பெருந்தன்மை, நேர்மையாளர் என்பதைக் காட்டுகிறது. தீவிர இலக்கியத்தை நோக்கி பல புதிய வாசகர்களை ரஜினியின் வார்த்தை ஈர்க்கும் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது,” என்றார்.

ரஜினி செய்திருக்கும் பெரிய உதவி…

கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறுகையில், “இன்றைக்கும் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி பெரும்பான்மை தமிழ் மக்கள் தெரிந்து கொள்ளாமல்தான் உள்ளனர். உலகமறிந்த ரஜினி  இந்த இலக்கிய விழாவில் பங்கெடுத்து, எழுத்தாளர்களின் பணியைப் பற்றி பேசியதன் மூலம், எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிற மரியாதையும் கவனமும்தான் மிக முக்கியம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறார் இந்த இலக்கிய உலகுக்கு,” என்றார்.

எழுத்தாளர்களை மதிப்பவர்…

எஸ் ராமகிருஷ்ணன் கூறுகையில், “ரஜினி அவர்கள் எப்போதுமே எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துக்களையும் மதிப்பவர். அவர்கள் தன்னைப் பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்று தனிப்பட்ட முறையில் எதையும் கவலைப்படாத பெருந்தன்மையானவர். பல எழுத்தாளர்களை தன் வீட்டுக்கே வரவழைத்து பேசுவது அவருக்குப் பிடித்தமானது.  இந்த இயல் விருது பாராட்டு விழா என்பதே அவரது முயற்சிதான்,” என்றார்.

எழுத்தாளனின் தன்மானம் உணர்ந்தவர் ரஜினி மட்டுமே…

இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து இப்படிக் கூறுகிறார்: “ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் நினைத்தால் ராமகிருஷ்ணனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம். தரக்கூடிய பெருந்தகையாளர் அவர். ஆனால் அப்படிச் செய்தால் ஒரு எழுத்தாளனின் தன்மானம் பாதிக்கும். அதனால், கோடி கோடியாகக் கொடுத்தாலும் கிடைக்காத புகழையும் பெருமையையும் கவுரவத்தையும்… ஏன் புதிய வாசகர்களையும் எஸ் ராமகிருஷ்ணனுக்கு சூப்பர் ஸ்டார் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

மீன் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதில் நம்பிக்கை கொண்டவரல்லவா ரஜினி… அதனால்தான் இப்படி செய்திருக்கிறார். இது எஸ் ராமகிருஷ்ணனுக்கு எத்தனை உற்சாகத்தைத் தந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்க முடிகிறதல்லவா… அந்த உற்சாகத்துடன் அவர் இன்னும் எவ்வளவு நல்ல இலக்கியங்களைப் படைப்பார் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதல்லவா… அதான் ரஜினி எனும் மாபெரும் இலக்கிய ரசிகரின் மனசு!”

ஆஹா… எதிலும் வைரமுத்துவின் பார்வையே தனிதான்!

-என்வழி

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

3 Responses to “‘எழுத்துலகுக்கு மிகப் பெரிய உதவியை செய்திருக்கிறார் ரஜினி’”
 1. S. Sebastian says:

  Even I decided to re-open my chapter of life where I used to read lots and lots of books. For the past 10 to 15 years due to various reasons, I lost the habit of reading books. After this function, I decided to dust the old books in my cupboard and started reading it. That is the power of Superstar. Long live Thalaiva.

 2. J.Renugopal says:

  Really thalivar introduce a very good pathway to the youngster, bcos of thalivar only now sprituality has been introduce to the youngster(thalivar fans)the same way slowely thalivar will change the life style of the youngesters(good way of living)

 3. Kannan says:

  //மீன் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதில் நம்பிக்கை கொண்டவரல்லவா ரஜினி… அதனால்தான் இப்படி செய்திருக்கிறார். இது எஸ் ராமகிருஷ்ணனுக்கு எத்தனை உற்சாகத்தைத் தந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்க முடிகிறதல்லவா… ////

  .
  simply Supper …

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)