BREAKING NEWS
Search

அமரர் சுஜாதா!

அமரர் சுஜாதா!

IMG_20140227_142607_1

து 2002-ம் ஆண்டு. டெல்லி பிரஸ் தமிழ் இதழ்களின் பொறுப்பாசியராக இருந்த நேரம்.

அமரர் சுஜாதாவை தினமணியிலிருந்த காலத்தில் சிலமுறை சந்தித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். அந்த பழக்கத்தில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இதழுக்கு அவரது பேட்டியைக் கேட்டிருந்தேன். அவரது தி நகர் அலுவலகத்துக்கு அடுத்த நாளே வரச் சொல்லிவிட்டார்.

சம்பிரதாய பேட்டி மாதிரி வேண்டாம் என அவரும் நினைத்ததால், பத்திரிகை குறித்து, அதன் முன் நிற்கும் சவால்கள், நிறுவனப் பின்னணி குறித்தெல்லாம் பேசினார். என்னைப் பற்றி அன்றுதான் முழுமையாக விசாரித்தார்.

நானோ அவர் எழுதிய முதல் கதை.. அவரே எழுதிய கவிதைகள், நாவல்கள், விகடன் மவுன்ட் ரோடில் வைத்த கட் அவுட், ரத்தம் ஒரே நிற களேபரம், முதல் பாகத்தோடு நிற்கும் வசந்தகுமாரன் கதை, மத்யமர் கதை, சலவைக்காரி ஜோக், ஸ்ரீரங்கத்து தேவதைகள்… என அனைத்தையும் கிட்டத்தட்ட மனப்பாடம் செய்த மாணவன் மாதிரி ஒப்பிக்க, அந்த மேதை சிரித்தபடி, ‘நீங்க படிக்காத என் புத்தகத்தை, நான் இனிமேதான் எழுதணும் போலிருக்கு!’ என்றார் தனக்கேயுரிய அந்த அவசர வார்த்தைகளில்!

முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, அடுத்த முக்கால் மணி நேரத்துக்கு அவர் எனக்களித்த பேட்டியை, ஆறு பக்கங்களில் வெளியிட்டேன். சூப்பர் ஸ்டார் ரஜினி, அவரது நடிப்பு, குணங்கள் பற்றி அவர் பேசியது தனிப் புத்தகமாகவே வெளியிட வேண்டியது.

அப்போது என்னுடன் வந்த புகைப்படக்காரர் எடுத்த படங்களின் பிரதிகள் வேண்டும் என்றார் சுஜாதா. அவற்றை அடுத்த நாளே புகைப்படக்காரர் எடுத்துச் சென்றபோது, ‘என்னை இந்த அளவுக்கு எடுத்தது நீதான்னு நினைக்கிறேன்’ என்று பாராட்டினார்.

அப்போதெல்லாம் நான் அடர்த்தியான தாடியுடன்தான் இருப்பேன். சுஜாதாவையும் அந்த கோலத்தில்தான் பேட்டி கண்டேன்.

அந்தப் பேட்டி வெளிவந்த சில மாதங்கள் கழித்து, ஆனந்த விகடன் இதழைப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சி. நான் ஆசிரியராக இருந்த அந்தப் புதிய பத்திரிகையை சிறந்த வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கத்துக்கான பத்திரிகையாக அவர் தேர்வு செய்திருந்தார். அதை விகடனிலேயே வெளியிட்டுமிருந்தார். எத்தனை பெரிய மனது… ஆசீர்வாதம்!

அதைப் பார்த்த அடுத்த நாளே அவரைப் பார்க்க விரும்பி போன் செய்தேன். வீட்டுக்கு வரச் சொன்னார். அடுத்த அரை மணி நேரத்தில் போய் நின்றேன். பத்திரிகையின் சில பிரதிகளை அவரிடம் கொடுத்ததும் என்னைப் பார்த்து அவர் இப்படிக் கேட்டார்:

“ஆமா.. தாடிக்குள்ள மூஞ்சியோடு ஒருத்தர் என்னைப் பேட்டியெடுத்தாரே, அவர் எங்கே?” என்றார் குறும்பாக (தாடியை எடுத்துவிட்டிருந்தேன்!).

“சார்.. நான்தான் அது… !”

“தெரியுது.. இனி தாடி வேணாம்!” என்றார்  (அதற்குப் பின் ஒரு நாளும் தாடியோடு இருந்ததாய் நினைவில்லை!).

“தேங்க்ஸ் சார்.. இந்தப் பத்திரிகையை தேர்வு செய்து விகடனிலேயே நீங்கள் வெளியிட்டது பெரிய அங்கீகாரம்.. ,” என்றேன்.

“உங்களை மாதிரி இளைஞர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. விகடன் மாதிரி மூத்தவர்கள் அதற்கு துணை நிற்க வேணும்,” என்று கூறி, அரை மணி நேரம் அவர் எனக்குச் சொன்னவை, அடுத்த இரு சந்தப்புகளில் உரிமையோடு பேசியவைதான் இன்றும் உடன் நிற்கும் ஆசீர்வாதமாக நினைக்கிறேன்!

குறிப்பு: 2008, பிப் 27, சுஜாதா அமரரான தினம்.. உயிரற்றுப் படுத்திருந்த அந்த மேதையைப் பார்த்துவிட்டு வந்து, ரொம்ப நேரம் ஒரு படத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. அதன் பிறகு பலரும் அவரைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பதிவதைப் பார்க்கும்போதெல்லாம், அந்தப் புகைப்படத்தைத் தேடுவது என் வழக்கம். கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் தேடியதில் ஒரு நாள் கிடைத்துவிட்டது இந்த பொக்கிஷப் படம்!

வினோ

என்வழி ஸ்பெஷல்
8 thoughts on “அமரர் சுஜாதா!

 1. மிஸ்டர் பாவலன்

  பல போட்டோக்களில் வினோவைப் பார்க்கும் போது
  ஜீன்ஸ் அணிந்திருப்பதைப் பார்க்கிறேன்.

  சுஜாதா பேட்டி பற்றிய அறிய தகவல்களுக்கு நன்றி.
  மாலன் எனது உறவினர். முன்பு சாவியில் இருந்து
  சில காலம் வெளி வந்த ‘திசைகள்’ என்ற பத்திரிகையில்
  மாலன் பணிபுரிந்தார். சில நாவல்களை எழுதி உள்ளார்.
  தற்சமயம் ஏதோ ஒரு பெரிய பத்திரிக்கையின் நிர்வாக
  ஆசிரியராக உள்ளார். சுஜாதாவும், மாலனும் நண்பர்கள்.

  பேரறிஞர் குமரன் அவர்களை நேரிலோ, போட்டோவிலோ
  பார்த்ததில்லை. DD பொதிகை-யில் தேவாரப் பாடல்களுக்கு
  ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து slow -ஆக ஆ..ரம்பம்
  கொடுப்பார்! குமரன் அவர்களும் தமிழறிஞர் போல் இருப்பார்
  என நினைக்கிறேன்.

  என் வழி தனி வழி.. ஹி..ஹி..ஹி.. நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 2. குமரன்

  தாடிக்குள்ளே முகம் இருந்த ஆளைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இளம் வயதில் சாப்பிட்ட சாப்பாட்டில் இருந்த சத்தெல்லாம் தாடியிலே போய்விட்டதால்தான் சிறிய உடல்வாகு வந்து விட்டதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு அப்போதைய தாடி செழுமையாக இருக்கிறது! (முடியில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது – விஞ்ஞானம்)

  தாடிக்குள் முகம் கண்டுபிடிக்கக் கஷ்டம். பல புகைப்படங்களுக்குள் இந்தப் புகைப்படம் கண்டுபிடிப்பதும் கஷ்டம் – என்னே ஒரு ஒற்றுமை. ஒரு ஆசை – மற்ற புகைப்படம் ஒவ்வொன்றும் சொல்லும் கதை என்னவாக இருக்கும்?

 3. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  சுஜாதா இளைஞர்களை அதிலும் குறிப்பாக இளம் எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்குவிக்கும் நல்லுள்ளம் கொண்டவர். அவர் எழுத்தில் மட்டும் உயரம் அல்ல, ஆளும் அண்ணாந்து பார்க்கும் உயரம்தான். அனிதா இளம் மனைவி என்றொரு துப்பறியும் தொடர் குமுதத்தில் வந்தது. அதில் ஓரிடத்தில் “படியில் இறங்கினாள்” என்று வரும். அதை


  ங்
  கி
  னா
  ள்.

  என்று குமுதத்தில் பதிக்கச் செய்திருந்தார். இந்தக் குறும்பு மிக இளம் பிராயத்தினருக்கே உரித்தானது. ஆனால் படித்ததும் ஆளை அப்படியே கவரும் உத்தி. சுஜாதாவின் சிந்தனையே தம்மை விடவும் பல பத்தாண்டுகளுக்குக் குறைவான வயதினரின் பார்வையைக் கொண்டது. அவர் உடலில் வயது கூடியதே அன்றி சிந்தனையில் வயது கடைசி வரை அப்படியே இருந்தது. எனவேதான் அவர் இளைஞர்களை ஆதரித்தார்.
  வயது வித்தியாசம் இன்றி நண்பராகப் பழகினார்.

  அவரை ஒரு முறை நேரில் சந்தித்தபோது நான் அவரிடம் சொன்னேன். உங்கள் எழுத்து மட்டும் அல்ல, நீங்களும் அண்ணாந்து பார்க்கும்படி உயரமாக இருக்கிறீர்கள். உங்கள் எழுத்து எப்படி frills இன்றி மையக் கருத்தை ஓரிரு வார்த்தைகளில் சொல்கிறதோ அப்படித்தான் உங்கள் உருவமும் frills இன்றி இருக்கிறது! வியப்பான விஷயம் இது. என்றேன்.
  அவர் சிரித்தார்.

  ஆ … ரம்பம் நன்றாக இருந்தது. எனது படம் என்வளியிலேயே வெளிவந்திருக்கிறது. தங்களை நேரில் சந்திக்க ஆசைதான், நீங்கள்தான் முகம் காட்ட மாட்டேன் என்கிறீர்கள். ஆனால் ஒன்று நிச்சயம் …. உங்கள் முகத்தைத் தாடிக்குள் தேட வேண்டி இருக்காது!

 4. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே….. மீண்டும் எனது வேண்டுகோள்.

  நான் அவன் இல்லை …..
  மன்னிக்கவும் ….
  நான் அறிஞர் இல்லை ….
  பேரறிஞரும் இல்லை ….

 5. srikanth1974

  திரு.வினோ சார் அவர்களுக்கு வணக்கம்

  அமரர்’ சுஜாதாவுடனான உங்களது சந்திப்பும்,இந்த
  புகைப் படமும்,உண்மையிலேயே மிகப் பெரிய
  பொக்கிஷம்தான்.
  என்றும் உங்கள் அன்புச்சகோதரன்
  ப.ஸ்ரீகாந்த்.

 6. மிஸ்டர் பாவலன்

  //…. உங்கள் முகத்தைத் தாடிக்குள் தேட வேண்டி இருக்காது!//

  உலகநாயகன் படமான தசாவதாரம் படத்தில் வரும் scientist போல
  சொல்லில், செயலில் இருப்பதாக சில நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
  முகம் பற்றித் தெரியாது.. ஹி.. ஹி..

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *