BREAKING NEWS
Search

‘முதல் முறையாக ஒரு புத்திசாலி நிர்வாகியை ஜனாதிபதியாகப் பெற்றிருக்கிறது இந்தியா!’

ஒரு புத்திசாலி ஜனாதிபதியைப் பெற்றிருக்கிறது இந்தியா! –  உலக மீடியாக்கள் புகழாரம்

வாஷிங்டன்: இந்தியா ஒரு புத்திசாலித் தலைவரை குடியரசுத் தலைவராகப் பெற்றுள்ளதாக உலக மீடியாக்கள் புகழாரம் சூட்டியுள்ளன.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்துவிட்டது இந்திய ஜனாதிபதி தேர்தல்.

வழக்கமாக அரசியலிலிருந்து ஒதுங்கி, ஓய்வெடுக்கும் ஒருவரைத்தான் இந்தப் பதவிக்கு நிறுத்துவது வழக்கம். ஆனால் இந்த முறை, தீவிர அரசியலில், மிகப் பெரிய ராஜதந்திரி என்று பலரும் பாராட்டும் அளவுக்கு செயல்பட்ட, அரசின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜியை நிறுத்தியது காங்கிரஸ் கூட்டணி.

பிரணாப்தான் வேட்பாளர் என்ற செய்தி வெளியானதும், எதிர்க்கட்சியின் முக்கிய தோழமைக் கட்சிகள் கூட, தங்கள் ஆதரவை அவருக்கு அள்ளித் தருவதாக அறிவித்ததுதான், இந்திய அரசியலே எதிர்ப்பார்க்காத ஒன்று.

அவ்வளவு ஏன்? பாஜகவின் ஒரு பகுதி எம்பிக்கள், எம்எல்ஏக்களே பிரிந்து போய் பிரணாபுக்கு வாக்களித்துவிட்டனர் கர்நாடகத்தில்.

கடைசிவரை பிரணாபை எதிர்த்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கடைசி நிமிடத்தில் தன் ஆதரவை அள்ளித் தர, தன் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் அபரிமிதமான வாக்குகளைப் பெற்றார் பிரணாப்.

நாட்டின் முதல் குடிமகனாக அமரும் பிரணாப், தேர்தலில் ஜெயித்த விதமும் கூட அந்தப் பதவிக்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துவிட்டது. வழக்கமாக ரப்பர் ஸ்டாம்ப் எனப்பட்ட இந்தப் பதவிக்கு, தன் Candidature and approach மூலம் தனி அந்தஸ்தைக் கொடுத்திருக்கும் பிரணாபை, இப்போது உலக மீடியாக்கள் புகழ்ந்து தள்ளுகின்றன.

அமெரிக்காவின் தி வால் ஸ்டிரீட் ஜர்னல் கூறுகையில், மிகவும் புத்திசாலித்தனமும், புத்தி கூர்மையும் படைத்தவர் 76 வயதான பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முக்கியத் தலைவராக திகழ்ந்தவர். பல ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியை பிரிந்து போய் விடாமல் கட்டிக் காத்த, ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாத இரும்பு மனிதராகத் திகழ்ந்தார் பிரணாப் என்று கூறியுள்ளது.

பிபிசி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் தொண்டுக் கிழவன் பிரணாப் முகர்ஜி. ஆனால் மிகவும் வலுவான, சாதுர்யமிக்க தலைவர். பல்வேறு கூட்டணிகளை சிறப்பாக அமைக்க உதவியவர். 2014 லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. அப்போது குடியரசுத் தலைவரின் பங்கு மிக முக்கியமானதாக அமையும் என்பதால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அதிபராக பிரணாபின் செயல்பாடுகள கூர்ந்து கவனிக்கப்படவுள்ளன, என்று கூறியுள்ளது.

மேலும் பிரணாபின் வெற்றியும் எதிர்க்கட்சிகளும் அவருக்கு ஆதரவளித்துள்ள பாங்கும் காங்கிரஸுக்குத்தான் பெரும் பலமாக அமைந்துள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.

பாங்காக் போஸ்ட் கூறுகையில், குழப்பம் மிகுந்த இந்திய அரசியலில் பிரணாப் முகர்ஜியின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும். அதற்கு அவரது நீண்ட கால அரசியல் அனுபவம் உதவி புரியும். இந்தியாவைப் பொறுத்தவரை, இப்போதுதான் அதன் அதிபர் (ஜனாதிபதியை அவர்கள் அப்படித்தான் அழைக்கிறார்கள்) பதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது, என்று கூறியுள்ளது.

தி ஆஸ்திரேலியன் தனது தலையங்கத்தில், “பொருளாதார ஏற்றத்தாழ்வு, நாடாளுமன்றத்தில் தொடரும் குழப்பங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், பிரணாப் முகர்ஜி, சற்று சிறப்பாக செயல்பட முனைவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை எந்த அதிபரும் செய்யாத ஒரு விஷயத்தை பிரணாப் செய்யக்கூடும். அது நாடாளுமன்றத்தில் ஸ்தம்பிப்பு நிலை வரும்போது குடியரசுத் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மல்லுக்கட்டும் கட்சிகளை அழைத்து அவர் பேசக் கூடும்”, என்கிறது.

தி கார்டியன் கூறுகையில், “இந்தியாவின் மக்களாட்சி முறையில் இதுவரை அதிபர் பதவிக்கு பெரிய முக்கியத்துவம் இருந்ததில்லை. ஆனால் முகர்ஜியின் தலைமை அந்த நிலையை மாற்றும். அவரை ஜனாதிபதியாக்கியதன் மூலம் சோனியா தன் புத்திசாலித்தனத்தை மீண்டும் நிரூபித்துள்ளார். ஒரு புத்திசாலி நிர்வாகி ஜனாதிபதியானது இந்தியாவுக்கு நல்லதுதான்,” என்று குறிப்பிட்டுள்ளது.

-என்வழி செய்திகள்
13 thoughts on “‘முதல் முறையாக ஒரு புத்திசாலி நிர்வாகியை ஜனாதிபதியாகப் பெற்றிருக்கிறது இந்தியா!’

 1. suresh

  பிரணாப் புத்திசாலி தான் ஆனால் சுயநலவாதி ….கொள்ளை கூட்டத்துக்கு காவல்காரன் ……,,,மற்றும் ஒரு பொம்மை பார் சோனியா …

 2. குமரன்

  பிரணாப் புத்திசாலிதான். ஆனால் அவர் தான் முதல் புத்திசாலி ஜனாதிபதி என்று கூறுவது சரியல்ல.

  பாபு ராஜேந்திரப் பிரசாத்தும், ராதாகிருஷ்ணனும், வி.வி.கிரியும், சஞ்சீவ ரெட்டியும், ஆர்.வெங்கடராமனும், ஜாகிர் ஹுசேனும், அப்துல் கலாமும், கே.ஆர்.நாராயணனும் ஒவ்வொரு விதத்தில் சிறந்த அறிஞர்களே.

  என்ன, பிரதீபா பாட்டில்தான் கொஞ்சம் சரியில்லை.

  அவரைத் தேர்ந்தெடுத்ததற்குப் பிராயச் சித்தமாகவே சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு சோனியா, இப்போது பிரனாப்பைத் தேர்ந்தெடுத்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம் !

  சோனியா செய்ய வேண்டிய பிராயச் சித்தம் ஏராளம் இருக்கிறது. இந்தப் பிறவியில் அது முடியாது.

 3. மிஸ்டர் பாவலன்

  உலக மீடியா பாராட்டினாலும் ஹார்வர்ட் அறிஞர்
  டாக்டர் சுப்ரமணியம் சுவாமி பாராட்டலையே!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 4. Krishna

  //பாபு ராஜேந்திரப் பிரசாத்தும், ராதாகிருஷ்ணனும், வி.வி.கிரியும், சஞ்சீவ ரெட்டியும், ஆர்.வெங்கடராமனும், ஜாகிர் ஹுசேனும், அப்துல் கலாமும், கே.ஆர்.நாராயணனும் ஒவ்வொரு விதத்தில் சிறந்த அறிஞர்களே.//

  இந்த லிஸ்டில் வி.வி. கிரியை சேர்க்காதீர்கள். அவர் இந்திராவின் தொண்டரடிப்பொடி. அவர் குடியரசு தலைவராக இருந்த சமயத்தில் ஒரு கார்ட்டூன் வந்தது (எந்த பத்திரிகை என்று நினைவில்லை). இந்திரா காந்திக்கும் கிரிக்கும் நடக்கும் தொலை பேசி உரையாடல்:

  இந்திரா காந்தி : ஹலோ, மிஸ்டர் சரி….
  வி.வி. கிரி: என் பெயர் சரி இல்லை – கிரி, ஆனால் நீங்கள் எது சொன்னாலும் சரி!!

 5. ilaiyaraja

  முதல் முறையாக ஒரு புத்திசாலி நிர்வாகியை ஜனாதிபதியாகப் பெற்றிருக்கிறது இந்தியா! ….> ஹா ஹா….தமிழர்களின் உயிர்களை கொன்று, ரத்தத்தை குடித்த உண்மையான சாணக்யன் ( மஹிந்த) -விற்கு அடியால் வேலை செய்தவரை இப்போது புத்திசாலி நிர்வாகி என்று தான்தோன்றி தனமாக கூறுவது அதுவும் நம் வினோ சொல்வது மனது கஷ்டமாக இருக்கிறது….

 6. தினகர்

  “நம் வினோ சொல்வது மனது கஷ்டமாக இருக்கிறது”

  சிவப்பு கண்ணாடி போட்டு பார்த்தா சிவப்பாகத்தான் தெரியும். இங்கே வரும் அனைத்து செய்திகளுக்கும் ‘ வினோ’ வை குற்றவாளியாக்கும், உங்களுக்கு முழுசாக படித்து பார்க்கும் பொறுமை கூட இல்லையா? தலைப்பை பார்த்து விட்டு ’வினோ’ தான் சொல்லியிருக்கிறார் என்று புலம்புவது சரியா?

  ”தி கார்டியன் கூறுகையில், ———–ஒரு புத்திசாலி நிர்வாகி ஜனாதிபதியானது இந்தியாவுக்கு நல்லதுதான்,” என்று குறிப்பிட்டுள்ளது.”

  கடைசியில் ”என்வழி செய்திகள்” என்றிருக்கிறது.

  இதில் எங்கே வினோ கருத்து சொல்கிறார். அவரை குற்றவாளியாக்குவது ஏன்?

 7. Raj

  hi vino

  i’m hoping to see a article from you explaining why you are supporting pranab since the time he was nominated.

  i’m sure you must have some good reason behind this.

  good work,
  raj

 8. முகர்ஜி

  கேள்வி: இலங்கை ராணுவத்தினருக்கு மேற்கு வங்காளத்தில் பயிற்சி அளிப்பதாக சொல்லப்படுகிறதே?

  பதில்: அப்படி பயிற்சி அளித்தால் நாங்கள் அதை எதிர்ப்போம் என்று சொன்னார் கருணாநிதி.

  கேள்வி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் யார் யார் பங்கேற்கிறார்கள்?

  கருணாநிதி: கழகத்தைச் சேர்ந்த எல்லா மத்திய அமைச்சர்களும் – நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

 9. Raj

  நீங்கள் சொல்லும் புத்திசாலி நிர்வாகியின் யோக்கியதாம்சங்கள் !!!!

  ஜனாதிபதியை –
  தேர்ந்தெடுக்கும் உரிமை தான் நமக்கு கிடையாது !
  atleast அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும்
  உரிமையாவது உண்டல்லவா ?
  அதை யாரும் பறித்துக்கொள்ள முடியாதே –
  இப்போதைக்கு !

  மாண்புமிகு அடுத்த ஜனாதிபதியைப் பற்றிய
  சில விவரங்கள் – நல்லதும் கெட்டதும் !

  வயது 77. படிப்பு MA,BL.
  பரம்பரைத் தொழில் -வேறென்ன ? அரசியல் தான் !
  முழுநேர அரசியல்வாதி –
  அதாவது பிழைப்பே அரசியல் தான் !
  ஆமாம் – தந்தையும் வங்காளத்தில் காங்கிரஸ் தலைவர் !

  வயது 34 ஆகும்போது முதல் தடவையாக,
  ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்.
  1973ல் முதல் தடவையாக மத்திய அமைச்சர் ஆனார்.
  1982-84ல் முதல் தடவையாக நிதி அமைச்சர்.
  அப்போதே இவர் நிதியமைச்சராக இருந்தபோது,
  இப்போதைய பிரதமர் ம.மோ.சிங் இவருக்கு கீழே –
  ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியில் இருந்தார் !
  ( இவர் ஏன் பிரதமரை மதிப்பதில்லை
  என்பது இப்போது சுலபமாகப் புரியுமே !)
  இந்திரா காந்தி அகால மரணம் அடைந்தபோது,
  பிரதமர் பதவியை இவர் கைப்பற்ற முயற்சி செய்தார் –
  விளைவு, ராஜீவ் காந்தியால் கட்சியை விட்டு
  வெளியேற்றப்பட்டார்.சமாஜ்வாதி காங்கிரசைத் துவக்கினார்.

  இவரை புத்திசாலி என்பதை விட –
  சாமர்த்தியசாலி என்று கூறலாம்.
  இவரது நிலைத்த முன்னேற்றத்திற்கு காரணமே இவரது
  ஒரு வித்தியாசமான, வேறுபட்ட குணம் தான்.
  தனக்கு போட்டியாக இருப்பவரகளை மிரட்டி பணிய வைக்க
  முயற்சிப்பார். அவர் பணியவில்லை என்றால் –
  சற்றும் தயங்காமல் –
  இவர் அவருக்கு பணிந்து போய் விடுவார் !

  எனவே, ராஜீவ் காந்தியிடம் சரணாகதியாகி
  மீண்டும் முதலில் கட்சியிலும், பிறகு
  மந்திரி சபையிலும் இடம் பிடித்தார் !

  மீண்டும் ஏறுமுகம்.
  திட்டக்குழு துணைத்தலைவர், வெளியுறவுத்துறை
  அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கடைசியாக
  நிதி அமைச்சர் பதவிகள் !

  அடக்கமாக இருப்பது போல் இருந்தாலும், என்றைக்கு
  இருந்தாலும் இவர் பார்வை பிரதமர் பதவி மீது தான்.
  இவருக்கு கீழ் அதிகாரியாகப் பணி புரிந்த மன்மோகன் சிங் –
  இவரை விட உயரமான இடத்தில் –
  பிரதமராக இருப்பது இவருக்கு தீராத எரிச்சல்.

  என்றைக்கு இருந்தாலும், ராகுல் காந்தி பிரதமர் ஆவதில்
  இவரால் இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்பதால் இவரை
  வழியிலிருந்து அகற்ற, வேண்டா வெறுப்பாக
  சோனியா அம்மையார் இவர் பெயரை குடியரசுத்தலவர்
  பதவிக்கு பரிந்துரைத்திருக்கிறார் !

  இது வரை அவர் பற்றிய வெளிப்படையான
  அறிமுகம் பார்த்தீர்கள்.

  இனி சொல்லப்போவது அதிகம் வெளியில் தெரியாத
  பெருமைகள் –

  இந்திரா அம்மையார் எமர்ஜென்சியை கொண்டுவந்தபோது
  இவர் அவருக்கு மிகவும் உறுதுணையாக உள்துறை
  அமைச்சகத்தில் பணி புரிந்தார். அடக்குமுறையில்
  சஞ்ஜய் காந்தியுடன் கைகோத்தார். இவர் மீது பல
  புகார்கள் கூறப்பட்டன.

  முக்கியமான புகார்களில் ஒன்று அப்போது
  இந்திராவை காந்தியை சந்தோஷப்படுத்த,
  ஜெய்பூர் மகாராணி காயத்ரி தேவியை
  திகார் சிறையில் வைத்து வதைத்தது !

  எமர்ஜென்சி அக்கிரமங்கள் பற்றி எழுப்பப்பட்ட சுமார்
  46,000 புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட
  முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான
  நீதிபதி ஷா கமிஷனின் இறுதி அறிக்கையில், பதவியை
  துஷ்பிரயோகம் செய்ததாக இவர் மீது கடுமையாக குற்றம்
  சாட்டப்பட்டு இருந்தது.

  ஆனால் விசாரணை அறிக்கை செயல்படுவதற்குள்
  மீண்டும் இந்திரா காந்தி அதிகாரத்திற்கு வந்து விட்டதால்
  அறிக்கை குப்பைக்கூடைக்கு போய் விட்டது.
  ஷா கமிஷனில் இவருக்கு எதிராக சாட்சி கூறிய அதிகாரிகள்
  பழிவாங்கப்பட்டனர் – தூக்கி எறியப்பட்டனர்.

  2009ல் ஈழத்தில் ராஜபக்சே அரசு லட்சக்கணக்கில்
  தமிழர்களை திட்டமிட்டு, கொத்து கொத்தாக
  அழித்துக்கொண்டிருந்தபோது –
  இவர் இங்கே வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து
  சகல விதத்திலும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவு கொடுத்தார் !

  இவர் நிதியமைச்சராக இருந்தபோது தான் –
  உள்நாட்டில் விலைவாசி வானளவு உயர்ந்தது !
  டாலர் கையிருப்பு படுபாதாளம் சென்றது !
  ரூபாயின் மதிப்பு இதுவரை வரலாற்றில் இல்லாத
  அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.
  பெட்ரோல் விலை 11 முறை உயர்ந்தது.
  தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்தது.
  பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்தது.
  பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டும்
  கோடிக்கணக்கில் சலுகைகள் தரப்பட்டன.
  அவர்களுக்கான வரிகள் தளர்த்தப்பட்டன.
  சர்வதேச தரமதிப்பு பட்டியலில் இந்தியாவின்
  மதிப்பு குறைக்கப்பட்டது.

  இன்னும் எத்தனை பொருளாதார மேதைகள்
  வந்தாலும் இதை சீர்படுத்த எத்தனையோ
  ஆண்டுகள் ஆகும்.

  கருப்புப் பணத்தை கண்டெடுக்க உருப்படியாக
  எதுவும் செய்யப்படவில்லை.
  வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்திய
  பணத்தை கொண்டு வர தீவிர முயற்சி எதுவும்
  மேற்கொள்ளப்படவில்லை.
  அர்த்தமில்லாத சாக்குபோக்குகள் சொல்லியே
  காலத்தைக் கழித்தார்!
  ஜெர்மனியிலிருந்தும், ஸ்விஸ் நாட்டிலிருந்தும் கிடைத்த
  பெயர்களை, கோர்ட்டில் கூட வெளியிட மறுத்தார்.

  நிதியமைச்சராக படுமோசமாகப் பணியாற்றிய ஒருவரை
  வீட்டுக்குத் துரத்துவதற்கு பதிலாக, இந்த நாட்டு அரசியல்
  பிரமோஷன் கொடுத்து ஜனாதிபதி ஆக்குகிறது !

  பல மத்திய அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்
  பலத்த விளம்பரம் பெற்றாலும்,
  இவர் மீதான சில குற்றச்சாட்டுகள் மட்டும் எப்படியோ
  அமுக்கப்பட்டு – விளம்பரம் பெறாமல் பார்த்துக்
  கொள்ளப்பட்டன.

  அப்படியும் – குடியரசுத் தலவர் பதவிக்கு இவர் பெயர்
  பரிந்துரை செய்யப்பட்டவுடன், டீம் அண்ணா குழுவினர் –
  இவர் மீதான, நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும்
  சில குற்றச்சாட்டுகளை நினைவுறுத்தி,
  அவற்றின் மீது உடனடியாக, சுதந்திரமான விசாரணை
  நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தினர்.

  அதில் ஒன்று –

  ஆப்பிரிக்காவின் “காணா” நாட்டிற்கு உதவி செய்வதற்காக
  “ஹராரே” திட்டத்தின் கீழ் அரிசி அனுப்ப வேண்டிய
  விவகாரத்தில், இந்திய அரசு உணவுப் பொருள் கார்பொரேஷன்
  மூலமாக அரிசி அனுப்புவதற்கு பதிலாக, தனியார்
  முதலாளிகளுக்கு அனுமதி கொடுத்த வகையில்
  சுமார் 2,500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும்,
  இதில் இந்திய வெளியுறவுத் துறைக்கு (இவர் தான் அப்போது
  அமைச்சர் ) பெரிய அளவில் தொடர்பு இருப்பதாகவும்
  “காணா” அரசு புகார் கூறி இருந்தது. இது பற்றி
  விசாரணை நடத்தக் கோரி காணா அரசு விடுத்த கோரிக்கை –
  இதுவரை கண்டு கொள்ளப்படவே இல்லை !

  மற்றொன்று -நேவீ வார் ரூம் லீக் என்று கூறப்பட்ட –
  “ஸ்கார்பென்” நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கும் விஷயத்தில்,
  இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த
  500 கோடி ரூபாய் ஊழல். இது ஜேம்ஸ்பாண்ட் கதைகளை
  எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் மர்மக்கதை !

  2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படைக்காக
  ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க, பிரான்ஸ் நாட்டு
  நிறுவனம் “தேல்ஸ்” உடன் செய்து கொள்ளப்பட்ட
  ஒப்பந்தத்திற்கு இவர் ராணுவ அமைச்சர் என்கிற முறையில்
  அனுமதி அளித்திருக்கிறார். இந்த நிறுவனம் லஞ்சம்
  கொடுத்து ஆர்டர் பெறுவதில் உலகப் புகழ்பெற்ற நிறுவனம் !

  ஏற்கெனவே மலேசியா, தைவான், தென் ஆப்பிரிக்கா ஆகிய
  நாடுகளில் லஞ்சம் கொடுத்த விவரங்கள் வெளியாகி
  இருக்கின்றன.
  தென் ஆப்பிரிக்க குடியரசின் துணைத்தலவர் ஜாக்கப் ஹூமா,
  இந்த நீர்மூழ்கி கப்பல் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியது
  நிரூபணமாகி 15 வருட சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்.

  இந்தியாவிற்கு நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதில்
  500 கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறி இருக்கிறது என்று
  முன்பு “அவுட்லுக்” பத்திரிகை ஆதாரங்களுடன் தகவல்
  வெளியிட்டிருந்தது. அது வெளியிட்டிருந்த ஒரு மின் அஞ்சல்
  நீர்மூழ்கிக் கப்பல் நிறுவனத்தின் CEO –
  இந்திய தொழிலதிபர் அபிஷேக் வர்மாவுக்கு அனுப்பியது.
  அதில் ஸ்கார்பென் ஒப்பந்த விலையில் 4 % தொகையை
  தருவதாக நாங்கள் உறுதி செய்கிறோம் என்று
  குறிப்பிட்டிருக்கிறது. 6 நீர்மூழ்கிக் கப்பல்களின்
  மொத்த விலை சுமார் 19,000 கோடி. இந்திய கடற்படை
  நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஒப்பந்தம் தங்கள்
  நிறுவனத்திற்கே கிடைக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட
  முடிவை எடுப்பவர்களுக்காகவும், அதனை ஏற்பாடு
  செய்து கொடுப்பவர்களுக்காகவும் இந்த கமிஷன்
  தொழிலதிபர் அபிஷேக் வர்மாவிற்கு அளிக்கப்படும் என்று
  மின் அஞ்சல் கூறுகிறது.

  இது தொடர்பாக, 2007ஆம் ஆண்டு வழக்கறிஞர்
  பிரஷாந்த் பூஷன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு
  பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். அது இன்னும்
  நிலுவையில் கிடக்கிறது.( 5 ஆண்டுகள் தானே ஆகின்றன –
  அதற்குள்ளாக விசாரணைக்கு வந்து விடுமா என்ன ?
  அதுவும் சம்பந்தப்பட்டவர் யார் ? அவரது பின்னணி
  என்ன ? இவற்றை எல்லாம் யோசிக்க வேண்டாமா ?)

  இவர் ஜனாதிபதியாகி விட்டால் –
  அரசியல் சட்ட விதிகளின்படி, ஜனாதிபதி பதவியில்
  இருக்கும் வரை இவர் மீதான குற்றச்சாட்டுகள் மீது
  எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியாது.
  இப்போதே வயது 77. ஐந்து வருடங்கள் பதவி முடிந்து
  மீண்டும் இவர் சாதாரண குடிமகனாக வெளி வரும்போது,
  இவர் வயது 82 ஆக இருக்கும்.
  அதற்குப் பின்னரா நடவடிக்கை ?

  முதிர்ந்த ஜனநாயக நாடுகளில், பதவியில் உள்ளவர்கள்
  மீது ஊழல் புகார் வந்தால் – சுதந்திரமான
  முறையில் விசாரணை நடைபெறுவதற்காக,
  விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை அவர்கள்
  தங்கள் பதவியை விட்டு விலகி நிற்பார்கள்.

  நம் நாட்டில் யார் மீதாவது ஊழல் புகார்கள் இருந்தால் –
  அதிலிருந்து அவர்கள் தப்பிக்க இந்திய அரசியலில்
  ஒரு புது வழி உண்டாக்கப்பட்டு இருக்கிறது.
  ஒன்று அவர்களை கவர்னர் ஆவது – அல்லது
  ஜனாதிபதி ஆவது !

  இனி இவர் ஜனாதிபதி ஆவதை யாரும் தடுக்க முடியாது.
  இவர் ஜனாதிபதி ஆகி விட்ட பிறகு நான் இதையெல்லாம்
  எழுதினால் – நாட்டின் முதல் குடிமகனை அவமதிப்பது
  போல் ஆகி விடும் அல்லவா ? அதற்காகத்தான்
  அவசரமாக இப்போதே, அவர் சாதாரண குடிமகனாக
  இருக்கும்போதே எழுதுகிறேன்.

  என்ன இருந்தாலும் பதவிக்கு மதிப்பு
  கொடுக்க வேண்டும் அல்லவா ??? !!!

 10. Ganesan

  Hi,
  First time “Intelligent president”…really great insult for our previous good Presidents…

  Never expect these kind of “Heading” in our site….he is the main reason for our tamil people kilings…pls stop these kind of postings….i dont understand why you are supporting for congress nowadays….

 11. Manoharan

  இந்தியாவின் ****************************************************** இல்லை.
  __________
  நாட்டின் முதல் குடிமகன் என்ற முறையில் குடியரசுத் தலைவர் பற்றி அவதூறு வார்த்தைகளை பிரயோகிப்பது சட்டப்படி குற்றம். இங்கு மட்டுமல்ல, வேறு எந்த இடத்திலும் பிரயோகிக்காதீர்கள். இதன் மூலம் பெரிய சட்டச் சிக்கலில் மாட்டிய சாதாரண குடிமகன்கள் பலரை எனக்குத் தெரியும்.

 12. தினகர்

  ”ஹார்வர்ட் அறிஞர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி பாராட்டலையே! “

  ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தை இப்படியெல்லாம் அசிங்கப்படுத்தக்கூடாது.. இவரை அந்தபக்கமே சேத்துக்கிறது இல்லைன்னு அவங்க முடிவு பண்ணி ரொம்ப வருஷங்கள் ஆகுது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *