BREAKING NEWS
Search

எப்போ வரும் உண்மையின் மறுபாதி!

என்கவுன்டர்: உண்மையின் மறுபாதி இடைத்தேர்தலுக்கு முன் வெளிவருமா?

சில தினங்களுக்கு முன் பாரி என்று ஒரு படம் வந்தது. எல்லோருமே புதுமுகங்கள். இயக்குநர் பெயர் ரஜினி!

படம் வெளியான சுவடு வெளியில் தெரிவதற்குள் தூக்கப்பட்டுவிட்டது. நிறைய சினிமா ரசிகர்களுக்கு அப்படியொரு படம் வெளியானதா என்று கூட தெரிந்திருக்கவில்லை.

ஆனால் உண்மையில் பார்க்க வேண்டிய படம்தான். கல்லூரி காதல்தான் பிரதானம் என்றாலும், அந்தப் படத்தின் களமும், உணர்த்த விரும்பிய அபாயமும் இன்றைய சூழலுக்கு அவசியமானவை.

சேலத்தின் பெரும்புள்ளி ஒருவரின் மகன் ஒரு நடுத்தர கிறிஸ்தவப் பெண்ணை காதலிக்கிறார். அந்தக் காதலை விரும்பாத பெரும்புள்ளி, எப்படியாவது அதை உடைக்கச் சொல்கிறார்.

உடனே  பெரும்புள்ளியின் அடியாட்கள், ஒரு கூலிப் படையை அமர்த்துகின்றனர் காதலையும் காதலியையும் கொல்ல. அந்த கூலிப்படை, வட இந்தியாவிலிருந்து வந்து தமிழகத்தில் சகல வேலைகளிலும் ஈடுபடும் இரக்கமற்ற இளைஞர்கள். இந்த இளைஞர்கள் பெண்ணை மட்டும் கடத்திப் போகிறார்கள். பெரும்புள்ளியின் பண்ணை வீட்டில் வைத்து அந்தப் பெண்ணை மிகக் கொடூரமாகக் கொல்கிறார்கள்.

பண்ணையின் ஒரு புதர்ப் பகுதியில் சின்னதாய் குழி வெட்டுகிறார்கள். குழிக்குள் அடங்காத அந்த பெண்ணின் உடலை… நெஞ்சை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.. கடப்பாரையால் அடித்து கால் – இடுப்பு எலும்புகளை உடைக்கிறார்கள். இப்போது அந்த உடல் வெறும் கூழாகிவிட, உடலை மடித்து அந்த குழிக்குள் அழுத்தி கல்லையும் மண்ணையும் போட்டு மூடிவிட்டுப் போகிறது அந்த கொலைபாதக கும்பல்.

படத்தின் இயக்குநரிடம் பேசியபோது, “இது சேலம் பக்கத்தில் நடந்த உண்மை சம்பவம்தான். இந்த வட இந்திய இளைஞர்கள் கொலை பாதகத்துக்கு அஞ்சாதவர்களாக, காசு கொடுத்தால் எதைச் செய்யவும் தயங்காதவர்களாக உள்ளனர். பல குற்றங்களின் பின்னணி யாராவது ஒரு பீகார், ஓடிஷா அல்லது மராட்டி இளைஞன் இருக்கிறான். இந்தப் படம் நன்றாகப் போகுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு உண்மையைப் பதிய வைத்த திருப்தி இருக்கிறது,” என்றார்.

நேற்றைய துப்பாக்கி சூடு, பொறியியல் படித்தும் புரோக்கர் – கொள்ளை என தடம் மாறிப் போன பீகார் இளைஞர்கள் கொலை போன்ற செய்திகளை பதிவு செய்த போது, இந்த பாரி படம்தான் நினைவுக்கு வந்தது.

இந்தியா அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான நாடு. யாரும் எந்த மாநிலத்துக்கும் போகலாம், தொழில் செய்யலாம் என்ற பொதுச் சட்டம் இருந்தாலும், அதிகபட்ச சகிப்புத்தன்மையுடன் அனைத்து மாநிலத்தவரையும் ஆதரிப்பது தமிழ்நாடு மட்டும்தான்!

இந்தியாவில் மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, சண்டிகர் போன்ற வெகு சில பகுதிகளைத் தவிர்த்து வேறு எங்கும் தமிழன் என்ற அடையாளத்தோடு உங்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. இந்தியாவின் 90 சதவீத மாநிலங்களைப் பார்த்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்!

ஆனால் தமிழகம், சிங்கள நிறுவனங்களுக்குக்கூட இடம் தந்து, போதிய பாதுகாப்பும் அளித்து வருகிறது. இலங்கையில் அந்நாட்டு அரச மாளிகைக்குக் கூட இல்லாத பாதுகாப்பை, சென்னையில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்துக்கு வழங்கி வருகிறது மாநகர காவல்துறை.

இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, கொலை, கொள்ளை, கூலிக்கு வன்முறை என சகலவித சட்ட விரோதங்களையும் வெளிமாநில இளைஞர்கள் செய்வதுதான் கவனத்தில் கொள்ளவேண்டியது.

இதைவிட முக்கியம்… இந்த மாதிரி சட்ட விரோத செயல்களின் பின்னணியின் நிச்சயம் இந்த வட மாநில இளைஞர்கள் மட்டும் இருப்பார்கள் என நினைப்பது அறிவீனம். நிச்சயம் தமிழர்களும் இருப்பார்கள்.

வட இந்திய இளைஞர்கள் கூலிக்கு வேலை பார்த்தால், அந்தக் கூலியைக் கொடுப்பது யார்…? இதுதான் இன்றைய அதிமுக்கிய கேள்வி.

இங்குள்ள தமிழர்கள் சிலரே கூட சந்தேகம் வராமல் இருக்க அந்த இளைஞர்களை கூலிக்கு அமர்த்தி சமூக விரோத செயல்களைச் செய்ய வைத்திருக்கலாம், பாரி பட வில்லன் மாதிரி.

குற்றச் செயல்களைச் செய்தவர்கள் வட மாநில இளைஞர்கள் என்றால், போலீஸார் இன்னும் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகிறது. இங்குள்ள சமூக விரோதிகள் தங்கள் காரியங்களுக்கு வட மாநில இளைஞர்களைப் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது, சந்தேகம் வராமலிருக்க.

இதில் கவனம் செலுத்தி, களை இந்த தமிழகத்துக்குள்ளேயே இருந்தாலும் வேரோடு பிடுங்கி அழிக்க வேண்டியது காவல் துறையின் கடமை.

ஐந்து கொள்ளயர்களைச் சுட்டதால் மட்டும் குற்றங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டதாய் அர்த்தமில்லை. சில தனியார் கல்லூரிகள், அதன் முதலாளிகள், முன்னாள் அரசியல் ரவுடிகள் – இந்நாள் கல்வித் தந்தைகள் கூட இதன் பின்னணியில் இருக்கலாம். ஆனால் இந்த குற்றங்களின் நிஜப் பின்னணியை போலீசார் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தே தீரவேண்டும்.

இல்லாவிட்டால், ஆளுங்கட்சியின் ஒரு இடைத்தேர்தல் வெற்றிக்காக போலீசார் நடத்திய கொலைகள் இவை என்று மனித உரிமை ஆர்வலர்கள் சொல்வது உண்மையாகிவிடும்!

திரிபாதி அவர்களே… உண்மையின் ஒரு பாதிதான் இப்போது வந்திருக்கிறது… மறுபாதியை இடைத்தேர்தலுக்கு முன் சொல்வீர்களா?!

-வினோ
ஆசிரியர்
என்வழி.காம்
9 thoughts on “எப்போ வரும் உண்மையின் மறுபாதி!

 1. Kumar

  The same SL embassy was given full protection during DMK regime.Wat happened to the truth at that time??.the same kind of encounter happened once during DMK regime why no article on that time??

 2. devaraj

  It is a fake encounter, done clearly for political mileage.
  The article in -The Hindu, clearly clarifies the above.
  Vino you are 100% right.

  Dev.

 3. venkat

  Devaraj

  We all know how the hindu standards has gone down. The day Ram of hindu took over its creditablity is gone

 4. ஜெயன்

  இது பல பிரச்சனைகளை(கடுமையான மின் வெட்டு,விலைவாசி உயர்வு, நாள் தோறும் நடை பெரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களினால் மக்களிடையே ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பற்றிய அதிருப்தி, பெங்களுருவில் நடை பெரும் வழக்கு விசாரணை) திசை திருப்ப நடத்தப்பட்ட திட்டமிட்ட படு கொலை சம்பவம்.

 5. ஊர்க்குருவி.

  திரிபாதியும் வடக்கத்தியர் என்பதால் துணிச்சலுடன் கொலையில் இறங்கியிருக்கக்கூடுமோ என்னவோ. இருந்தும் பொலிஸாரின் அணுகுமுறை மிகவும் தவறானதாகும்.

 6. மிஸ்டர் பாவலன்

  இன்றைய செய்தித்தாளில் நான் படித்தது:
  “சென்னை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்,
  பிரபல வங்கி கொள்ளையர்கள் தான் என்பது, அடுத்தடுத்த
  விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளன. கொள்ளையர்கள்
  கூட்டாக சேர்ந்து சென்னை, மும்பை தவிர, பீகார், மேற்கு வங்கம்
  உள்ளிட்ட பல பகுதிகளிலும், துப்பாக்கி முனையில் வங்கிகளில்
  கொள்ளையடித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது……..
  தொடர்ந்து, பல கொள்ளை சம்பவங்களில் இவர்கள் பெயர்
  வெளியாகியுள்ளதால், போலீசார் சுட்டுக் கொன்றது
  அப்பாவிகளை அல்ல; கொள்ளையர்களை தான்
  என்பது உறுதியாகியுள்ளது. ”

  புரட்சித் தலைவி ஆட்சி செய்து வரும் தமிழகத்தில்,
  என்கவுண்டர் திரிபாதி கமிஷனராக சிறப்பாக பணிசெய்து
  வரும் நிலையில், கொள்ளையர்கள் தமிழக வங்கிகளில்
  கைவரிசையை காட்டியதின் விளைவு, “பிறர்க்கின்னா முற்பகல்
  செய்யும் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்” என்ற
  வள்ளுவரின் குறள் நெறியில் வினைப்பயன் பெற நேரிட்டது.

  மனித உரிமை பற்றி பேசுபவர்கள் ரவுடிகளுக்கும், கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் பரிந்து பேசும் நாடு நமது பாரத நாடு.
  அதனால் தான் மும்பையில் படுகொலை செய்த பாதகன்
  இன்னும் விசாரணைக் கைதியாகவே இருந்து வருகிறான்.
  அதே நேரம் அவர்களால் பாதிக்க பட்டவர்களை பற்றி
  ஒரு கவலையும் படாமல் நடப்பது சரியா?

  -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *