BREAKING NEWS
Search

சகாயம் ஜெயிப்பாரா? – சிறப்புக் கட்டுரை

சகாயம் ஜெயிப்பாரா? – சிறப்புக் கட்டுரை

-கதிர்

 

kathir001ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு சகல உதவிகளும் செய்து கொடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது.

அந்த உதவிகளால் தமிழகத்தின் கனிமவளங்கள் சூறையாடப்படுவது குறித்த உண்மைகளை சகாயம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரலாம் என நீதிபதிகள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் மேற்படி ஆணை.

ஆனால், நீதியரசர்களின் நம்பிக்கை பலிக்குமா?

சகாயம் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை வெற்றிகரமாகச் செய்து முடிப்பாரா?
கனிம வளங்கள் யாரால் எப்படி எங்கெங்கே எந்த அளவுக்குக் கொள்ளை அடிக்கப்படுகின்றன என்ற உண்மைகளை உலகம் தெரிந்து கொள்ளுமா?

ஒரே வார்த்தையில் மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட முடியும். ஆனால், இன்னும் வெளிச்சத்துக்கு வராத சில பின்னணி விவகாரங்களையும் தெரிந்து கொண்டால்தான் அந்த பதிலின் நம்பகத் தன்மையை மதிப்பிட இயலும்.

பன்னீர் செல்வம் அரசுக்கு கண்டனம் தெரிவித்து, அபராதமும் விதித்த ஹைகோர்ட் உத்தரவுக்கு காரணகர்த்தா டிராஃபிக் ராமசாமி. ஊரறிந்த சமூக சேவகர்.

தனியாளாக சென்னை மக்களுக்காக பல பிரச்னைகளில் கோர்ட் கதவைத் தட்டி நீதி கிடைக்கப் பாடுபடும் அபூர்வ மனிதர். என்ன கோரிக்கையை கையில் எடுத்துக் கொண்டு இம்முறை கோர்ட்டை அணுகினார்?

இயற்கை வளம் நிறைந்த பூமி நமது தமிழ்நாடு. ஆனால் அந்த வளம் தாறுமாறாக சுரண்டப்படுகிறது.

ஒரு சில தனி நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபடுகின்றனர், கல் உடைக்கிறேன், மணல் அள்ளுகிறேன், தரம் பிரித்து தாது எடுக்கிறேன் என்று சொல்லி இவர்கள் விண்ணப்பம் போடுகின்றனர்.

அரசும் குறிப்பிட்ட பகுதிகளை குவாரிகள் என அடையாளம் காட்டி இவர்களுக்கு குத்தகைக்கு விடுகிறது. ஆனால், அரசு நிபந்தனைகளில் இடம் பெறும் எந்த விதிகளையும் பொருட்படுத்தாமல் சட்ட விரோதமாக குத்தகைதாரர்கள் செயல்படுகின்றனர்.

“தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்காக வழங்கப்பட்ட பூமிதான நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலம் ஆகியவற்றிலும் ராட்சத எந்திரங்களால் அளவுக்கு மீறி தோண்டி விலை மதிப்பற்ற கனிமங்களை வெட்டியெடுத்து வர்த்தகம் நடத்தி கோடிகளைக் குவிக்கின்றனர்.

மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் தலைமையில் குழு அமைத்து இந்த மாபெரும் முறைகேட்டை ஆய்வு செய்து மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராமசாமி கேட்டிருந்தார்.granite

அவரது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கோர்ட் ஏற்றுக் கொண்டது. சகாயம் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தி 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு செப்டம்பர் 11ம் தேதி தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்ய நாராயணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் ஆணையிட்டது.

தமிழக அரசுக்கு இந்த உத்தரவு ஏற்புடையதாக இல்லை.

ஏதோ தப்பு நடந்ததாக சந்தேகம் வந்தால் விசாரிக்கச் சொல்லலாம். மாறாக, இன்ன அதிகாரியை போட்டு விசாரித்து அறிக்கைக் கொடுக்குமாறு ஆணையிட கோர்ட்டுக்கு என்ன அதிகாரம் என்று அதிமுக அரசின் சட்ட ஆலோசகர்கள் கொந்தளித்தனர். சுப்ரீம் கோர்ட்டில் அரசு அப்பீல் செய்தது.

இம்மாதிரி அரசு நிர்வாகத்தில் குறுக்கிடும் விதமாக ஒரு அதிகாரியை நியமிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என அதில் வாதிட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட் அந்த மனுவை ஒரே நிமிடத்தில் தள்ளுபடி செய்து, தேவையானால் இதே வாதத்தை உங்கள் ஹைகோர்ட்டில் முன் வையுங்கள் என ஆலோசனை வழங்கியது. இது நடந்தது செப்டம்பர் 18ம் தேதி.

சென்னை ஹை கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஒரு வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தமிழக அரசு, ஹைகோர்ட்டிலேயே இதை முடித்துக் கொள்ளுங்கள் என அங்கே ஆலோசனை சொன்ன பிறகும் ஒரு மாதமாக துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.

அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார்.

அதிலிருந்து பத்தாம் நாள் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதாவும் அவரது அரசும் சற்றும் எதிர்பாராத திருப்பம் அது.

அதனால் தமிழகமே நிலை குலைந்து போனதாக ஒரு பிம்பம் உயர்த்தப்பட்டது. உண்மையில் முடங்கிப் போனது அரசு நிர்வாகம்தான். அழுது கொண்டே பதவி ஏற்ற அமைச்சர்கள் கோட்டைக்குச் செல்லவில்லை. அவர்கள் இல்லாமல் எதுவும் செய்து பழக்கமில்லாத அதிகார வர்க்கம் ஹாயாக ஓய்வெடுத்தது. ஜாமீனில் ஜெயலலிதா சென்னை திரும்பிய பிறகுதான் உறக்கம் கலைந்தது. இடைப்பட்ட காலத்தில் நீதித் துறைக்கு எதிராக என்னென்ன பேசக்கூடாதோ செய்யக்கூடாதோ அதெல்லாம் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் யோசனைப்படி சகாயத்தை நியமிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் அரசின் மனுவை தலைமைச் செயலாளர் தாக்கல் செய்கிறார்.

இடைப்பட்ட ஒன்றரை மாதத்தில் சகாயத்தை அவர் வகிக்கும் பொறுப்பில் இருந்து விடுவித்து அரசு ஆணை வெளியிடவில்லை. அவரை குவாரிகள் ஆய்வுக் குழு ஆணையராக நியமனம் செய்தும் ஆணை வெளியிடவில்லை. மறு ஆய்வு மனுவை முன்னரே தாக்கல் செய்து இருந்தாலாவது சகாயத்தை விடுவிக்காத அரசின் மெத்தனத்துக்கு சாக்கு கிட்டியிருக்கும். அதற்கும் இப்போது வழியில்லை.

ஆகவே, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்சின் ஆணையை அதிமுக அரசு தெரிந்தே, வேண்டுமென்றே அலட்சியம் செய்வதாக ஒரு தோற்றம் உருவானதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

நீதிபதிகளோடு மோதல் நிலையை கடைப் பிடிக்காதே என்று திமுக தலைவர் கருணாநிதி பல முறை இந்த அரசுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அவர் பழுத்த அனுபவசாலி. அவர் பார்க்காத கோர்ட் கிடையாது. ஆனால், ஆட்சியாளர்கள் கேட்கவில்லை. யாருடைய அறிவுரைக்கு செவி கொடுத்திருக்கிறது ஜெயலலிதா அரசு?

நேற்று தலைமைச் செயலாளரின் மனுவை டிராபிக் ராமசாமி வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமயாஜியைப் பார்த்து முகத்தில் எதையும் வெளிப்படுத்தாமல் கேட்டார் தலைமை நீதிபதி: ‘எங்கள் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போனீர்களே..?’

கோர்ட் ஹாலில் திரண்டிருந்த வக்கீல்களால் புன்சிரிப்பை அடக்க முடியவில்லை. சோமயாஜி அடக்கமே உருவாக பதிலளித்தார்: ‘யெஸ், யுவர்ஆனர். ஆனால் ஒரே வார்த்தையில் மனுவை அங்கே டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்..’

புன்சிரிப்புகள் சத்தம் பெற்றுப் பரவின கோர்ட் ஹாலில். மறு ஆய்வு மனுவில் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ள விஷயங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, குவாரிகள் பற்றியது. இன்னொன்று சகாயம் தொடர்பானது.

’குவாரிகள் விவகாரத்தில் ஆய்வு, விசாரணை எல்லாம் முடிந்து அரசு நடவடிக்கையும் எடுத்தாகி விட்டது. இனிமேல் அதில் ஆய்வு செய்ய ஒன்றுமில்லை’ என்பது அதிரடியான முதல் வாதம்.

‘அதிகாரிகளை நியமனம் செய்வது அரசின் அதிகாரம். குறிப்பிட்ட ஒருநபரை ஒருபதவிக்கு நியமிக்குமாறு சொல்ல கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. அரசின் நிர்வாக அதிகாரத்தில் கோர்ட் தலையிடக் கூடாது’ என்பது அடுத்த வாதம். படிக்கிற நமக்கே இரண்டும் சொத்தையான வாதங்களாகத் தெரியும்போது, நீதிமன்றம் எப்படி ஏற்றுக் கொள்ளும்?

madras-high-court

ஆய்வு, விசாரணை எல்லாம் முடிந்து விட்டது என்றால் அதில் தெரிய வந்த விஷயங்கள் என்ன? யார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? விசாரணை நடத்திய அதிகாரியின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதா? அரசு அதை பரிசீலித்ததா? அறிக்கை சட்டப் பேரவையில் வைக்கப்பட்டதா? அதன் மீது ஆய்வு நடத்தப்பட்டதா? அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் என்ன?

அவற்றின் மீது அரசு எடுத்த அல்லது எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன? குவாரிகள் தொடர்பாக அரசு விதி முறைகள் திருத்தப்பட்டதா?

புதிய வழிகாட்டு நெறிகள் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளதா?  இதுபோன்ற எந்த விவரத்தையும் தெரிவிக்காமல் ஒரே வரியில் ‘எல்லாம் முடிந்து விட்டது’ என்று சொன்னால் யாரும் ஏற்க மாட்டார்கள் தானே.

தலைமை நீதிபதியும் ஏற்கவில்லை.

மறு ஆய்வு செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, வழக்குச் செலவாக பத்தாயிரம் ரூபாய் செலுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அபராதம் மாதிரிதான். தேவையா பன்னீர்செல்வம் அரசுக்கு இந்தகுட்டு?

இப்படி நாம் நினைக்கிறோம். அரசு என்ன நினைக்கும்? ஜோசியம் தெரியாது. ஆனால் அரசு ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு மாநிலத்தில் யாரும் எதையும் செய்துவிட முடியாது. இதில் நீதிபதிகளும் விதிவிலக்கு அல்ல.

ஊரறிந்த ஒரு குற்றவாளி பெரிய மனிதன் போர்வையில் உலா வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதிகாரத்தில் இருப்பவர்களுடன் நல்லுறவு கொண்டுள்ள அந்த பெரும் புள்ளியை கைது செய்து வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. யார் அதை நிறைவேற்ற வேண்டும்? மாநில போலீஸ். அது யார் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது? பெரும்பாலும் முதல்வரின் அதிகாரத்தின் கீழ். அவரது ஆணையின்றி போலீஸ் ஒரு அடி எடுத்து வைக்குமா? அந்த காலமெல்லாம் மலையேறி வெகுகாலம் ஆகிறது.

ஆக, நீதிமன்றம் என்னதான் உத்தரவு போட்டாலும் அரசின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்ற முடியும். அதே சமயம், அரசு அல்லது ஆட்சியாளரின் விருப்பத்துக்கு மாறாக நீதித்துறை செயல்பட்டால், மருமகன் வீட்டில் கஞ்சா வைப்பது, வீட்டுக்கு மின்சாரத்தை துண்டித்து ரவுடிகள் மூலம் மிரட்டுவது மாதிரியான சம்பவங்கள் இப்போது நிகழ வாய்ப்புகள் குறைவு. நீதித் துறை உண்மையிலேயே விழித்துக் கொண்டுவிட்டது.

‘நாங்கள் பிறப்பித்த உத்தரவுப்படி அனைத்து வசதிகளும் பாதுகாப்பும் வழங்கப்படாவிட்டால் சகாயம் இந்த நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று ஹை கோர்ட் முதல் பெஞ்ச் கூறிய அறிவுரை அந்த மாற்றத்தின் எதிரொலி.

சுற்றி வளைக்காமல் சொல்வதென்றால், தமிழகத்தை ஆளும் பன்னீர் செல்வம் அரசுக்கு நீதித் துறை வைத்திருக்கும் பரீட்சை இது. இதில் அவர் பாஸ் ஆனால், இந்த ஆட்சிக்கு தேர்தல் மூலம் மக்கள் அளித்த ஆட்சிக் காலம் முழுவதையும் அதிமுக கழிக்க முடியும். ஃபெயில் ஆனால் அக் கட்சியின் வீழ்ச்சியை ஆண்டவனாலும்  காப்பாற்ற முடியாது. நீதிக்குத் தலை வணங்கு என்று அதிமுக நிறுவனர் சொல்லிக் கொடுத்த பாடத்தை அக்கட்சியின் இன்றைய காப்பாளர்கள் உதாசீனம் செய்தால், தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு வேறு திசையில் பயணம் தொடங்கும். அவ்வாறு நிகழ வேண்டும் என்ற ஆசையில் பல கட்சிகள் தவம் தொடங்கியுள்ளன.

இந்த சூழ்நிலையில் சகாயம் என்ற பெயரை சுற்றியிருக்கும் ஒளி வட்டத்தையும் ஆராயாமல் விட முடியாது. நாம் அறிந்த வரை அவர் நல்லவர், வல்லவர். ஆனால் புகழ் போதைக்கு ஆளாகாமல் தப்பியவர் அல்ல. கல் குவாரி கொள்ளையை முதலாவதாக அம்பலப்படுத்தியவர் சகாயம் அல்ல. அது தினபூமி என்ற நாளிதழை நடத்தி வந்த மணிமாறன் என்பவரின் முன்முயற்சி வெளிக் கொணர்ந்த மோசடி.

பக்கம் பக்கமாக கிரானைட் மோசடி தொடர்பான செய்திகளையும் படங்களையும் வெளியிட்ட மணிமாறன், அவரது மகன் ரமேஷ் குமார் மற்றும் முத்தையா ஆகியோர் 2010-ல் கைது செய்யப்பட்டனர். பணம் பறிக்க முயன்றதாக கிரானைட் அதிபர்கள் சங்க செயலாளர் புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

என்ன வேடிக்கை என்றால், அப்போது ஆட்சியில் இல்லாத அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கிரானைட் மோசடிக்கு எதிராக கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார். முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரிக்கு இந்த மோசடியில் பெரும் பங்கு இருப்பதால்தான் அரசு அதை அமுக்கப் பார்க்கிறது என அவர் பகிரங்கமாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் கிரானைட் கொள்லையர்கள் சிறையில் களி தின்பது நிச்சயம் என்று அவர் மதுரை மண்னில் பலத்த கரகோஷத்தின் நடுவே சூளுரைத்திருந்தார்.

சகாயத்தைப் பொருத்தவரை நல்லவர் என்றாலும், மதுரையில் அன்றைய தினத்தில் வேறு இரண்டு நல்லவர்களும் அதிகாரத்தில் இருந்தார்கள். போலீஸ் டிஐஜி + சிட்டி கமிஷனர் கண்ணப்பன், எஸ்.பி அஸ்ரா கர்க் ஆகியோர் அவர்கள். அறிவாளிகளும் நல்லவர்களும் தனித்து இயங்கும் போதுதான் சிறப்பாக செயல்படுவார்கள் என்று ஒரு சித்தாந்தம் உண்டு. அதை நிரூபிப்பது போல் மூவரும் நடந்து கொண்டனர்.

sagayam-1

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இது தொடர்ந்ததால்  மூவரையும் இடமாற்றம் செய்யும் கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. எந்த அரசாக இருந்தாலும் தனிப்பட்ட அதிகாரிகள் பொது மக்கள் மத்தியில் பெரிய அளவில்  செல்வாக்கு பெறுவதை 1967க்கு பின் வந்த எந்த அரசும் அனுமதிக்கவே இல்லை.

சகாயம் சற்று மதிப்பிழந்து இடமாற்றம் செய்யப்படும் நிலையில், கிரானைட் ஊழல் தொடர்பான அவரது பூர்வாங்க அறிக்கை மர்ம்மான முறையில் லீக் ஆனது. ஊழலுக்கு எதிரான சகாயத்தின் ஆக்ஷந்தான் அவரது டிரான்ஸ்ஃபருக்குக் காரணம் என்ற தோற்றத்தை சில புலனாய்வுப் பத்திரிகைகள் வெற்றிகரமாக பரப்பின. எனினும் அவருக்குப் பிறகு கலெக்டராக வந்த அன்சுல் மிஸ்ரா மிகவும் சிறப்பாக கிரானைட் விவகாரத்தைக் கையாண்டார். சென்னை ஐஐடியின் தொழில்நுட்ப உதவியுடன் ஆளில்லாத குட்டி விமானங்கள் எல்லாம் பயன்படுத்தி சகாயத்தைக் காட்டிலும் சயிண்டிஃபிக்காக ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை கொடுத்தார். அழகிரியின் மகன் துரை தயாநிதி, பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் அதிபர் கிரானைட்ஸ் பழனிசாமி ஆகியோர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

சராசரி மக்களுக்கு இதுபோன்ற வழக்குகளும் விவகாரங்களும் புரிவதில்லை. இயற்கை வளங்களான நீர், நிலம், காற்று, பூமி, மணல் போன்றவற்றை சூறையாடுவதன் மூலம் வெகு ஜனங்களின் பார்வைக்கு வராமலே பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவு நமது மக்களுக்கு இல்லை. இதைக் கேவலமாகச் சொல்லவில்லை. அறிவியல் ரீதியான விழிப்புணர்வு அவ்வளவுதான். மற்றபடி அறிவாளிகளான பல பத்திரிகையாளர்கள் இந்த விஷயத்தில் மண்டுகளாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

மணிமாறன் விதிவிலக்கு. பிரஸ் கவுன்சிலும் எடிட்டர்ஸ் கில்டும் கொதித்து எழும் அளவுக்கு பெரிய பத்திரிகையின் ஆசிரியராக இல்லாமல் போனது அவரது துரதிர்ஷ்டம்.

manimaaran

ஆக, இத்தனை ஆயிரம் கோடிகள் சுருட்டல் என்கிறபோது அதில் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எத்தனை ஆயிரம் பேர் சம்பந்தப்பட்டு இருப்பார்கள் என்பதை ஊகிக்க வேண்டும். அவர்களில் பெரும்பாலோர் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டனர். ரிடையர்மெண்டும் வாங்கிவிட்டனர். அந்த இடத்துக்கு வந்த புதியவர்களுக்கு வழி சொல்லிக் கொடுக்காமலா ஓய்வு பெறுவார்கள்? எனவே, இந்த அடிப்படையில் பார்த்தால் ஊழலை மொத்தமாக அமுக்கி குழி தோண்டிப் புதைப்பதில்தான் அத்தனைப் பேரும் கவனம் செலுத்துவார்கள்.

டிராபிக் ராமசாமியின் பொதுநல வழக்கு அந்த மாதிரி பரிதாப நிலைமை ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் தொடரப்பட்டது. சற்று ஆழமாகப் பார்த்தால் இந்தியாவில் இதுவரை அம்பலத்துக்கு வந்த வேறு எந்த ஊழலையும் விட பயங்கரமானதாக இந்த விவகாரம் உருவெடுக்கலாம் என்பதை நேர்மையான அதிகாரிகள் ஒப்புக் கொள்கிறார்கள். விளம்பர விரும்பி என்பதால் அந்த பட்டியலில் இருந்து சகாயத்தை நீக்க எந்த முகாந்திரமும் இல்லை.

எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, ஜெயலலிதாவே மிகுந்த ஆர்வம் காட்டிய ஒரு ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் நீதிமன்றத்துடனும் நல்லவர்களுடனும் ஒருங்கிணைந்து செயல்பட பன்னீர்செல்வம் அரசு தயங்குவது ஏன் என்ற கேள்விதான் மிஞ்சுகிறது. மடியில் கனம் இல்லாதவனுக்கு வழியில் பயம் வர அவசியம் இல்லையே?

‘சகாயம் எத்தனை காலம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஆய்வு செய்யட்டும்; அவர் கேட்கும் அனைத்தையும் வழங்குகிறோம்; கோப்புகளைக் கொடுக்கிறோம்; உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, இந்த நாட்டின் இயற்கை வளங்கள் காக்கப்பட்டால் சரிதான்’ என்று முடிவெடுக்க என்ன தயக்கம் இந்த அரசுக்கு?

நன்றி: தமிழ் ஒன்இந்தியா
2 thoughts on “சகாயம் ஜெயிப்பாரா? – சிறப்புக் கட்டுரை

 1. குமரன்

  ///முடிவெடுக்க என்ன தயக்கம் இந்த அரசுக்கு?///

  பி.ஆர்.பிக்கும், முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும் உள்ள தொடர்பே காரணம்.

  தமிழ் நாட்டில் மதுவிலக்கை இம்மி அளவும் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ள என்ன காரணம்?

  மிடாஸ் டிஸ்டிலரீஸ் தமிழ் நாட்டில் குடிக்கப்படும் மதுவில் 60% தயார் செய்கிறது. இந்த சாராயக் கம்பெனி ஜெயலலிதாவினுடையது. சசி அவரது பினாமி. தனது வருமானம் போக அவர் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்?

  அப்படித்தான் இந்த கிரானைட்டும்.

  ஆதி அதிமுக ஆட்சியில் அதாவது 1991-96 இல் டாமின் நிறுவனம் – தியானேஸ்வரன் எம்.டி. – சசிகலா கும்பல் – ஜெயா என்ற கூட்டணி கிரானைட் கொள்ளை அடித்ததை நாடறியும். அதன் பரிணாம வளர்ச்சியே பி.ஆர்.பி.

  திமுக ஆட்சியின் போது பி.ஆர்.பி ஜெயாவின் பிடில் இருந்து விலகியதால் அப்போது கூப்பாடு போட்டார். அவ்வளவுதான்.

 2. anbudan ravi

  பி.ஆர்.பி போன்ற பண முதலைகளுக்கு, கொள்ளைகூட்ட கும்பலுக்கு எனது சிறிய கிராமமும் (மேலூர் அருகில்) பலிகடாவாகிவிட்டது. முக்கியமான இரண்டு ஏரிகளை நாசபடுத்தி சேதபடுத்தி இப்பொழுது ஆடு மாடுகள் மேயகூட தண்ணீர் இல்லை. அந்த இரண்டு ஏரிகள் சுற்றிலும் விவசாயம் அறவே கிடையாது. அதுமட்டுமல்ல, சிறு சிறு குன்றுகளையும் பெரும் மலைகளையும் வெட்டி தரை மாட்டமாக்கிவிட்டார்கள் சண்டாளர்கள். விக்கித்து போய் நிற்கிறார்கள் எங்கள் மக்கள்.

  முதல்வர் பன்னீர்செல்வம் சகாயத்தின் விசாரணைக்கு நிச்சயம் ஆதரவு தரமாட்டார். காரணம் அவர் மற்றும் சசிகலா சார்ந்த சமூகம் பெரும்பான்மை உடையது…..நிச்சயம் ஜாதி ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் எந்த கட்சியினரும் ஆதரவு தரமாட்டார்கள். அப்படியே ஆதரவு தந்தாலும் அது வெறும் கண் துடைப்பாகத்தன் இருக்கும்.

  பல கோடிகளை வெளி நாட்டில் பதுக்கி இருக்கும் பி.ஆர்.பி போன்ற பண பேய்களை ஒழித்து கட்டவேண்டும். சகாயம் எங்களை பொருத்தவரை எங்கள் ஊர் காவல் தெய்வம்.

  அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *