BREAKING NEWS
Search

சரபோஜி… கிராமம் தேடிப் போகும் ரஜினி முதல்வராகும் கதை.. 10 ஆண்டுகள் கழித்து வெளியான சுவாரஸ்ய தகவல்!

சரபோஜி… கிராமம் தேடிப் போகும் ரஜினி முதல்வராகும் கதை.. 10 ஆண்டுகள் கழித்து வெளியான சுவாரஸ்ய தகவல்!

10155343_637490422990539_3731466631506270733_n

சூப்பர் ஸ்டார் ரஜினி முதல்வன் படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்க இருந்து, கடைசி நேரத்தில் அரசியல் காரணங்களால் நடிக்காமல் விலகியது நினைவிருக்கலாம்.

கிட்டத்தட்ட அதே போன்ற இன்னொரு படத்தின் கதையைக் கேட்டு, பின்னர் ரஜினி நடிக்காமல் விட்ட கதையை மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான தேவராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.

இதோ.. இனி அவரது வார்த்தைகளில்…

தனுஷ் நடித்த ‘திருடா திருடி’, பிறகு மோகன்பாபு மகன் மனோஜ் மஞ்சு தெலுங்கில் நடித்து ரீமேக்கான ‘தொங்கா தொங்கதி’, தமிழில் ஜீவா நடித்த ‘பொறி’, இயக்குனர் அமீர் ஹீரோவாக அறிமுகமான ‘யோகி’, தனுஷ் நடித்த ‘சீடன்’ ஆகிய படங்களை இயக்கியவர் சுப்ரமணிய சிவா.

இப்போது அவர் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள ‘உலோகம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

‘திருடா திருடி’ ரிலீசாகி, ‘மன்மத ராசா…’ பாடல் பட்டிதொட்டி முழுக்க தேசிய கீதம் போல் ஒலித்த காலம் அது. அப்போது எங்கேயோ இப்படத்தைப் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இதன் இயக்குனர் சுப்ரமணியசிவாவை நேரில் பார்த்து பாராட்ட வேண்டும் என்று விரும்பினார். அப்போது அவரது விருப்பத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் சொல்லி, பி.ஆர்.ஓ நிகில் முருகன் நிறைவேற்றினார்.

போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் ரஜினியும், சுப்ரமணிய சிவாவும் நேரில் சந்தித்துப் பேசினர். முதலில் ‘திருடா திருடி’ படத்தைப் பற்றி பெரிதும் பாராட்டிய ரஜினி, பிறகு சுப்ரமணியசிவா தனக்காக எழுதியிருந்த கதையை சுவாரஸ்யமாக கேட்கத் தொடங்கினார்.

இது நடந்தது 2003ல்…

முழுக் கதையையும் கேட்டு முடித்த ரஜினி சார், ‘எல்லாம் ஓ.கே. ஆனா, கிளைமாக்சை மட்டும் மாத்த முடியுமா?’ என்று கேட்டார்.

‘இந்த படம் நிக்கிறதே அந்த கிளைமாக்ஸ்லதான் சார். அதை எப்படி மாத்தறது?’ என்று தயங்கினார் சுப்ரமணியசிவா.

பிறகு ரஜினி சார், ‘சரி. முதல்ல இந்த கதையை எடிட்டர் மோகன் கிட்டேயும், பிறகு நாகராஜன்ராஜா கிட்டேயும் சொல்லுங்க’ என்றார். அதன்படி அவர்கள் இருவரிடமும் சுப்ரமணியசிவா கதை சொன்னார்.

முதல் பாதி நன்றாக இருப்பதாக எடிட்டர் மோகனும், இரண்டாம் பாதி நன்றாக இருப்பதாக நாகராஜன்ராஜாவும் சொன்னார்கள். ‘சார், இதை அப்படியே ரஜினி சார் கிட்டே சொல்லிடுங்க’ என்றார் சுப்ரமணிய சிவா. அவர்கள் சொன்னார்களா, இல்லையா என்று இதுவரை தெரியாத நிலையில், ஏனோ ரஜினி சாரை இயக்கும் அற்புதமான வாய்ப்பு இன்றுவரை சுப்ரமணியசிவாவுக்கு கிடைக்கவே இல்லை.

சரி, ரஜினியிடம் சுப்ரமணிய சிவா சொன்ன கதை என்ன?

இந்த நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள்தான். அந்த கிராமங்களின் முதுகெலும்பு விவசாயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. உழவன் சேற்றில் கால் வைக்காமல் விட்டால், நாம் யாரும் சோற்றில் கை வைக்க முடியாது. இது நூற்றுக்கு நூறு உண்மை.

விவசாயம் என்பது தொழில் அல்ல, அது ஒரு சேவை. இக்கருத்தை பலமாக வலியுறுத்தும் கதை இது. படத்துக்கு ‘சரபோஜி’ என்று பெயரிடப்பட்டது. அக்காலத்தில் தஞ்சையை ஆண்ட சவுராஷ்டிர மன்னன் சரபோஜி என்பது வரலாறு. அப் பெயரையே படத்துக்கு தலைப்பாகச் சூட்டிய சுப்ரமணியசிவா, முழு படப்பிடிப்பையும் தஞ்சையில் நடத்த முடிவு செய்திருந்தார்.

ரஜினியுடன் படம் முழுக்க வரும் கேரக்டருக்கு வடிவேலுவை நினைத்திருந்தார். ஹீரோயினின் கேரக்டர் பெயர், செல்வி என்றும் வைத்திருந்தார். ரஜினிக்கு நிலம் விற்பவர் கேரக்டரில் டெல்லி கணேசை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்.

கிராமத்தில் வேலை வாய்ப்பு இல்லாததால், பஞ்சம் பிழைப்பதற்காக நகரத்தைத் தேடி மக்கள் வருகிறார்கள். அனைவருக்கும் வேலை கிடைக்கிறதா? வயிறார சாப்பாடு கிடைக்கிறதா? தங்குவதற்கு வசதியான இடம் கிடைக்கிறதா? உடுத்திக்கொள்ள நல்ல உடைகள் கிடைக்கிறதா என்பதெல்லாம் கேள்விக்குறி.

devaraj-with Thalaivar

ஆனால், ‘சரபோஜி’ படத்தின் கதைப்படி, நகரத்தில் இருக்கும் ரஜினி சார், தஞ்சையை நோக்கி வருவார். ‘என்ன இது… எல்லாரும் கிராமத்துல இருந்து டவுனுக்கு போய் பிழைப்பு நடத்துவாங்க. நீங்க என்னன்னா, டவுன்ல இருந்து கிராமத்துக்கு வந்து விவசாயம் பார்க்க நினைக்கிறீங்க!’ என்று, தன்னிடம் விளைநிலங்களை விலைக்குக் கேட்ட ரஜினி சாரிடம் அந்த நிலத்தின் உரிமையாளரான டெல்லி கணேஷ் கேட்பார்.

அதற்கு சரபோஜி கேரக்டரில் நடிக்கும் ரஜினி சார் சொல்வார், ‘விவசாயம் என்பது தொழில் இல்ல சார், அது மக்களுக்கு செய்யற மகத்தான சேவை’ என்று. பிறகு நிலத்தை உழுது பயிரிடுவார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.

சரி, கிளைமாக்சை மாற்றுங்கள் என்று ரஜினி சார் சுப்ரமணியசிவாவிடம் சொன்னாரே. அது என்ன கிளைமாக்ஸ்?

தலைப்பிலேயே இருக்கிறது அதற்கான விடை!

அன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல, எப்போதுமே அரசியல் என்றால் விலகி நிற்கவே விரும்புவார் ரஜினி. தேர்தலில் ஒரு சராசரி இந்தியக் குடிமகனாக கியூவில் நின்று வாக்களித்து தன் கடமையை நிறைவேற்றுவாரே தவிர, அரசியலுக்கு வரவேண்டும், அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதை ஒரு லட்சியமாக அவர் வைத்துக் கொண்டதில்லை.

devaraj-siva

‘சரபோஜி’ படத்தின் கிளைமாக்சில் அவர் முதலமைச்சராக மாறுவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது. அதைத்தான் மாற்றும்படி சுப்ரமணியசிவாவிடம் சொன்னாராம். கதையின் முதுகெலும்பே இதுதான் என்று சொன்ன சுப்ரமணியசிவா, கடைசிவரை தன்னை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவே இல்லை. இது அவர் தன் படைப்பின் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கை.

இந்த சம்பவத்துக்குப் பிறகு ரஜினியை சுப்ரமணியசிவா சந்திக்கவும் இல்லை. ‘சரபோஜி’ படத்தைப் பற்றிப் பேசவும் இல்லை.

10 வருடங்கள் கழித்து இப்போதுதான் இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது. தகவலை வெளியிட்டுள்ள தேவராஜ், சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் யோகி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!
3 thoughts on “சரபோஜி… கிராமம் தேடிப் போகும் ரஜினி முதல்வராகும் கதை.. 10 ஆண்டுகள் கழித்து வெளியான சுவாரஸ்ய தகவல்!

 1. sathya

  We all understand our beloved thalaivar would never like to come to politics. However as an ardent fan, he should utilise his popularity for some kind of social causes. No use of saying that he is doing lot of works behind the door and helping thousands. But actually he should come out of his shells and should voice for the social awareness. How many issues we have with his popularity he could do wonders. But not just through the cinema-this will of course would send the message but it will be like a making business out of it. Some of the major issues are no proper drainage system/toilets/women safety-should try to influence the general public to respect the nation and it streets and many more. Look at the people like Angelina Julie, just made headlines with UN for women safety. Our thalaivar has dedicated fans more than any body in the world, but it is high time he does really something good, without the fear of ruling parties or opposition parties.

 2. குமரன்

  வத்தலக் குண்டுவைச் சேர்ந்த சுப்ரமணிய சிவா நமது பாரதச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட தியாகி, சுப்ரமணிய பாரதியாருக்கும், வ.உ.சிதம்பரனாருக்கும் நெருங்கிய தோழர்.

  வீரமிக்க எழுத்தாளர். ஆங்கில ஏகாதிபத்திய அரசு அவரைப் பலமுறை சிறை வைத்தது. காந்தியின் வழிமுறைகளை வெளிப்படையாக விமரிசித்த நேர்மைத் திறன் கொண்டவர். சிறை வாழ்க்கை அவருக்குத் தந்த பரிசு தொழுநோய்.

  இந்த சுப்ரமணிய சிவா ரஜினிக்காகவே கூடத் தனது படைப்பின் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்ற செய்தியைப் படிக்கும்போது, அந்த மாபெரும் மனிதரின் பெயருக்கு இந்த சிவா தகுதிதான் என்று தோன்றுகிறது.

  வ.உ.சிதம்பரனாரின் பெயர் கொண்டு தேர்தலில் தில்லு முல்லு செய்வோர் வாளும் காலத்தில் பெருமனிதர்கள் பெயரை இவராவது காக்கிறாரே என்பது ஆறுதல்.

 3. குமரன்

  தலைவரின் இன்றைய மங்களூர் பேட்டியைப் படித்ததும் இந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது.

  ///நான் தமிழகத்தின் முதல்வராவது கடவுள் கையில்! – சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி///

  தலைவர் சுப்பிரமணியம் சிவாவைக் கூப்பிட்டு சரபோஜியைத் தனது அடுத்த படமாக நடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *