BREAKING NEWS
Search

சங்கரராமனும் சங்கர மடமும்… ஒரு ப்ளாஷ்பேக் !

சங்கரராமன்… !

Untitled 5(1)…ஆக சங்கரராமனை வேற்றுகிரகத்திலிருந்து வந்த யாரோ கொன்றிருக்கிறார்கள்… அல்லது சங்கர்ராமன் பொழுதுபோகாமல் தன்னைத் தானே வெட்டிக் கொன்று கொண்டார்.. முடிஞ்சது வழக்கு. போங்கப்பா!

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயவிஜயேந்திரன்கள் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டார்கள் என்ற செய்தி வெளியானதும் இப்படித்தான் பேஸ்புக்கில் எழுதினேன்.

அடுத்த சில நிமிடங்களில் சங்கரராமன் மகன் சொன்னது, ‘எங்கப்பா தன்னைத் தானே வெட்டிக் கொண்டு சாகவில்லை.. அவரை வெட்டிக் கொன்றவர்கள் கண்ணெதிரே நிரபராதிகளாக நடக்கிறார்கள்.. நாங்கள் இன்னும் நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.. தெய்வத்தையும் நம்புகிறோம்,” என்று.

சங்கரராமன்….

ஒரு செய்தியாளனாக என்னால் மறக்க முடியாத நபர், நண்பர். காஞ்சிபுரத்தில் நான் இருந்த நாட்களில் தினசரி காலையும் மாலையும் என்னை தவறாமல் சந்திக்க வந்துவிடுவார். அவருடன் ஒரு மெல்லிய துண்டு போர்த்திக் கொண்டு அவரது மகன் கொழுக் மொழுக்கென்று வந்து நிற்பான். அவரை சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற நண்பர்தான் அறிமுகப்படுத்தி வைத்தார். சின்ன காஞ்சிபுரத்தில் தெற்கு மாட வீதியில் வசித்தவர் சங்கரராமன். வரதராஜ பெருமாள் கோயில் ஊழியர்.

ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் முறைகேடுகள் பற்றி துல்லியமாக புள்ளிவிவரம் தருவார் சங்கரராமன். எந்தக் கோயிலில் என்ன விசேஷம், அதன் வரலாறு, இப்போதுள்ள நிலைமை என எனக்குத் தேவையான விவரங்களை தினமும் தருவது அவர் வழக்கம். முடிந்தவரை தமிழகத்தின் அனைத்து கோயில்கள் பற்றியும் எனக்குப் புத்தகங்கள் தந்திருக்கிறார்… ஒரு நாள் விட்டு ஒருநாள் நான் எழுதிய கோயில் கட்டுரைகளை இப்போது தொகுத்தாலும் தனிப் புத்தகம் தேறும். அதற்கான முழுப் பெருமை சங்கரராமனுக்குத்தான்!

ஒரு முறை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலமிருந்தும் ஒரு மூட்டை நெல்லுக்கு வழியில்லை என்ற தகவலை ஆதாரங்களோடு தந்தார். ‘குத்தகைதாரர்கள் தெய்வத்தையே ஏமாற்றும் கொடுமையை யாரும் எழுதமாட்டறாளே’ என குமுறினார். அதை படங்களோடு முதல் பக்க செய்தியாக்கினோம். சில தினங்களில் வரதராஜருக்கு வரவேண்டியவற்றில் ஓரளவுக்காவது வர ஆரம்பித்ததை மகிழ்ச்சியோடு சொல்லி, அந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான ‘படி இட்லி’ – புதினா சட்னியை கொடுத்துவிட்டுப் போனார்!

இந்தக் கோயிலில் நடந்த இன்னொரு அக்கிரமம்… கட்டாய அர்ச்சனை டிக்கெட் விற்பனை. அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது (இப்போது என்ன நிலைமையோ!).

சங்கர மடத்தில் எதிர்மறையாக என்ன நடந்தாலும், அது செய்தியாக வெளிவரக் கூடாது என்பது எழுதப்படாத உத்தரவு. எனவே புதிதாக வந்த என்னிடம்தான் அவர் சங்கர மடத்து சமாச்சாரங்களை அதிகமாகப் பகிர்ந்து கொள்வார்.

சங்கர மடத்தின் அடுத்த வாரிசாக வரவேண்டிய தன்னை தந்திரமாக புறந்தள்ளிவிட்டு ஜெயவிஜயேந்திரன்கள் செய்து வந்த பல சட்டவிரோத, தர்மவிரோத விஷயங்களை நிறையச் சொல்வார்.

21-1385024990-sankararaman-jayendrar-kanc

அந்த மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள்.

அதி நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட சங்கர மடத்தில் ஏன் அடிக்கடி ஷாக் அடிக்கிறது என்பது குறித்து சங்கரராமன் சொன்ன பின்னணி பயங்கர ஷாக்கான சமாச்சாரம்!

ஜெயேந்திரனைப் பார்க்க வரும் வெளி மாநில, வெளிநாட்டுப் பக்தர்கள், தரும் ரொக்க – தங்க காணிக்கைகள் குறித்து அவர் அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். சங்கரராமனுக்கு ஜெயேந்திரன் வைத்திருந்த பெயர் துஷ்டன்! நேருக்கு நேர் பார்த்தால் பக்கத்திலிருப்பவர்களிடம் ‘இந்த துஷ்டப் பய எதுக்கு வந்திருக்கான் கேளு.. அவனை முதல்ல போகச் சொல்லு’, என்பாராம். இதுவும் சங்கரராமன் சொன்னதுதான்.

எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திரன் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை, தொன்னூறுகளிலேயே நேரில் பார்த்து பலரிடமும் சொன்னவர் சங்கர்ராமன்.

எத்தனை பேர் நம்புவார்களோ.. தெரியவில்லை. ஜெயேந்திரனுக்கு ஒரு அறிவிக்கப்படாத மனைவி, மகள் கூட  உண்டு என்று சொல்லி வந்த சங்கரராமன், ஒருநாள் என்னையும் சில நிருபர்களையும் நேரில் அழைத்துப் போய் அந்தப் பெண்ணை ராமா லாட்ஜ் அருகில் வைத்துக் காட்டினார். என்னாலும் நம்பத்தான் முடியவில்லை. (சங்கரராமன் கொலையுண்ட தருணத்தில், டெல்லி பிரஸ்ஸில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது கேரவன் இதழில் இதுகுறித்து சிறப்புக் கட்டுரை எழுதினேன். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து சங்கர மடம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் என்ன நினைத்தார்களோ… அமைதியாகிவிட்டார்கள்!)

பல முறை தன்னை யாரோ துரத்தியதாகவும், தாக்க முயன்றதாகவும் சங்கரராமன் சொல்வார். ஆனால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் தன்னை சங்கர மடத்து ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்று கூறி, முழங்காலில் ரத்த காயத்துடன் வந்தார்.

ஒரு கட்டத்தில் சங்கரராமன் தரும் எக்ஸ்க்ளூசிவ் செய்திகளை என்னால் வெளியிட முடியவில்லை. காரணம், அலுவலகத்தில் பலரும் சங்கர மடத்தின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்களாக செயல்பட்டதுதான். எனது ஆசிரியரே ஒரு கட்டத்தில், “வேணாம்டா.. விட்ரு.. வேற பக்கம் கான்சன்ட்ரேட் பண்ணு,” என்று கூறுமளவுக்கு போய்விட்டது நிலைமை!

இதனால் நானே கூட சில சந்தர்ப்பங்களில் சங்கரராமனைக் கண்டுகொள்ளாமல் போகும் அளவுக்கு வந்துவிட்டேன். ஆனால் அந்த மனிதர் புரிந்து பக்குவமாகத்தான் நடந்து கொண்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்… ஒருநாள் சங்கரராமன் வந்தார். ‘சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா… குடிச்சிட்டு பூஜை பண்றான்… வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகத்தில், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது… இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,’ என்று வந்து நின்றார்.

“ஸாரி சங்கரராமன்… ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது,” என்றேன். ‘என்னண்ணா சொல்றேள்…’ என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன்.

ஆனால் அவருடனான நட்பில் மாற்றமில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போனாலே போதும், எங்கிருந்தாலும் ஓடி வருவார்… ஒவ்வொரு பிரகாரம், சந்நிதிகளுக்கும் அழைத்துப் போய் கோயிலின் பெருமை சொல்வார். தவறாமல் படி இட்லி பிரசாதம் பெற்றுத் தருவார். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், கற்சங்கிலிகள் குறித்து அவர் தரும் விளக்கம் அற்புதமாக இருக்கும்.21-sankararaman-1-600

கடைசியாக 2001-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அவரிடம் படி இட்லி – புதினா சட்னி பெற்றேன். அதன் பிறகு சங்கரராமன் ஒரு நாற்காலியோடு மல்லாக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பதைத்தேன்!

இதையெல்லாம் நினைவு கூறக் காரணம், சங்கரராமன் என்ற மனிதர் ஜெயேந்திரனுக்கு எந்த அளவுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லத்தான்!

(கொலை வழக்கு மற்றும் தீர்ப்பு குறித்து தனியாக… )

-என்வழி ஸ்பெஷல்
4 thoughts on “சங்கரராமனும் சங்கர மடமும்… ஒரு ப்ளாஷ்பேக் !

  1. ananth

    நீங்கள் எழுதி இருப்பது உண்மையானால் ,அதிர்ச்சி மற்றும் வேதனை.

  2. anbudan ravi

    கொன்றவரை அவரது உள் உணர்வுகள் கொன்றுவிடும் விரைவில்….நிம்மதியாக தூங்க முடியாது…..அவர்கள் வணங்கும் தெய்வம் நின்று கொல்லும்.

    அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *