BREAKING NEWS
Search

அந்தப் பக்கம் கேஎஸ் ரவிக்குமார்… இந்தப் பக்கம் ஷங்கர்… எதுதான் உண்மை?

அந்தப் பக்கம் கேஎஸ் ரவிக்குமார்… இந்தப் பக்கம் ஷங்கர்… எதுதான் உண்மை?

ravikumar-and

டந்த மூன்று தினங்களாக ரசிகர்கள் தொடர்ந்து கேட்கும் கேள்வி… தலைவர் அடுத்து நடிக்கும் படம் என்ன? கோச்சடையான் எப்போது வரும்… அட, அட்லீஸ்ட் ட்ரைலர் எப்போ?

சில தினங்களுக்கு முன் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் என்று அறிவித்து ஒரு செய்தி வெளியிட்டது.

அதில் கோச்சடையான் படம் முடிய இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுவதால், அதற்கு முன் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி ஒரு படம் நடிக்கப் போவதாகவும், இரண்டு மாதங்களில் இந்தப் படம் முடிந்து விடும் (??!!) என்றும், அந்தப் படம் எடுத்து முடிக்கும் வரை விஷயத்தை ரகசியமாக (சூரியனுக்கு ரகசியமாக மறைத்து வைக்க முடியுமா?) வைத்திருக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது (அதை அப்படியே என்வழியில் தந்துள்ளோம்).

அதையே, கொஞ்சம் முன்னே பின்னே மாற்றி நிறைய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இணையதளங்கள் பலவற்றிலும் அதுகுறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தன் பங்குக்கு ஒரு பரபரப்பைக் கிளப்பியது. இயக்குநர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து ஒரு ஒன்லைன் சொன்னதாகவும், அது பிடித்துப் போய், அடுத்த படமாகவே இதைச் செய்யலாம் என ரஜினி சொன்னதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இந்த இரு ரஜினி பட செய்திகளின் உண்மைத் தன்மை பூஜ்யம்தான். காரணம், இதுகுறித்து படத்தில் நேரடித் தொடர்புடைய யாருமே எந்த குறிப்பையும் தரவில்லை.

கேஎஸ் ரவிக்குமாரை வைத்து இரண்டு மாதங்களுக்குள் படமெடுத்து முடிப்பது சாத்தியமா என்று பார்க்க வேண்டும். இரண்டு மாதங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டாலும்கூட, பின் தயாரிப்புப் பணிகள் முடிய குறைந்தது 4 மாதங்களாவது தேவைப்படும். முன்பு மாதிரி கிடையாது ரஜினி படங்கள்… இப்போது அனைத்து வகையிலும் சர்வதேச தரத்துடன் படத்தை எதிர்ப்பார்க்கும் நிலையை உருவாக்கியிருக்கின்றன அவரது சமீபத்திய படங்கள். அதற்கு இந்த 6 மாதக் கணக்கு சரிவருமா என்ற கேள்வி எழுகிறது.

shankar-rajini

ஷங்கர் படத்தைப் பொறுத்தவரை, இப்போதைக்கு அந்த விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை. ஷங்கர் தன் ஐ படத்தின் 50 சதவீதத்தைத்தான் இதுவரை எடுத்துள்ளார். மீதியை எடுக்க அவருக்கு இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என்று தெரியவில்லை. எனவே இப்போதைக்கு அந்தப் படம் குறித்த செய்தி நிஜமாக வாய்ப்பில்லை.

சரி எதற்காக இப்படி கிளப்பிவிடுகிறார்கள்…?

அனுமானங்கள்தான். கோச்சடையான் தாமதமாகிறது.. அடுத்து ரஜினி என்ன செய்வார் என்ற அனுமானத்தில் விகடன் கிளப்பிய செய்தியை, அடித்துத் தள்ள டைம்ஸ் ஆப் இந்தியா தன் பங்குக்கு ஷங்கர் பட செய்தியை கிளப்பிவிடுகிறது.

வெறும் செய்திதானே.. அதுவும் யாரையும் பாதிக்காத செய்தி என்பதால் எதிர்ப்பும் இருக்காது. ஆனால் சுவாரஸ்யமாக வாசகர்கள் படிப்பார்கள் அல்லவா!

-வினோ
என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *