BREAKING NEWS
Search

தமிழக மக்களை நல்லா வாழ வைக்கணும்.. இதுதான் என் அதிகபட்ச ஆசை! – ரஜினிகாந்த்

தலைவரின் அதிகபட்ச ஆசை இது!

கோலாலம்பூர்: என்னை வாழவைத்த தமிழக மக்களை நல்லா வாழ வைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை என்று ரஜினிகாந்த் கூறினார்.

நடிகர் சங்கக் கட்டட நிதிக்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நட்சத்திர விருந்து, நட்சத்திரக் கிரிக்கெட், நட்சத்திர கலை விழா என மூன்று கட்டமாக நடந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல் ஹாஸன் கலந்து கொண்டனர். 300க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இவற்றில் பங்கேற்றனர்.

நேற்றைய விழாவில் ரஜினிகாந்தின் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. விவேக்கின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வதுபோல் நிகழ்ச்சியை அமைத்திருந்தனர்.

அதற்கு முன்பு நடிகை லதா, ரஜினிக்கு ஒரு பரிசளித்துவிட்டு, 3 கேள்விகள் கேட்டார்.

அவை:

லதா: 70 களில் இருந்து உங்களை பார்த்து கொண்டு இருக்கிறேன் நினைத்ததை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவர் நீங்கள். இவ்வளவு பேர் புகழ்கிடைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும் எளிமையின் காரணம் என்ன?

ரஜினி: நன்றி… ஆனா அது எப்படினு எனக்கே தெரியலிங்க.

லதா: இந்த கேள்வியை தப்பாக எடுத்துக்க கூடாது. டீன் ஏஜில் காதலித்த அனுபவம் உண்டா?

ரஜினி: எஸ். ஹை ஸ்கூல் படிக்கும் போது ஒரு லவ் வந்தது. முதல் காதல் எப்பவுமே மறக்க முடியாது. பர்ஸ்ட் லவ் நிறைய பேருக்கு இருக்கும். அதில் நிறைய பேர் வெற்றி அடைந்து இருக்காங்க நிறைய பேர் தோல்வி அடைந்து இருக்காங்க. அந்த காதலில் நானும் தோல்வி அடைந்து இருக்கேன்.

லதா: அவங்க பேர் நினைவு இருக்கா?

ரஜினி: நினைவு இல்லாமல் இருக்குமா… மன்னிக்கவும் சாரி…

அடுத்து விவேக்கின் கேள்விகளுக்கு ரஜினி சொன்ன பதில்களின் தொகுப்பு:

விவேக்: பைரவி டு இந்திரன், சிவாஜிராவ் டு ரஜினிகாந்த், நடிகர் டு தலைவர்… இந்த பயணம் பற்றி?

ரஜினி: என்னுடைய 42 ஆண்டு கால கலையுலக அனுபவத்தில் முடிந்த வரை மக்களை மகிழ வச்சிருக்கேன். முடிஞ்ச அளவுக்கு என்னுடைய படங்கள்ல சில நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கேன்.

விவேக்: நீங்கள் இப்போது நடந்து வரும்போது ஆடியன்ஸ் வெறி பிடித்த மாதிரி கத்தினாங்க.கேபி சார் உங்களுக்கு நடிப்பை தூண்டினாரா இல்லை உங்களுக்குள் இருந்த ஸ்டைல் கேபி சார் மூலமாக வெளி வந்ததா?

ரஜினி: இப்ப நான் எப்படி இருக்கேனோ எப்போதும் அப்படித்தான் இருப்பேன். நான் பஸ் கண்டக்டராக இருக்கும் போது கூட வேற பஸ்களில் அரை மணி நேரத்தில் 40 டிக்கெட்டுகள் கொடுத்தால் நான் பத்து நிமிடங்களில் அந்த டிக்கெட்டுகளை கொடுத்து விடுவேன். கர்நாடக பஸ்ஸில் நான் வேலை பார்த்த போது ஆண்கள் பஸ் பின்னால் அமருவார்கள். பெண்கள் பஸ் முன் பகுதியில் அமருவார்கள். நான் எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்து விட்டு பஸ் முன் பகுதியில்தான் இருப்பேன் அப்போது தலைமுடி அதிகமாக இருக்கும்.. காதுக்கு பின் பறக்கும் முடிகளை கையால் கோதிவிட்டு ஸ்பீடா டிக்கெட் டிக்கெட் என்று கொடுப்பேன் இதை கேபி சார் பார்த்து இருக்கிறார்.டேய் சினிமா வுக்கு நீ போனா இந்த ஸ்டைல் புதுசு. ஜனங்களுக்கு பிடிக்கும் இதை எப்பவும் மாற்றாதே என்று அட்வைஸ் பண்ணார். அதை நான் அப்படியே மெயின்டெயின் பண்றேன்.

விவேக்: உங்களுடைய குறைந்த பட்ச ஆசை என்ன? அதிக பட்ச ஆசை என்ன?

ரஜினி: குறைந்த பட்சம் ஒரு ஸ்கூட்டர் வாங்கனும் 2 பெட்ரூம் உள்ள அபார்ட் மென்ட் வாங்கனும் ஒரு டீசன்ட் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ ஆசை. அதிகபட்சம்னா என்னை வாழ வைத்த தமிழ் மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான் .

விவேக்: எப்ப நீங்க ரொம்ப ஜாலியாக இருந்திங்க எப்ப நீங்க ரொம்ப மனசு வருத்தபட்டிங்க?

ரஜினி: படம் ஹிட் ஆனால் ஜாலியா சந்தோஷமாக இருந்திருக்கேன். படம் சரியாக போகவில்லை என்றால் வருத்தப்பட்டு இருக்கேன். நிறைய சந்தோஷபட்டு இருக்கேன்.. வாழ்க்கையில் நிறைய கண்ணீர் விட்டு இருக்கேன்.

விவேக்: பல தலைமுறைகள் தாண்டியும் ரசிகர்கள் உங்களுக்கு இருக்காங்க.. அந்த ரசிகர்களுக்காக அந்த பட்டர் பிட்டர் வசனங்களை பேசி காட்ட முடியுமா?

ரஜினி: சாரி மறந்து விட்டேன்.

விவேக்: பொது வாழ்க்கைக்கு வரும் போது குடும்பம் சுகமா? சுமையா?

ரஜினி: பொதுவாக சொல்லி விட முடியாது. தனி தனி நபர் வாழ்க்கையை பொறுத்தது.

விவேக்: கட்டம் சரியில்லை (ஜோதிடம்) என்று சும்மா இருக்கனுமா இல்லை முயற்சி பண்ணி பார்ப்போமே என்று உழைக்கனுமா?

ரஜினி: ஜோதிடம் புராண காலத்தில் இருந்தே இருக்கிறது. அதை யார் சொல்றாங்க என்பது முக்கியம். அதற்காக ஜோதிடத்தைக் கேட்டுக் கொண்டு சும்மா உட்கார முடியாது. என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும். என்ன கிடைக்குமோ அது கிடைக்கதான் போகும். கிடைக்கிறது கிடைக்காமல் போகாது. ஆண்டவர் கொடுத்த தொழிலில் நாம் நாணயமா நேர்மையா செய்திட்டு இருந்தால் எல்லாமே நமக்கு கிடைக்கும்.

விவேக்: கடந்த 1996 இல் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது (அரசியல்) அதை தவற விட்டதாக நினைத்தது உண்டா?

ரஜினி: ஒரு செகண்ட் கூட வருத்தப்பட்டது கிடையாது.

விவேக்: முதல் முறையாக மலேசியா பயணம் செய்தது பற்றி?

ரஜினி: 1977 நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்கு நானும் கமலும் வந்திருக்கோம். எனக்கு அதுதான் முதல் முறை. அப்போது கமல் பெரிய நடிகர். நான் அப்போது தான் சினிமாவுக்கு வந்தேன். கமலை அழைத்துச் செல்ல தனி கார் வரும். ஆனால் ரஜினி எங்கே என்று கேட்டு என்னையும் அழைத்துச் செல்வார். அரவணைத்து என்னை பக்கத்தில் வைத்துக் கொண்டார். சூட்டிங் முடிந்த அன்று நானும் கமலும் இரவுகளில் மலேசியாவில் ஜாலியா நைட் லைஃப் என்ஜாய் பண்ணிருக்கோம். காலை நான்கு மணிக்கு வந்து தூங்குவோம். கேபி சார் வருவாங்க. என்ன இந்த பசங்க இப்படி பன்றாங்க என்று. அப்படியே பேசிட்டு போய்டுவாங்க. கமலும் நானும் இதை மறக்கவே மாட்டோம். அருமையான எக்ஸ்பீரியன்ஸ்.

விவேக்: வாழ்வின் நிறைவில் நீங்கள் என்னவாக நினைவு கூறப்பட விரும்புகிறீர்கள்?

ரஜினி: ஒரு நடிகனாக வந்தேன் மகிழ்வித்தேன் நடிகனாக போய்ட்டேன் என்று என் வாழ்க்கை முடிந்து விடக் கூடாது என நினைக்கிறேன்.

விவேக்: இந்த நிகழ்ச்சியின் மூலமாக உலக ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ரஜினி: நான் திரும்பவும் சொல்றேன்…
தாய் தந்தை குடும்பம் ரொம்ப முக்கியம். அவங்க தான் தெய்வங்கள். முதலில் நீங்கள் அதை செய்தால் உங்கள் பின்னால் எல்லாமே வரும். முக்கிய மாக இளைஞர்கள் தாய் தந்தையை வணங்குங்கள். அவர்களை சந்தோஷபடுத்துங்கள் அவர்களை சந்தோஷபடுத்தினால் போதும். ஆண்டவர் உங்களை சந்தோஷபடுத்துவார்.

– என்வழி
2 thoughts on “தமிழக மக்களை நல்லா வாழ வைக்கணும்.. இதுதான் என் அதிகபட்ச ஆசை! – ரஜினிகாந்த்

  1. Sidhique

    தேசிய அரசியலுக்கு மாநில அரசியலின் கூடுதல் பங்களிப்பாக ரஜினியின் வருகை அமையும். ஒரு பிரபலமான தலைவர் மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வர முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *