BREAKING NEWS
Search

அந்நியரிடமிருந்து மண்ணையும் மக்களையும் மீட்கவே எமது போராட்டம்… இந்திய இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்க அல்ல! – விடுதலைப் புலிகள்

இந்தியாவின் இறையாண்மைக்கு எங்களால் ஆபத்தில்லை-விடுதலைப் புலிகள் அறிக்கை

சென்னை: எங்களது இழந்த இறைமையை மீட்கத்தான் நாங்கள் போராடி வருகிறோம். எங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்பட்டதில்லை என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று எல்டிடிஈ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை ஈராண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பான அறிவித்தலை வெளிப்படுத்தும் நோக்கில் அண்மையில் வெளிவந்த அறிக்கையில், எமது அமைப்புக் குறித்தும் எமது விடுதலைப் போராட்டத்தைக் குறித்தும் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் எமது ஆழ்ந்த கரிசனையையும் ஆட்சேபத்தையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

எமது மக்களுக்கான அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு படிப்படியாக நிகழ்த்தப்பட்டு வந்த இனவழிப்பு நடவடிக்கையை எதிர்த்து முளைவிட்டதே எமது விடுதலைப் போராட்டம். அந்நியரிடம் இழந்துபோன இறைமையை மீட்டு எமது இனத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நாம் எமது போராட்டத்தை நடாத்தினோம்.

அறவழியிலான அனைத்து முயற்சிகளும் பலனற்றுப் போன நிலையில்தான் எமது போராட்டம் ஆயுதவழியில் பயணிக்கத் தொடங்கியது. இவ்வாறு ஆயுதப்போராட்டம் முளைவிட்ட காலத்தில் இந்திய மத்திய அரசு –அதிலும் குறிப்பாக தற்போது ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்துக்கு உதவியளித்து ஊக்குவித்தது.

உலகநாடுகள் பலவற்றில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் போலவே எமது போராட்டமும் முற்றிலும் நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. அறவழியையோ ஆயுதப் போராட்டத்தையோ வழிமுறையாகக் கொண்டு விடுதலை பெற்ற அனைத்து இனங்களுக்கும் நாடுகளுக்கும் இருக்கும் அதே உரிமையும் நியாயப்பாடும் எமது மக்களுக்கும் எமது போராட்டத்துக்குமுண்டு என்பதை மனச்சான்றுள்ள அனைவரும் அறிவர்.

ஆனால் அடக்குமுறைக்கெதிராக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி விடுதலையடைந்த நாடுகளே ஏனைய விடுதலைப் போராட்டங்களை நசுக்கும் துயர நிகழ்வுகள் உலக ஒழுங்கில் அரங்கேறி வருகின்றமை வருத்தத்துக்குரிய வரலாற்று உண்மை. அவ்வகையிலேயே இந்தியாவின் நடவடிக்கைகளை ஈழத் தமிழர்களும் பார்க்க வேண்டிய நிலை காணப்படுவது வரலாற்றுத் துயரம்.

எமது அமைப்பின் மீதான தடைநீடிப்பு அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவையாகவும் திட்டமிட்ட அவதூறாகவுமே எம்மால் பார்க்கப்படுகின்றது. வழமையாக இத்தடை நீடிப்புத் தொடர்பாக வெளிவரும் அறிவிப்புப் போலன்றி இம்முறை வித்தியாசமான முறையில் எமது போராட்டம் மீதான அவதூறுகளோடு அறிக்கை வெளிவந்துள்ளது.

எமது போராட்டம் இந்திய இறையாண்மைக்குச் சவால் விடும்வகையில் அமைவதாகவும் தீவிர இந்திய எதிர்ப்பு நிலையிலிருக்கும் எம்மால் இந்திய நாட்டுக்கும் அதன் குடிமக்களுக்கும் ஆபத்து நிலவுகிறது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மையில் எமது போராட்டம் எவ்வகையிலும் இந்திய இறையாண்மைக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானதன்று. நாம் எமது மண்ணையும், மக்களையும் பாதுகாக்கவே போராடுகின்றோம். அண்டை நாடு என்றளவில் இந்தியாவுடன் நட்புப் பாராட்டவே விரும்புகின்றோம். மாறாக எம்மை விரோதியாகப் பார்ப்பதும் இந்தியாவுக்கு எம்மால் ஆபத்தென்று சொல்வதும் முறையன்று.

மேலும், தோல்வியடைந்த நிலையிலும் நாம் ஈழக்கோரிக்கையைக் கைவிடவில்லையென்பதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கிறது இவ்வறிக்கை. ஈழக்கோரிக்கை எழுப்பப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்கள் அனைத்தும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. உண்மையில் இப்போதுதான் தனிநாட்டுக் கோரிக்கைக்கான தேவை மேலும் அதிகரித்துள்ளது.

சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் கோரமுகம் 2009 இன் பின்னரும் தமிழின அழிப்பைத் தீவிரப்படுத்துவதில் வெளிப்பட்டு நிற்கின்றது. எமது மக்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இனி எக்கட்டத்திலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சேர்ந்து வாழ முடியாதென்ற நிலை முன்னெப்போதையும்விட இப்போதுதான் தீவிரமாகியுள்ளது.

இந்நிலையில் ஈழக்கோரிக்கை தவறென்ற கருத்தும் அதையும் அமைப்பின் மீதான தடைக்கான காரணமாகக் குறிப்பிடுவதும் தவறான கணிப்பீடாகும். மேலும் தனியீழம் அமைக்கும் நோக்கம் எவ்வகையில் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்குமென்பதை இந்திய மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

எமது இனவிடுதலைக்காகக் குரல்கொடுக்கும் தமிழக உணர்வாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் எச்சரிக்கும் பாணியில் இவ்வறிக்கை இடம்பெற்றுள்ளது கவலையளிக்கின்றது. ஜனநாயக வழியிலான அவர்களது போராட்டங்களும் ஆதரவுச் செயற்பாடுகளும் எவ்வகையிலும் இந்தியாவைப் பயமுறுத்தப் போவதில்லை.

ஆழ்ந்து நோக்கினால், குறிப்பிட்ட அறிக்கை திட்டமிட்டுப் புனையப்பட்ட பல காரணங்களைக் கொண்டுள்ளது. நியாயமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு எமது போராட்டம் தொடர்பில் இந்திய மக்களிடத்தில் தவறான பார்வையையும் தேவையற்ற பயத்தையும் தோற்றுவிக்கின்றது.

இந்திய அரசு எமது போராட்டம் தொடர்பில் பயங்கொள்ளத் தேவையில்லையென்பதை நாம் பலதடவைகள் தெளிவாகச் சொல்லி வந்துள்ளோம். தமிழ் மக்களின் இறைமையை மீட்பதற்கான எமது போராட்டம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானதில்லை என்பதை மீண்டும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றோம்.

எண்ணற்ற மக்களைப் பலிகொடுத்து, சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து, சிங்கள பௌத்த பேரினவாத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் தற்போதும் எதிர்கொண்டு பாதுகாப்பற்ற நிலையில் நிர்க்கதியாக எமது தமிழினம் நின்றுகொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், ஆதரித்து அனுசரிக்க வேண்டிய இந்திய அரசு இவ்வாறு காழ்ப்புணர்வோடு நடந்துகொள்வது ஏற்புடையதன்று.

எனவே எமது போராட்டத்தின் நியாயத்தையும் தேவையையும் புரிந்துகொண்டு எமது அமைப்பின் மீதும் எமது போராட்டத்தின் மீதும் சேறு பூசும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, எமது மக்களுக்கான பாதுகாப்பையும் நிரந்தமான அரசியல் தீர்வையும் பெற்றுத்தரும் பணியை இந்திய அரசு முன்னெடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-என்வழி செய்திகள்
3 thoughts on “அந்நியரிடமிருந்து மண்ணையும் மக்களையும் மீட்கவே எமது போராட்டம்… இந்திய இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்க அல்ல! – விடுதலைப் புலிகள்

  1. குமரன்

    சரியான அறிக்கை. இதை வெளியிட்ட என்வழிக்கு வாழ்த்துக்கள். நன்றி

  2. ஈழவேந்தன்

    இந்தியா ஒரு போதும் திருந்தவே திருந்தாது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *