BREAKING NEWS
Search

மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம்!

இதுதானா நாம் கற்றுக் கொண்ட பாடம்?

23-1448258817-chennai-rain832-600
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக வெளுத்தெடுத்துவிட்டது மழை. குறிப்பாக கடந்த பத்து தினங்களில் சென்னைக்கு மரண பயத்தைக் கொடுத்துவிட்டது என்றால் மிகையல்ல.

எங்கு பார்த்தாலும் மனிதாபிமான உதவிகள், அரசை எதிர்ப்பார்க்காமல் தனி நபர்களும் சில அமைப்புகளும் திரையுலகினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி ஆறுதல்படுத்தி வருகின்றனர்.

அரசு மகா மெத்தனமாக இருப்பதாகக் குற்றம் சாட்டியபடி உதவிகளைப் பெற்று வருகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

நூறாண்டுகளில் பார்த்திராத மழை, பெருவெள்ளம். உலகின் கவனத்தையே ஈர்த்துவிட்டது சென்னையின் மழை வெள்ள சோகம். சென்னைக்கு நிகரான அல்லது அதை விட மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளும் தமிழகத்தில் ஏராளம். ஆனால் அங்கெல்லாம் மீடியாவின் கவனம் அவ்வளவாகத் திரும்பவில்லை.

chennai-rain 3

நேற்று முன்தினம் வரை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருந்த சென்னையும் புறநகர்ப் பகுதிகளும் இன்று குப்பைக் கிடங்காகக் காட்சி தருகின்றன.

சென்னை, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வெள்ள காலத்தில் நிலவிய மனிதாபிமானமும், சுய விமர்சனமும், இனி இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சுய கட்டுப்பாடும்… இன்னும் நான்கைந்து நாட்களுக்குப் பிறகாவது – அரசை விடுங்கள் – குடிமக்களான நமக்கு இருக்குமா… ம்ஹூம் சந்தேகம்தான்.

ஒரு சின்ன உதாரணம்: சென்னையின் வடிகால்கள் அடைபட்டுக் கிடக்க முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள் மட்டுமல்ல, அளவுக்கதிகமான குப்பைகளும், ப்ளாஸ்டிக் கழிவுகளும் கூட. ஆனால் வெள்ள நிவாரணம் பெற்ற மக்கள் செய்த வேலை என்ன? தங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வைத்து வழங்கப்பட்ட அனைத்தையும் பயன்பாடு முடிந்ததும் தெருக்களிலேயே போட்டுவிட்டு வீட்டுக்குள் போய்விட்டனர். இன்று நாம் பார்க்கும் குப்பைகளில் 20 சதவீதம் இப்படிச் சேர்ந்தவைதான் என்கிறார்கள் நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.

garbage

இதுதானா நாம் கற்றுக் கொண்ட பாடம்?

ஒரு மாதத்துக்குப் பிறகு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடரும், ஏரிகளில் ரியல் எஸ்டேட் போர்டுடன் நடிகர் நடிகைகள் போஸ் கொடுப்பார்கள். இயற்கையின் இந்தக் கோபத் தாண்டவத்தை அப்படியே மறந்துவிட்டு, அங்கே சுமோக்களில் படையெடுப்பார்கள் சென்னைவாசிகள்.

அடுத்த மழையின் போது, பெருங்கோபத்துடன் டிவிக்களில் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்!

-என்வழி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *