BREAKING NEWS
Search

திமுக ரஜினியைக் காப்பாற்றியதா…?!

cmrajini

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரணுமா – வேண்டாமா? சமூக வலைத்தளங்கள் பத்திரிகைகள் தொடங்கி சந்து பொந்தில் இருக்கும் டீ கடைவரை இபோதைய ஹாட் டாபிக் இதுதான்!

வந்தால் யார் வீட்டுக் குடி முழுக்கப் போகிறது? அரசியலுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்! தமிழர்கள் நலனுக்காக என்னைக்காவது போராடினாரா? ….னாரா?….னாரா? என்று கேள்விகளாக அடுக்கித் தள்ளுகிறார்கள்!

ஒரு மனிதன் அரசியலுக்கு வர ஓட்டுரிமை இருந்தால் போதும்! அவர் நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கான விடையை தேர்தலின் போது மக்கள் பார்த்துக்கொள்வார்கள். அதை விடுத்து கன்னடத்துக்காரர் எங்களை எப்படி ஆள அனுமதிக்க முடியும் என்பது பிரதான குமுறலாக இருக்கிறது!

நடிக்க வந்த நாள் தொட்டு இன்றுவரை சூப்பர் ஸ்டாராக இருக்கக் கூடிய ஒரே நடிகர் உலகத்திலேயே ரஜினி மட்டும்தான்! சோட்டா பீம் பார்க்கிற வாண்டுகளில் தொடங்கி நாற்பதைத் தாண்டிய நடுத்தர வயது ஆளுக்கும் பிடித்த நடிகராக இருக்கிறார்.கடந்த நாற்பது ஆண்டுகளில் எத்தனையோ அரசியல் கட்சிகள் உடைந்து சிதறியிருக்கிறது! ரஜினி மன்றத்தில் ஏதாவது ஒரு மன்றம் கலைக்கப்பட்டதாக செய்தி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நடிகர் சங்க எலக்சன் நடந்தபோதும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்தபோதும் ஒரு தெலுங்கன் எப்படி பதவிக்கு வரலாம் என்று பொதுத் தேர்தல் அளவுக்கு பரபரப்பும் முட்டுக்கட்டையும் போடப்பட்டது! மாற்றம் வேண்டும் என்று நினைத்த உறுப்பினர்கள் விசாலை ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.இந்த இரண்டு ஆண்டுகளில் விசால் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அடுத்த தேர்தலின் ரிசல்ட் இருக்கும்.

கடந்த ஐம்பதாண்டு கால திராவிட அரசியலில் மக்களுக்கு என்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது? கட்சி அறக்கட்டளைகளின் சொத்துக்கள் கூடியிருக்கிறது அவ்வளவுதானே!

ரஜினி நடிகனாக இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எங்களை ஆள நினைக்கக் கூடாது என்பது இன்னொரு குற்றச்சாட்டு. நெடுவாசலில் போராடிய பெண் தோழர்களை சிறைத் துறை அதிகாரிகள் மிக மோசமான முறையில் நடந்து கொண்டது தெரிந்த பிறகு, இன்று சமூக வலைதளங்களில் பொங்கும் போராளிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரடியாக என்ன செய்தார்கள்? மார்க் ஒரு பிளாட்ஃபாம் போட்டுக் கொடுத்தார் என்பதற்காக 22 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு தெரியாமல் ரஜினியை சீண்டுபவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

1991-1995 இடைப்பட்ட காலங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான்தோன்றித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலம்! ஜெ தலைமையில் நடிகர் திலகம் சிவாஜிக்கு பாராட்டு விழா. அந்த மேடையில் வைத்தே சிவாஜிக்கு உரிய மரியாதை செய்யவில்லை என்பதை மேடையில் ஜெ இருக்கும்போதே தைரியமாகச் சுட்டிக்காட்டினார். திரைப்பட நகருக்கு எம்ஜிஆர் அல்லது சிவாஜி பெயரைச் சூட்டாமல் உங்கள் பெயரை (ஜெஜெ) சூட்டிக் கொண்டது தவறு என்றார். ஆடிப் போனார்கள் மேடையில் இருந்தவர்கள். பம்பாய் படம் எடுத்ததற்காக இயக்குனர் மணிரத்தினம் வீட்டில் குண்டு வீசப்பட்டது. சக கலைஞர் என்ற முறையில் பாட்சா பட விழாவில் – ‘தமிழ் நாட்டில் வெடிகுண்டுக் கலாசாரம் அதிகரித்துவிட்டது’ என்று சொன்னார் ரஜினி.

கொதித்துவிட்டார் ஜெயாலலிதா. அதன் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டுக்கு போகக்கூட ரஜினியிடம், ஐடி கார்ட் இருந்தால்தான் அனுமதிப்போம் என்று சொன்னது அப்போதைய ஜெ அரசு!

அப்போது நடந்த தேர்தலில் கிங் மேக்கர் ரஜினிதான். அதை எவராலும் மறுக்க முடியாது! 91 தேர்தலில் அதிமுகவோடு காங்கிரஸ் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்திருந்தாலும், ஜெயலலிதாவின் போக்கு பிடிக்காமல் எதிர்கட்சியாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது.

96 தேர்தல் நேரத்தில் அதிமுகவோடுதான் மீண்டும் கூட்டணி என்று அறிவித்தார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ். தனது நண்பரான மூப்பனாரைச் சந்தித்து திமுகவோடு கூட்டணி வையுங்கள் என்று சொல்கிறார் ரஜினி. டெல்லி தலைமை அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக இல்லை என்று பதில் தருகிறது!

நரசிம்மராவை நேரில் சந்தித்து திமுகவோடு கூட்டணி வைக்க வேண்டிய சூழல் பற்றி எடுத்துச் சொல்கிறார். ‘நீங்கள் ஸி எம் கேண்டேட்டாக இருந்தால் வெளியில் வருகிறோம்’ என்று நரசிம்மராவ் வைத்த கோரிக்கையை மறுத்துவிட்டு சென்னை திரும்பினார் ரஜினி.

Rao Rajini combo
அதன் பிறகு பத்திரிகையாளர் சோ, மூப்பனார், ரஜினி மூவரும் கலந்தாலோசிக்கிறார்கள். 27 நாட்களுக்குள் காங்கிரசிலிருந்து விலகி, தமாக என்றொரு புதிய கட்சியைத் தொடங்குகிறார் மூப்பனார். ரஜினி சொன்னார் என்பதற்காகத்தான் காங்கிரசை விட்டு வெளியில் வந்தேன் என்று சத்யமூர்த்தி பவனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவரே சொல்கிறார்.

அந்தப் பரபரப்பான காலகட்டங்களை தொடர்ச்சியாகப் பதிவு செய்தது சுதேசமித்திரன். அதற்கு இப்போதும் நடமாடும் சாட்சியாக இருப்பவர் தினகரன் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் கதிர்வேல்.

திமுக ஆட்சிக்காலத்தில் சில அமைச்சர்கள் செய்த அடாவடி காரணமாக மக்கள் திமுக, அதிமுக இரண்டு கட்சியின் மீதும் கோபத்தில் இருந்த நேரம் அது! தவிர வைகோ திமுகவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி, பத்திரிகைகளின் ஆதரவைப் பெற்றிருந்த சமயம் அது. அதில் திமுகவிற்கு கணிசமான இழப்பும்கூட! இந்த சூழலில்தான் திமுக – தமாக கூட்டணி உறுதியாகிறது.

இத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி காணப்பட்டது. திமுக-தாமக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய லீக், அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் ஒரு பிரிவு ஒரு அணியாகவும், அதிமுக-இந்திரா காங்கிரசு ஓரணியாகவும், மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரணியாகவும், திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. பி ஜே பி தனித்துப் போட்டியிட்டது.

சுப்ரமணிய சாமியின் ஜனதா காட்சி டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் சில தொகுதிகளில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

இந்த சூழலில்தான் சன் தொலைகாட்சியில்  திமுக – தாமகா கூட்டணியை ஆதரித்து வாய்ஸ் கொடுக்கிறார் ரஜினி. தமிழ் நாடு முழுக்க உள்ள ரசிகர்களை இந்தக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அதாரவாக தேர்தல் பணி ஆற்ற வேண்டுகோள் வைத்தார். அவர்களும் பரபரப்பாக களம் இறங்கி வேலை பார்த்தார்கள். காட்சி மாறியது. திமுக ஆட்சிக்கு வந்தது. இதற்கெல்லாம் காரணமான ரஜினிக்கு தமிழகமே நன்றிக் கடன்பட்டிருப்பதாக மூப்பனார் கூறினார். ஆனால் ஒப்புக்குக் கூட ரஜினிக்கு நன்றி சொல்லவில்லை கருணாநிதி / திமுகவினர் என்பதே உண்மை.

காங்கிரசை விட்டு வெளியில் வந்து புதுக்கட்சி தொடங்கி முதல் தேர்தலில் தமாக 39 சீட் வாங்கியதில் ரஜினியின் பங்கில்லாமல் எப்படி! ஆக, ரஜினி அரசியலுக்கு புதியவரும் அல்ல!அவரது ரசிகர்களுக்கு தேர்தலும் புதிதல்ல!!

வந்துதான் பார்க்கட்டும். 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து சிறையைவிட்டு வெளியில் வந்த இரோம் ஷானு சர்மிளா தேர்தலில் நின்றபோது இந்த மக்கள் எவ்வளவு சிறப்பாகக் கௌரவம் செய்தார்கள் என்ற துரோக வரலாற்றையும் கடந்து வந்துதான் ரஜினி அரசியலுக்கு வரலாமா – வேண்டாமா என்று நாம் விவாதம் பண்ணிக்கொண்டிருக்கிறோம்?

நேர்மையான ஒருத்தர்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் தோழர் நல்லக்கண்ணு தவிர்த்து ஒரு ஆளைச் சுட்டிக்காட்டுங்கள்! என்றாவது அவரை முதல்வர் வேட்பாளராக, அட வெளியில் இருந்து வேண்டாம், அந்தக் கட்சியில் இருப்பவர்களே கூட முன்மொழிந்ததாக வரலாறு உண்டா?

அரசியலுக்கு வரட்டும் ரஜினி… தேர்தல் களம் தீர்மானிக்கட்டும் அவர் வேண்டுமா இல்லையா என்பதை!

– வீ கே சுந்தர்
2 thoughts on “திமுக ரஜினியைக் காப்பாற்றியதா…?!

 1. ஸ்ரீகாந்த்.1974

  \\நேர்மையான ஒருத்தர்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் தோழர் நல்லக்கண்ணு தவிர்த்து ஒரு ஆளைச் சுட்டிக்காட்டுங்கள்! என்றாவது அவரை முதல்வர் வேட்பாளராக, அட வெளியில் இருந்து வேண்டாம், அந்தக் கட்சியில் இருப்பவர்களே கூட முன்மொழிந்ததாக வரலாறு உண்டா?//

  அசத்தல் அற்புதம் செம கேள்வி
  வாழ்த்துக்கள்!

 2. Rajagopalan

  On 28 papers First look Ad will come for Ranjith Thalaivar Movie?
  Please confirm.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *