BREAKING NEWS
Search

‘ஜெ போபியா’… விகடனிலிருந்து விலக்கப்பட்ட மதன்!

‘ஜெ போபியா’… விகடனிலிருந்து விலக்கப்பட்ட மதன்!

 

மதனைக் 'காலி' செய்த அந்தப் படம்!

னந்த விகடனிலிருந்து இரண்டாவது முறையாக வெளியேறியுள்ளார் பிரபல கார்ட்டூனிஸ்ட்- எழுத்தாளர் மதன்… இந்த முறை வெளியேறல் என்ற பதம் சரியாக இருக்காது.. விலக்கப்பட்டுள்ளார் என்பதே சரியானது!

ஒரு பத்திரிகையிலிருந்து அதன் பணியாளர் அல்லது எழுத்தாளர் விலகுவதோ விலக்கப்படுவதோ நிறுவனம் – அந்த நபர் சார்ந்த தனிப்பட்ட விஷயம்தான், அதுகுறித்து சம்பந்தப்பட்ட பத்திரிகை ரகசியம் காக்கும் வரை. ஆனால் மதன் விலக்கப்பட்டதற்கான காரணத்தை பகிரங்கமாக விகடனே வெளியிட்டுள்ளது. அந்த விளக்கம் மதனின் நடுநிலை குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளதால், அதுகுறித்த பார்வையைப் பதிவு செய்கிறோம்.

தொன்னூறுகளின் இறுதியில் ஒரு முறை, விகடன் – மதன் மோதல், பிற பத்திரிகைகளிலும் செய்தியாகும் அளவுக்குப் போனது.

அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் அனைத்தும் வதந்திகள் போலத்தான் சொல்லப்பட்டன.

அன்றைக்கு விகடன் குழும இதழ்களின் இணையாசிரியர் என்ற பெரிய பதவியில் இருந்துகொண்டே, விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.

இன்னொரு பக்கம், தொன்னூறுகளின் இறுதியில் அரசியலில் முற்றாக ஓய்ந்த நிலையில் இருந்த ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் விகடன் உள்ளது போன்ற தோற்றத்தை மதன் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக ஜெயலலிதாவை இவர் பேட்டி கண்டது, ஜூவி மக்கள் மேடையில் ஜெயலலிதா பதில்கள் இடம்பெறச் செய்தது குறித்தெல்லாம் குற்றச்சாட்டு எழுந்தது.

இவையெல்லாமும் சேர்ந்து விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சினை வெடிக்க, ‘தங்கக் கைகுலுக்கல்’ என்ற திட்டத்தின் கீழ் சுமூகமாக மதனை அனுப்பி வைப்பதாக அறிவித்தார் அன்றைய ஆசிரியர் பாலசுப்பிரமணியன் (இதுகுறித்து அன்று விகடனிலும் பெரிய விளக்கம் வெளியானது).

ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ் வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இதற்கு பெரிய வாசகர் வட்டமே உண்டு.

இந்த நிலையில், 2.5.2012 விகடனில் வெளியான மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.

அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்:

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு ‘எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் (‘பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. ‘நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!

மேற்கண்ட கேள்வி – பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், “பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் ‘ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் – வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.

2.5.2012 இதழில் ‘காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!

ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்து வருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், ‘அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

…வரும் இதழிலேயே ‘புகைப்படங்கள், லே – அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

மதன் கேள்வி – விகடனின் அதிரடி பதில்…

இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது…

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

‘ஹாய் மதன்’ பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத – அதே சமயம், அந்தக் கேள்வி – பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.

அதேபோல், ‘இது பொது அறிவுப் பகுதி மட்டுமே’ என்று இப்போது மதன் குறிப்பிடும் ‘ஹாய் மதன்’ பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.

இனி மதனுக்கு நடுநிலை சாத்தியமாகாது..

இதையெல்லாம் பார்க்கும்போது… தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்’ பகுதியை மட்டும் அல்ல… கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு… செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி – பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.

மதன் திறமை, அவரது பல்கலை ஆர்வம் பற்றியெல்லாம் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், அந்தப் படத்துக்காக மதன் இந்த அளவு கவலைப்படுவதில், ஆட்சேபிப்பதில் நியாயமில்லை. இவர் யார் யாரிடமெல்லாம் வேலை பார்க்கிறார் என்பதைக் கவனத்தில் வைத்து ஆசிரியர் குழு செய்தியையும் படத்தையும் வெளியிட வேண்டும் என எதிர்ப்பார்ப்பது எத்தனை பெரிய சுயநலம்!

காலில் விழும் கலாச்சாரம் பல காலமாக நாட்டில் இருப்பதுதான் என்றாலும், அதற்கு இந்த அளவு சீப் பப்ளிசிட்டி உருவாகக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதாதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

எனவே மதன் கேள்விக்கு விகடன் வெளியிட்ட அந்தப் படத்தில் எந்த தவறுமில்லையே.

மதனின் கடிதத்தில் தனக்கு சங்கடம் வந்துவிடுமோ என்ற அவரது Survival Phobia தான் வெளிப்படையாகத் தெரிகிறதே தவிர, பத்திரிகையாளருக்குரிய நடுநிலை இல்லை.

இந்த மனநிலையில் உள்ள ஒருவரிடம் இனி நடுநிலையான கருத்து தொனிக்கும் கார்ட்டூன்கள் பிறக்காது என்ற விகடன் அறிவிப்பில் யாரும் குறை காண முடியாது (அதே நேரம் இதற்கு பின்னணியில் ஏதேனும் அரசியல் இருந்து, நேரம் பார்த்து இந்த கடிதத்தை நிர்வாகம் பயன்படுத்தியிருக்கவும் வாய்ப்புண்டு!)

எப்படியோ… மதனின் ‘ஜெயலலிதா போபியா’, அவரை பாரம்பரியமிக்க ஒரு பத்திரிகையோடு இருந்த உறவை அறுத்துவிட்டது மட்டுமல்ல… இத்தனை ஆண்டுகால அவரது பத்திரிகையாளர் அடையாளத்தையே கேள்விக்குரியதாக்கியுள்ளது என்பதே உண்மை!

-விதுரன்
15 thoughts on “‘ஜெ போபியா’… விகடனிலிருந்து விலக்கப்பட்ட மதன்!

 1. SPS

  மதனுக்கு ஜெயா டிவியில் பெரும் பதவி கிடைக்க போகிறது …..
  மதன் விகடனுக்கு நன்றி சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை .

 2. HOTLINKSIN.COM

  நான்காவது தூண் எனப்படும பத்திரிகைகளிடமும் பத்திரிகையாளர்களிடமும் நடுநிலைமை என்பது செத்துப் போய்விட்டது. பணத்துக்காக மாறடிக்கும் கூட்டமாக பத்திரிகை உலகம் மாறிவிட்டது மிக மிக வருத்தத்துக்குரியது.

 3. தினகர்

  இந்த கேள்வியே மதனின் சொந்த சரக்கு மாதிரிதான் தெரியுது. அந்த பதிலும் அம்மா காலில் விழுவதை நியாயப்படுத்துவது போல் தான் இருக்கிறது. அப்புறம் படம் மட்டும் என்ன தப்பு?.

  ஒரு வேளை அம்மா கோபப்படுவாங்கன்னு தெரிஞ்சா நேரடியா இங்கே சொன்னதை அங்கே செய்துட்டா போச்சு. எதுக்கு தேவையில்லாம கடிதம் எழுதி பப்ளிக்கா அசிங்கப்பட்டுகிட்டு.. ஒருவேளை இதுவும் ’ப்ளான்’ படி தான் நடக்குதோ. இவர் மேல் அம்மா பரிதாபப்ப்ட்டு ஏதாவது பதவி கொடுத்தாலும் கொடுக்கலாம். இயல் இசை நாடக சபா உள்ளிட்ட பதவிகள் இதற்காகத்தானே உருவாக்கப்பட்டுள்ளன..

  சினிமா விமர்சனம் உட்பட மதனின் நடுநிலைப் பார்வை எப்போவோ புயல் போல் கரை கடந்து போய்விட்டது..

 4. குமரன்

  ///பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் (‘பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. ‘நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!///

  இது மதனின் அந்தப் பதிலில் ஒரு பகுதி. இங்கே உள்ள “அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில்” என்கின்ற சொற்களுக்குப் பொருத்தமாகத்தான் அந்தப் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதில் எந்த விதாமான இடைச் செருகலையோ காரணம் கற்பித்தலையோ யாரும் கூற முடியாது. அதுபோக ஆசிரியருக்கு என்று ஒரு தனிப்பட்ட உரிமை உண்டு. ஆனந்த விகடன் ஆசிரியர் மீது மதன் கூறும் குறையில் எந்தவித நியாயமும் இல்லை.

  இவைபோக தனிப்பட்ட மனிதனாகவே கூட மதன் அப்படி ஒன்றும் அப்பழுக்கு அற்ற நேர்மையாளர் அல்லர். அதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

  ஆனால் இதன் தொடர் விளைவாக மதன் ஜெயா டி.வியில் பதவி ஏற்றால், அவரைப் பார்த்துப் பரிதாபம்தான் கொள்ளவேண்டும்.

 5. Mahesh

  விகடன் தற்பொழுது நடுநிலைமையை சிலாகிப்பது நன்றாகத்தான் இருக்கிறது. மாநில முதல்வரை தைர்யமாக விமர்சிப்பது அழகு . அனால் கடந்த கலைஞர் ஆட்சியில் 4 .5 வருடமாக இதே விகடன் வாலை சுருட்டி கொண்டிருந்தது .. வரலாறு காணாத ஊழல் , பாராட்டு விழாக்கள் எதையும் கண்டு கொள்ளாமல் ஒத்து ஊதியது. கடந்த 2011 jan கு பிறகுதான் தி.மு.க. ஆட்சியின் மீதான தன் முதல் விமர்சனத்தை வைத்தது. அதுவரை கை பிள்ளையாகவே நடந்து கொண்டது. மேலும் போட்டு சுரேஷ் மூலம் பகிரங்கமாகவே மிரட்ட பட்ட போதும் அடக்கியே வாசித்து.
  இது விகடனின் “தைரத்தியே” காட்டுகிறது…

 6. r.v.saravanan

  காலையில் விகடன் வாங்கி நான் படித்த போது தோன்றிய கருத்தும் இது தான்

  அவர்கள் என்ன நினைத்து கொள்வார்களோ இவர்கள் என்ன நினைத்து கொள்வார்களோ என்று நினைத்து கொண்டிருந்தால் ஒரு கார்ட்டூன் னிலோ அல்லது ஒரு கேள்வி பதிலிலோ நடு நிலை எப்படி வரும்

  மேலும் விகடன் ஏற்கனவே வெளியான சில கேள்வி பதில்களுக்கு அவர்கள் வெளியிட்ட படங்களையும் பிரசுரிதிருக்கிரார்கள்

  அப்படி இருக்கையில் இப்போது மட்டும் ஏன் இப்படி

 7. தினகர்

  “இவைபோக தனிப்பட்ட மனிதனாகவே கூட மதன் அப்படி ஒன்றும் அப்பழுக்கு அற்ற நேர்மையாளர் அல்லர். அதோடு நிறுத்திக் கொள்கிறேன்”

  குமரன், உங்ககிட்டேயே அவர் சம்மந்தப்பட்ட வழக்கு ஏதும் வந்திருக்கா? உங்க கட்சிக்காரர் வழக்கு விஷயங்களை வெள்யே சொல்லக்கூடாது தான். அதனால் விவரம் சொல்ல தேவையில்லை 🙂

 8. மிஸ்டர் பாவலன்

  ///அனால் கடந்த கலைஞர் ஆட்சியில் 4 .5 வருடமாக இதே விகடன் வாலை சுருட்டி கொண்டிருந்தது .. வரலாறு காணாத ஊழல் , பாராட்டு விழாக்கள் எதையும் கண்டு கொள்ளாமல் ஒத்து ஊதியது. /// (மகேஷ்)

  மாறன் பிரதர்ஸ் – விகடன் பத்திரிக்கை குழுமத்தின் – பெரும் பகுதி
  shares வாங்கி இருப்பதாக சவுக்கு என்பவர் அவர் இணைய தளத்தில்
  எழுதி இருக்கிறார். முன்பு வை.கோ-வும் இதே கருத்தை தெரிவித்தார்.
  அதனால் நீங்கள் எழுதியது, மற்றும் மதன் மீது அவர்கள் எடுத்த
  நடவடிக்கை, இவற்றில் எந்த ஆச்சரியமும் இல்லை.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 9. குமரன்

  தினகர்

  வழக்கு எதுவும் இல்லை. வேறு தகவல். அதிகம் சொல்வதற்கு இல்லை!

 10. குமரன்

  சவுக்கின் கட்டுரை நன்றாக இருக்கிறது.

  கேடி பிரதர்ஸ் விவகாரத்தில் விகடன் எப்போதுமே வழ வழ கொழ கொழ தான். அவர்களுக்கு எப்படியாவது சாதகமாக எழுத முயற்சி செய்கிறது. சன் டி.வி.யில் விகடனின் தயாரிப்பு வரவேண்டுமே, அதற்காகத்தான். யாரையுமே நம்ப முடிய வில்லை.

 11. velmurugan.A

  மதனிடம் என்றுமே நடுநிலை இருந்தது இல்லை . இது இன்றுதான் விகடனுக்கு தெரிந்ததா !!!!

 12. மிஸ்டர் பாவலன்

  ///சன் டி.வி.யில் விகடனின் தயாரிப்பு வரவேண்டுமே, /// (குமரன்)

  விகடன் தயாரிப்பில் வரும் டெலி-சீரியல்களை நான் பார்ப்பதில்லை.
  ஆனால், Hotlinks என்ற அன்பர் கொடுத்த இணைப்பைப் படித்ததில்
  கலாச்சார கேடான விஷயங்கள் விகடன் தயாரிப்பில் வரும்
  சீரியல்களில் காணப் படுகின்றன எனப் படித்தேன். ‘மற்றவை ஒழுங்கா?’
  எனக் கேட்டால் கிட்டத்தட்ட எல்லா டெலி சீரியல்களிலும் ‘குடும்ப
  சீரியல்’ எனப் போடப்பட்டாலும் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க
  முடியுமா என்பது சந்தேகமே! விதிவிலக்காக சில நல்ல சீரியல்கள்
  இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை. அமரர் வாசன் நடத்திய
  விகடனில் தான் அமரர் கல்கி முதலில் இணை ஆசிரியராக தனது
  எழுத்தை ஆரம்பித்தார். தேவனும் விகடனில் எழுதினார். அப்படிப்பட்ட
  ஒரு பத்திரிகை நடத்தும் சீரியல்கள் கலாச்சார சீர்கேட்டுடன் சீரியல்
  கதை எழுதணுமா என்பதே கேள்வி !

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 13. தினகர்

  “அமரர் வாசன் நடத்திய விகடனில் தான் அமரர் கல்கி முதலில் இணை ஆசிரியராக தனது எழுத்தை ஆரம்பித்தார். தேவனும் விகடனில் எழுதினார். அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை நடத்தும் சீரியல்கள் கலாச்சார சீர்கேட்டுடன் சீரியல் கதை எழுதணுமா என்பதே கேள்வி ! ”

  கல்லாவை நிரப்புவது மட்டுமே குறியாகிவிட்ட பிறகு, சீரியலில் மட்டுமல்ல, பத்திரிக்கையிலும் சுயநலம் மட்டுமே மேலோங்கி நிற்கும்.. தற்கால விகடன் மட்டும் விதிவிலக்கா என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *