BREAKING NEWS
Search

விகடன் பத்திரிகை குழும தலைவர் எஸ் பாலசுப்பிரமணியன் மரணம்

விகடன் பத்திரிகை குழும தலைவர் எஸ் பாலசுப்பிரமணியன் மரணம்

balabala_1

சென்னை: விகடன் குழுமங்களின் தலைவர்,  எஸ்.பாலசுப்ரமணியன் (79) நேற்று (19.12.2014) மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

1935-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த எஸ் பாலசுப்பிரமணியன், தனது 21-வது வயதில், 1956-ம் ஆண்டு பத்திரிகைத் துறையில் பொறுப்பேற்றார். விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்றவர், பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தினார்.

தமிழ் இதழியலின் முதல் அரசியல், சமூக, புலனாய்வுப் பத்திரிகையான ஜூனியர் விகடனை எண்பதுகளில் தொடங்கியவர் எஸ் பாலசுப்பிரமணியன்தான்.

தமிழ்ச் சமூகத்திலும், பத்திரிகை உலகிலும் இன்றுவரை தவிர்க்க முடியாத பத்திரியாக ஜூனியர் விகடன் திகழ காரணமே, ஊழியர்களால் ‘பாஸ்’ என அன்புடன் அழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியம்தான்.

இன்றைக்கு வெளியாகும் பல புலனாய்வு இதழ்களின் முன்னோடி ஜூனியர் விகடனே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியவர் அமரர் எஸ்எஸ் பாலன்.

1987-ம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்குக்காக, அன்றைய எம்.ஜி.ஆர். அரசு இவரைக் கைதுசெய்து மத்திய சிறையில் அடைத்தது.

தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்கு தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார். அதற்கான காசோலையை அப்படியே ப்ரேம் போட்டு வைத்துள்ளார்.

பத்திரிகைகள் சிகரெட் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சட்டம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘விகடனில் சிகரெட் விளம்பரங்களை வெளியிடுவது இல்லை’ எனக் கொள்கை முடிவு எடுத்து உறுதியுடன் அமல்படுத்தினார். இன்றளவும் அந்தக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.

விகடன் விமர்சனக் குழு செய்த தவறுகளுக்காக இரு முறை, குறிப்பிட்ட காலத்துக்கு சினிமா விமர்சனமே விகடனில் வெளிவராது என சுய தண்டனை விதித்துக் கொண்ட மகான் எஸ் பாலசுப்பிரமணியன்.

தமிழ் இதழியலில் மிகப் பெரும் புரட்சியை நிகழ்த்திய ‘விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டம்’, விகடன் நிறுவனர் அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்களால் துவங்கப்பட்டது. எனினும், அதற்கு முழுமையான வடிவம் கொடுத்து திட்டத்தை மேலும் மெருகூட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் பாலன்தான்.

தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான முயற்சியாக இப்போதும் பேசப்படும் ‘முத்திரைக் கதைகள்’ திட்டத்தைத் துவங்கியவர் இவர்தான். ஜெயகாந்தன், சுஜாதா உள்ளிட்ட மிகப் பிரபலமான எழுத்தாளர்களுக்கு விகடன் மூலம் பெரும் தளத்தை அமைத்துத் தந்தவர் இந்த ‘பாஸ்’தான்.

எழுத்தாளர்களை கவுரவிப்பதில் இவருக்கு நிகரில்லை. சுஜாதாவுக்கு அண்ணா சாலையில் பிரமாண்ட கட் அவுட் வைத்து ஒரு நாயகனாகவே காட்டியவர் எஸ் பாலசுப்பிரமணியன்.

திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவித்த பண்பாளர். இவரும் ஓர் எழுத்தாளரே. ‘சேவற்கொடியோன்’, எஸ் எஸ் பாலன் போன்ற புனைப்பெயர்களில் பல சிறுகதைகள் எழுதியுள்ளார். உன் கண்ணில் நீர்வழிந்தால், பேசும் பொற்சித்திரமே ஆகியவை இவர் எழுதிய புகழ்பெற்ற நாவல்கள் ஆகும்.

தந்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களின் வழியைப் பின்பற்றி திரைத்துறையிலும் முத்திரை பதித்த எஸ்.பாலசுப்ரமணியன் தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, சிவாஜி நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை, முத்துராமன் நடித்த ‘எல்லோரும் நல்லவரே’ உள்ளிட்ட 30 படங்களை இவர் இயக்கினார். பல வெற்றிப் படங்களின் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார்.

அமிதாப் பச்சன், ஜெயலலிதா, ரவிச்சந்திரன், ராஜேஷ் கன்னா போன்றவர்களை அறிமுகப்படுத்திய பெருமை எஸ் பாலசுப்பிரமணியத்துக்கு உண்டு.

balan2_2250120g

விவசாயத்தின் மீதும், பறவைகள் மீதும் தீராத காதல் கொண்ட இவர், தனது படப்பை பண்ணையில் தனி சரணாலயம் அமைத்து ஏராளமான அரியவகை வெளிநாட்டுப் பறவைகளை வளர்த்து வந்தார்.

இவரது மனைவி பெயர் சரோஜா. இவர்களுக்கு ஆறு மகள்கள், ஒரு மகன். இவரது மகன் பா.சீனிவாசன்தான் தற்போது விகடன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.

-என்வழி
2 thoughts on “விகடன் பத்திரிகை குழும தலைவர் எஸ் பாலசுப்பிரமணியன் மரணம்

 1. குமரன்

  பாலசுப்பிரமணியன் ஐம்பது ஆண்டுகளாக விகடன் குழுமத்தை வழிநடத்தி வாசன் நட்ட ஆலமரத்தைப் பல விழுதுகளோடு பரிணமிக்க வைத்தவர்.

  ஒரு பத்திரிகையாளர் எந்த வித விருப்பு வெறுப்பும் இல்லாமல் பணி செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. எம்.ஜி.ஆரால் அவர் அடைந்த சேதங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அது பாலனின் துரதிர்ஷ்டம். எம்.ஜி.ஆர்.ஜானகி திருமணம் குறித்த விஷயங்களில் அந்த நாட்களில் திரடித்துறையில் கோலோச்சிய எஸ்.எஸ். வாசன் எம்.ஜி.ஆரிடம் கடுமையாக நடந்து கொண்டு அவர் ஜானகியைத் திருமணம் செய்து கொள்ள வைத்ததால் எம்.ஜி.ஆருக்கு அவர் மீது ஒரு ஆழ்ந்த கசப்பு இருந்தது. அதன் காரணமாகவோ என்னவோ, இதய வீணை பட விஷயத்தில் எம்.ஜி.ஆர் பாலனிடம் சரிவர ஒத்துழைப்புத் தராமல், படம் வெகுநாள் முடிக்கப்படாமல் இருந்தது. அப்போது ஏற்பட்ட நஷ்டம், பழனியப்பன் ராமசாமி என்ற வேவாதேவி செய்தவரிடம் ஜெமினி ஸ்டுடியோ முழுவதும் பாலனிடமிருந்து கைமாறியது. பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபின்னர், படுத்தலாம் சுகுமாரனின் கார்ட்டூனுக்காக, சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் “வானளாவிய அதிகாரத்தைப்” பயன்படுத்தி பாலன் சில நாட்கள் சிறையில் வைக்கப் பட்டார்.

  இத்தனைக்கும் பிறகும் கூட, எம்.ஜி.ஆரைப் பழி வாங்கும் விதமாகக் செய்திகளை வெளியிடாமல் உண்மையான நடுநிலையுடன் பத்திரிகையை நடத்தியவர் பாலன். அவர் மாபெரும் மனிதர் என்பதற்கு இது ஒரு முத்தாய்ப்பான சான்று.

  நிற்க, வெண்ணிற ஆடை மூர்த்தி, நிர்மலா, ஸ்ரீகாந்த், ஜெயலலிதா ஆகிய நால்வருக்கும் முதல் படம் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை ஆகும். ஜெயலலிதா இதற்கும் முன்னரே பந்துலு இயக்கிய ஒரு கன்னடப் படத்தில் நடித்தவர். அதுபோலவே ரவிச்சந்திரனுக்கும் ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை முதல் படம். இவற்றை பாலன் தயாரிக்கவில்லை.

 2. காத்தவராயன்

  இவர் ஆசிரியராக இருந்தவரைதான் விகடன் உருப்படியாக இருந்தது என்பது நிதர்ச்சனமான உன்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *