BREAKING NEWS
Search

ஜானி படத் தயாரிப்பாளர் கே ஆர் ஜி மரணம் – ரஜினி நேரில் அஞ்சலி!

சிவாஜி, ரஜினி, கமலை வைத்து 65 படங்கள் தயாரித்த கே ஆர் ஜி மரணம் – ரஜினி நேரில் அஞ்சலி!

 

சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கேஆர்ஜி எனும் கே ராஜகோபால் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது.

மறைந்த கேஆர்ஜியின் உடலுக்கு, நடிகர்களில் முதல் ஆளாக வந்து மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் ரஜினி.

சிவாஜி, ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் என ஜாம்பவான்களை வைத்து 65க்கும் அதிகமான படங்களைத் தயாரித்தவர் கேஆர்ஜி.

ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த நெஞ்சில் ஓர் ஆலயம், சிவாஜி நடித்த நேர்மை, தாய்க்கு ஒரு தாலாட்டு, திருப்பம், ரஜினி நடித்த ஜானி, கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள், கடல் மீன்கள், சரத்குமார் நடித்த செம்மலர், பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிளாஸ் மாதவன், விஜய் நடித்த மின்சாரக் கண்ணா, மம்முட்டி, மோகன்லால் நடித்த மலையாளப் படங்கள் என 65க்கும் மேற்பட்ட படங்களை தனது ‘கேஆர்ஜி இன்டர்நேஷனல் பிலிம் கார்ப்பரேஷன்’ சார்பில் தயாரித்தவர் கேஆர்ஜி.

தயாரிப்பாளர் சங்கத்தில் 4 ஆண்டுகள் தலைவராகவும், பிலிம்சேம்பரில் 5 ஆண்டுகள் தலைவராகவும் இருந்தார். தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை உருவாக முக்கிய காரணமாக இருந்தார் கேஆர்ஜி.

கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த தலைவர் பதவிக்கான வேட்பாளராக இவரை நிறுத்த ஒரு அணி முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் அவர் மரணமடைந்துவிட்டார்.

இவருக்கு ஒரு மகன் கங்காதரன். அவர் காலமாகிவிட்டார். மகள் பெயர் ராதா. கவுதம், மாளவிகா என மகன் வழி பேரன் பேத்திகள் உள்ளனர்.

திநகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள வீட்டில் கேஆர்ஜி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் நடக்கிறது.

திரையுலகம் அஞ்சலி..

கேஆர்ஜி மறைந்துவிட்ட செய்தி கேட்டு தமிழ் திரையுலகம் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள் ஏவி எம் சரவணன், எஸ்ஏ சந்திரசேகரன், கலைப்புலி தாணு உள்பட பல தயாரிப்பாளர்கள் கேஆர்ஜி வீட்டில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஏராளமான நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், மலையாள திரையுலக பிரமுகர்கள் கேஆர்ஜி வீட்டில் குவிந்து வருகின்றனர்.

முதல் ஆளாக வந்த ரஜினி…

நடிகர்களில் முதல் ஆளாக வந்து கேஆர்ஜிக்கு அஞ்சலி செலுத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. கேஆர்ஜி மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு என்றும், தனது நடிப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத தயாரிப்பாளர் கேஆர்ஜி என்றும் அவர் தெரிவித்தார்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *