BREAKING NEWS
Search

அவன் சுயம்பு.. பிடிவாதக்காரன்… இசையில் அவனுக்கு இணை அவன்தான்! – பாரதி ராஜா

அவன் சுயம்பு.. பிடிவாதக்காரன்… இசையில் அவனுக்கு இணை அவன்தான்! – பாரதி ராஜா

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வடிவமைத்த விதத்தில் இயக்குநர் கவுதம் மேனன் தான் எத்தனை பெரிய இளையராஜா ரசிகன் என்பதை உலகுக்கு அழுத்தமாகக் காட்டிவிட்டார்.

‘அடப்பாவி.. இப்படி வெறித்தனமான ரசிகனா இருந்தும் பத்து வருஷம் கழிச்சி நம்மாள்கிட்ட வந்திருக்கியே’ என்று கேட்குமளவு ராஜா மீதான் பக்தி, மரியாதை, ரசனையை இந்த நிகழ்ச்சியில் காட்டினார் கவுதம் மேனன். ஆனால் எதுவும் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வல்ல.. சினிமாக்காரர்களின் வழக்கமான நடிப்பல்ல.

ராஜாவின் மனசறிந்து, அவருக்கு எது சரியாக இருக்குமே அந்த அலைவரிசையிலேயே போய் நிகழ்ச்சியை நடத்திய கவுதம் மேனனின் பாங்கு… அடடா.. அற்புதம்.

‘மெய் சிலிர்த்தது, புல்லரித்தது, பரவசமான நிலை என்றெல்லாம் தமிழில் உள்ள வார்த்தைகளுக்கு அர்த்தமே இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் புரிந்தது!’

– இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்த பிறகு சக செய்தியாளர் வெற்றி சொன்ன வார்த்தைகள் இவை!!

‘இந்த ‘நிகழ்ச்சி நெகிழ்ச்சி’ ஒரே கட்டுரையில் அடக்க முடியாது. ஒரு ஏழெட்டுக் கட்டுரைகளாவது எழுதவேண்டியிருக்கும்’

– ராஜாவின் அபார ரசிகர்களுள் ஒருவரான முத்துராமலிங்கம் தனது ப்ளாகில் இப்படித்தான் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியும் அத்தனை சுவாரஸ்யமாக, இன்னும் பல நாட்களுக்கு நினைத்து நினைத்து சந்தோஷப்படும் அளவுக்கு அமைந்திருந்ததுதான் இதற்கெல்லாம் காரணம்.

வந்திருந்த இயக்குநர்கள் ஒவ்வொருவரும் பகிர்ந்த விஷயங்கள், ராஜாவின் உயரத்தை, உன்னதத்தை இன்னும் அழுத்தமாக மனதில் பதிய வைத்தன.

விருதுகள், புகழ்மாலைகள் அனைத்துக்கும் அப்பால் நின்று அந்த மகா கலைஞன் எத்தனை அர்த்தமுள்ள இசையை இந்தத் தலைமுறைக்கும் இனி வரும் சந்ததிகளுக்கும் தந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் விம்மியது.

பாரதிராஜா, பாலு மகேந்திரா, பி வாசு ஆகியோர் நிகழ்ச்சியில் பகிர்ந்த விஷயங்களில் பலவற்றை இன்னும் நாம் பதிவு செய்யவே இல்லை. அவற்றைச் சொல்லத்தான் இந்தக் கட்டுரை.

பாரதிராஜா:

“இளையராஜாவை மத்தவங்க மாதிரி, இசைஞானின்னோ, அவர் இவர்னு மரியாதை குடுத்து பேசுறதோ எனக்கு சரிப்பட்டு வராது. ஏன்னா 40 வருடங்களுக்கும் மேலா எங்க நட்பு தொடருது. நாங்க எத்தனையோ முறை சண்டை போட்டிருக்கோம். அது சகஜம். ஆனா அதை மறந்து பழையபடி ஒண்ணு சேர்ந்திருவோம். அதான் எனக்கும் அவனுக்கும் உள்ள நட்பு.

இசையமைப்பாளர்கள் எத்தனை பேர் வேணும்ன்னாலும் வரலாம். ஆனா ராஜாவுக்கு இணை அவன் ஒருத்தன்தான். அதுவும் பின்னணி இசையில அவனை அடிச்சிக்க இன்னொருத்தன் பிறந்து கூட வர முடியாது. அப்படி ஒரு அபார ஞானம்…

பாடல்கள்லயும் ஏற்கனவே இசையமைச்ச ஒரு பாடல் மாதிரி, இன்னொரு பாடல் இருக்கக் கூடாதுங்குறதுல பிடிவாதமானவன் ராஜா. இன்னைக்கி வரைக்கும் அந்த பிடிவாதத்துல நின்னு ஜெயிச்சிக்காட்டினவன் அவன்.

‘டிக் டிக் டிக்’ பட ரீ-ரெகார்டிங் நடந்துக்கிட்டிருக்கு. கமல்- மாதவி சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட சீன்ல ஒரு வெஸ்டர்ன் மேகஸின்ஸ் தெரியற மாதிரி காட்சி. அதுக்கு இன்னமாதிரி இசை வரனும்ன்னு மனசுல நினைச்சிட்டேயிருந்துட்டு, அதை ராஜாகிட்ட சொல்லாமலே சாப்பிடப்போயிட்டேன்.

‘அடடா இவங்கிட்ட சொல்லாம வந்துட்டமே’ன்னு திரும்பிப்போய் பாத்தேன். ‘என்ன.. இந்த சீனுக்கு மியூசிக் எப்படி இருக்கணும்னு சொல்ல வந்தியா… இதுக்கு நான் வாசிச்சு வச்சிருக்கேன். கேட்டுட்டு சொல்லு’ என்றான். நான் மனசுல என்ன நினைச்சிருந்தேனோ அதைவிட பலமடங்கு பிரமாதமா அந்த சீனை வாசிச்சி வந்திருந்தான் ராஜா.. நான் பிரமிச்சிப் போயிட்டேன். என்னை முழுசா புரிஞ்சிக்கிட்டவன் அவன்.

அதே மாதிரிதான் ‘முதல்மரியாதை’ படத்துல, அந்த புல்லாங்குழலை தூக்கி எறியும் காட்சி. அதுக்கு எப்படிப்பட்ட இசையை இவன் தரப்போறான்னு நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ராஜா ஒரு ப்ளூட் பிட் கொடுத்திருந்தான். அந்த மாதிரி இசை தர ஒருவரும் இல்லை.

‘காதல் ஓவியம்’ படத்தின் பின்னணி இசை மறக்க முடியாதது. ஒரு காட்சியில் ராதாவின் கண்களை மட்டும் படமாக்கிக் கொண்டு வந்துவிட்டேன். அதைக் காட்டி, இதை வைத்துக் கொண்டு இந்த காட்சிக்கு இசை வேண்டும் என்றேன். ‘என்னய்யா இது.. உன்பாட்டுக்கு எதையோ எடுத்துட்டு வந்து போடு இசை என்றால் என்ன செய்வது?ட என்று கேட்டான். ஆனால் அந்தக் காட்சிக்கg இளையராஜா தந்த இசை, காட்சியை அப்படியே உயிர்ப்பித்துவிட்டது.

இளையராஜா ஏற்கனவே உச்சத்திற்கு சென்றுவிட்டார் என்றாலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இயக்குநர் கெளதம் அவரை மேலும் உச்சத்தில் ஏற்றிவிட்டிருக்கிறார். கவுதமை நல்ல இயக்குநராக எனக்கு தெரியும். இப்போது தான் அவர் ஒரு சிங்கர் என்பதை தெரிந்துகொண்டேன். இதுபோன்ற ஒரு கெளரவத்தை இளையராஜாவுக்கு கொடுத்ததற்காக அவருக்கு எனது பாராட்டுக்கள்,” என்றார்.

உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்! – பாலு மகேந்திரா


பாலுமகேந்திராவின் பேச்சும் ரொம்ப உணர்வுப் பூர்வமாக அமைந்திருந்தது.

“எனது மூன்றாவது படத்தில் தொடங்கி, இதுவரை இளையராஜாவை விட்டு நான் வேறு எந்த இசையமைப்பாளருடனும் பணியாற்றியதில்லை. 35 வருடங்களில் இதுவரை 22 படங்களை இயக்கியிருக்கிறேன். அத்தனைக்கும் இசை இளையராஜாதான். இவர் அளவுக்கு ஆகச் சிறந்த இசையமைப்பாளர் யாருமில்லை.

சினிமாவில் எனக்கு இளையராஜா அளவுக்கு மனதுக்கு நெருக்கமானவர்கள் வேறு யாரும் கிடையாது.

நான் திரைப்படக் கல்லூரி துவங்கியபோது, குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஒரு பதிகம் பாடிவிட்டு செல்லும்படி அவரை மட்டுமே அழைத்திருந்தேன். அவ்வாறே வந்து என்னை கவுரவித்துவிட்டுப் போனார் ராஜா.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, திடீரென்று ராஜாவைப் பார்க்க வேண்டும் போல தோன்றவே பிரசாத் ஸ்டுடியோ சென்றேன். உள்ளே சென்று ராஜா இருக்கும் அறையின் கதவைத் திறந்தபோது, சரியாய் அதே கதவை உள்ளிருந்து திறந்து கொண்டு ஒன்றரை அடி தூரத்தில் எனக்கு தரிசனம் தந்தார் ராஜா. இதை என்னவென்று சொல்வது?

இந்தமாதிரியான அபூர்வ சந்திப்புகள், ராஜாவுடன் இவ்வளவு நீண்ட நட்பாய் பணியாற்ற நேர்ந்தது ஆகிய எல்லாமே முன்கூட்டியே எழுதி விதிக்கப்பட்ட ஒன்று என்றே எனக்குத் தோன்றுகிறது.

ராஜாவின் ரசிகர்களாகிய உங்களிடம், இதுவரை ராஜாவிடம் கூட நான் பரிமாறிக்கொள்ளாத புதிய செய்தி ஒன்றை இப்போது சொல்கிறேன். இப்போது நான் புதிதாக ஒரு படத்தை இயக்கி வருகிறேன். அதற்கும் ராஜாதான் இசையமைக்கப் போகிறார்.

இது மட்டுமின்றி, இனி நான் இயக்கவிருக்கும் அனைத்துப் படங்களுக்கும், ராஜா நீங்கள்தான் இசையமைத்துத்தர வேண்டும். இன்னும் ஒரு ஐந்தாறு படங்கள் செய்ய விரும்புகிறேன். தயவுசெய்து எனக்காகவும் நேரம் ஒதுக்கிவையுங்கள்,” என்றார்.

‘நான் அங்கே இசை போட்டிருந்தால் இந்த உச்சு சத்தம் கேட்டிருக்காதே!’

இயக்குநர் பி வாசு:

சின்னத்தம்பி படத்தில் குயிலப் புடிச்சி.. பாடல் முடிந்ததும், குஷ்புவின் கழுத்திலுள்ள தாலி வெளியில் தெரிந்துவிடும். படத்தின் உச்சகட்ட திருப்பு முனைக் காட்சி இதுதான். இதற்கு எப்படியெல்லாம் இசை இருக்க வேண்டும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ராஜாவோ, இந்த காட்சியை மவுனமாக விட்டிருந்தார். இசையே கிடையாது. எனக்கு ரொம்ப ஷாக், ஏமாற்றம். இந்தக் காட்சிக்கு இசையில்லாமல் போயிடுச்சே… சரியா வருமா என்றெல்லாம் குழப்பம். ராஜாவிடம் கேட்டபோது, ‘நீ சும்மா இரு… அங்கே அப்படித்தான் இருக்க வேண்டும்,” என்றார்.

படம் வெளியானது. தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்தேன். அந்தக் காட்சி வருகிறது. இசையில்லாமல் நிசப்தம். தியேட்டரிலும் படு அமைதி. சில நொடிகளில் மக்களின் வாயிலிருந்து உச்சுக் கொட்டும் ஒலி. நான் சிலிர்த்துப் போய்விட்டேன். நேராக ராஜா சாரிடம் வந்து, அந்தக் காட்சிக்கு இசை தராததன் காரணம் கேட்டேன்.  தியேட்டரில் ஜனங்க ரெஸ்பான்ஸையும் சொன்னேன்.

அதற்கு அவர் சொன்னார்: நீங்க சொல்ற இடத்தில் இசை போட்டிருந்தால், மக்களின் இந்த உச்சுக் கொட்டும் ஒலி உங்களுக்குக் கேட்டிருக்காதே… என்றார் ரொம்ப சாதாரணமாக!

அதான் ராஜா. அவருடன் பணியாற்றியது எங்களுக்கெல்லாம் பெருமை!”, என்றார்.

மேடையின் ஒரு ஓரத்தில் ரொம்ப எளிமையாக, அப்பாவியாய் நின்றபடி, தன்னைப் பற்றிய இத்தனைப் பேரின் புகழுரைகளையும் கேட்டுக் கொண்டிருந்தார் ராஜா.

குறிப்பு: இளையராஜா- கவுதம் மேனன் பேட்டி தனியாக…

-என்வழி ஸ்பெஷல்
7 thoughts on “அவன் சுயம்பு.. பிடிவாதக்காரன்… இசையில் அவனுக்கு இணை அவன்தான்! – பாரதி ராஜா

 1. Manoharan

  எண்பதுகளில் இருந்தது போல் மீண்டும் எங்கு பார்த்தாலும் இளையராஜாவை பற்றியும், நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் பற்றியும்தான் பேச்சாக இருக்கிறது. இப்போதைய Hot Topic of the Town ராஜாதான். கௌதம் மேனனுக்கு நிச்சயம் நாம் நன்றி சொல்லவேண்டும். இன்றைய தலைமுறையின் நாடி பிடித்து படம் எடுக்கும் இயக்குனர் அவர். வெறும் சப்தங்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த இன்றைய தலைமுறைக்கு இசை என்றால் என்ன, அதன் உச்சம் என்ன என்பதை அதன் ராஜா யார் என்பதை காட்டிவிட்டார். இனி நிறைய இயக்குனர்கள் ராஜாவை நாடலாம். ஆனால் கௌதம் மாதிரி ராஜாவிடம் இருந்து சிறந்ததை கொண்டு வரமுடியுமா என்பதும், அதற்க்கு மகுடம் சூட்டுவது மாதிரி காட்சியமைப்புகளை வைக்கமுடியுமா என்பதும் சந்தேகம்தான் . முன்பெல்லாம் பல அருமையான பாடல்கள் திரையில் பார்க்க சகிக்கமுடியாமல் இருக்கும், அதையும் நான்கு ஐந்து முறை பார்த்து இசைஅமைத்து கொடுத்துள்ளார் ராஜா. அதெல்லாம் காலம் கடந்தும் அந்த பாடல்கள் மட்டுமே நிற்கின்றன. காட்சிகள் காணாமல் போய்விட்டன. ஆனால் NEP க்கு இசையமைத்ததில் நிச்சயம் ராஜா பெருமை படுவார்.

 2. மிஸ்டர் பாவலன்

  கடைசியாக உள்ள இளையராஜாவின் கண்களில்
  ஞான ஒளி தெரிகிறது. இவர் அம்மன் அருள் பெற்றவர்,
  ராஜய்யா புகழ் வாழ்க.

  டாக்டர் வினோவின் சிறப்பான கட்டுரைக்கு மிக்க நன்றி!

  (கையெழுத்துப் போடும் முன் சில டையலாக்:)

  பாவலன்: எனக்கு இது ஒரு திருக்குறளை ஞாபகப் படுத்துகிறது..
  சென்னை வீரன்: இன்னாப்பா? திருக்குறள்னா சொன்ன நீ?
  பாவலன்: ஏன், உமக்கு நாலடியார் வேணுமா?
  நண்பா, உமக்கு வேணுமா ஒரு நல்ல வெண்பா?
  சென்னை வீரன்: ஒன்னால எனக்கு தமிழ் படிக்குற இன்ட்ரஸ்டே பூடுச்சுப்பா.
  பாவலன்: ஒரு ஆத்திச்சூடி?
  சென்னை வீரன்: டேய்ய்!
  பாவலன்: கொன்றை வேந்தன்?
  சென்னைவீரன்: டேய்ய்ய்!
  பாவலன்: ராஜா பத்தி ஒரு பாட்டு எடுத்து விடனும்போல இருக்கு!
  சென்னைவீரன்: நானே பாடறேன் கேளு..

  “ராஜா கைய வச்சா.. அது ராங்கா போனதில்ல..”

  -== மிஸ்டர் பாவலன் ===-

 3. கோபிநாத்

  \\ ராஜாவின் அபார ரசிகர்களுள் ஒருவரான முத்துராமலிங்கம் தனது ப்ளாகில் இப்படித்தான் குறிப்பிட்டுள்ளார்.\\

  லிங்க் கொடுத்திருக்காலமே..!

 4. Suryakumar

  எந்த சேனல் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பப்போகிறது? எப்போது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *