BREAKING NEWS
Search

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்!

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்!

சென்னை: சேலத்தை திமுகவின் கோட்டை என்று சொல்லும் அளவுக்கு செல்வாக்குடன் வைத்திருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இன்று மரணமடைந்தார்.

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று காலை 11 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 75.

சேலம் மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஆறுமுகம்,  மூன்று முறை  திமுக அரசில் அமைச்சராக இருந்தார். திமுகவினர் மற்றும் பிற கட்சியினராலும் வீரபாண்டியார் என அழைக்கப்பட்டவர். 1937-ல் பூலாவாரி கிராமத்தில் பிறந்த இவர், 54 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றினார். ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை சட்டமேலவை உறுப்பினராகவும் இருந்தார்.

பல்வேறு சர்ச்சைகள் அவரைச் சுற்றி இருந்தாலும், கடைசி வரை திமுகவை விட்டு அவர் விலகவில்லை. அதேபோல, தன் கருத்தில் எப்போதும் உறுதியாக இருந்தவர் ஆறுமுகம். சேலம் நகருக்கு பல வசதிகளைக் கொண்டு வந்தவர் ஆறுமுகம். தன்னிடம் உதவி என்று வந்த யாரையும் ஏமாற்றாதவர் என்ற பெயர் அவருக்குண்டு. அவரது திநகர் வீட்டுக்கு யாரும் எளிதில் சென்று அவரைப் பார்க்க முடியும் நிலையை உருவாக்கி வைத்திருந்தார்.

இந்த முறை அதிமுக அரசு பதவிக்கு வந்ததும், அவரை பல்வேறு வழக்குகளில் தொடர்ந்து கைது செய்து வந்தது. சேலத்துக்கும் சென்னைக்கும் பிற ஊர்களுக்கும் அலைக்கழித்தது.

அவற்றிலிருந்து வாய்தா வாங்காமல், விடுதலையைாகி வெளியில் வந்த வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார்.  சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் வீரபாண்டியார் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். வீரபாண்டியார் மரணத்தால் அதிர்ச்சியடைந்த கருணாநிதி, ராமச்சந்திரா மருத்துவமனைக்கே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வீரபாண்டியார் உடலைப் பார்த்து கதறி அழுத கருணாநிதி, திமுக தனது தூணை, போர்ப்படைத் தளபதியை இழந்துவிட்டது என்றார். முரசொலி மாறன் இறந்த அதே நாளில் வீரபாண்டி ஆறுமுகமும் உயிரிழந்ததை நினைவு கூர்ந்தார்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைத் தொடர்ந்து சேலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள திமுகவினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். அவரது மறைவைத் தொடர்ந்து சேலம் நகரில் கடைகள் அடைக்கப்பட்டன.

திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளது.

சென்னையிலிருந்து இன்று சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் வீரபாண்டியார் உடல், நாளை  அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *