BREAKING NEWS
Search

அழகன் லிங்கா… தலைவன் ரஜினி!

அழகன் லிங்கா… தலைவன் ரஜினி!

B2SxAm5CQAEM8nD.jpg large

லிங்கா பாடல்கள் வெளியாக இன்னும் மூன்று தினங்கள் உள்ள நிலையில், படத்தின் அத்தனைப் பாடல்களையும் எழுதியுள்ள கவிஞர் வைரமுத்து, அந்த அனுபவத்தை விகடனில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வைரமுத்துவின் லிங்கா ஸ்பெஷல் பேட்டி…

”ரஜினி படங்களுக்கு என ஸ்பெஷலாக எழுதுவதாக உங்கள் மீது செல்லமாக ஒரு குற்றச்சாட்டு உண்டு!”

”சிறப்பாக எழுதுகிறோம் என்பது உண்மை; குற்றச்சாட்டு என்பது பொய். எல்லோருக்கும் சிறப்பாகவே எழுதுகிறோம். ரஜினி பாடல்கள் மட்டும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. காரணம், சமூகத்தின் தட்பவெப்பத்தோடு ரஜினி படங்கள் சம்பந்தப்பட்டிருப்பது அல்லது சம்பந்தப்படுத்தப்படுவது!”

”எப்படி?”

”அரசியலை ரஜினி விரும்புகிறாரோ இல்லையோ… அரசியல், ரஜினியை விரும்புகிறது. அவரோ ‘அரசியல்’ என்ற கடலின் ஓரம் கால் நனையாமல் நடந்து கொண்டே இருக்கிறார். கடலுக்குள் அவரே குதித்துவிடுவாரா அல்லது தள்ளப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு, அவரது ஒவ்வொரு படத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது!”

”லிங்கா’ படத்திலும் அரசியல் இருக்கிறதா?”

”எதில்தான் அரசியல் இல்லை? நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம், குடிக்கும் தண்ணீர் எல்லாம் அரசியலால் தீர்மானிக்கப்படுகிறபோது, ஒரு சமூகப் போராளியைச் சித்திரிக்கும் கதையில், அரசியல் ஊடும் பாவுமாக உள்ளாடவே செய்யும். அதைக் கட்சி அரசியல் ஆக்குவதும், கால அரசியல் ஆக்குவதும் அவரவர் பார்வை!”

p84

”பாடல் பதிவில் ரஜினியோடு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம்!”

”இந்தப் படப் பணியின்போது நான் கண்டுகொண்ட ரஜினியின் சமூக அக்கறை, அவர் மீதுகொண்ட அன்பை அதிகப்படுத்தியது. ஒவ்வொரு படத்திலும் அவருக்கான அறிமுகப் பாடல் எங்களுக்கு ஓர் அறைகூவல். இந்தக் காலகட்டத்தில் எதை உள்ளடக்கமாக வைப்பது என்பதில் எங்களுக்கு மண்டை உடையும்; சண்டை நிகழும். இயக்குநரும் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் தீர்மானிக்கும் நல்ல வரிகளை ரஜினி பெரும்பாலும் ஏற்றுக்கொள்வார்; தலையிட மாட்டார். ஆனால் ‘லிங்கா’ படத்தின் பாடலில் ரசிகர்கள் மீதுகொண்ட அன்பு காரணமாக, ‘எதிலும் அளவோடு இருங்கள்; எல்லை தாண்டாதீர்கள்’ என்ற கருத்தை முன்னிலைப்படுத்தச் சொன்னார். அவர் கேட்டுக்கொண்டபடி பாட்டு வரிகளைத் தீட்டியிருக்கிறேன்!”

”இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பற்றி…”

”ரஜினி போன்ற இமாலய நடிகரை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு பெரும் படத்தை முடிப்பது ஒரு ராட்சசனால் மட்டுமே முடியும். அவர் திட்டமிடுவதில் மந்திரி; செயல்படுத்துவதில் மன்னன். திரையுலகில் பொய்யே சொல்லாத மிகச் சிலருள் அவரும் ஒருவர் என்பது அவரிடம் நான் கண்டு ரசிக்கும் பெருங்குணம்!”

”லிங்கா’வுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பங்களிப்பு…”

”ரஹ்மான், புகழையும் அனுபவத்தையுமே பங்காகக் கொடுத்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு துறையில் வெற்றிபெற்ற யாரும், ஒரு பெரிய எதிர்வினையைச் சந்திக்க வேண்டியிருக்கும். வெற்றி பெற்ற ஒருவனைப் பின்பற்றும் நகல் கலைஞர்களின் ஆக்கிரமிப்பு காலப்போக்கில் அதிகம் ஆகும்; அதை வெற்றிகொள்வதற்கு எதிராளிகளோடு போராடக் கூடாது. நகல் எடுக்க முடியாத தூரத்துக்குத் தன்னைத்தானே ஒரு கலைஞன் நகர்த்திக் கொள்ள வேண்டும். இது அரசியல், தொழில், கலை… என அனைத்துக்கும் பொருந்தும். ஆகவே, ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை நகல் எடுக்கும் கூட்டத்தில் இருந்து விலகி, வேறொரு தளத்துக்குத் தன் இசையை நகர்த்தியிருக்கிறார். அந்தப் புதுமையால் அந்தப் பாடல்கள் முதலில் கொஞ்சம் பிடிக்கும்; பிறகு அதிகம் பிடிக்கும்; போகப் போகப் பைத்தியம் பிடிக்கும். ‘லிங்கா’விலும் அந்த மாயம் நிகழவே நிகழும்!”

”பாடல் பதிவின்போது உங்களுக்குள் மோதல் வருவது உண்டா?”

”உண்டு. அதற்கு நீங்கள் வைத்த பெயர் மோதல்; நாங்கள் வைத்த பெயர் ஊடல். ‘லிங்கா’வில் வருகிற ஒரு காதல் பாடலில் அந்த ஊடல் நிகழ்ந்தது. ரஜினியைப் பார்த்து சோனாக்ஷி சின்ஹா பாடுகிறார்…

‘என்னைவிட என்னைவிட அழகி உண்டு – ஆனால்
உன்னைவிட உன்னைவிட அழகன் இல்லை!’ என எழுதியிருந்தேன்.

பாடல் ஒலிப்பதிவின்போது ‘ ‘அழகன்’ இல்லை என்ற வரிக்குப் பதிலாக ‘தலைவன்’ இல்லை என மாற்றிக் கொள்ளலாமா?’ என்று கேட்டார் கே.எஸ்.ரவிகுமார். ஏ.ஆர்.ரஹ்மானும் அதைப் பலமாக ஆதரித்தார். நான் சொன்னேன்… ‘பொருந்தாது; என்னைவிட என்னைவிடத் தலைவி உண்டு. ஆனால், உன்னைவிட உன்னைவிடத் தலைவன் இல்லை’ என எழுதலாம். ‘அழகி’ என சொன்னவுடன் ‘அழகன்’ எனச் சொல்வதுதான் இயல்பு என்றேன். ஆனால், பல காரணங்கள் சொல்லி என்னைச் சம்மதிக்க வைத்துவிட்டார்கள். படப்பிடிப்பின்போது பாடலைக் கேட்ட ரஜினிகாந்த், ‘இப்போது இருக்கிற சூழலில், ‘உன்னைவிட உன்னைவிடத் தலைவன் இல்லை’ என்பது தேவையா?’ என என் சார்பாகப் பேசியிருக்கிறார். ஆனால், ஒலிப்பதிவு முடிந்துவிட்டது. ‘தலைவன்’ என்றுதான் பாடல் வருகிறது.

lingaa-telugu

அந்தப் பாடல் இதுதான்…

பெண்: என் மன்னவா! மன்னவா!
என்னைவிட அழகி உண்டு – ஆனால்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை – ஆமாம்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை.

பெண்: சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் – இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கிவிட்டாய்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
உன் கண்களோ உன் கண்களோ
பூ தேடுதே
உன் கைகளோ உன் கைகளோ
வேர் தேடுதே

பெண்: நூறு யானைகளின்
தந்தம்கொண்டு – ஒரு
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம்கொண்டு அந்தக் கவசம் உடைத்து
உன் மார்பில் மையமிட்டேனே

ஆண்: தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே
பாலன்னம் நீ – நான்
பசிக்காரன் வா வா
மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்தி வை ராணி

ஆண்: வெய்யில் பாராத
வெள்ளைப் பூக்களைக்
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற மன்னன் – உன்
கால் சுண்டுவிரல் கேட்டேனே

பெண்: சிற்றின்பம் தாண்டி
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே
மோன வடிவே
என்னைக் கூடல்கொள்ள வா
கொற்றவை மைந்தா.

-நன்றி விகடன்

என்வழி
3 thoughts on “அழகன் லிங்கா… தலைவன் ரஜினி!

  1. Kalidass

    உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை
    உன்னை வெல்ல உன்னை வெல்ல எவனும் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *