BREAKING NEWS
Search

வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்!

வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்!

annai-maariyammal

நெல்லை: வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… என்று தமிழ் உணர்வாளர்கள் அடிக்கடி ஒரு வாசகத்தைப் பயன்படுத்துவார்கள்.

அதற்கு அர்த்தம் என்னவென்று தனது தள்ளாத 91 வயதில் விளங்க வைத்திருக்கிறார் ஒரு தமிழ் மூதாட்டி. அவர் பெயர் மாரியம்மாள். ஊர் கலிங்கப்பட்டி… அரசியலுக்கு அப்பால் தமிழர் மதிக்கின்ற தலைவர்களுள் ஒருவரான வைகோவைப் பெற்ற தாயார்!!

தனி ஈழம் கோரியும், கொலைகாரன் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் மாரியம்மாள் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

தமிழகம் இதுவரை பார்த்திராத முழு வீச்சில் தமிழ் ஈழத்துக்கான போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன. மாணவர் படை, உலகையே தமிழகத்தின் பக்கம் திருப்பி வருகிறது. இந்திய மத்திய அரசு இதில் அலட்சியமாக இருப்பதுபோல நடித்து வருகிறது.

ஆனால் அதற்காக யாரும் தயங்கிப் பின்வாங்கவில்லை. இத்தனை காலமும் படிக்கப் போ என காசு கொடுத்து தன் பிள்ளைகளை அனுப்பிய தமிழ் பெற்றோர், இன்று ஈழம் கிடைக்கும் வரை போராட அனுப்பி வரும் புறநானூற்று அதிசயத்தைப் பார்க்க முடிகிறது.

இந்தப் போராட்டத்தில் சங்கத் தமிழ் கண்ட தாய்மார்களை நிஜத்தில் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு வீரத் தாயான மாரியம்மாள் தன் வயது, உடல் நிலை எதையும் பொருட்படுத்தாமல், கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அவருடன் ஆயிரக்கணக்கானோர் நேற்று கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு ஆதரவாக கலிங்கப்பட்டியில் நேற்று முழுக்க கடைகள் அடைக்கப்பட்டன.

அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. எங்கு பார்த்தாலும் பிரபாகரன் மகன்… இந்தப் போராட்டத்தின் வித்து பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட பதாகைகள்.

இந்த போராட்டம் குறித்து பேசிய அன்னை மாரியம்மாள், “1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவினோம். அவர்களையும் என் பிள்ளைகள் என நினைத்தே அதைச் செய்தோம். அந்த பாசம் காரணமாகவே இப்போதும் உண்ணாவிரதம் இருக்கிறேன். தமிழருக்கு என்று தனி நாடு வரும்வரை இந்தப் போராட்டம் தொடரவேண்டும். பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்டதற்கு நியாயம் கிடைக்க வேண்டாமா?,” என்றார்.

-என்வழி செய்திகள்
8 thoughts on “வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்!

 1. srikanth1974

  உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே.

 2. குமரன்

  வணங்கப்பட வேண்டிய அம்மா.

  யார் யாரையோ தகுதியற்றவர்களை எல்லாம் “அம்மா” என்றும் “அன்னை” என்றும் அழைக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில் இருக்கும் தகுதி வாய்ந்த ஓர் அம்மா.

 3. enkaruthu

  அருமை அம்மா.என் தமிழர்கள் காலம் தாமதித்தாலும் தமிழனுக்கே உரிய வீரம் போல் கிளம்பி உள்ளார்கள் .என் இன தலைவர் பிரபாகரன் அவர்கள் “ஒரு வீரிய போராட்டம் நமக்கு ஈழ தமிழகம் வாங்கி தரும்” என்று சொன்னதை இன்றைய நிகழ்வுகள் சாட்சிய திகழ்கின்றன.

 4. வீரப்ப மொய்லி

  இந்த முழக்கம் நாம் தமிழர் கட்சிக்கானது. இதை தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒருவருக்கு போட்டிருப்பது எங்கோ இடிக்குது. வேற தலைப்பை போட்டிருக்கலாம். தமிழன் இந்த மாதிரி மாற்றானைஎல்லாம் தமிழன் என்று நம்பியதால் 2 லட்சம் உயிர்களையும், காவிரி, கச்சதீவு, முல்லைபெரியாறு, பாலாறு , தாய்மொழி தமிழ் என எல்லாவற்றையும் இழந்தான். இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை தமிழனுக்கு ,,,,,,,,,,,,,,,

 5. குமரன்

  தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்களைத் தமிழர் அல்லர் என்று சொல்லிவிட முடியுமா? அவர்களது தாய் மொழி தெலுங்கானாலும், வைகோ ஈழத் தமிழர்களுக்காகப் போராடியது போல இன்னொரு தமிழகத் தலைவர் போராடவில்லை என்பதே உண்மை.

  தமிழ் நமக்கு மட்டும் தாய் மொழி அல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் தாய் மொழி ஆகும். கருணாநிதி தனது தனிப்பட்ட சுயநலத்துக்காக இதை மறைத்து அரசியல் செய்ததால்தான் இன்னமும் இப்படியெல்லாம் அவர் தமிளரல்ல, இவர் தமிழரல்ல என்று பேசுகிறார்கள். ஒரு தாயிடம் அத்தாய் பெற்ற பிள்ளைகளை அவரது பிள்ளைகளல்ல என்று சொல்வது எத்தனைக் கொடுமையோ அதைச் செய்திருக்கிறார் கருணாநிதி.

  தமிழ்த்தாய் வாழ்த்து அதன் ஆசிரியர் எழுதிய படி இதோ:

  நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
  சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
  தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
  தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
  அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
  எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
  பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
  எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
  கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
  ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
  சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

  இந்தப் பாடலில் வருகின்ற …

  “பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
  எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
  கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
  ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ”

  என்ற வரிகளை வெட்டி எறிந்ததால் மக்களுக்குத் தமிழ் ….

  தமிழர்களுக்கு மட்டும் அல்ல, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளுக்கு எல்லாமும் தமிழ் என்பது தெரியாமலே போயிற்று.

  தமிழின் சிறப்பு போனாலும் பரவாயில்லை என்று ஒரு பாடலைத் தனது சுயநலத்துக்காக வெட்டிச் சிதைத்தவரைத் தமிழினத் தலைவர் என்று ஏற்பவர்கள் என்ன சொல்வார்கள்?

 6. குமரன்

  ///தமிழர்களுக்கு மட்டும் அல்ல, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளுக்கு எல்லாமும் தாய் என்பது தெரியாமலே போயிற்று.///

  என்று படிக்கவும். பிழை பொறுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *