BREAKING NEWS
Search

இன்னொரு முறை ராஜபக்சே இந்தியாவில் கால் வைத்தால்… – வைகோ எச்சரிக்கை

இன்னொரு முறை ராஜபக்சே இந்தியாவில் கால் வைத்தால்… – வைகோ எச்சரிக்கை


சாஞ்சி: ராஜபக்சே இன்னொரு முறை இந்தியாவிற்கு வந்தால் இனி பிரதமரின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

புத்தமத பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக சாஞ்சி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், ஆயிரக்கணக்காக தொண்டர்களும் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டில் இருந்து பஸ்ஸில் பயணித்து மத்திய பிரதேச எல்லையை அடைந்த வைகோவும் தொண்டர்களும் 40 மணிநேரம் நடுரோட்டில் அமர்ந்து போராடி ராஜபக்சேவிற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

இன்று காலையில் ராஜபக்சே சாஞ்சியில் அடிக்கல் நாட்டிய நேரத்தில் அவரது உருவ பொம்மையையும், போஸ்டர்களையும் எரித்து கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர் வைகோவும் தொண்டர்களும்.

பின்னர் சாஞ்சி நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றபோது வைகோவையும், ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் மத்தியபிரதேச மாநில போலீசார் கைது செய்தனர். 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சாஞ்சியிலிருந்து 375 கிமீ தூரத்தில் வைகோ கைது செய்யப்பட்டார்.

அதே நேரம், போபாலில் மதிமுகவின் தொண்டர்கள் பலர் கறுப்புக் கொடி காட்ட முயன்று போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.


இதற்கிடையே, போலீசாரால் கைது செய்யப்பட்ட வைகோவை இன்று நாம் தொடர்பு கொண்டு பேசினோம். என்வழிக்கு அவர் அளித்த பேட்டி:

அவர் கூறுகையில், ‘மத்தியப் பிரதேச முதல்வர் சௌஹான் என்னை தன் நண்பர் என்று குறிப்பிட்ட பேசியுள்ளார். என்னுடனும் அவர் பேசினார். ஆனால் என் ஒருவனிடம் நட்பு பாராட்டுவதைவிட, ராஜபக்சே எனும் கொலைகாரனை விரட்டிவிட்டு, ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் நண்பராகியிருக்கலாம்.

எங்களை ஜனநாயகக் கடமையாற்றவிடாதது சட்ட விரோதமானது. இனியொருமுறை இந்திய எல்லைக்குள் ராஜபக்சே கால் வைக்கவே கூடாது. அப்படி வைத்தால், அடுத்து நாங்கள் டெல்லியை முற்றுகையிடுவோம். பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்.

அவர் எத்தனை பெரிய கொலைக்குற்றவாளி என்பதை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் புரிந்து கொள்ளவே இல்லை. அதை நாங்கள் விளக்கியபோது அந்த மக்கள் கண்ணீர் வடித்தார்கள்.

முள்ளிவாய்க்காலில் நடந்த துயர படுகொலைக வீடியோவை இந்தியாவின் அனைத்து மாநில மக்களுக்கும் போட்டுக் காட்டப்போகிறேன்.

-என்வழி ஸ்பெஷல்




One thought on “இன்னொரு முறை ராஜபக்சே இந்தியாவில் கால் வைத்தால்… – வைகோ எச்சரிக்கை

  1. குமரன்

    முள்ளிவாய்க்காலில் நடந்த துயர படுகொலை வீடியோவை இந்தியாவின் அனைத்து மாநில மக்களுக்கும் போட்டுக் காட்டுவது என்பது சிறந்த ஏற்பாடு. இந்திய மக்கள் அனைவரும் எப்பேர்ப்பட்ட கொலைகாரர்களுக்கு சோனியாவின் பழி வாங்கும் நடவடிக்கைக்காக இந்திய அரசு துணைபோகி உள்ளது என்பது தெரியட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *