BREAKING NEWS
Search

மெல்லத் தமிழ் இனி சாகும்! – வைகோ

மெல்லத் தமிழ் இனி சாகும்! – வைகோ

vaiko

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி என்ற தமிழக அரசின் முடிவால் மெல்ல தமிழ் இனி சாகும் என்று எச்சரித்துள்ளார் வைகோ.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழிக் கல்விக்கு வேட்டு வைத்து, அன்னைத் தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவது ஆகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியில் பயில்வதைவிட்டு, ஆங்கில மொழியில் பயில்வதற்கு ஊக்குவிப்புத் தந்து “மெல்லத் தமிழ் இனி சாகும்; மேலை மொழியே இங்கு ஓங்கும்” எனும் பெரும் விபரீதத்துக்கு தமிழக அரசின் முடிவு வழிவகுக்கும்.

“கடந்த கல்வியாண்டில், 320 அரசுப்பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டன. மொத்தம் 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு 22,400 மாணவர்கள் படித்து வருகின்றார்கள். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பு தமிழுக்கும், தமிழ் பயிற்சி மொழிக்கும் பெரும் கேடு செய்யும்.

அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை ஆங்கிலவழிப் பிரிவுகளாக மாற்றும் அறிவிப்பை எதிர்க்கிற அனைவரும் ஆங்கில மொழிக்கோ ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக் கொள்வதற்கோ  எதிரானவர்கள் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

அண்ணல் காந்தி முதல் அறிஞர் அண்ணா வரை தாய்மொழியில் கல்வி பயில்வதன்  அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.  தாய்மொழியை முதல் பயில்மொழியாகக் கொள்வதும் அதையே அனைத்துப் பாடங்களுக்குமான பயிற்றுமொழியாகக் கொள்வதும்தான் உலக நடப்பு. இரண்டாம் மொழியாக வேறொரு அயல்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெறலாம்.

நம்மைப் பொறுத்த வரை இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்போம், கசடறக் கற்போம் என்றுதான் சொல்கிறோம்.  தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள் யாவரும் ஐந்தாம் வகுப்புக்குப் பிறகுதான் ஆங்கிலம் கற்றார்கள் என்பதே உண்மை. இதனால் அவர்கள் யாரும் ஆங்கில அறிவில் குறைந்துபோய் விடவில்லை.

தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு அரசுப் பள்ளிகளும் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் பயிற்று மொழி என்பதை  ஏற்பதற்கில்லை. அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க விடாமல் தடுப்பது எது? தமிழ்ப் பயிற்றுமொழிதானா?

இங்கிலீஷ் மீடியம் வேண்டும் என பெற்றோர் விரும்புகிறார்கள் என்று பொதுமக்கள் மீது பழியைப் போடாமல், தமிழ்வழிப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தொடக்கப் பள்ளியில் மட்டுமல்லாமல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், ஏன் கல்லூரிப் படிப்பிலும் கூட, தமிழையே பயிற்றுமொழியாக்குவது போன்ற உருப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.

அரசுப் பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கேரளத்தில் மலையாள வழிக் கற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் தனி மதிப்பெண் கொடுப்பது போல் இங்கேயும் தமிழ்வழிப் படித்தவர்களுக்குப் பல சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும்.

கடந்த 1998ஆம் ஆண்டு தமிழ்ச் சான்றோர் பேரவை முனைவர் தமிழண்ணல் தலைமையில் நடத்திய 102 தமிழுணர்வாளர்களின் உண்ணாவிரதப் போரட்டத்தின் முடிவில் அன்றைய தமிழக அரசு நீதிபதி மோகன் தலைமையில் ஓர் விசாரணைக் குழு அமைத்து, அக்குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி கட்டாயப் பயில்மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் இருக்கும் என்று ஆணையிட்டது.

மெட்ரிக் பள்ளி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அந்த அரசாணை செல்லாது என்று கூறி விட்டது. இதற்கெதிராக தமிழக அரசு 1999இல் உச்ச நீதிமன்றத்தில் செய்த முறையீடு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து தமிழுக்கு சாதகமான தீர்ப்புப் பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மொத்தம் 3,600 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளைப் புகுத்துவதைத் தமிழக அரசு கைவிட்டு, ஆங்கிலம் உள்ளிட்ட எல்லாப் பாடங்களையும் தரமான முறையில் படிப்பிக்க ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறேன். இது தமிழ் மொழிக்கான கோரிக்கை மட்டுமன்று, சமூகநீதிக்கான கோரிக்கையும் ஆகும். ஏனென்றால் தமிழ்வழிக் கல்வியே ஒடுக்குண்ட மக்கள் சமச் சீர் கல்வி பெற்று மற்றவர்களுடன் போட்டியிடும் வல்லமையையும் தன்னம்பிக்கையையும் அம்மாணவர்களிடையே உருவாக்கும்.

தமிழக அரசு ஆங்கிலவழி வகுப்புகளை விரிவாக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழ்வழிக் கல்விக்குத் தகுந்த முறையில் ஊக்கம் அளிக்கும் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.




16 thoughts on “மெல்லத் தமிழ் இனி சாகும்! – வைகோ

  1. நாஞ்சில்மகன்

    இவனுங்க நாட்டை நல்ல ஆக்க விடவே மாட்டானுங்க. நாசமா போன தமிழ் மொழி என்று பெரியார் சொன்னார். இன்று அம்மா செய்கினற் இந்த புரட்சியால் தமிழ்நாடு உலக அரங்கில் ஒளிரத்தான் போகிறது. வினோ அவர்களே நீங்கள் வைகோ ஆள் என்று எனக்கு நன்றாக தெரியும். தயவு செய்து நல்ல விஷயங்களை ஆதரியுங்கள். கட்சி தொடங்கி 20 வருடம் ஆகிறது. வைகோவால் ஒரு MLA ஆக துப்பில்லை.

    இன்று உலகமே சுருங்கி ஓர் உள்ளங்கையில் வந்துவிட்டது. உலக ஜனத்தொகை வளர்ச்சி, வளங்களின் சமனற்ற பரம்பல் போன்ற பல காரணங்களால் ஒரு மனிதன் சக மனிதனில் தங்கி வாழ வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்லான். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனிதர்களை மேலும் நெருக்கமாக்கியது. இனங்கள் கடந்து, நாடுகள் கடந்து தொடர்புகளை மேற்கொள்ளும் போது பொது மொழியான ஆங்கிலத்தின் அவசியம் மேலோங்குகிறது. ஆங்கிலம் எல்லோரும் அறிந்திருக்கவேண்டிய அவசியமொழியாக மாறியிருக்கிறது.

    தமிழ்ப்பிரதேசம் அல்லாத வேறு பிரதேசங்களுக்கு செல்லும் பொழுது, அங்கேயும் பொது மொழி ஒன்றினது தேவை அவசியமாகிறது. இன்று உயர் கல்விகள், வேலை வாய்ப்புக்கள், தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் மேலோங்குகிறது. ஆகவே ஆங்கிலம் கற்பதன் மூலம் பல அநுகூலங்களை நாம் பெறமுடியும். அதற்காக எம்தாய் மொழியான தமிழ்மொழியை கற்கக்கூடாது என்பதல்ல. ஆங்கிலத்தை நீ கற்றுக்கொள்ளலாம் உனது நன்மைக்காக, ஆனால் தமிழ்மொழியை கற்றுக்கொள் உன் தமிழ் சமூகத்தின் நன்மைக்காக.

    நன்றி அம்மா நன்றி
    வாழ்க தமிழ்நாடு வளர்க ஆங்கிலம் . திக்கெட்டும் பரவட்டும் தமிழனின் ஆதிக்கம்.

    காலத்தை வென்றவள் நீ
    காவியமானவள் நீ
    வேதனை தீர்த்தவள்
    விழிகளில் நிறைந்தவள்
    வெற்றித் திருமகள் நீ..வெற்றித் திருமகள் நீ..வெற்றித் திருமகள் நீ..

    நடந்தால் அதிரும் ராஜ நடை
    நாற்புறம் தொடரும் உனது படை
    போர்க்களத்தில் நீ கணையாவாய்

    ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
    ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..

  2. madrasraj

    சரியக சொன்னிங்க நாஞ்சில்மகன். அரசியவாதி பிள்ளைங்க எல்லாமே ஆங்கிலம் வழி கல்வி கற்க. ஏன் நாம படிக்க வேண்டாமா

  3. Karthik

    தமிழை அழிப்பது என்று ஜெயா உறுதியாக கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். ஆங்கிலம் படித்தால் தான் வேலை என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டு தமிழை ஒழிக்க நினைகிறார்கள். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் அங்கிலத்திலேயே அறுவை சிகிச்சை செய்கிறார் ? கட்டடம் கட்டும் பொறியாளர் ஆங்கிலத்திலேயே கட்டடம் கட்டுகிறார் ? இவைகளை படிக்கச் தமிழில் வார்த்தைகள் இல்லை என்றல் ஆங்கில வழி கல்வி சரிதான். அனால் வெளி நாட்டில் போய் வேலைபார்க்க அங்கிலத்தை தமிழக அரசு திணிக்க வேண்டும் என்பது அநியாயம்…

  4. Karthik

    தமிழன்னைக்கு அப்புறமா சிலை வைக்கலாம்..மொதல்ல தமிழுக்கு உலை வைக்காம இருங்க..!

    # தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி

  5. Karthik

    @ நாஞ்சில்மகன்

    // நாசமா போன தமிழ் மொழி என்று பெரியார் சொன்னார்…

    அப்போ தமிழர்களாகிய நாங்கள் … நாசமாப்போன பெரியார், நாசமாப்போன ஜெயாநு சொல்லுவோம்.. தமிழ் நாசமா போனதிற்கு காரணம் தமிழ் உணர்வற்ற கன்னடரும் தெலுங்கர்களும் தமிழ் நாட்டை ஆளுவது தான்.. சீக்கிரம் இவர்களை தூக்கி எறிவோம்.. அப்புறம் தமிழ் நல்ல இருக்கும்..

  6. soundar

    ஆங்கில வழிக்கல்வியை எதிர்க்கும் அரசியல் வாதிகள், தமிழ் ஆர்வலர்கள், முதலில் ஆங்கில வழிக்கல்வி நடத்தும் தனியார் பள்ளிகளை மூடுங்கள்..

  7. karthik

    தமிழின் இன்றைய நிலையை பாருங்கள் :
    ============================================

    கிழக்கு திசையில் பயணித்து,
    பிழைக்கப் போகின்ற ஒருவன்,

    மழை வந்ததால், ஓர் ஓரத்தில்
    மழை படாது ஒதுங்கும் சமயம்,

    வந்த பெரியவர் கேட்டதற்குத்
    தந்த பதில்களைப் பாருங்கள்!

    ‘எங்கே போறே?’ – ‘கெயக்க!’
    ‘எதுக்குப் போறே?’ – ‘பொயக்க!’

    ‘ஏன் ஒதுங்கறே ?’ – ‘மயக்கி!’
    ‘இப்படிப் பேசறே?’- ‘பயக்கம்!’

  8. கடலூர் சித்தன்.ஆர்

    “தமிழில் பள்ளிப் படிப்பை முடித்து பின் உயர் கல்வி பெற்றவர்கள் பெரும்பாலும் தமது பிள்ளைகளை ஆங்கில பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பது மறுக்க முடியா உண்மை.”
    இந்தியாவிலேயே முதல் தலைமுறை பொறியியல் / மருத்துவம் / சட்டம் படித்த பட்டதாரிகள் உருவாக்குகிற மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்பதும் உண்மை.
    நமது தமிழகத்தில் எண்பது விழுக்காடுகளுக்கு மேலாக பள்ளிப் படிப்பை தமிழ் வாயிலாகவே பெறுகிறோம். இம்முறைக்கே தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காமல் அரசு பள்ளிகள் / தேர்வுக்குழு அல்லாடுவதையும் நாம்அறிவோம்.
    தாய் மொழி வாயிலாக பள்ளிக் கல்வி படித்து பின் முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகம்
    உருவாகின்ற, முன்னோடியான தமிழகத்திற்கு -இம்முறையை/ நிலைமையை சீர்ப்படுத்தாமல் அமுலாக்குவது நல்லதல்ல.

    “ஆங்கிலவழிக் கல்வியையும் அரசே தரலாம் – இப்போதல்ல காலம் கனிந்தபின் ”-கடலூர் சித்தன்.ஆர்

  9. கடலூர் சித்தன்.ஆர்

    “தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை.”
    ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகமாகி உள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை. தமிழகத்தில்,அதே நிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில் வாழும் மக்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. இந்நிலை இந்திய ஒருமைப்பாட்டுக்கு/நமக்கு நல்லதல்ல. ஆகவே திறமையான தமிழ் வழிகாட்டிகள் தமிழகத்திற்கு உடனடியாகத் தேவை.”

    தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை.
    காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தையை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்?

  10. கடலூர் சித்தன்.ஆர்

    ஹி..ஹி..ஹி..அம்மா, அப்பா என்று சொன்னால் என்ன?மம்மி, டாடின்னு , சொன்னால் என்ன?- எஸ்.வீ.சேகர்- மாஜி எம்.எல்.ஏ -புதிய தலைமுறை தொலைக்கட்சிக்கு அளித்த பேட்டியில்.

    // Why Tamil is a Classical Language:

    University of California, Berkeley, holds a ‘Tamil’ Conference annually. Its Chair in Tamil Studies, Prof. George L. Hart, writes, “To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own and not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as Latin and older than Arabic); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich.”//

    ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும் .. பல்லு இல்லாத கிழவர்களுக்கு முறுக்கு சாப்பிடுகிறவர்களை கண்டால் பொறுக்காது தானே ???

  11. Bala

    தாய் மொழி கற்காதவன் முகவரி இல்லாத நாடோடி என்று ஜெர்மானியர்கள் சொல்லுகிறார்கள்… நமக்கு இது உரைப்பது இல்லை…நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் பேசுவதையே கேவலமாக கருதும் கூட்டம்தான் இன்று அதிகம்..எந்த ஒரு நாடும் தாய்மொழியை விட ஆங்கிலம் கற்பதுதான் சிறந்தது என்று சொன்னதே கிடையாது…சீனர்களோ, ஜப்பானியர்களோ, பிரெஞ்சுகாரர்களோ, ஜெர்மாநியர்களோ அல்லது எந்த வளர்ந்த நாடுகளோ ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை..அதை அவர்கள் இரண்டாம் மொழியாகத்தான் கற்கின்றனர்..ஆனால் தமிழ் வழி கல்வி படித்த நமக்குதெரிந்த ஆங்கிலம்கூட அவர்களுக்கு தெரியாது..அவர்கள் முன்னேற்றத்துக்கு காரணம் தாய்மொழியில் கற்றதுதான்.. இரண்டாம் மொழியாக ஆங்கிலம் காற்றாலே நன்கு ஆங்கிலம் பேசலாம் “நல்ல ஆசிரியர்கள் இருந்தால், நல்ல கல்விமுறை இருந்தால்”. இங்கு இருப்பது எல்லாமே அரைகுறை…அந்த குறையை போக்காமல் ஆங்கிலத்தை தூக்கி பிடிப்பது மூடத்தனம்.அமெரிக்க மோகத்தின் வெளிப்பாடுதான் இந்த ஆங்கிலமோகம் என்று நினைக்கிறேன். .நாம் ஒரு ஆட்டு மந்தை கூட்டம்..சுய அறிவை தொலைக்க துடிக்கிறோம்.. முகவரி அற்று திரியும் காலம் வெகு தொலைவில் இல்லை…

  12. கடலூர் சித்தன்.ஆர்

    “மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள்???”

    // இவனுங்க நாட்டை நல்ல ஆக்க விடவே மாட்டானுங்க. நாசமா போன தமிழ் மொழி என்று பெரியார் சொன்னார். இன்று அம்மா செய்கினற் இந்த புரட்சியால் தமிழ்நாடு உலக அரங்கில் ஒளிரத்தான் போகிறது. By நாஞ்சில்மகன் //

    // இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே …..இந்தி கத்துக்காம ,ஹைதராபாத், மும்பை பக்கம் போனா ரணகளமாயிடுது …. By கபிலன்”//

    “தமிழ் நாட்டில் பிழைக்கும்/உழைக்கும்/ஆளும் மார்வாரி/ வட இந்திய மக்கள்/ அண்டை மாநில மக்கள்- தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா??? ஹி.. ஹி..ஹி இப்பவே நம்மை நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம்??? மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள் ???

  13. கடலூர் சித்தன்.ஆர்

    “ வாழ்க திரு தினேஷ்குண்டுராவ் அவர்களே ! “
    // கர்நாடகத்தில் வாழும் கன்னடர்-தமிழர் இடையே நல்லிணக்கம் மேம்படும்வகையில் தமிழர்கள் இனி தங்களை தமிழ்கன்னடர் என்று கூறிக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். – கர்நாடக உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ்.”// மிகவும் நன்றி .வாழ்க திரு
    தினேஷ்குண்டுராவ் அவர்களே!!! தாங்கள் இது போல மகாகணம் பொருந்திய ராஜபக்சே அவர்களுக்கு ஒரு அன்புச் செய்தி அனுப்பி தமிழர்களையும் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளச் செய்தால் கோடி நன்றி சொல்வோம். – இப்படிக்கு திராவிடத் தமிழன் மன்னிக்கவும் .தமிழ்த் தமிழன்.
    http://dinamani.com/latest_news/2013/07/27/

  14. naarathar

    தமிழும் வாழாது ஆங்கிலமும் வாழாது தங்க்லீஷ் தான் வாழும்…
    தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் தான் இனி தமிழ் நாட்டு ராஜாக்கள்.

  15. விசா

    தமிழ் இனி மெல்ல சாகும் என்று அந்த பேதை வைகோ கூறினார்

  16. BestFloy

    I have noticed you don’t monetize your page, don’t waste
    your traffic, you can earn extra bucks every month because you’ve
    got hi quality content. If you want to know how to make extra $$$, search for:
    Ercannou’s essential adsense alternative

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *