BREAKING NEWS
Search

கலப்புத் திருமணங்களையும் திருமாவளவனையும் இழிவுபடுத்தும் ராமதாஸ் – வைகோ அறிக்கை

கலப்புத் திருமணங்களையும் திருமாவளவனையும் இழிவுபடுத்தும் ராமதாஸ் – வைகோ அறிக்கை

சென்னை: தலித் மக்களுக்காக மட்டும் அன்றி, தமிழ்ச் சமுதாயத்துக்காகப் பாடுபடுகின்ற ஒரு இயக்கத்தை (விடுதலைச் சிறுத்தைகள்) கொச்சைப்படுத்தி, திரும்பத் திரும்ப அவர்களை இழிவுபடுத்திப் பேசுவது, மிகவும் கவலை தருகிறது.

தமிழ்நாட்டில் பொறுப்பான ஒரு அரசியல் கட்சியின் தலைவர் (பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்) காதலைச் சாடுவதோடு, கலப்புத் திருமணங்களையும் எள்ளி நகையாடி, குற்றம் சாட்டுவது, எவ்விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 7ம் தேதி நத்தம் கொண்டம்பட்டி அண்ணா நகர், ஆகிய தலித் கிராமங்களில், தலித் மக்களின் வீடுகளும், உடைமைகளும், வன்முறையாளர்களால் தாக்கப்பட்டன; பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டு, வீடுகள் கொளுத்தப்பட்ட சம்பவம், கண்டனத்துக்கு உரிய அராஜக வெறியாட்டம் ஆகும். அவர்கள் உழைத்துப் பாடுபட்டுத் திரட்டிய சொத்துகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டு விட்டன. பலர் படுகாயமுற்று உள்ளனர்.

இந்தக் கொடிய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உரிய விதத்தில், பொருளாதார நிவாரணம் அளிப்பதும், தமிழக அரசின் கடமை ஆகும்.

அந்தப் பகுதியில் இருவேறு சாதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் உள்ளங்கள், காதல்வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டதால், நாய்க்கன்கொட்டாயைச் சேர்ந்த பெண்ணின் தந்தை நாகராஜ், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது, துயரச் சம்பவம் ஆகும். ஆனால், இதற்கு அப்பகுதி வாழ் தலித் மக்கள் பொறுப்பாளிகள் அல்ல.

அதற்காக, காதல் திருமணங்களை எள்ளி நகையாடுவதும், கலப்புத் திருமணங்களை நிந்திப்பதும், மிகவும் தவறான போக்கு ஆகும். காதல் என்பது, இளம் உள்ளங்களின் உணர்வுகளில் மலர்ந்து, சாதி, மதம், இனம் அனைத்தையும் கடந்து, துன்பங்களை எதிர்கொள்ளக்கூடிய, உன்னதமான வாழ்வியல் ஆகும்.

உலகத்தில் பல மொழிகளில் தோன்றிய இதிகாசங்களில், இலக்கியங்களில், காதல் எனும் அமரகாவியங்களைக் காணலாம். ஆனால், தமிழ்நாட்டில் பொறுப்பான ஒரு அரசியல் கட்சியின் தலைவர், காதலைச் சாடுவதோடு, கலப்புத் திருமணங்களையும் எள்ளி நகையாடி, குற்றம் சாட்டுவது, எவ்விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனுதர்மத்தின் பெயரால், வருணாசிரமத்தின் பெயரால், ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள், தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து, நெடுங்காலம் போராடினர்.

பாபா சாகேப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மேற்கொண்ட ஈடு இணையற்ற தர்ம யுத்தத்தின் விளைவாகவே, பட்டியல் சாதி மக்களும், பழங்குடியினரும், சட்டப்படியான பாதுகாப்பையும் உரிமையையும் பெற்றனர்.

தமிழ்நாட்டில், தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும், ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகவும், தந்தை பெரியார் அவர்கள், காலமெல்லாம் போராடினார்.
‘தீண்டப்படாதோர்’ என்று, துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு, சட்டப்படியான பாதுகாப்பைத் தருவதன் மூலம், அக்கொடுமையின் அடித்தளம் நொறுக்கப்படுகிறது’ என்று, அரசியல் நிர்ணய சபையில் சர்தார் வல்லபாய் படேல், முன்மொழிந்ததை, அண்ணல் அம்பேத்கர் வரவேற்றார்.

காலம் காலமாக, தீண்டாமைக் கொடுமையால் வதைபட்ட தலித் மக்களுக்கு, சமூக நீதியும், இட ஒதுக்கீடும், நீண்ட நெடும் போராட்டத்தின் அறுவடை ஆகும்.

தமிழகத்தில் கலப்புத் திருமணங்களை ஊக்குவிப்பதற்காகவே, முதல் அமைச்சரான அறிஞர் அண்ணா அவர்கள், தங்கப் பதக்க விருது அறிவித்தார்.

தலித் சமூகத்து இளம் தலைமுறையினர், கல்வியிலும், சமூக நிலையிலும், தங்களுடைய முயற்சியாலும், உழைப்பாலும் முன்னேறி வருவது, வரவேற்கத்தக்கது ஆகும். அவர்கள் நாகரிகமாக உடை உடுத்துவதையும், சமுதாயத்தில் சம உரிமையோடு உலவுவதையும் ஏளனம் செய்வதும், பரிகசிப்பதும் பண்பு உடைமை ஆகாது.

அதிலும், தலித் மக்களுக்காக மட்டும் அன்றி, தமிழ்ச் சமுதாயத்துக்காகப் பாடுபடுகின்ற ஒரு இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி, திரும்பத் திரும்ப அவர்களை இழிவுபடுத்திப் பேசுவது, மிகவும் கவலை தருகிறது. வேல் பாய்ந்த புண்ணில், மீண்டும் மீண்டும் சூட்டுக்கோலைத் திணிப்பதைப் போன்றது ஆகும். அதனால் மோதல்கள் ஏற்படுமானால், அனைத்துத் தரப்பினருமே பாதிக்கப்படுவர்.

1938ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்துச் சகோதரனும், ஒடுக்கப்பட்ட சமூகத்துச் சகோதரனுமான தாளமுத்து-நடராசன் ஆகியோர் முதல் களப் பலி ஆனார்கள்.

தலித் இளைஞர்களின் உயிர்த்தியாகம்

ஈழத் தமிழர் படுகொலை நடந்தபோது, வீரத்தியாகி முத்துக்குமாரைத் தொடர்ந்து பல்வேறு சமூகத்து இளைஞர்கள் தீக்குளித்து மடிந்தார்கள். அதிலும், தலித் சமூகத்து இளைஞர்கள் நான்கு பேர், ஈழத் தமிழர்களுக்காக நெருப்புக்குத் தங்கள் உயிர்களைத் தந்த தியாகத்தையும், தமிழ்ச் சமுதாயம் என்றும் மறக்காது.

எனவே, சமய ஒற்றுமைக்கும், சமூக நீதிக்கும் இந்தியாவுக்கே வழிகாட்டி வந்து உள்ள தமிழ்நாட்டின் பெருமைக்குக் குந்தகம் நேராமல், சகோதரத்துவத்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடாமல், பொது அமைதியைப் பாதுகாக்க வேண்டியது, அனைவரின் கடமை ஆகும் என்பதை எண்ணிப் பார்த்துக் கருத்துகளை வெளியிடுமாறும், நேசக்கரங்களை ஒருவருக்கொருவர் நீட்டுமாறும், ஒரு சகோதரனாக அன்போடு வேண்டுகிறேன்,” என்று கூறியுள்ளார் வைகோ.

-என்வழி செய்திகள்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *