BREAKING NEWS
Search

அரசுக் கல்லூரிகளிலும் முற்றாக தமிழை ஒழிக்கும் தமிழக அரசு! – வைகோ

அரசுக் கல்லூரிகளிலும் முற்றாக தமிழை ஒழிக்கும் தமிழக அரசு! – வைகோ

Vaiko-english-medium

சென்னை: அரசுக் கல்லூரிகளில் இனி ஆங்கிலத்தில்தான் பயிற்சி ஏடுகளையும் தேர்வுகளையும் எழுத வேண்டும் என்பது ஏற்க முடியாதது. தமிழை முற்றாக அழிக்கும் செயல், என மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அரசு பள்ளிகளில் தமிழ் வழிப் பிரிவுகளை, ஆங்கில வழிப் பிரிவுகளாக மாற்றும், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்புத் தோன்றியது. தாய்மொழி கல்விக்கு எதிரான இந்த திட்டம் கூடாது என்று நாம் வலியுறுத்தும் பொழுது, தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தற்போது செய்துள்ள பரிந்துரை, தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் இனி தமிழ்மொழிக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்குகின்ற பெரும் விபரீதம் ஏற்படும்.

தாய்த் தமிழகத்திலேயே தமிழுக்கு அழிவு நேரும். தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில், வரும் கல்வி ஆண்டிலிருந்து மாணவர்கள் எழுதும் பயிற்சி ஏடுகள் மற்றும் கல்லூரித் தேர்வுகளை இனி தமிழில் எழுதக்கூடாது, ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற பரிந்துரையை  அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.

தமிழக மாணவர்கள் ஆங்கிலப் புலமை மற்றும் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள ஆங்கில வழியில் பயிற்சி ஏடுகளையும், தேர்வுகளையும் எழுத வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தமிழ் வழியில்தான் இவற்றை எழுதி வருகின்றனர்.

திடீரென்று ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்றால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அரசுக் கல்லூரிகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள்தான் பயின்று வருகின்றார்கள். தமிழ் வழியில் பயின்ற தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களது ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொண்டு, கணினித்துறையில் உலகெங்கும் வெற்றிகரமாக பணியாற்றுகின்றனர். எனவே, தாய்மொழியில் கல்வி கற்பது எந்த வகையிலும் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காது.

பட்டப் படிப்பை தமிழ்வழிக் கல்வி மூலம் மேற்கொள்வோருக்கு ஊக்கம் அளித்து, அரசுப் பணிகளில் முன்னுரிமை கொடுத்து, தாய்மொழி தமிழை, கல்வி மொழியாக பயிற்று மொழியாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையைச் செய்யாமல், தமிழ் மொழியை முற்றாக புறக்கணிக்க தமிழக உயர்கல்வி மன்றம் முனைப்பு காட்டுவது வேதனை அளிக்கிறது.

உலகப் பொருளாதாரத்தில் போட்டியிடுகின்ற அளவுக்கு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுள்ள சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழி கல்விக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்நாடுகளில் ஆங்கிலவழிக் கல்வி என்பதே இல்லை என்பதையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

எனவே, தமிழ்வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கவும், கிராமப்புற மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும், வருங்காலத்தில் வளரும் தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள் தமிழ் மொழியையே அறியாத நாசகார இருளுக்குள் தமிழ் நாட்டை வீழ்த்தும் என்பதால், தமிழக அரசு உயர்கல்வி மன்றத்தினுடைய அக்கிரமமான பரிந்துரையை நிராகரித்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையையே தமிழக அரசு தொடந்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என அதில் குறிப்பிட்டுள்ளார்.




17 thoughts on “அரசுக் கல்லூரிகளிலும் முற்றாக தமிழை ஒழிக்கும் தமிழக அரசு! – வைகோ

  1. Krishna

    சீனாவிலும் ஜப்பானிலும் அவர்களின் தாய் மொழி தான் முதன்மையாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த வாதம் தமிழகத்துக்கு பொருந்தாது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஒரே மொழி நாடு முழுவதும் பேசப்படுகிறது, எழுதப்படுகிறது, தகவல்கள் பரிமாரிக்கொள்ளப்படுகிறது. ஆனால் தமிழகம் என்பது இந்திய நாட்டின் ஒரு பகுதி தானே தவிர தனி நாடு அல்ல. கும்மிடிப்பூண்டி, ஓசூர், போத்தனூர் தாண்டினால் வேறு மொழிகள் பேசப்படுகிறது. தமிழகத்தில் அரசு வேலை 1.5 லட்சம் இருக்கிறது, ஆனால் தமிழ் வழியில் பயின்றவர்கள் ஆண்டு தோறும் 7 லட்சம் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் அரசு வேலை கிடைக்காது. தனியார் நிறுவனங்கள் தான் வேலை கொடுக்க வேண்டும். ஐ.டி. துறையோ, அல்லது வேறு துறையோ, தனியார் நிறுவனங்களில் ஆங்கிலம் தான் எல்லாம். தமிழகத்திலேயே கூட தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் ஆங்கிலம் தான் இன்றைய தேவை. பெரியார் கூட தமிழ் என்பது தாய்ப்பால் போன்றது, ஆங்கிலம் புட்டி பால் போன்றது என்று தெரிவித்திருக்கிறார். தமிழனை அழித்து தமிழை வாழ வைக்க முடியாது. மற்ற மாநிலங்களை போல் தமிழகம் முன்னேற வேண்டும் என்றால் ஆங்கிலம் தான் இன்றைய மக்களுக்கு தேவை. மக்கள் மத்தியில் இந்த முடிவுக்கு அமோக வரவேற்பு இருப்பதாக தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

  2. Saktheeswaran

    தாய் மொழியான தமிழுக்கு தமிழ் நாட்டில் இடம் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இடம் கிடைக்கும் @தமிழ் இனி மெல்ல சாகும் @ஆங்கிலம் கழ்வா?

  3. தமிழன்

    தமிழை ஒழிக்க அரசு எல்லாம் தேவை இல்லை. இந்த கிருஷ்ணா மாதிரி விதண்டாவாதிகளே போதும்.. பெத்த தாயைக்கூட அம்போன்னு வுட்டுட்டு போயிடுவானுங்க போலிருக்கு. போங்கப்பா, போய் உங்க புள்ளை குட்டிகளை ஆங்கிலத்தில் படிக்க வச்சு, சந்தோஷமா இருங்க. மத்தவங்களுக்கு உபதேசம் பண்ற சோலி வேண்டாம்.. மூத்த மொழியான தமிழ் எப்படினாலும் வாழ்ந்து கொள்ளும்.. நீங்க உங்க சோலியை மட்டும் பாத்துகிட்டு போய்கிட்டே இருக்கப்பா…

  4. நாஞ்சில்மகன்

    பெரியார் கூட தமிழ் என்பது தாய்ப்பால் போன்றது, ஆங்கிலம் புட்டி பால் போன்றது என்று தெரிவித்திருக்கிறார்.மற்ற மாநிலங்களை போல் தமிழகம் முன்னேற வேண்டும் என்றால் ஆங்கிலம் தான் இன்றைய மக்களுக்கு தேவை. மக்கள் மத்தியில் இந்த முடிவுக்கு அமோக வரவேற்பு இருப்பதாக தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

  5. Raj

    இதை வைத்து அரசியல் செய்ய வைக்கோவும், கருணாவும் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், மக்களே அவர்களை நம்பாதீர்கள். வைக்கோவின் மகன் USA-வில் வேலை பார்க்கிறார். கருணாவின் பேரன்கள், பேத்திகள் எல்லோரும் ஆங்கில வழி கல்வி மற்றும் வெளிநாட்டு பட்டம் பெற்றவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூற தகுதி இல்லாதவர்கள். ஜெயாவின் இந்த திட்டம் வரவேற்க்கத்தக்கது.

  6. Krishna

    தனிப்பட்ட விமரிசனங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. ஆனால் ஆங்கிலத்தில் கல்வி வேண்டும் என்கிறவர்கள் பெற்ற தாயை அம்போன்னு வுட்டுவாங்க என்று சொல்வது நல்ல நகைச்சுவை. பெற்ற தாய் தந்தையருக்கு தான் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட கல்வி வேண்டும் என்று முடிவெடுக்க உரிமை இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன், தமிழனை அழித்து தமிழை வாழ வைக்க முடியாது.

  7. கடலூர் சித்தன்.ஆர்

    //சென்னை: அரசுக் கல்லூரிகளில் இனி ஆங்கிலத்தில்தான் பயிற்சி ஏடுகளையும் தேர்வுகளையும் எழுத வேண்டும் என்பது ஏற்க முடியாதது. தமிழை முற்றாக அழிக்கும் செயல், என மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.//
    “தமிழில் பள்ளிப் படிப்பை முடித்து பின் உயர் கல்வி பெற்றவர்கள் பெரும்பாலும் தமது பிள்ளைகளை ஆங்கில பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பது மறுக்க முடியா உண்மை.” இந்தியாவிலேயே முதல் தலைமுறை பொறியியல் / மருத்துவம் / சட்டம் படித்த பட்டதாரிகள் உருவாக்குகிற மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்பதும் உண்மை. நமது தமிழகத்தில் எண்பது விழுக்காடுகளுக்கு மேலாக பள்ளிப் படிப்பை தமிழ் வாயிலாகவே பெறுகிறோம். தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காமல் அரசு பள்ளிகள் / தேர்வுக்குழு அல்லாடுவதையும் நாம்அறிவோம்.- ஆகவே இம்முறையை/ நிலைமையை சீர்ப்படுத்தாமல் அமுலாக்குவது நல்லதல்ல.

  8. கடலூர் சித்தன்.ஆர்

    “தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை.”
    ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகமாகி உள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை. தமிழகத்தில்,அதே நிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில் வாழும் மக்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. இந்நிலை இந்திய ஒருமைப்பாட்டுக்கு/நமக்கு நல்லதல்ல. ஆகவே திறமையான தமிழ் வழிகாட்டிகள் தமிழகத்திற்கு உடனடியாகத் தேவை.”

    தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை.
    காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தையை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்?

  9. குமரன்

    குழந்தையின் சிந்தனை ஓட்டம் தனது தாய் மொழியில் அமைகிறது என்பது அறிவியலாளர்களின் கருத்து. ஏனெனில் தாய் அதனுடன் முதலில் உரையாடும் மொழி தாய் மொழியே ஆகும்.

    இன்றைய தலைமுறையில் சில வீடுகளில் தமிங்கிலீஷில் பேசினாலும் கூடக் குழந்தையுடன் முதலில் உரையாடுவது தமிழில்தான்.

    சீனாவில் ஜப்பானில் மட்டும் அல்ல, ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், ஹாலந்து, போலந்து, ரஷியா என்று எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் எல்லா நாடுகளிலும் தாய் மொழியில்தான் கல்வி. அரசின் மொழி அந்த நாட்டின் மொழிதானே அல்லாது ஆங்கிலம் அல்ல.

    ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ரஷியா என்று என்கேடுத்தாலும் அந்தந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்திலிருந்து அடிமட்ட நீதிமன்றம் வரை வழக்காடும் மொழியும், சட்ட மொழியும், தீர்ப்புகளின் மொழியும் எல்லாமே அந்தந்த நாட்டின் மொழிதான்.

    இந்தியாவில்தான் இன்னமும் நமது காலனிய அடிமைப் புத்தியும் மனப்பாங்கும் போகவில்லை, இன்னமும் இங்கே ஆங்கிலத்தில்தான் பிழைப்பு என்று சொல்லும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அத்தோடு இல்லாமல் ஏன் தமிழ் தேவையில்லை, ஆங்கிலம்தான் தேவை என்று சொல்வதற்குக் காரணமாகப் “பிழைப்பைக்” காட்டும் அளவுக்கு சுயமரியாதை அற்றும் போய்விட்டார்கள் என்பது வேதனை. சிலரது பிழைப்புக்காக பல்லாயிரம் ஆண்டுகளாக நம் பாட்டனும் முப்பாட்டனும் புழங்கிய பாரம்பரியத்தை இழக்கும் அளவுக்குத் தரம் தாழ்வது வேதனை.

    சீனாவில் ஒரே மொழி என்று சொல்லும் முன்னால் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது தவறான தகவல்.

    சீனாவில் மொத்தம் 292 உயிர்ப்புடன் உள்ள மொழிகள் உள்ளன! ஒரு மொழி பேச்சு வழக்கில் இல்லை. இந்தியாவை விட சீனா எந்த விதத்திலும் மொழி எண்ணிக்கையில் குறைந்து விடவில்லை! சீனாவில் மொத்தம் 56 இனக்குழுக்கள் உள்ளன. நாம் சொல்லும் சாதி அமைப்புக்கள் அங்கும் உண்டு என்பது ஆறுதலா? அல்லது மனிதனின் புத்தி எங்கும் ஒன்றே என்பதில் பெருமையா என்று யோசிக்க வேண்டும்.

    அங்கும் மாநிலங்கள் என்று இங்கே அழைக்கப்படும் பகுதி போலப் பிராந்தியங்கள் என்று வழங்கப் படுகிறது. அப்படி உள்ள பிராந்தியங்களில் மத்திய ஆளும் மொழியுடன் அந்தப் பிராந்திய மொழி ஆட்சி மொழியாக உள்ளது. அங்கேயும் பிராந்திய மொழி, மத்திய மொழி என்ற பாகுபாட்டின் காரணமான பிரச்சினைகள் உள்ளன.

    மேலும் தகவலுக்கு இந்த விக்கி பக்கத்தைப் பார்க்கலாம்.
    http://en.wikipedia.org/wiki/Languages_of_China

  10. தமிழன்

    உங்க புள்ளையை என்ன படிக்க வைக்க்னும்ன்னு உங்களுக்கு உரிமை இருக்கு. ஊராம்பிள்ளைக்கு புத்தி சொல்லவேண்டாம்னு தான் சொல்றோம்…

  11. மிஸ்டர் பாவலன்

    பல அரசியல் தலைவர்கள் “தமிழ், தமிழ்” என மேடைகளில்
    முழங்கினாலும் அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
    இவர்கள் ஆங்கிலத்திலும், கான்வென்ட்டிலும், சிலர்
    வெளிநாடுகளிலும் சென்று படித்திருக்கிறார்கள், படித்து
    வருகிறார்கள். ஆனால் பொதுமக்கள் ஆங்கிலத்தில் படித்து
    பயன் பெறலாம் என்றால் அப்போது ‘தமிழில் தான் படிக்க
    வேண்டும், தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று முழங்குவார்கள்.

    ஆங்கில மொழிக் கல்வியால் உலகியல் பார்வை கிடைக்கிறது.
    Research, development, employment, communications – இவற்றிற்கு
    ஆங்கிலம் கைகொடுக்கும். ஆங்கிலம் எளிய மொழி என்பதால்
    இதை கற்றுக் கொள்வதும் எளிதே. நன்றி.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  12. கடலூர் சித்தன்.ஆர்

    “ஆடு நனையிதேன்னு ஓநாய் அழுகிறதாம்!!!”

    //ஆனால் பொதுமக்கள் ஆங்கிலத்தில் படித்து
    பயன் பெறலாம் என்றால் -மிஸ்டர் பாவலன் சாய்ஸ்//

    ஹிஹும்…ஹிஹும்..ஹிஹும்.. இந்தியாவிலேயே முதல் தலைமுறை பொறியியல் / மருத்துவம் / சட்டம் படித்த பட்டதாரிகள் உருவாக்குகிற மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்பதும் உண்மை. நமது தமிழகத்தில் எண்பது விழுக்காடுகளுக்கு மேலாக பள்ளிப் படிப்பை தமிழ் வாயிலாகவே பெறுகிறோம். தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காமல் அரசு பள்ளிகள் / தேர்வுக்குழு அல்லாடுவதையும் நாம்அறிவோம்.- ஆகவே இம்முறையை/ நிலைமையை சீர்ப்படுத்தாமல் அமுலாக்குவது நல்லதல்ல.

  13. Ganesh Shankar

    //சீனாவில் ஜப்பானில் மட்டும் அல்ல, ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், ஹாலந்து, போலந்து, ரஷியா என்று எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் எல்லா நாடுகளிலும் தாய் மொழியில்தான் கல்வி. அரசின் மொழி அந்த நாட்டின் மொழிதானே அல்லாது ஆங்கிலம் அல்ல//

    எல்லாம் சரி தான்.அதற்காக இங்கு எல்லாவற்றையும் தமிழில் வைத்தால் 95% மக்கள் திணறுவார்கள்(தமிழில் எல்லாம் இருந்தால் மிகவும் நல்லது தான் ஆனால் இன்றைய யதார்த்த நிலைமை வேறு).இங்கே சாதாரண மனிதன் பேசி கொள்ளும் போது கூட தமிழ் இல்லை தமிங்கலீஷ் தான் இருக்கிறது.ஆனால் மேல குறிப்பிட்ட நாடுகளில் எல்லாம் முழுவதும் அவர்களின் தாய் மொழியில் உரையாடல் மற்றும் அனைத்து விதமான விடயங்களும் இருக்கின்றன.மேலும் அவர்கள் முன்னேறி விட்டார்கள்,அதனால் அவர்களுக்கு பிழைப்பு மொழியை பொருத்தது அல்ல.ஆனால்,நம்மிடம் அணைத்து சமாசாரங்களும் தாய் மொழியில் இப்பொழுது(மீண்டும் “இப்பொழுது”) இல்லை,மேலும் நாம் வெறும் வளர்ச்சியை நோக்கி ஓடி கொண்டு தான் இருக்கிறோம்.அந்த பிழைப்புக்கு ஆங்கிலம் இல்லாமல் இங்கே எதுவும் முடியாது.மேலும் பிழைப்புக்கு தான் ஆங்கிலம் தேவை,அதற்கு தான் இந்த முயற்சியே ஒழிய,தமிழை சொந்தமாக பயன்படுத்த யாருக்கும் தடை இல்லை.இங்கே நமது தளங்களிலேயே நாம் பெயர் மற்றும் சிலவற்றை ஆங்கிலத்தில் தான் பார்க்க முடிகிறது,பயன்படுத்த முடிகிறது.இது இப்பொழுதைய காலத்தின் நிலை.தமிழனின் வளர்ச்சியை,வாழ்கையை தடுத்து நிறுத்தி என்றும் தமிழ் வளராது.இனிமேலும் தமிழ் மக்கள் தமிழை வைத்து ஒரு மாயை ஏற்படுத்தும் வலைகளில் விழாமல்,உண்மையை புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

    மேலும் சீனா ஆங்கிலம் தெரியாமல்,சில துறைகளில் நம்மிடம் போட்டி போட இயலாமல் இருப்பது தெரியும்.அதனாலேயே,இப்போது சீனாவில் ஆங்கில மொழி பயிற்றுவிக்க பெரும் முயற்சியில் இறங்கி இருக்கிறது அரசு.

  14. தமிழன்

    வந்துட்டாருப்பா இன்னொரு அப்பா டக்கரு. போய் உங்க புள்ளைங்களை என்ன வேணும்னா படிக்க வையுங்க்ப்பா. யாரு என்ன சொல்லபோறாங்க. மத்தவங்களுக்கு அவங்க புள்ளைங்களை என்ன படிக்க வைக்கனும்னு தெரியும். தமிழில் படிச்ச தமிழர்கள் தான் இன்னிக்கு கலிஃபோர்னியாவில் கலக்கிகிட்டு இருக்காங்க.சும்மாங்காட்டியும் சீன் போடுறத நிறுத்துங்க.

  15. மிஸ்டர் பாவலன்

    //தமிழில் படிச்ச தமிழர்கள் தான் இன்னிக்கு கலிஃபோர்னியாவில் கலக்கிகிட்டு இருக்காங்க./// (தமிழன்)

    ஹி…ஹி…ஹி…ஹி…

    -==மிஸ்டர் பாவலன்==-

  16. தமிழன்

    ஆங்கிலம் ஆங்கிலம் என்று அலறும் விதண்டாவாதிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ள தமிழ் மாணவ மாணவிகள்

    ”தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகளே அதிக தேர்ச்சி, அதிக மதிப்பெண்”

    Read more at: http://tamil.oneindia.in/news/2013/05/31/tamilnadu-students-studied-tamil-medium-get-hi-scores-176326.html

  17. தமிழன்

    வந்துட்டாரய்யா பல்லை காட்டிகிட்டு ஒருத்தர். சூப்பர்ஸ்டாரை பாத்துட்டு போனாரே ஒரு அமெரிக்க மினிஸ்டர். அவரு புதுக்கோட்டை பக்கத்துலே ஏதோ பட்டிக்காட்டு பள்ளிக்கூடத்துல தான் 12 வரை படிச்சார்ன்னு இங்கே தான் படிச்சேன். ஆங்கில மோகிகளுக்கு அதெல்லாம் கண்ணில் படவில்லை போலிருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *