BREAKING NEWS
Search

கோட்சே கும்பல்தானே இந்த பாஜக… ! – வைகோ தாக்கு

கோட்சே கும்பல்தானே இந்த பாஜக… ! – வைகோ தாக்கு


சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை மத்தியப்பிரதேசத்திற்கு அழைத்துள்ளதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,”காந்தியை கொன்ற  கோட்சே கும்பல்தானே பா.ஜனதாவினர்” என்றார்.

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் 21 ம் தேதி புத்தமத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிறார்.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்ற ராஜபக்சேவை இந்நிகழ்ச்சிக்கு அழைக்கக்கூடாது என்று மத்தியப்பிரதேச முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய  வைகோ, ராஜபக்ச வந்தால் அவருக்கு எதிராக தமது தலைமையில்  மத்தியப் பிரதேசத்திற்கே வந்து சாஞ்சியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று  கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் வைகோவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும்,ராஜபக்சவுக்கு எதிரான  போராட்டத்தை கைவிடுமாறும் மத்தியப் பிரதேச முதல்வர் வைகோவை கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து திட்டமிட்டபடி செப்டம்பர் 21 ம் தேதியன்று சாஞ்சியில் ராஜபக்சவுக்கு  எதிராக போராட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்திருந்தார்.

அதன்படி மதிமுகவினர் திங்கள்கிழமை மத்தியப்பிரதேசத்திற்கு 25 பஸ்களில் புறப்பட்டுச்  சென்றனர். இதனையொட்டி சென்னை அண்ணா சமதியில் திங்கள்கிழமை மாலை திரண்ட கட்சியினர்  மத்தியில் பேசிய வைகோ, ராஜபக்சவை மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்ததற்காக  பா.ஜனதாவை கடுமையாக சாடினார்.

கோட்சே கும்பல்

“காந்தியை கொன்ற கோட்சே கும்பல்தானே பா.ஜனதாவினர்” என காட்டமாக கூறிய  அவர்,”லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்ற ராஜபக்சவை ஏற்கனவே  இந்தியாவுக்கு அழைத்து பலமுறை விருந்தளிக்கப்பட்டுள்ளது. தற்போது பா.ஜனதாவினர்  விருந்தளிக்கின்றனர். இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லைதான்,” என்றார்.

மேலும் வடநாட்டு ஆங்கில தொலைக்காட்சிகளும் தமிழர் விரோத போக்கை  கடைபிடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்தியா எங்கள் நாடா ?

அவர் பேசுகையில்,”டெல்லி ஊடகங்களுக்கு மனசாட்சி என்பதே இல்லை. பிரபாகரனை  கொச்சைப்படுத்தியவர்கள்தானே அவர்கள்.

நான் முல்லை பெரியாறில் புதிய அணைக் கட்ட எதிர்க்கிறேன் என்று தொடர்ந்து  மலையாள ஊடகங்கள் நம்மை பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன.

18  ஆண்டுகள் இருட்டடிப்பை சந்தித்தவன் நான்; இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை. நான் இனம், மதம், மொழிக்கு அப்பாற்பட்டவன்.

விவேகானந்தர் இலங்கை சென்ற போது அவரை செருப்பால், கல்லால்  அடித்தார்கள். அதை மறைக்கப் போகிறதா பா.ஜனதா?

தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்த இனவெறியன் ராஜபக்சேவை பா.ஜனதா வரவேற்பது நியாயமா? காங்கிரசும் பா.ஜனதாவும் இரு கட்சிகளுமே தமிழர்களை மதிப்பதில்லை. லண்டனுக்கு ராஜபக்சே வந்த போது ஈழத் தமிழர்கள் அவனை துரத்தி அனுப்பினார்கள்.

இந்தியா எங்கள் நாடா? இந்தியா எங்கள் நாடென்றால் ராஜபக்சேவை அனுமதிக்காதே…  அப்படியில்லாமல் தமிழ்நாட்டை தனி நாடாகப் பார்த்தால் நீ அனுமதி… அந்த  கொலைகாரனை!

தமிழர்களை அழித்த கொலைக்காரன் மீண்டும் மீண்டும் இந்தியா வருகிறான். தொடர்ந்து  வரவேற்பதையே இந்திய அரசு வாடிக்கையாய் கொண்டுள்ளது. அவன் திரும்பி போக வேண்டும்,” என்றார்.

கோவில்களை இடித்த ராஜபக்சே


பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை தமிழர்கள் பட்ட வேதனையை உலகத் தமிழர்களிடம் எடுத்து செல்வதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். நாதியில்லாமல் போய்விட்டதா தமிழ் ஜாதி? மகாத்மா காந்தி படத்துக்கு மாலைபோட கோட்சேவை கூப்பிடுவதா?

இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில், தமிழர் வாழ்ந்த பகுதியில் இருந்த 1,607 இந்து கோவில்களை இடித்ததாக 1993-ம் ஆண்டு இலங்கை அரசே கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது, இந்து கோவில்களை இடித்த இலங்கை அரசின் அதிபரை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேச அரசு அழைத்திருக்கிறது.

சொரணை உள்ள தமிழன் தமிழ்நாட்டில் இருக்கிறான் என்பதை காட்டவே போராட்டம் நடத்த செல்கிறோம். எங்கள் போராட்டம் அறவழியில்தான் நடக்கும். போபால் போலீஸ் எங்களை உள்ளே விடவில்லை என்றால், எல்லையிலேயே போராட்டம் நடத்துவோம்.

தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்றால், மத்தியபிரதேச மக்கள் ராஜபக்சேவை உள்ளே விடாமல் விரட்ட வேண்டும்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராடிய ஒரே இனம் வக்கீல்கள்தான். அவர்களையும் போலீசாரை ஏவி, அடித்து நொறுக்கினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

பல லட்சம் தமிழர்களை கொலை செய்த ராஜபக்சேவை, மத்திய பிரதேச மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் மட்டுமல்லாமல், பா.ஜ.க.வும் செயல்படுகிறது.

எங்களுக்கு மத்திய பிரதேசத்தில் தங்க இடம் தரவில்லை என்றால், சாலையோரங்களில் குடிசை போட்டு தங்குவோம். அங்கேயே சமையல் செய்து சாப்பிடுவோம். ராஜபக்சே வருகையை எதிர்த்து விஜயராஜ் என்பவர் தீ குளித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது. எதிரிகளை பந்தாட இளைஞர்கள் நமக்கு தேவை,” என்றார்.

-என்வழி செய்திகள்
10 thoughts on “கோட்சே கும்பல்தானே இந்த பாஜக… ! – வைகோ தாக்கு

 1. தினகர்

  இந்த செய்தி ஆங்கில வடிவில் வருவதற்கு ’என்வழி’ ஆவண செய்யவேண்டும். அறிமுகமான வட இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்..

 2. ilaiyaraja

  இந்த செய்தி ஆங்கில வடிவில் வருவதற்கு ’என்வழி’ ஆவண செய்யவேண்டும். அறிமுகமான வட இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்..

 3. மு. செந்தில் குமார்

  வைகோவின் பேச்சு / செயல் எப்பொழுதுமே உணர்ச்சியுள்ளதாய் அறிவுபூர்வமாய் உண்மையாய் இருந்தாலும் கூட மக்களை ஏன் ஈர்க்கவில்லை? (அ.தி.மு.க மற்றும் தி.மு.க. தலைவர்கள் கவர்கிரளவு)

  எங்கே கோளறு உள்ளது. ( வைகோவின் அறிவும் மக்களின் அறிவும் வெகுதொலைவில் உள்ளது என்கிற வாதத்தை முற்றாக ஏற்க்கமுடியாது-அறிஞர் அண்ணா ஈர்க்கவில்லையா?)

  இது சார்ந்த வாசகர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

 4. Kumar

  Even though I admire Vaiko, this comment from him is totally uncalled for. Blaming the whole BJP is not fair and that too blaming BJP for Gandhi’s murder is too much.

 5. Kumar

  He shouldn’t forget that it was in the same BJP led NDA govt MDMK was an ally during Vajpayee’s regime…..

 6. Kumar

  ஏன் இதோ வைகோவால் தனது சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை.மக்களுக்கு எப்போதும் தினசரி பிரச்சனை தான் முக்கியமே தவிர எப்போதும் உணர்வு பூர்வமாய் பிரச்சனை அணுக மாட்டார்கள்.எப்போதும் உணர்வு பூர்வமாய் அணுகினால் என்று வாழ்வது.தங்களின் பிரச்சனகளை களைவதற்கு மக்கள் அருகில் மற்றும் மனது அருகில் இருக்கும் கட்சிகளே வெற்றி அடைகிறது.இதில் மக்களை என்டுமே குறை கூற கூடாது.அதனால் தான் தமிழ் தமிழ் என்று அரசியல் செய்த கருணாநிதியை காட்டிலும் மக்களின் அன்றாட பிரச்னைகளி களைய உதவின எம்ஜியார் அவர்களே எப்போதும் அரசு அமைய கட்டளை இட்டார்கள்.இதை நன்கு உணர்தவர் எம்ஜியார் அவர்கள்.வைகோ எல்லாம் மக்கள் அருகில் இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.இதோ இப்போது பாஜகவினரை குறை கூறுகிறார்.இதே பாஜகவினருடன் தான் பல அஆண்டு களம் கூட்டணி வைத்திருந்தார்.அப்போது எல்லாம் இவர்கள் கோட்சே கட்சிகள் என்று தெரியவில்லையா.அப்போது காந்தி பிடிக்காது என்பார்.இப்போது கேட்டால் காந்தியை கொன்றவர்கள் என்பார்.18 ஆண்டுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டவன் என்கிறார்.இவரே எம்ஜியார் உயிருடன் இருத்த பொது அவர் இலங்கை மக்களுக்கு உதவிய போது ஏன் அவரை எதிர்த்து அரசியல் செய்தீர்கள்?.திமுகவிலிருந்து வெளியேறிய பிறகு அவர்களுடனே ஏன் கூட்டணி வைத்தீர்கள்?.கேட்டால் நான் தவறு செய்து விட்டேன் என்பார்.எல்லாவற்றையும் மக்கள் பார்க்க தானே செய்கிறார்கள்.அவர்கள் இடும் கட்டளை தானே வாக்குகள்…

 7. குமரன்

  வைகோ அரசுப் பதவிகளைப் பெறாதது அவரது பலம் மட்டும் அல்ல பலவீனமும் கூட. தாமே அமைச்சராக ஆகி இருந்தால், அவர் நேர்மையாக நடப்பதால் நல்ல முன் உதாரணமாக இருந்திருப்பார். பா.ம. க வளர்ந்தது அதன் மத்திய அமைச்சர் பதவிகளை வைத்து என்பதை நோக்க வேண்டும், அனால் அது அடிக்கடி கூட்டணி மாறியதும், ஊழலில் திளைத்ததும்தான் அதற்கு வீழ்ச்சியைத் தந்தது.

  ஆனால் வைகோ மீண்டும் அதிமுகவுடனும்/ திமுகவுடனும் கூட்டணி வைத்தது மக்கள் மத்தியில் அவர் மீது நம்பிக்கையைப் போக்கவில்லை, ஆனால் அந்தக் கூட்டணிக் கட்சிகள் அவரிடம் இருந்த இரண்டாம் கட்டத் தலைவர்களைப் பணத்தாசை பதவி ஆசை காட்டி அவரிடம் இருந்து பறிக்க வழிகாட்டி விட்டது.

  வைகோ தனித்துப் பதினைந்தாண்டுகள் இருந்திருந்தால் அவர் காங்கிரசை விடவும் விஜயகாந்தின் கட்சியை விடவும் முன்னிலையில் இருந்திருப்பார். திமுக அதிமுக இரண்டுக்கும் ஒரு மாற்று என்று மக்கள் நம்ப உயர்ந்து வந்திருக்க முடியும்.

  நிற்க, ஆர்.எஸ்.எஸ். க்கும் மகாத்மா கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்பது நீதிமன்றங்களின் தீர்ப்பு. எமெர்ஜென்சிக் காலத்தில் அவர்களும் இந்திய ஜன நாயகத்தைக் காப்பதில் முக்கியப் பங்காற்றி உள்ளனர். சிறையில் ஆர்.எஸ்.எஸ். இன் ரத்தினசாமி நாடார் முரசொலி மாறனுக்குச் செய்த உதவிகள், அவரைக் காத்தமை குறித்து முரசொலி மாறன் ரத்தினசாமி நாடாரிடம் மிக்க நன்றி பாராட்டியதாக மாறனே பொதுக் கூட்டத்தில் கூறி இருக்கிறார். சில நாள் கூடிக் குலாவுவதும், சில நாள் கூப்பிட்டுத் திட்டுவதும் அரசியல் நிகழ்வுகளே. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

 8. குமரன்

  ///பல லட்சம் தமிழர்களை கொலை செய்த ராஜபக்சேவை, மத்திய பிரதேச மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் மட்டுமல்லாமல், பா.ஜ.க.வும் செயல்படுகிறது.///

  உண்மை, மத்தியில் அடுத்த ஆட்சி பா.ஜ.காவாக இருக்குமோ என்ற “கவலையில்” இங்கிருக்கும் மற்ற அரசியல்வாதிகள் கண்டும் காணாமல் இருக்கும்போது நேர்மைத் திறத்துடன் வெளிப்படையாக அரசியல் செய்யும் வைகோ பாராட்டுக்கு உரியவர்.

 9. குமரன்

  இன்றைய காலகட்டத்தில் பஸ்ஸில் தொண்டர்களோடு பயணம் செய்யும் ஒரே தலைவர் வைகோதான்!

  அண்மைச் செய்தி:

  ///கடந்த 17ம் தேதி இரவில் சென்னையில் இருந்து 10 பஸ்களில் கிளம்பினர். ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் அங்குள்ள தமிழர் அமைப்புகள் அவர்களுக்கு வரவேற்பளித்தனர். தொடர்ந்து 18ம் தேதி இரவில் ஐதராபாத்தில் தங்கினர். 18ம் தேதி நாக்பூர் சென்றடைந்தனர். நாக்பூரில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பளித்தனர். இரவு சட்டசபை வளாகத்தில் எம்.எல்.ஏ.,விடுதியில் தங்கினர். தொடர்ந்து மத்திய பிரதேசத்தை நோக்கிய பயணத்தில் இதுவரையிலும் ஆயிரத்து 400 கி.மீ.,தூரத்தை கடந்துள்ளனர். மூன்று நாள் பயணத்திலும் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தொண்டர்களுடன் பஸ்சில் பயணம் செய்கிறார். அவருடன் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், துணைப்பொதுச்செயலாளர்கள், 20 வயது முதல் 70 வயது வரையிலான தொண்டர்கள் உடன் செல்கின்றனர். இன்று மாலை மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்துவாரா மாவட்டம், படுஜ்ஜோலி என்னுமிடத்திற்கு சென்றனர். ராஜபக்சேவிற்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அதற்கு மேல் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் வைகோ உடன் சென்ற 700க்கும்மேற்பட்டோர் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் மத்திய பிரதேச எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.///

 10. மு. செந்தில் குமார்

  திரு. குமரன் அவர்களின் பதிவுகளை என்வழியின் வாசகராக நான் வந்த பொழுதிலிருந்தே படித்து வருகிறேன். எப்பொழுதும் சிறப்பாக இறுக்கும் என்பதில் மற்று கருத்து இல்லை (திரு. குமரன் அவர்களும் திரு. தினகர் அவர்களும் கட்சி சார்ந்த விஷயங்களை முன்வைக்கிரபொழுது சுவாரசியமாக இருக்கும்-பட்டிமன்றம் கேட்பதுபோல் இருக்கும்)

  அனால் இன்று திரு. குமார் அவர்களின் பதிவு எதார்த்தமாய் என்னை ஈர்க்கிறது.

  “.மக்களுக்கு எப்போதும் தினசரி பிரச்சனை தான் முக்கியமே தவிர ” திரு. Kumar

  ஈழ மக்கள் பிரச்னை, கேரள அரசின் அணை பிரச்னை மற்றும் அணுஉலை பிரச்சனை போன்றவை மக்களின் அன்றாட பிரச்சனை அல்ல – அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *