BREAKING NEWS
Search

கஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்!

நாடியம்: கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு ரஜினி ரசிகர்களின் உதவிகள் மலைக்க வைக்கும் அளவுக்கு தொடர்கின்றன. டெல்டா மக்கள் காலத்துக்கும் மறக்க முடியாத அளவுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை நேரத்துக்கு வழங்கி வருகின்றனர் ரசிகர்கள்.

கஜா புயலினால் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில்  தென்னை மரங்களும் அதோடு சேர்ந்து மின் கம்பங்களும் ஒடிந்து விழுந்துள்ளதால், கிராமங்களில் இரவு நேரங்களில் எங்கும் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பெய்யும் மழையினால் மக்கள் மேலும் இன்னலுக்குள்ளாகிறார்கள். பல்வேறு தன்னார்வ அமைப்புகள் களப்பணி ஆற்றி உடனடி நிவாரணத்திற்கான தேவைகளை இயன்ற அளவுக்கு பூர்த்தி செய்து வருகிறார்கள்.

ரஜினி மக்கள் மன்றத்தினர், தலைமை அலுவலகத்திலிருந்து 50 லட்சம் ரூபாய் அளவிலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் லட்சக்கணக்கான ரூபாய் பெருமானம் உள்ள பொருட்களை நேரடியாக வினியோகித்து வருகிறார்கள்.

எவ்வளவோ தேவைகள் இருந்தாலும், இருட்டில் மக்கள் அவசரத்திற்காக வெளியே செல்வதற்கு உதவியாக டார்ச் லைட்டுகள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பேராவூரணி நாடியம் கிராமத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் கோவிந்த் நீலகண்டன் முயற்சிகள் எடுத்துள்ளார். அதைக் கேள்வியுற்ற அமெரிக்க ரஜினி ரசிகர்கள் தாங்களும் இந்த முயற்சியில் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினி ஃபேன்ஸ், யு.எஸ்.ஏ அமைப்புகளைச் சார்ந்த ரசிகர்கள், உடனடியாக சுமார் 1000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்து, 1000 குடும்பங்களுக்கு பேட்டரிகளுடன் எவரெடி டார்ச்லைட்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

சமூக ஆர்வலர் நாடியம் கோவிந்த். நீலகண்டன் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் வினியோகித்துள்ளார். பேராவூரணி பகுதியில் உள்ள நாடியம், ஊடையக்காடு, மருங்கப்பள்ளம், சாந்தாம்பேட்டை,குருவிக்கரம்பை, களத்தூர்,செருவாவிடுதி பட்டுக்கோட்டை அருகில் காசங்காடு, மற்றும் மன்னார்குடி அருகில் லஷமாங்குடி ஆகிய கிராமங்களில் டார்ச்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

டார்ச்லைட்டை பெற்றுக் கொண்ட பெண்கள், “இது மிகவும் பயனுள்ள அவசியமான பொருளாகும். இருட்டில் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. மெழுகுவர்த்தியை ஏற்றி கையில் எடுத்துச் செல்லவும் முடியாது. சரியான நேரத்திற்கு கிடைத்த இந்த உதவியை மறக்க மாட்டோம்” என்று கூறியுள்ளனர்.

“இழப்பு என்பது சொல்லில் அளவிடமுடியாத அளவுக்கு இருக்கிறது. ஒவ்வொரு துளி உதவியும் டெல்டா மக்கள் மீண்டு வர உதவியாக இருக்கும். இன்னும் ஏராளமான பணிகள் செய்ய வேண்டியுள்ளது. களத்தில் இறங்கி நேரடியாக பணியாற்றி வரும் தன்னார்வலர்களுக்கும், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பொருளுதவி செய்து வரும் அனைவருக்கும் நாங்கள் வாழ்நாள் முழுவதும், நன்றியை மறக்க மாட்டோம்,” என்று சமூக ஆர்வலர் கோவிந்த். நீலகண்டன் கூறினார்.

வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினி ஃபேன்ஸ் யு.எஸ்.ஏ. , சார்பில் ஒருங்கிணைத்த அன்புடன் ரவி கூறியதாவது, “டெல்டா மாவட்டங்களில் நண்பர்களிடம் வரும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. எதைச் செய்வது, என்ன செய்யமுடியும் என்பதே பெரும் கவலையாக உள்ளது. சமூக ஆர்வலர் கோவிந்த்.நீலகண்டனின் முயற்சி அறிந்து நண்பர்களிடம் தெரிவித்தோம்.

24 மணி நேரத்திற்குள் இந்த நிதியுதவியை எங்கள் அமைப்புகளைச் சார்ந்த அமெரிக்க ரஜினி ரசிகர்கள் தந்துள்ளனர். உடனடியாக இந்த சிறிய பணியை மேற்கொள்ள முடிந்தது. களத்தில் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கிய நீலகண்டன் அவர்களுக்கு நன்றி. டெல்டா மக்கள் இழப்பிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை திரும்ப ஆண்டவன் அருளை வேண்டுகிறோம்,” என்று உணர்ச்சி வசப்பட்டார்.

2.0 , பேட்ட பாடல்கள் என ஒரு புறம் இருந்தாலும், தாயகத்தில் உள்ள சக தமிழர்களுக்காக உதவிக்கரம் நீட்ட முன்வந்த அமெரிக்க ரஜினி ரசிகர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *