BREAKING NEWS
Search

அப்படின்னா பிரதமர் சொல்வது பொய்யா…? நாராயணா நாராயணா!

அப்படின்னா பிரதமர் சொல்வது பொய்யா…? நாராயணா நாராயணா!

மெரிக்காவின் நலன் விரும்பி என சர்வதேச அளவில் முத்திரை குத்தப்பட்ட மன்மோகன் சிங்கே, இந்திய அணுசக்தி திட்டங்களை அமெரிக்க என்ஜிஓக்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அதை ரஷ்யா வேறு ஆதரித்து வைத்துள்ளது.

ஆனால் அமைச்சர் நாராயணசாமி, இந்த விஷயத்தில் பிரதமரையும் மிஞ்ச முயற்சிக்கிறார் போலிருக்கிறது.

அமெரிக்க நிறுவனங்கள் நல்ல நோக்கத்துக்காகத்தான் பணம் அனுப்புகின்றன. அவர்கள் பக்கம் தப்பில்லை. ஆனால் அந்தப் பணத்தை இங்குள்ளவர்கள்தான் தப்பு தப்பா செலவு பண்றாங்க, என்ற ரீதியில் பேசியுள்ளது, என்ஜிஓக்கள் விஷயத்தில் மத்திய அரசு இன்னும் ஒரு தெளிவுக்கு வரவில்லை என்பதைக் காட்டியுள்ளது.

பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சரான நாராயணசாமி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக அமெரிக்காவில் இருந்து நிதி கிடைக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

இதனால் அமெரிக்க அரசுதான் போராட்டக் குழுவினருக்கு நிதி அளிப்பதாகக் கருதக் கூடாது. அமெரிக்காவில் உள்ள சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நல்ல நோக்கத்துக்காக இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்கின்றன. உடல் ஊனமுற்றோர், தொழுநோய் போன்ற பிணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களுக்காக நிதி உதவி செய்யப்படுகிறது. அத்தகைய நிதி, கூடங்குளம் பகுதியில் உள்ள சில அமைப்புகளுக்கும் வருகிறது. அதை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் சில தொண்டு நிறுவனங்கள், தேச விரோத செயல்களுக்குப் பயன்படுத்துகின்றன.

உதாரணமாக, அமெரிக்க நிதியைக் கொண்டு கூடங்குளம் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த மக்களைத் திரட்டுவது, லாரிகளை வாடகைக்கு எடுத்து மக்களை அழைத்து வருவது, கூட்டங்கள் நடத்துவது, போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு பணம் கொடுப்பது, உணவு வழங்குவது போன்றவற்றுக்காக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது.

இது போன்ற புகார்களுக்கு உள்ளான 12 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாகக் கண்காணித்தது. அதில் மூன்று நிறுவனங்களின் செயல்பாடு அரசுக்கு எதிராக இருப்பது உறுதியானதால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது,” என்று நாராயணசாமி தெரிவித்தார்.

பிரதமர் சொன்னது என்ன?

அமைச்சர் நாராயணசாமி சொன்னதற்கும் பிரதமர் அளித்த பேட்டிக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மன்மோகன் தனது பேட்டியில், இந்தியா அணுசக்தியில் தன்னிறைவு பெறுவதை அமெரிக்க என்ஜிஓக்கள் விரும்பவில்லை என்றும், அதனால்தான் இப்படி நிதியுதவி அளித்து போராட வைக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.

ரஷ்யாவின் தூதரான அலெக்சாண்டர் எம் கட்கின் கூட, “கூடங்குளம் போராட்டம் தொடர்பான ரஷ்யாவின் சந்தேகத்தை பிரதமர் மன்மோகன்சிங் கருத்து உறுதிப்படுத்துகிறது. இக்குற்றச்சாட்டைத்தான் நாங்கள் நீண்டகாலமாக கூறி வருகிறோம்.

ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு 6 ம்மாதங்கள் கழித்து திடீரென தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கூடங்குளத்துக்கு எதிராக குரல் கொடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு இதில் பங்குள்ளது,” என்று பழியைத் தூக்கி அமெரிக்க என்ஜிஓக்கள் மீது போட்டிருந்தார்.

ஆனால் பிரதமர் அலுவலக அமைச்சரான நாராயணசாமியோ, ‘இல்லையில்லை… அமெரிக்க என்ஜிஓக்கள் ரொம்ம்ம்ப நல்லவிய்ங்க… அவங்க நல்ல நோக்கத்துக்காகத்தான் பணம் தர்றாங்க… ஆனால் இங்குள்ளவர்கள் அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதனால் லைசென்ஸ் ரத்து,” என்று சொல்லியிருக்கிறார்.

அமெரிக்க வக்காலத்தில் பிரதமரை மிஞ்சிய நாராயணசாமி!

அமெரிக்காவின் நலன் விரும்பி என சர்வதேச அளவில் முத்திரை குத்தப்பட்ட மன்மோகன் சிங்கே, இந்திய அணுசக்தி திட்டங்களை அமெரிக்க என்ஜிஓக்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அதை ரஷ்யா வேறு ஆதரித்து வைத்துள்ளது.

ஆனால் அமைச்சர் நாராயணசாமி, இந்த விஷயத்தில் பிரதமரையும் மிஞ்ச முயற்சிக்கிறார் போலிருக்கிறது.

அதுகூட போகட்டும்… எந்தெந்த அமெரிக்க என்ஜிஓக்கள் இந்தப் பணத்தை அனுப்பி வைத்துள்ளன… என்ன நோக்கத்துக்காக அனுப்பினார்கள் என்பதை ஆதாரங்களுடன் சொல்லிவிட்டால், இதில் தவறு யார் பக்கம் என்பது தெரிந்துவிடுமே… உதயகுமார் அண்ட் கோ மோசடி செய்திருப்பது தெரிந்தால், இருக்கவே இருக்கு ஒரு என்கவுன்டர். நாராயணசாமி மத்திய அமைச்சர்தானே… ஜோசியக்காரர் அல்லவே!

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *