BREAKING NEWS
Search

வடுகப்பட்டியில் தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்த இழிபிறவி!

தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்த இழிபிறவி!

Dalit-area-of-Vadugapatti-v

வடுகப்பட்டியில் தலித் பகுதி…

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செருப்பு அணிந்து நடந்து போன தலித் மாணவனை, தலையில் செருப்பை சுமக்க வைத்து ‘தண்டனை’ தந்த வேறு சாதி மனித மிருகத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அருண். இவர் 6அம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இந்த மாணவர் தேர்வு முடிவுகள் குறித்து அறிய  நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த நிலமாலை என்ற நபர், அருண்குமாரை அழைத்து செருப்பு அணிந்து வந்ததற்காக திட்டியுள்ளான். பின்னர் ஊர் எல்லைவரை காலில் போட்ட செருப்பை தலை மேல் சுமந்து செல்லும்படி கூறி, மாணவனை திட்டிக் கொண்டே செருப்பு சுமக்க வைத்திருக்கிறான் நிலமாலை.

இந்த தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், தனது தாய் நாகம்மாளிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  நாகம்மாள், நிலமாலையிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். உடனே கொலை செய்து விடுவதாக அவன் மிரட்டியுள்ளான்.

இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்நிலையத்தில் நாகம்மாள் அளித்த புகாரின் பேரில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் நிலமாலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரம், மேல் சாதிக்காரனுக்கு எதிராக புகார் தந்துள்ளதால், தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று பயந்துபோய் அருண்குமாரும், அவர் தாய் நாகம்மாளும் உறவுக்காரர்கள் வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

வடுகப்பட்டியில் 70 தலித் குடும்பங்கள் காலனியாக வசிக்கிறார்கள். ஊருக்குள் செருப்பணிந்து நடக்க யாருக்குமே அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது (கவியரசு வைரமுத்துவின் சொந்த ஊர் இது!).

இப்பல்லாம் யார் சாதி பாக்குறாங்க… இட ஒதுக்கீடு எதுக்கு… தலித்துகளுக்கு எதிரா கூட்டணி போடணும் என்று கூப்பாடு போடும் மரம் வெட்டிகளும் வெண்ணை வெட்டிகள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

‘அந்த தலித் மாணவனுக்கு தன் செருப்பை தானே தலையில் வைத்து சுமந்து போக ஆசையா இருந்துச்சாம்… அதனாலதான் அப்படிச் செய்தானாம்’ என்றா…?

சொன்னாலும் சொல்லுவீங்கடா!

-என்வழி செய்திகள்




One thought on “வடுகப்பட்டியில் தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்த இழிபிறவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *