BREAKING NEWS
Search

உடும்பன் – சினிமா விமர்சனம்

உடும்பன் –  கல்விக் கொள்ளைக்கு ஒரு சூடு!


ட பரவாயில்லையே… சமூக அக்கறையுடன் இப்போதெல்லாம் அடிக்கடி படங்கள் வருகின்றனவே என்ற சின்ன ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள படம் உடும்பன்.

படத்தின் இயக்குநர் பாலன், தயாரிப்பாளர் ஜெகந்நாதனைஇருவரும் ஏற்கெனவே நாகரீகக் கோமாளி என்ற அர்த்தமுள்ள படத்தைக் கொடுத்தவர்கள். செல்போன் போதை, டிவி நிகழ்ச்சி மோசடிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்குப் பிறகு,  தனியார் பள்ளிகள் என்ற முகமூடி போடாத பகல் கொள்ளைக்காரர்களை உடும்பன் மூலம் விளாசியிருக்கும் துணிச்சலுக்காக  இருவரையும் மனசார பாராட்டிவிடுவோம்.

உண்மையிலேயே வித்தியாசமான கதைதான். ஆனால் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள், தெருமுனைப் பிரச்சார தொனி, அமெச்சூர்த்தனம் இருந்தாலும், சொல்ல வந்த பிரச்சினை இன்றைய சமூகத்தின் முக்கிய அவலம் என்பதால் ஒன்றிப் போக முடிகிறது.

உடும்பு உதவியுடன் திருட்டுத் தொழில் செய்யும் உடும்பன், தான் அடித்த பணத்தில் போலீசுக்கே பங்கு கொடுப்பவன். ஒரு நாள் ஐஜி வீட்டுக்குள்ளேயே நுழைந்து கழுத்தில் கத்தியை வைக்கிறான்.

“அட போய்யா.. நேத்து குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்போனோம்.  பீஸ், டொனேஷன்னு இருந்த நகை பணம் எல்லாத்தையும் புடுங்கிகிட்டாங்க. நீ முகமூடி போட்டு திருட வந்திருக்கே. அவனுங்க முகமூடி போடாம பகல்லயே கொள்ளையடிக்கிறானுங்க…” , என்று ஐஜியும் அவர் மனைவியும் சொல்ல, ஹீரோ மனசு மாறுகிறான்.

நாமும் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சு பெருசா கொள்ளையடிச்சு சொகுசா வாழலாம்… போலீஸ் தொல்லையும் இருக்காது என்று முடிவுக்கு வந்து இருக்கும் பணத்தைப் போட்டு ஒரு பள்ளிகூடத்தை ஆரம்பிக்கிறான்.

அப்போதுதான் ஜெயிலிலிருந்து திரும்புகிறான் உடும்பனின் அண்ணன் காளை. ஊரில் தம்பிக்கு இருக்கும் திடீர் செல்வாக்கு, பள்ளிக்கூடம் எல்லாவற்றையும் பார்க்கும் காளி, லோக்கல் போலீஸுடன் சேர்ந்து திட்டமிட்டு உடும்பனை ஜெயிலுக்கு அனுப்புகிறான். இது தெரியாத உடும்பன் பள்ளியை காளியிடமே ஒப்படைத்துவிட்டு சிறைக்குப் போகிறான்.

சிறையிலிருந்து திரும்பி வந்து பார்த்தால், அவன் ஆரம்பித்த பள்ளி, அவன் எதிர்ப்பார்த்ததை விட பெரிய கொள்ளைக்காரப் பள்ளியாய் வளர்ந்து நிற்கிறது. அண்ணன் பெரிய கல்வி வியாபாரியாகி, அடுத்து கல்லூரி ஆரம்பிக்கும் அளவுக்கு கோடீஸ்வரன்.

தனியார் பள்ளிகளின் கொள்ளை குறித்த ஆய்வுக்காக அந்தப் பள்ளியில் க்ளார்க்காக சேரும் இசைப்பிரியா (சனா)வுக்கும் உடும்பனுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், உடும்பனின் பள்ளியில் காளி செய்யும் கொடுமைகளை ஒழித்து, அனைவருக்கும் இலவசக் கல்வி கொடுத்தால் திருமணம் செய்துகொள்வதாகக் கூறுகிறாள்.

இதை உடும்பன் எப்படி நிறைவேற்றுகிறான், அந்த கொள்ளைக்காரப் பள்ளி என்னவாகிறது என்பது க்ளைமாக்ஸ்.

பள்ளிக் கல்வி என்பது ஒரு சமூகத்தைப் பண்படுத்த வேண்டும். மாறாக இங்கே மாணவர்கள், பெற்றோர் என்ற பேதமின்றிக் குத்திக் கிழித்து புண்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுநாள் வரை போலி கவுரவம் என்ற போர்வையால் மூடப்பட்டு வந்த கொடூரம், மெல்ல மெல்ல ஊடகங்களில் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அரசுப் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அமைச்சர் வீட்டிலேயே கொள்ளையடிப்பது, தூக்கத்திலும் ஆங்கில ரைம்ஸ் ஒப்பிக்கும் குழந்தை, தனியார் பள்ளிகளில் தமிழில் பேசினால் கிடைக்கும் தண்டனையின் கொடூரம், பள்ளிக் கட்டணம் கட்ட முடியாமல் நாக்கைப் பிடுங்கிச் சாகும் ஏழை விவசாயி என காட்சிகளில் நையாண்டி, கோபம், குத்தல், சோகத்தை பளிச்சென்று காட்டியிருக்கிறார் இயக்குநர்.

கிராமத்து மாணவர்கள் அடியாட்களாக மாறி கல்வி வியாபாரிகளுக்கு சேவகம் பண்ணும் காட்சியும், நன்றாக நடக்கும் அரசுப் பள்ளியை மூட நடக்கும் சதிகளும் தனியார் பள்ளி கொடுமைகளின் உச்சம்!

இலவசக் கல்வியைத் தர ஹீரோ செய்யும் சாகஸங்கள் சினிமாத்தனம் என்றாலும், அந்த சினிமாத்தனம் நிஜத்திலும் நடக்காதா என்ற ஏக்கம் பிறக்கிறது. வர்த்தக நிறுவனங்களாகிவிட்ட தனியார் பள்ளிகளை அரசே ஏற்று, இலவசக் கல்வியைத் தரலாமே… என்ற கேள்வியை பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் விதைப்பது படத்தின் சிறப்பு.

நடிகர்கள் அனைவருமே கிட்டத்தட்ட புதுமுகங்கள். ஆனாலும் உறுத்தாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஹீரோவாக வரும் திலீப் உணர்ந்து உழைத்துள்ளார்.

ஹீரோவின் அண்ணனாக வரும் சுனில் நடிப்பில் கொஞ்சம் மிகை – செயற்கை. நண்பனாக வரும் செந்தில், நாயகிகள் சனா, கீத்திகா இயல்பாக நடித்துள்ளனர்.

புதிய நடிகர்கள், வர்த்தக நோக்கற்ற முயற்சி… எனவே படத்தில் சின்னச் சின்னதாய் குறைகள் இருப்பது சகஜம். நோக்கம் உயர்ந்தது என்பதால், அந்தக் குறைகளை குறித்து வைத்து குத்திக் காட்டுவது தேவையற்றதுதான். ஆனால் அப்பட்டமான பிரச்சாரத்தைக் குறைத்து, கதை நிகழுமிடத்தை நம்பகத்தன்மையுடன் காட்டியிருந்தால் முழுமையான மக்கள் படைப்பாக மாறியிருக்கும் உடும்பன்.

பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வரிகளையே படத்தின் பாடல்களாக இயக்குநரும் இசையமைப்பாளருமான எஸ் பாலன் பயன்படுத்திய காரணத்துக்காகவே கேட்கலாம். குறிப்பாக ஹரிஹரன் – சாதனா சர்க்கம் பாடும் ‘காற்றிலெல்லாம்…’

ஒளிப்பதிவு, எடிட்டிங் பரவாயில்லை.

உடும்பன் மாதிரி படங்களை மக்கள் ஆதரிப்பது, ஒரு தலைமுறையையே கல்வி வியாபாரிகளின் பிடியிலிருந்து காப்பாற்ற உதவும்!

-வினோ

என்வழி ஸ்பெஷல்
2 thoughts on “உடும்பன் – சினிமா விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *