BREAKING NEWS
Search

போலீஸ் வன்முறை – அச்சுறுத்தலிருந்து போராட்டக்காரர்களைக் காக்க கைதாகிறேன்! – உதயகுமார்

போலீஸ் வன்முறை – அச்சுறுத்தலிருந்து போராட்டக்காரர்களைக் காக்க கைதாகிறேன்! – உதயகுமார்

இடிந்தகரை: நியாயமான காரணத்துக்காக, நியாயமான வழியில் போராடிய மக்களை குற்றவாளிகளாகவும், அவர்களை ஒருங்கிணைத்தவரை ஏதோ தீவிரவாதியைப் போலவும் ஜோடிக்கும் போலீசின், அரசின் முயற்சி ஓரளவு வெற்றியடைந்துவிட்டது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பெரும் உறுதியுடன் போராடிய மக்களை ஏதோ குருவி சுடுவதைப் போல சுட்டும், ஆடுமாடுகளைப்போல விரட்டியும் ஒடுக்க முயன்ற போலீஸ், அவர்களை ஒருங்கிணைக்கும் உதயகுமாரை, தீவிரவாதிக்கு நிகராக சித்தரித்து கைது செய்ய முனைப்பு காட்டுகிறது.

போலீசின் இந்த வன்முறையிலிருந்து போராட்டக்காரர்களைக் காக்க இன்று தானே முன்வந்து கைதாவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சுப உதயகுமார்.

இடிந்தகரையில் 48 மணி நேர தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் பொதுமக்களோடு இன்று காலை இணைந்து கொண்ட உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடற்கரையில் ஒன்று திரண்டிருந்த பொதுமக்கள், போலீசாரை தாக்கியதாகக் கூறுவது தவறு. போலீசார்தான் பொதுமக்களைக் கொடூரமாகத் தாக்கினர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி கொல்லப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பொதுமக்கள் மீதான வன்முறை தொடரக் கூடாது என்பதற்காக போராட்டக் குழுவின் முன்னணி நிர்வாகிகளாகிய நாங்கள் இன்று இரவு சரணடைகிறோம். எங்களைத் தேடுவதாகக் கூறிக் கொண்டு எங்கள் மக்களை மிகப் பெரிய துயரத்துக்கும் கொடுமைக்கும் உள்ளாக்குகிறது போலீஸ். அவர்களின் உடைமைகளைச் சிதைத்து வருகிறது. இந்த கொடுமையைத் தடுக்க கூடங்குளம் காவல்நிலையத்தில் கைதாக இருக்கிறோம்,” என்றார் உதயகுமார்.

முன்னதாக போலீஸ் தாக்குதலிலிருந்து தப்பித்த உதயகுமார் தான் கைதாகவது குறித்து கூறுகையில், “நாங்கள் ஆயுதம் எடுத்து போராடுவதாக இருந்தால் 400 நாட்களுக்கு முன்பே அதை செய்திருப்போம். ஆனால் அமைதி வழியில் போராட்டம் நடத்தியோரை கொடுமையாக தாக்கியிருக்கிறது காவல்துறை.

கூடுதலாக போலீஸ் படையை திரட்டி வரப்போவதாக மக்களிடையே அச்சத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்த நிலைமை நீடிக்காமல் இருக்க.. வன்முறை தொடராமல் இருக்க நாங்களே முன்வந்து கைதாக தயாராக இருக்கிறோம்.

மக்களின் பாதுகாப்புக்காக இன்று இரவு 9 மணிக்கு முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் முன்னிலையில் கூடங்குளம் காவல்நிலையத்துக்கு நாங்களே வருகிறோம்,” என்றார்.

பொதுமக்களை கல்வீசித் தாக்கும் ‘காக்கி ரவுடிகள்!’ – இடம்: இடிந்தகரை

வைகோ முன்னிலையில்…?

இந்த நிலையில் உதயக்குமார் கூறும் முக்கிய அரசியல் தலைவர் வைகோ என்று கூறப்படுகிறது. வைகோவை அழைத்துக் கொண்டு அவர் முன்னிலையில் போலீஸில் கைதாவார் உதயகுமார் என்று கூறப்படுகிறது.

மேலும், உதயக்குமார் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் வைகோவை கையாளக் கூடும் என்கிறார்கள்.

அதே போல அணு உலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவின் இன்னொரு தலைவரான புஷ்பராயன் உள்ளிட்டோரும் கூடங்குளம் காவல் நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்கு நேரில் வந்து கைதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

-என்வழி செய்திகள்

கூடங்குளத்தில் மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட போலீஸ் – படங்கள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *