ஆபாச – வக்கிர கருத்துக்களை சென்சார் செய்ய தயார்! – ட்விட்டர் அதிரடி
Saturday, January 28, 2012 at 1:47 pm | 351 views
ஆபாச – வக்கிர கருத்துக்களை சென்சார் செய்ய தயார்! – ட்விட்டர் அதிரடி
டெல்லி: சட்டம் வலியுறுத்தினால், ஆபாசமான, வக்கிரமான கருத்துக்களைத் தடை செய்யத் தயார் என்று 300 மில்லியன் பயனர்களைக் கொண்ட ட்விட்டர் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே உலகின் பல நாடுகளில் சட்ட விரோத கருத்துக்களுக்கு ட்விட்டர் இடமளிக்காமல் உள்ளதால் அதே நிலைப்பாட்டை இந்தியாவிலும் மேற்கொள்ள தயாராக உள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும் சென்சார் செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வருகின்றன.
உலகின் நல்ல விஷயங்கள் மட்டுமல்லாத, மோசமான குப்பைகளும் குவிந்து கிடக்கும் இணைய வெளியை சென்சார் செய்வது குறித்து இந்தியாவில் இப்போதுதான் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இணையவெளியில் கோடிக்கணக்கான ஆபாச, வன்முறையைத் தூண்டும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைத் தாங்கி வரும் தளங்களுக்கு கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடமளிக்கின்றன (hoasting). இந்த நிறுவனங்களின் தேடி எந்திரங்கள் (search engines) எல்லா வகையான தகவல்களையும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இவற்றை பல நாடுகள் தடை செய்வதில்லை. ஆனால் சில முக்கிய நாடுகளில் தடை அமலில் உள்ளது.
பெரும்பாலான முஸ்லிம் – அரபு நாடுகளில் ஆபாச இணையதளங்கள், மத ரீதியான வக்கிரமான கருத்துக்களைப் பரப்பும் தளங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. சில நாடுகளில் ப்ளாக்பெர்ரி போன்களுக்கே அனுமதி கிடையாது. இங்கெல்லாம் கூகுளைத் தட்டினால் ஆபாச தளங்களைப் பார்க்க முடியாது.
சீனாவில்…
சீனாவில் 90 சதவீத சென்சார் அமலில் உள்ளது. கோல்டன் ஷீல்டு புராஜக்ட் எனும் சீன சட்டத்துக்கு உட்பட்டு சென்சார் விதிகளை கடைப்பிடித்து செயல்படுகிறது கூகுள். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த கூகுள், ‘சட்டத்துக்கு கட்டுப்படாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவோம்’ என சீன அரசு எச்சரித்ததால் அடங்கிப் போனது. இப்போது சுதந்திரமான பகுதி எனப்படும் ஹாங்காங்கில் கூட கூகுளில் ஆபாச படங்கள் மற்றும் கருத்துக்களைப் பார்க்க முடியாது (ஹாங்காங்கில் ஆபாச படம் தயாரிக்கிறார்கள். ஆனால் அதை வயது வந்தவர்கள் திரையரங்கில் மட்டுமே போய் பார்க்கமுடியும் என்பதால் அனுமதிக்கிறார்கள்.)
சீனா – ஹாங்காங்கில் ஆபாச, வன்முறை கருத்துக்களை கண்காணித்து தடை செய்ய மட்டுமே 25000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர கூகுளும் பல ஆயிரம் பேரை நியமித்துள்ளது!
ஜெர்மனி – பிரான்ஸில்…
அதேபோல, ஜெர்மனி மற்றும் பிரான்சில் நாஜி கருத்துகளைப் பரப்பும் இணைய தளஙக்களை சென்சார் செய்ய கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒப்புக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளின் சட்டங்கள் இதை வலியுறுத்துவதால் அதை கடுமையாக பின்பற்றுகின்றன கூகுள் போன்றவை. ட்விட்டரும் இங்கு கருத்துக்களை சென்சார் செய்கிறது.
ரஷ்யாவிலும் தடை வருகிறது
இந்த நாடுகளின் வரிசையில் இப்போது ரஷ்யாவிலும் ட்விட்டர், கூகுள் தளங்களை சென்சார் செய்ய அரசு வலியுறுத்த ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக, ரஷ்ய அரசின் கட்டுப்பாடுகளை ஏற்கிறோம் என முன்வந்துள்ளது ட்விட்டர்!
ஆனால் இந்தியாவில் இணைய வெளியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட சட்டங்கள் எதுவும் இல்லை என்பதைக் காரணம் காட்டி, அனைத்து வகை வக்கிர, அநாகரீகக் கருத்துக்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர். அவற்றுக்கு கூகுள், யாஹூ, பேஸ்புக், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இடமளிக்கின்றன.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உலகின் வக்கிர குப்பைகளைக் கொட்டும் நாடாக இந்தியா மாறிவிட்டது என்றும், இதுவே சமூகக் குற்றங்கள், வரம்பு மீறல்கள் மற்றும் மோசமான கலாச்சாரத்துக்கு வழி வகுத்துவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரி்வித்து வருகின்றனர்.
இந்த நிலை அரசுக்கு கவலை அளித்துள்ளது. எனவே, இந்த தளங்கள் அனைத்தையும் சென்சார் செய்ய வேண்டும், மோசமான content-ஐ தடை செய்ய வேண்டும் என வழக்கும் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை, ஏன் இந்த குப்பைகளை இந்தியாவில் தடுக்க முயற்சிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றன.
இணையவெளியை கட்டுப்படுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், இந்தியா ஜனநாயக நாடு என்பதால் இங்கே அதை செய்ய மாட்டோம் என்றும், அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் சமீபத்தில் கூகுள் நிறுவனம் பம்மாத்து பண்ணியது நினைவிருக்கலாம்.
ஆனால் கூகுளுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இந்திய அரசு சட்டப்படி வலியுறுத்தினால், தேசவிரோத, கலாச்சார விரோத கருத்துக்கள்- படங்களை நீக்கிவிடுகிறோம் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் சீனாவில் நுழைய திட்டம் போடுகிறது. அதனால்தான் உடனடியாக இப்படி இறங்கி வந்துள்ளது. கூகுளும் யாஹூவும் ஏற்கெனவே சீனாவில் உள்ளன, என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கூகுளும் யாஹூவும் சீனாவில் ஏற்கெனவே காலூன்றிவிட்டது உண்மைதான். ஆனால் எப்படி? சீனாவின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்று, அனைத்து மோசமான கருத்துக்களையும் நீக்கிய பிறகே வெளியிடுவோம் என ஒப்பந்தம் போட்ட பிறகே அங்கே கால் வைக்க அனுமதிக்கப்பட்டன.
300 மில்லியன் பயனர்களைக் கொண்ட ட்விட்டரின் இந்த அறிவிப்பால், ஆட்சியாளர்கள் இணைய வெளியை கட்டுப்படுத்தும் வகையிலான விசேஷ சட்டத்தை இயற்றுவது அவசியமாகியுள்ளது.
ட்விட்டரின் இந்த அறிவிப்பைக் கேட்ட பின்னர், அப்படியொரு சட்டம் வந்தால் அதுபற்றி யோசிப்போம் என்று கூறத் தொடங்கியுள்ளன.
முடியவே முடியாது என்று இத்தனை நாள் கூறியவர்கள், இப்போது பார்க்கலாம் என்ற நிலைக்கு வந்துள்ளனர். மத்திய அரசுகள் உறுதியாக நேர்மையாக இல்லாமலிருக்கும் வரை இந்தியா உலகின் குப்பையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது!
-என்வழி செய்திகள்





அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்




ஆபாசம் எல்லா இடத்திலும் பெருகி விட்டது.
பேச்சிலும், உடையிலும் நாகரிகம் வேண்டும்.