BREAKING NEWS
Search

நா முத்துக்குமார்… பெரும் கவிஞன், நல் மனிதன்!

நா முத்துக்குமார்… இந்த ஞாயிறு இப்படியா ஆரம்பிக்க வேண்டும்..!

-எஸ் ஷங்கர்

2d3b6a2a-3a75-4cf7-90c9-7f95e7bd0283

ன்னவென்று எழுதுவது… எதிலிருந்து தொடங்குவது என்று கூடத் தெரியவில்லை. அத்தனை அதிர்ச்சி… வேதனையைத் தந்துவிட்டது கவிஞர் நா முத்துக்குமார் மறைவு.

கவிஞர்களில் பேரரசன் முத்துக்குமார். ஆனால் ஒரு மனிதனாக, எளியோருக்கும் எளியோனாக வாழ்ந்தவர், பழகியவர். கோபக்காரர்தான், ஆனால் அது அத்தனை சுலபத்தில் யாருக்கும் தெரியாது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு அவரை அமெரிக்காவுக்கு ஒரு தமிழ் அமைப்பின் விழாவுக்காக அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டேன். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் போனது. ஆனால் அந்த அமைப்பின் அரைவேக்காடுகள் சில படுத்தியபாட்டில் மிகக் கோபமாகி, நானே என் சொந்த செலவில் அமெரிக்கா போகிறேன். ஆனால் அந்த நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ள மாட்டேன், என்று கோபத்துடன் விமானம் ஏறினார்.

அவருக்கும் அந்த அமைப்புக்குமான மோதலை கேள்விப்பட்ட முன்னணி புலனாய்வு இதழ் உடனே அதை அட்டைப்படக் கட்டுரையாக்க முனைந்தது. முத்துக்குமாரிடம் இதுகுறித்து ஆசிரியர் கேட்டபோது, ‘எனக்கு அவங்க மேல கோபம் இருப்பது உண்மைதான். ஆனால் அதைச் செய்தியாக்க வேண்டாம். புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். தமிழைப் பரப்ப முயல்கிறார்கள். அதில் பக்குவமில்லாமல் ஏதோ செய்துவிடுகிறார்கள். இதற்காக தாயகத்தில் உள்ள நாம் கோபப்பட்டு அவர்களை அசிங்கப்படுத்தலாமா.. விட்டுவிடுவோம்,” என்று கூறிவிட்டார்.

அந்த கசப்பான அனுபவத்திலிருந்து அவரை மீட்க வேண்டும் என்பதற்காகவே, சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இன்னொரு அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தோம். இங்கே நான். அமெரிக்காவில் நண்பர் தினகர், சித்ரா மகேஷ் மற்றும் நண்பர்கள்.

இந்த முறை அவரது பயணத்துக்கு ஒரு உன்னத நோக்கம் இருந்தது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார். அவரது அந்த வருகை அந்த நிகழ்ச்சி சிறக்க மிகவும் உதவியது.

அமெரிக்காவில் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்த நண்பர்கள் அத்தனைப் பேரும் முத்துக்குமாரின் எளிமையை, பழகும் குணத்தை அப்படி வியந்தனர் என்னிடம். ‘என்ன நண்பா… இவ்ளோ நல்ல மனுசனா இருக்கார்… எவ்ளோ எளிமை.. ரெண்டு தேசிய விருது வாங்கியும் மனுசன் இயல்பு மாறாம இருக்காரே..’ என்றெல்லாம்!

நா முத்துக்குமாரின் இயல்பே அதுதான். வானத்தின் நிறம் மாதிரி… மாறாத குணம். அவரது அணிலாடும் முன்றில் படித்து பிரமித்தேன். அந்தப் புத்தகம்தான் எனக்கும் அவருக்குமான நட்புப் பாலத்துக்கு வித்திட்டது.

ஒரு போன் செய்து, ‘கவிஞரே இன்று சந்திக்க வேண்டும்’ என்று கேட்டால், அது எத்தனை பெரிய இயக்குநர் – இசையமைப்பாளரின் கம்போசிங் இருந்தாலும், அந்த இடத்துக்கே வரச் சொல்லிவிடுவார். சொன்ன நேரத்தில் வந்து பேசிவிட்டுத்தான் செல்வார்.

அமெரிக்காவிருந்தவரை தினமும் பேசிக் கொண்டிருந்தவர், அங்கிருந்து திரும்பிய பிறகு கொஞ்ச நாள் அவரிடமிருந்து போனே இல்லை. என்னடா இந்த மனுசன்… அமெரிக்காவிலிருந்து வந்துட்டேன்னு கூட தகவல் சொல்லலையே… என்ற யோசனையுடன், மறந்தும்விட்டேன்.

கடந்த மே 7 -ம் தேதி அதிகாலை அவரிடமிருந்து திடீர் போன்.

“சொல்லுங்க கவிஞரே..” என்றேன்.

“இந்த வாரம் குங்குமம் வாங்கிப் படிச்சிட்டு திரும்பக் கூப்பிடுங்க,” என்றார்.

உடனே போய் வாங்கிப் படித்தேன். சிலிர்த்துப் போனேன்.

தனது அமெரிக்கப் பயணம் குறித்த ‘நினைவோ ஒரு பறவை’ கட்டுரைத் தொடரில், என்னையும் நண்பர்கள் தினகர், சித்ரா, மகேஷ் என அனைவரையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

திரும்ப போனில் அழைத்தேன்.

“இத்தனை நாள் உங்களைக் கூப்பிடாதது இதுக்குத்தான். இந்த கட்டுரை வரும்போது திடீர் என்று அழைக்கலாம் என்று இருந்தேன். கண்டிப்பா அடுத்த வாட்டி நாம சேர்ந்து அமெரிக்கா போகலாம் சார். அற்புதமான நண்பர்கள்,” என்றார்.

afb4c5fc-e729-426a-a28d-8e7b65208502
இன்னொரு முறை ஹூஸ்டன் பல்கலைக் கழக தமிழ்த் துறை மாணவர்களுடன் பேச ஆர்வமாக இருந்தார்.

வளரும் எழுத்தாளர்கள், கவிஞர்களை முளையிலேயே நசுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெருங்கவிஞர்களுக்கு மத்தியில், அவர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும் வழக்கம் கொண்டவர் நா முத்துக்குமார். இந்த விஷயத்தில் அவர் இன்னொரு வாலி.

‘சார்… நான் முதல் முறையாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். நீங்கள் வந்து வெளியிட வேண்டும்’ என்று முன்பின் தெரியாத ஒருவர் கேட்டாலும், மெல்லிய சிரிப்போடு, ‘கண்டிப்பா சார்… வாழ்த்துகள். நிகழ்ச்சிக்கு வந்துடறேன். போய்ட்டு வாங்க’ என்பார். சொன்னபடியே சரியான நேரத்துக்கு நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்துவிடுவார்.

எத்தனை எத்தனை வெற்றிப் பாடல்கள். மனதை மயக்கும் காதல் பாடல்கள்… ஆனால் மனிதர் ஒரு நாளும் அந்த வெற்றிகளுக்காக சுயமோகம் கொண்டதில்லை. அடுத்தவர் பாராட்டினால் மென்மையாக சிரித்துவிட்டுக் கடப்பார்.

பாடல் வெளியீட்டு மேடைகளில் பெரிய அலங்காரத்தோடு பேசமாட்டார். புதியவர்களின் மேடை என்றால் தன் வேலை (பாடல் வரிகள்) பற்றி மட்டுமே பேசிவிட்டு முடித்துக் கொள்வார்.

எந்தச் சூழல் என்றாலும் இவரிடமிருந்து பளிச்சென்று வந்து விழும் பாடல் வரிகள். தயக்கம் யோசனையெல்லாம் கிடையாது. இந்த நாட்டுக்குப் போனால்தான் பாடல் வரும் என்ற நிபந்தனையெல்லாம் கிடையாது. பிரசாத் ஸ்டுடியோ, கிரீன் பார்க், சிவன் பார்க் எல்லாம் இவருக்கு ஒன்றே.

நான் ஒரு கவிஞன்… இப்படித்தான் என் தோற்றம் இருக்க வேண்டும் என தனக்கு வெளியே போலியான பிம்பத்தை உருவாக்க முனைந்ததில்லை. மக்களில் ஒருவராக மக்கள் கவிஞராக வாழ்ந்தவர் நா முத்துக்குமார். ஆராய்ச்சிப் படிப்பை முறையாக முடித்து முனைவர் பட்டம் பெற்ற ஒரே தமிழ் சினிமா பாடலாசிரியர் முத்துக்குமார். ஆனால் அதை பெரிதாக காட்டிக் கொண்டதில்லை. ‘விடுங்க சார்… இதையெல்லாம் பெரிசா சொல்லிக்கிட்டு..’ என்பார்.

மிக இளம் வயதில் தமிழ் சினிமா ஒரு பட்டுக்கோட்டை கல்யாணத்தை இழந்தது. நூற்றாண்டில் நிற்கும் தருணத்தில் இன்னொரு மக்கள் கவிஞனை இழந்து தவிக்கிறது. ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது வழக்கமான வார்த்தைப் பிரயோகம்தான். ஆனால் முத்துக்குமார் விஷயத்தில் அது நூறு சதவீத உண்மை!

-ஒன்இந்தியா
2 thoughts on “நா முத்துக்குமார்… பெரும் கவிஞன், நல் மனிதன்!

 1. srikanth1974

  காஞ்சீயில் பூத்த கவிமலரை
  பறித்து சென்றான் .
  காலன் எனும் குற்றவாளி!

  கவிஞர்; நா.முத்துக்குமார் அவர்களின்
  ஆத்மா’ சாந்தியடைய ஆண்டவனைப்
  பிராத்திக்கிறேன்.

  – ஸ்ரீகாந்த்.ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *