BREAKING NEWS
Search

எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை

எம்.ஜி.ஆரின்  வள்ளல் தன்மை

03-thevar-mgr-600

ந்தக் ‘கொடுக்கும் குணம்’, ‘வள்ளல் தன்மை’ பெயரும், புகழும், வசதிகளும் பெற்று வாழ்ந்த பிற்காலத்தில் மட்டும் வந்தது அல்ல. அதற்கு முற்காலத்திலும் வசதிகள் அதிகம் இல்லாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த அந்த ஆரம்ப நாட்களிலும், எம்.ஜி.ஆரிடம் அதே வள்ளல் தன்மை இருந்ததை பல பழைய மூத்த கலைஞர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். 10 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையாக மதிக்கப்பட்ட அந்தக் காலத்தில், அவர் சில 10 ரூபாய் நோட்டுகளை மடித்து தனது முழுக்கைச் சட்டையின் கைப்பகுதியைச் சுருட்டி அதற்குள் வைத்திருப்பார். நலிந்தவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவர்கள் கேட்காமலேயே பத்து, இருபது என்று கைக்கு வந்ததை அவர்களுக்குக் கொடுத்து உதவுவதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார்.

* தர்மத்தின் பொருட்டு தன் தலையைக்கூட கொடுக்கத் தயாரான குமணன்.

* வேடனிடமிருந்து அவன் விரட்டி வந்த கள்ளங்கபடம் இல்லாத ஒரு புறாவின் உயிரைக் காப்பதற்காக அதை தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்குச் சமமாகத் தனது சதையை அறுத்து நிறுத்துக்கொடுத்த சோழப் பெருமன்னன் ‘சிபிச்சக்ரவர்த்தி!’

* படர்வதற்குத் தக்கக் கொம்பு எதுவும் இன்றி தரையில் சுருண்டு கிடந்த முல்லைக் கொடியை எடுத்து தனது தேரில் படரவிட்டு, அதன் அழகைக்கண்டு மகிழ்ந்து கால்நடையாக நடந்து அரண்மனைக்குத் திரும்பிய கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ‘பாரிவேந்தன்!’

* தன் ஆரோக்கியத்திற்கும், ஆயுள் விருத்திக்காகவும் வேடுவர்கள் கொண்டு வந்து கொடுத்த அரிய கருநெல்லிக்கனியை தமிழ் மூதாட்டி அவ்வை பிராட்டிக்கு அளித்து அகம் மகிழ்ந்த வள்ளல் அதியமான்!

* மழையிலும், குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலைக்கண்டு மனம் இரங்கி, உடனே தனது தங்க இழை வைத்து நெய்யப்பட்ட அங்க வஸ்திரத்தை எடுத்து அந்தக் கோல மயிலின் மீது போர்த்தி அதன் குளிரைத் தவிர்த்த கோமான் ‘பேகன்!’ ‘கவிச்சக்ரவர்த்தி’ கம்பனை ஆதரித்து, அவன் தமிழை வளர்த்த சடையப்ப வள்ளல்!

* ஊர்தோறும் அன்னச்சத்திரங்கள் நிறுவிய கருணை வள்ளல் காஞ்சீபுரம் பச்சையப்ப முதலியார்!

* இறந்து அடக்கமான பிறகும்கூட வெளியே தனது விரலை நீட்டி அதில் இருந்த கணையாழியைக் கழற்றிக் கொள்ளச் செய்த செத்தும் கொடை கொடுத்த ‘சீதக்காதி’ போன்ற வள்ளல் பெருமான்களின் இனத்தைச் சார்ந்து, அவர்களின் குணத்தைக் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். என்பது அனைவராலும் அறியப்பட்ட ஓர் உண்மையே! அதனால்தான் ‘திருமுருக கிருபானந்த வாரியார்’ அவருக்கு ‘பொன்மனச்செம்மல்’ என்று புகழாரம் சூட்டினார்.

‘சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அதற்கு, ‘தர்மம் ஒருவருடைய இல்லத்தில் இருந்துதான் புறப்படுகிறது’ என்று பொருள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் – வாழ்ந்து காட்டியவர்  எம்.ஜி.ஆர். என்றால் அது சற்றும் மிகை அல்ல என்பேன்.

-வசனகர்த்தா ஆரூர்தாஸ்

நன்றி: தினத்தந்தி

(இன்று அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 27வது நினைவு தினம்)
2 thoughts on “எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை

 1. குமரன்

  அருமையாக வள்ளல்தன்மை குறித்த பதிவை ஆரூர்தாஸ் தந்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு சிறப்பான அஞ்சலி. எம்.ஜி.ஆரின் திரை வாழ்வு, அரசியல் வாழ்வு இவற்றை விடவும் அவரிடம் இருந்த போற்றற்குரிய குணம் வள்ளல்தன்மை. இதைப் பற்றி எழுதி இளம் சமுதாயம் இப்பண்பை வளர்க்கப் பாடுபடுதல் சிறப்பு.

  அண்மையில் கி.வ.ஜகன்னாதன் அவர்கள் எழுதிய கடைஎழு வள்ளல்கள் பற்றிய புத்தகம் “ஏழு பெருவள்ளல்கள்” படித்தேன்.

  http://www.tamilvu.org/library/nationalized/pdf/92-ki.va.ja/7peruvallalkal.படப்

  எளிய நடை, சிறுவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் அருமையான நடை. நல்ல கருத்துக்கள் கொண்டது.

  நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் non-detailed என்று ஒரு வகுப்பும் அதில் பயில இது போன்ற நூல்களும் உண்டு. இவை தந்த நல்லொழுக்கம் குறித்த மனப்பட்திவு தரும் வண்ணம் இப்போது கல்வித் திட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

  தற்கால அரசுகள் அறம் சார் கல்வியைப் புறக்கணித்துவிட்டு இப்போது ஆசிட் வீச்சு, கொலை, தற்கொலை, கற்பழிப்பு குறித்துத் தெருவில் போராட்டம் நடத்தும் சமுதாயத்தை உருவாக்கி விட்டன. கல்வித் திட்டம் குறித்த ஆராய்ச்சியும், மறு ஆய்வும், மீள்பார்வையும், திருத்தங்களும் காலத்தின் கட்டாயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *