பெரும் துயரில் தமிழகம்!
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பலன் இன்றி திங்கள் கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். இதனை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது அப்பல்லோ மருத்துவமனை.
உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் வெறும் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட மறுநாள் 12 மணி போல் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிடுவார் என்றுதான் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்பல்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு ஓய்வு தேவையிருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தது. பின் நுரையீரல் தொற்று, செயற்கை சுவாசம் என ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சனை மற்றும் சிகிச்சையை பற்றிய அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
மருத்துவர் சிவக்குமார் தலைமையில், கார்டியாலஜி, நுரையீரல் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். நன்கு குணமடைந்து வந்த நிலையில் அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிலைமை மோசமானது. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகமும், மிக மிக மோசமாக உள்ளது என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலும் அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பலனில்லாமல் இன்று மாலை காலமானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அப்பல்லோ நிர்வாகம் மறுத்தது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனைத்து உயிர்பாதுகாப்பு சிகிச்சைகள் தொடர்வதாகவும், அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எனினும் உயர் சிகிச்சை எதுவும் பலன் அளிக்காமல் இதயம் செயல் இழந்ததால் அவர் உயிர் பிரிந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு:
* ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில் 1948ம் ஆண்டு பிப்.24ம் தேதி பிறந்தார்.
* ஜெயலலிதாவின் இரண்டு வயதில் அவரது தந்தை ஜெயராம் காலமானார்.
* 10ம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் ஜெயலலிதா முதலிடம் பிடித்தார்.
* தமிழ், தெலுங்கு, கன்னடம் என 140 படங்கள் நடித்துள்ளார்.
* தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளையும் சரளமாகப் பேசுவார்.
* 1972ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது
* தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு 1991-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அதில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். பின்னற் 2001, 2011 தேர்தல்களிலும் வென்று முதல்வராகத் திகழ்ந்தார்.