BREAKING NEWS
Search

எதிலும் தயக்கம்… எதையும் சாதிக்கவில்லை – மன்மோகன் சிங் & காங்கிரஸ் மீது டைம் மீண்டும் தாக்கு!

எதிலும் தயக்கம்… எதையும் சாதிக்கவில்லை –  மன்மோகன் சிங் & காங்கிரஸ் மீது டைம் மீண்டும் தாக்கு!

நியூயார்க்: பிரதமர் மன்மோகன் சிங் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை, எந்த சாதனையையும் செய்யவில்லை. பொருளாதார சீர்திருத்தங்களை துணிச்சலுடன் செயல்படுத்த அவர் தயக்கம் காட்டுகிறார் என்று அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டுள்ளது.

டைம் பத்திரிக்கையின் ஆசியப் பதிப்பின் கவர் ஸ்டோரியாக மன்மோகன் சிங் இடம் பெற்றுள்ளார். ‘The Underachiever – India needs a reboot’ என்ற தலைப்பில் பிரதமர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும் விமர்சித்துள்ளனர். மன்மோகன் சிங் சாதிக்கத் தவறி விட்டதாகவும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கலை முதலில் செயல்படுத்தியவர் மன்மோகன். ஆனால் தற்போது அவர் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஆக்கப்பூர்வமான பாதைக்குத் திருப்ப உதவும் சீர்திருத்தங்களை செய்யத் தயங்குவதாக டைம் கூறியுள்ளது.

இந்தியப் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் பொருத்தமானவர்தானா என்றும் டைம் கேட்டுள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்த நிலை, பெருமளவில் நிலவும் நிதிப் பற்றாக்குறை, வீ்ழ்ந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெருகி வரும் ஊழல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார் மன்மோகன் சிங்.

மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பெரும் பெரும் ஊழல்களையெல்லாம் மறைக்கும் செயலிலேயே அக்கறை காட்டுகிறது. மாறாக பொருளாதாரத்தை நிமிர்த்துவதில் அவர்கள் அக்கறை செலுத்தாமல் உள்ளனர் என்று கூறியுள்ளது.

உள்ளூர் முதலீட்டாளர்களைப் போலவே வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்தியாவில் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாக்காளர்களும் இந்த அரசு  மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். பணவீக்கம் ஒருபக்கம் எகிறிக் கொண்டே போகிறது. தொடர்ந்து எழுந்து வரும் ஊழல் புகார்களால் அரசு நம்பகத்தன்மை இல்லாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.

மிகப் பெரிய புகழுடன் இருந்து வந்த மன்மோகன் சிங் தற்போது அந்த புகழேணியிலிருந்து விழுந்து விட்டார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் பெருத்த அமைதி காத்து வருகிறது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்த தவறி வருகிறார்.

அவரது அமைச்சர்களையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது. பல்வேறு முக்கியச் சட்டங்களை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.  அனைத்தும் நாடாளுமன்றத்தில் தேங்கிக் கிடக்கின்றன என்று அந்தக் கட்டுரை குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கூட்டணி மற்றும் அதன் தலைமையிலான அரசைக் கடுமையாக குறைகூறி டைம் கட்டுரை வெளியிடுவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை. ஏற்கெனவே இந்தப் பத்திரிகையை நரேந்திர மோடிக்கு ஆதரவான மறைமுக பிரச்சாரத்தில் இறங்கியிருப்பதாக ஒரு விமர்சனம் உள்ளது குறிப்பிடத்தக்கது!

-என்வழி செய்திகள்
9 thoughts on “எதிலும் தயக்கம்… எதையும் சாதிக்கவில்லை – மன்மோகன் சிங் & காங்கிரஸ் மீது டைம் மீண்டும் தாக்கு!

 1. ஹாஜி

  நல்லாதானே விசுவாசமான அடிமையாதானே இருந்தேன் – மன்மோகன்
  நீங்க நல்ல அமெரிக்காவுக்கு நல்ல அடிமைதான் என்றாலும் இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம் – டைம் பத்திரிக்கை…..

  ”பொருளாதார சீர்திருத்தங்களை துணிச்சலுடன் செயல்படுத்த அவர் தயக்கம் காட்டுகிறார்”
  இன்னும் நல்லா இந்தியாவை துண்டு போட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு விக்க தயக்கம் காட்டுறாரோ…..

 2. ஹாஜி

  நல்லாதானே விசுவாசமான அடிமையாதானே இருந்தேன் – மன்மோகன்
  நீங்க அமெரிக்காவுக்கு நல்ல அடிமைதான் என்றாலும் இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம் – டைம் பத்திரிக்கை…..

  ”பொருளாதார சீர்திருத்தங்களை துணிச்சலுடன் செயல்படுத்த அவர் தயக்கம் காட்டுகிறார்”
  இன்னும் நல்லா இந்தியாவை துண்டு போட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு விக்க தயக்கம் காட்டுறாரோ…..

 3. Manoharan

  கடைக்கோடி இந்தியனுக்கும் தெரிந்த உண்மை இப்போதுதான் டைமுக்கு தெரிந்ததா ? Too late.

 4. தினகர்

  இது டைம் பத்திரிக்கையின் அதிகப்பிரசங்கித்தனமாகவே தெரிகிறது. யாரையோ திருப்தி படுத்த, தன்னுடைய தரத்தை குறைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது.

  மன்மோகன் திறமையானவரா, இல்லையா என்பதை தேர்தலில் தீர்மானிக்கவேண்டியது இந்திய வாக்காளர்களேயன்றி, டைம் பத்திரிக்கை அல்ல.

  எதிர்ப்பார்த்தது போல் டைம் பத்திரிக்கையை குறிப்பிட்டு உடனடியாக பாஜகவினர் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளதை பார்த்தால், இந்த செய்தியின் நம்பிக்கை குறித்து கேள்வி எழும்புகிறது.

 5. மிஸ்டர் பாவலன்

  //இது டைம் பத்திரிக்கையின் அதிகப்பிரசங்கித்தனமாகவே தெரிகிறது. //

  டைம் கட்டுரை பத்திரிகை தர்மப்படி தான் உள்ளது.
  அதன் ஹெட்லைனை நீங்கள் ஏற்பதும், ஏற்காததும்
  உங்கள் விருப்பம்.

  “அரசியல்வாதிகளை யாரும் விமர்சிக்கக் கூடாது,
  தேர்தலில் தான் மக்கள் முடிவு செய்யணும்” என்றால்
  Print Media, TV Channels இவை அனைத்தையும் close
  செய்து விடலாமே!

  -மிஸ்டர் பாவலன்

 6. தினகர்

  “டைம் கட்டுரை பத்திரிகை தர்மப்படி தான் உள்ளது.”

  இந்திய பத்திரிக்கைகள் இந்திய அரசைப்பற்றி சொல்வது பத்திரிக்கை தர்மம்.
  அமெரிக்க டைம் பத்திரிக்கை செய்வது கிழக்கு இந்திய் கம்பெனியின் வணிக மூளை. வணிகம் என்று வந்த கம்பெனி நாட்டை ஆண்டது போல், தான் நினைக்கும் விஷயத்தை மக்களை நம்ப வைத்து தனக்கு ஏற்ற ஆட்சியை இந்தியாவில் உருவாக்க முடியும் என்ற விஷமத்தனமான எண்ணம்.

  அதை புரிந்து கொள்ள மறுப்பது உங்கள் உரிமை..

 7. மிஸ்டர் பாவலன்

  ///இந்திய பத்திரிக்கைகள் இந்திய அரசைப்பற்றி சொல்வது
  பத்திரிக்கை தர்மம்./// (தினகர்)

  நண்பரே, நீங்கள் இதை உங்கள் பதிவில் தெளிவாக எழுதி இருந்திருக்கலாம்.
  உங்களைத் தவறாக புரிந்து கொண்டதற்கு வருந்துகிறேன். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 8. தினகர்

  நன்றி பாவலன். வருத்தப்படும் அளவிற்கு நீங்கள் ஏதும் சொல்லவில்லையே. கருத்து பரிமாற்றம் தானே..

  இந்திய பத்திரிக்கைகள் எழுதாததை விடவா டைம் பத்திரிக்கை எழுதி விட்டது.. அதை எதிர்த்து யாரும் எதுவும் சொல்லவில்லையே

  ஆனால் ‘ டைம்’ பத்திரிக்கையே சொல்லி விட்டது என்ற ஒரு வித மாயத்தோற்றத்தை பாஜகவிற்காக, ’மோடி வித்தையாக’ கட்டுரைகள், செய்திகள் வெளியிட்டு, பாஜகவை ஆட்சியில் ஏற்ற வேண்டும் என்ற ஒற்றை வரிக் கொள்கைக்காக தொடர் கட்டுரைகள் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் ‘ டைம்’ தனது தரத்தை ஜீவி, ரிப்போர்ட்டர், நக்கீரன் வரிசைக்கு கொண்டு வந்து விட்டது..

  இனிமேலும் ‘ டைம்’ பத்திரிக்கையிலேயே வந்து விட்டது என்று யாரும் பெருமைப்பட்டுக் கொள்ள்வோ, வருத்தப்பட்டுக் கொள்ளவோ தேவையில்லை..

 9. மு. செந்தில் குமார்

  தினகர் அவர்களின் நாட்டுப்பற்றுடன் கூடிய மதி நுட்பத்தை கண்டு வியக்கிறேன். அவர் கருத்தோடு உடன்படுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *