BREAKING NEWS
Search

இதுதான் ரஜினி… இதுதான் ரஜினியின் அரசியல்!

Thalaivarstyle
ரு மனிதன் தன்னுடைய நிலையிலிருந்து பிறழ்வது இரண்டு தருணங்களில். ஒன்று புகழ்ச்சியின் போது இன்னொன்று இகழ்ச்சியின் போது. இந்த இரண்டு நிலைகளிலும் தன்னிலை மாறாமல் இருப்பது உண்மையிலேயே ஒரு அபூர்வமான ஒன்று.

இந்த இரண்டிற்கும் கண் முன்னேயே இரண்டு உதாரணங்கள் இருக்கின்றன. முதல் உதாரணம் உலகநாயகன் கமலஹாசன். இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் ஒரு முறை கூட அரசியலில் இவரை இழுத்து அவ்வளவாக எவரும் பேசியதில்லை. ஆனால் இரண்டே மாதம் இவர் இட்ட ட்வீட்டுகளின் பின்னூட்டங்களில் சிலர் அவருக்கு அரசியல் ஆசையை மெல்லத் தூண்டினார்கள். ‘நீங்கள் வந்தால் எல்லாம் மாறும்… நாங்கள் இருக்கிறோம் பின்னால்’ என்ற ஒருசில ஆசை வார்த்தைகள். அவ்வளவுதான். அடுத்த ஒரு மாத்ததில் தனிக்கட்சி அறிவிப்பு வரை தயாராகிவிட்டார். நாம் அவரை குறைத்துச் சொல்லவில்லை. மனித இயல்பு அது.

அடுத்தது விஜயகாந்த். கடந்த இருபது ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் தாக்கம் இல்லாத தமிழக அரசியலே இல்லை எனலாம். ‘ரஜினி வரப்போகிறார்.. வரப்போகிறார்’ என்கிற பேச்சுக்கள் அடிபட்டுக்கொண்டிருந்த வேளையில், ‘நான் அவரைப் போல இப்ப வருவேன், அப்ப வருவேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன்… சொன்னால் வருவேன்’ என்றார். அதற்காக கட்டாயமாக அரசியலில் குதித்தவர் விஜயகாந்த்.

இப்போது ரஜினிக்கு வருவோம். இந்த இருபத்திரண்டு ஆண்டுகளில் எத்தனை முகஸ்துதிக்களை அவர் கண்டிருப்பார். எத்தனை புகழ்ச்சிகளைக் கண்டிருப்பார். மீடியாக்களின் அத்தனை அடாவடி அத்து மீறல்களைக் கண்டு எவ்வளவு கோபத்திற்கு ஆளாகியிருப்பார். இந்நேரம் வேறு ஒருவராக இருக்கும் பட்சத்தில் இவ்வளவு எரிச்சலூட்டுகிறார்களே என்பதற்காகவாவது அரசியலில் இறங்கியிருப்பார்கள்.

ஆனால் ரஜினி என்றும் தன்னுடைய பாதையிலிருந்து பிறழவேயில்லை. அவர் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அடுத்தவர்களின் ஏளனமோ, புகழ்ச்சியோ அவரை எதுவும் செய்துவிடவில்லை.

விஜயகாந்த் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகளின் ப்ரோமோஷனுக்காகவே அவரின் கடைசி ஓரிரு படங்கள் எடுக்கப்பட்டன. ரசிகர்கள் காசைக் கொடுத்து அவருடைய கட்சி விளம்பரங்களைத் திரைப்படங்களாகப் பார்த்தனர். இன்னொருவர் கட்சி தொடங்க முப்பது கோடி ரசிகர்களிடமே கேட்கிறார். அடுத்த சில தினங்களிலேயே முப்பது கோடிக்கு மேலேயே வந்துவிட்டது.. அதைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்கிறார். எத்தனை சட்டவிரோத காரியம் இது… இவர்களுக்கு அரசியல், சினிமா இரண்டையும் பிரித்துப் பார்க்கும் திறன் கூட இல்லை

ஆனால் ரஜினி எப்பொழுதும் தனது ரசிகர்களையோ அல்லது சினிமாவையோ அது போன்ற எந்த செயல்களுக்கும் உபயோகித்தது இல்லை. அவர் நடித்த ஒரு சில படங்களின் வசனங்கள் அன்றைய சூழலுக்கேற்றார் போல் ஊடங்கங்களால் திரித்து எழுதப்பட்டதே தவிர, சினிமாவை என்றுமே ரஜினி தவறாகப் பயன்படுத்தியதில்லை. சினிமா வேறு அரசியல் வேறு என்பதை பகுத்துப் பார்க்கும் திறன் ரஜினியிடம் இருக்கிறது. நேற்றும் இன்றும் கூட ரசிகர்களுக்கு முக்கியம் அவர்கள் குடும்பம் என்றுதான் திரும்பத் திரும்ப அறிவுறுத்துகிறார்.

ரஜினியை வைத்து சம்பாதித்த தயாரிப்பாளர்களைக் காட்டிலும், ரஜினியென்ற பெயரை வைத்து சம்பாதித்த ஊடங்களே அதிகம். அவர் பேசிய இரண்டு நிமிடப் பேச்சுக்கு இரண்டு மாதம் வரை விவாதங்களை நடத்தி கல்லாக் கட்டிய நிகழ்வுகளை சில மாதங்களுக்கு முன்புதான் கண்டோம்.  வாரப் பத்திரிக்கைகளின் பிரதிகள் குறைவாக விற்றாலும், தொலைக்காட்சிகளின் TRP குறைந்துபோனாலும் அவற்றை உடனே அதிகரிக்க ரஜினி என்ற சொல் கண்டிப்பாகத் தேவை.

thalaivarfan

அப்படிப்பட்ட ஊடங்களுக்கு சைலண்டாகக் கொடுத்திருக்கும் பதிலடிதான் சமீபத்திய பேச்சு. ரஜினி தன் பேச்சில் நேரடியாக ஒருசில பதிலடிகள் கொடுத்தாலும் மறைமுகமாக இன்னும் சிலருக்கு பதிலளித்திருக்கிறார்.

“நா வர்றேன்னு சொன்னா வந்துருவேன்.. இப்ப வருவேன்.. இன்னிக்கு வருவேன்.. நாளைக்கு வருவேன்னு பூச்சாண்டியெல்லாம் காமிக்க மாட்டேன்,” என்று நேரடியாகவே ரஜினியை ஒரு திரைப்படத்தில் தாக்கியவர் விஜயகாந்த். “வர்றது முக்கியமில்லை.. வந்தா ஜெயிக்கனும் அதான் முக்கியம்,” என்ற இன்றைய தலைவரின் பேச்சு விஜயகாந்துக்கான பதிலாகக் கூட இருக்கலாம்.

இன்னொரு விஷயம் கவனித்தால், “என்னுடைய இந்த வருடப் பிறந்த நாளுக்கு நிறைய பேரு வந்துட்டீங்க,” என்பதையும் அழுத்திக்கூறினார். அதுவும் மீடியாவின் திரித்துவிடும் செயலைக் குறிக்கத்தான். பிறந்த நாள் அன்று எந்த அறிப்பையும் நாங்கள் வெளியிடுகிறோம் என்று ரஜினியின் தரப்பில் யாரும் கூறவில்லை. ஆனால் ரஜினியின் பிறந்தநாளுக்கு இரண்டு வாரங்கள் முன்னதாக பிரபல ஊடகங்களில் “பிறந்தநாளில் முக்கிய முடிவை வெளியிடுகிறாரா?” என கேள்விக்குறியுடன் செய்திகள். அதேபோல ரஜினியின் பிறந்தநாளன்று அதே ஊடகங்கள் “ரஜினியிடமிருந்து எந்த செய்தியும் வராததால் ரசிகர்கள் ஏமாற்றம்,” என்ற செய்தியையும் வெளியிடுகிறது. யாருமே கூறாத ஒரு செய்தியை பகிர்ந்து, பின்னர் அது நடக்கவில்லை எனவும் செய்தியிடும் இந்த ஊடகங்கள் யாரை முட்டாளாக்கப் பார்க்கின்றன? இவர்களின் இந்த புத்தியைச் சுட்டிக்காட்டத்தான் அவர் அதனை இரண்டு முறை அழுத்திக் கூறினார் போலும்.

மற்றவர்களைப் போல ரஜினி எதிரிகளுக்கு மைக்கைப் பிடித்து அரை மணிநேரம் அடித்தொண்டையில் கத்தி கத்திப் பதில் சொல்லப் போவதில்லை. அவர் மீது வைக்கப்படும் அர்த்தமற்ற கேள்விகளை அவர் கண்டுகொள்ளவும் போவதில்லை. மாறாக அவர்களுக்கு காலமும், காலத்தின் போக்கில் ரஜினியின் ஏற்றமும் நிச்சயம் சிறந்த பதிலைக் கொடுக்கும். இதுவரை கொடுத்திருக்கிறது. இனிமேலும் தொடர்ந்து கொடுக்கும். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.

– முத்துசிவா
என்வழி ஸ்பெஷல்
One thought on “இதுதான் ரஜினி… இதுதான் ரஜினியின் அரசியல்!

  1. VNK

    ஊடகங்கள் நன்றாக சம்பாரிக்கிறது. அது பரவாயில்லை. அவரால் சம்பாரித்த அவர்கள் அதற்கு நன்றியோடு இருந்தால் போதுமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *