BREAKING NEWS
Search

ஒரு சாமானியனின் திருக்குறள் அனுபவம்!

திருக்குறள் இப்போ இனிக்குது!

துரைப்பாண்டி வாத்தியார் என்று ஒரு தமிழாசிரியர் எங்க ஊரில் இருக்கிறார்.  பாரதியாரைப் போல் கம்பீரமான மீசை, கதர் ஜிப்பா, வேட்டி என நிமிர்ந்த நடையோடு வரும்போது பசங்களுக்கெல்லாம் வேர்க்கும். அவர் குரலும் அதட்டலாகவே இருக்கும். கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் பற்றி மணிக் கணக்கில் உரையாற்றுவார். அவருக்கு தமிழ் தான் எல்லாத்துக்கும் மேலே.

‘முன்னோர் செய்த பாவம்’ என்பதை அண்ணன், அக்காக்கள் படித்த பள்ளியில் படிக்கும் தம்பி தங்கையர்கள் ரொம்பவே நம்புவார்கள். அந்த வகையில் நான் பாக்கியசாலி தம்பி தான்.. அண்ணன் வாங்கி வைத்திருந்த நல்ல பெயரில் துரைப்பாண்டி வாத்தியார் ‘இன்ஸ்டன்டா’ நல்ல பசங்க லிஸ்டில் என்னை சேர்த்துக் கொண்டார்.

ஒரு நாள் ‘என்னடா படிக்கப்போறே’ என்று கேட்டார். ‘விவசாயம் பார்க்கப் போறேன் சார்’ ன்னு சொன்னேன். விவசாயத்தை தாத்தாகிட்டே கத்துக்கோ தமிழையும் சேர்த்து கத்துக்கோன்னார். டியூஷனுக்கு அடி போடுறாரோன்னு தான் நெனைச்சேன். மத்த பசங்ககிட்ட கேட்டு பார்த்தா, அவர் டியூஷனே எடுக்க மாட்டார் என்றார்கள்.
‘அப்பாடா நிம்மதி’ என்று இருந்து விட்டேன். அன்று அவர் சொன்னதை கொஞ்சம் ஆர்வமாக கேட்டு தமிழை நன்றாக கற்றுக்கொண்டிருந்தால் இன்று எனக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை வந்திருக்காதுதான்.

அப்படியென்ன இக்கட்டப்பா?

‘நீங்க திருக்குறள் போட்டிக்கு ஒரு நீதிபதியாக இருக்கனும்’  டாக்டர் தீபா சொன்னபோது.. ‘இல்லைங்க என்னை விட்டுடுங்க. அதுக்கெல்லாம் வேற நல்ல ஆளாப் பாருங்க’ ன்னு தான் சொன்னேன்.

‘வேலு சார், இவர்கிட்டே சொல்லுங்க. இவரு ஜட்ஜா இருக்க மாட்டாராம்’

‘ஆமா சார் வேண்டாம். வேறு ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க செய்யுறேன்’

‘அதெல்லாம் வேண்டாம், அவங்க சொன்ன மாதிரி ஜட்ஜ் கமிட்டியிலேயே இருங்க’

வேலு சார், எப்போவுமே அவங்க அவங்களுக்கு பிடிச்சதை செய்வதற்கு, எல்லாருக்கும் சாய்ஸ் கொடுப்பாங்க.  நமக்கும் அப்படி ஒரு சாய்ஸ் கிடைக்கும்ன்னு பார்த்தா இந்த விஷயத்தில் தீர்ப்பே சொல்லிடாங்க.

இப்படி தீர்மானமா சொன்னாங்கன்னா, அவங்களுக்கு நம்ம மேலே நம்பிக்கை இருக்குன்னு அர்த்தம். மேற்கொண்டு மறுப்பது சரியில்லை என்பதால் சரி என்று சொல்லிவிட்டேன்.

திருக்குறள் போட்டிக்கு  நானும் ஒரு ஜட்ஜா? என்னுடைய திருக்குறள் ஞானம் எவ்வளவு?

ரஜினியால் கத்துக்கிட்ட குறள்…

வாய்மை எனப்படுவது யாதெனின்……. ம்ம் அடுத்து….. இப்படி அரைகுறையாக கொஞ்சம் குறள்கள் தெரியும்.. முழுசா தெரிஞ்சது,
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’

எத்தனை கவிதாலயா ரஜினி படம் பார்த்திருக்கேன்?  வள்ளுவருக்கு புகையெல்லாம் போட்டு ஆடியோ ட்ராக்கில் பாடுவாங்களே!

அப்புறமா இன்னொரு குறள். அதுவும் ரஜினியாலதான்.. எப்படித்தான் இந்த மனுஷனுக்கு, அசிங்கம் அசிங்கமா திட்டினவங்களை கூட மன்னிக்க முடியுதோ, உடனே ஒரு படத்திலேயும் கூடவே நடிக்க வச்சுகிடுறாருன்னு இவரு மேல கொஞ்சம் கோவம் கூட வந்திருக்கு.

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்”
என்ற திருக்குறளை முழுமையா பின்பற்றுகிறார் என்று காலம் கடந்து தான் புரிந்து கொண்டேன்.

‘இன்னைக்கு திருக்குறள் போட்டிக் குழுவிலே நாமளும் இருக்கோம்’ என்று முடிவான பிறகு தான், மத்த திருக்குறள்கள் ஏன் மனசிலே தங்கவில்லை என்று யோசித்து பார்த்தேன்.

“நமக்கு தெரிந்த விஷயங்களுடன் சம்மந்தப்படுத்தி குறளை புரிந்து கொள்ள பள்ளிக்கூடத்தில் முயற்சித்தது கிடையாது.. மனப்பாடச் செய்யுள் பகுதியில் உள்ள குறள்களையும் மதிப்பெண்களுக்காக உருச்செய்து படித்தேனேயன்றி புரிந்து கொண்டதாக நினைவில்லை.”

இந்த பேக்கிரவுண்டில் இருப்பவனை ஜட்ஜா இருன்னு சொன்னா உதறுமா? உதறாதா? அதுக்காக ‘முப்பது நாளில் 1330 திருக்குறள்களையும் படிப்பது எப்படின்னு ரெபிடெக்ஸ்’ புக் வாங்கி படிக்கவா முடியும்.. வள்ளுவரும் நம்மளை வேடிக்கை பார்க்கிறார். நடப்பது நடக்கட்டும் என்று இருந்து விட்டேன்.

போட்டி நாள்

போட்டி நாளும் வந்தது. 6 மணிக்கே அலாரம் வச்சிருந்தாலும் லேட்டாத்தான்தான் முழிச்சேன்.. 6 மணி அலாரம் வீக் டே மட்டும் தானாம். ஐபோனில் அப்படி ஒரு செட்டப். கவனிக்கவில்லை. அரக்க பரக்க எந்திருச்சு, ரெடியாகி கெளம்பும்போது மணி ஏழே முக்கால். சரியான ரோட்டில் போனால் 25 நிமிடம் ஆகும். 8 மணிக்கு வந்திடுங்க. எட்டரைக்கு போட்டின்னு சொல்லியிருந்தாங்க. அரைமணி நேரம் விதிமுறைகளைப் பற்றி விளக்கம் சொல்வது போன்ற ப்ரிபரேஷன் டைம்.

ப்ளேனோ போவதற்கு மெயின் ரோடு தெரியும். அங்கே சென்ற பிறகு சரியான முகவரிக்கு மட்டுமே வழி தேவை. உள்ளே போனபிறகு மத்தியானம் 12 மணி வரை போன் பண்ண முடியாது. சனிக்கிழமை இந்தியா போன் நேரமாச்சேன்னு, ஹெட்செட்டில் பேசிக்கொண்டே ஜிபிஎஸ்ஸில் அட்ரசை போட்டால் அது ஒரு பாதையை போட்டிருக்கு. பேச்சு சுவாரஸ்யத்தில் ஜிபிஎஸ்ஸை ஃபாலோ பண்ண அது குறுக்குவழின்னு ஏகப்பட்ட சிக்னல் இருக்கிற ரூட்டுக்கு கொண்டு வந்துவிட்டது. ஹைவேயை விட்டு எக்ஸிட் எடுக்கும்போது தான் தப்பு தெரிந்தது.

ஒரு வழியாக வந்து சேர்ந்து, ‘எங்கே ஜட்ஜுங்க’ ன்னு ராமுகிட்டே கேட்டு உள்ளே போகும் போது ‘சிவ சம்போ முடிஞ்சு கமல் உள்ளே வருவாரே’ கிட்டத்தட்ட அந்த மாதிரி நிலைமை.

சரி, கூட இன்னொரு ஜட்ஜ் இருப்பாங்க.. ஒரு வழியா சமாளிச்சுகிடலாம்ன்னு விதிகளை எல்லாம் வாங்கிப் பார்த்து, படிவங்களை வேக வேகமா படிச்சு பார்த்தபிறகு என்ன செய்ய வேண்டும் என்பது ஒரளவு புரிந்துவிட்டது. கிடைச்ச கொஞ்ச் நேரத்தில், டாக்டர் கிட்டேயும் என்னோட அண்டர்ஸ்டாண்டிங்கை கன்பர்ம் செய்து கொண்டேன். பண்ணிடலாம்ன்னு கொஞ்சம் தைரியம் வந்துட்டுது.

நானூற்றி ஐம்பது குறள்கள்

என்னுடன் வரும் சக நீதிபதி யாரென்று தெரிந்து கொண்டு குறிப்பிட்ட அறைக்கு வந்துவிட்டேன்.  நான் தமிழ்ப் பள்ளிக்கு புதியவன் என்பதால் பிள்ளைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ என்னை தெரிய வாய்ப்பில்லை.  ‘இந்த மனுஷன் தான் கேட்கப் போகிறாரா?’ என்று அவர்கள் மனதில் ஒடுவது போல் தெரிந்தது.

கையிலே பிள்ளைகள் சொல்லப்போகும் குறள்கள், கூடவே விளக்கவுரை, மற்றும் மதிப்பெண்கள் குறிப்பிட தயாராக அட்டவணை படிவங்கள். முழுமையாக சொன்னால் ஒரு மதிப்பெண், பாதி மட்டும் என்றால் இன்னொரு மதிப்பெண், தமிழ் விளக்கவுரை, ஆங்கில விளக்கவுரை, தெளிவுத் தன்மை என ஐந்தாறு பிரிவுகளாக மதிப்பெண் இட வேண்டும். மொத்த மதிப்பெண்கள் கணக்கிட தனியாக வேறு குழு..

திட்டமிடுதல் பற்றி இங்கே  சொல்லியாக வேண்டும். எல்லா குழுவினரும் வெவ்வேறு  நிறுவனங்களில் உயர்ந்த வேலைகளில் இருப்பவர்கள், பல்வேறு துறைகளில் திறமைசாலிகள். தங்கள் திறமைகளை ஒட்டு மொத்தமாக கொட்டி அருமையாக திட்டம், செயலாக்கம் என்று பெர்ஃபக்டாக செய்திருந்தார்கள். புத்தகம் போடும் அளவிற்கு குழுவிடமிருந்து நிறைய படிப்பினை.

ரூம் இன்சார்ஜ் வந்து எல்லாத்தையும் சரி பார்த்து விட்டு, ஹவுஸ் ரூல்ஸ் படிக்க, போட்டி ஆரம்பமானது. முதலில் வந்த மாணவி 100 குறள்கள் சொன்னார்.. முதல் இரண்டு மூன்று குறள்கள் கேட்ட பிறகு ‘ அன்று கேட்ட குறள்கள்’ எல்லாம் நினைவுக்கு வர ஆரம்பித்தது.

பிள்ளைகள் குறள் சொல்லி விட்டு விளக்கவுரை சொன்னபோது, எனக்கு அறிவுரை சொல்வது போல் உணர ஆரம்பித்து விட்டேன். மணி மணியாக வாழ்க்கை நெறி தத்துவங்களை காதால் கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

சீதா என்று ஒரு மாணவி தன்னுடைய சொந்த வார்த்தைகளில் விளக்கம் சொல்லப்போகிறேன் என்று சொல்லி விட்டு நூற்று ஐம்பது குறள்களை சொன்னார். இவர் சொன்னது என் பிள்ளையே ‘சொல்றது புரியுதா அப்பா, இப்படித்தான் நடக்கனும்’ ன்னு சொல்வது போலவே இருந்தது.

எனக்கு அமைந்த மாணவ மாணவிகள், மதிப்பெண் இடுவதற்கு கடினமான வேலை வைக்கவில்லை. சரியாக சொன்னால் வேறு என்ன வேலை?
மூன்று மணி நேரத்தில்  நானூற்றி ஐம்பது குறள்கள். சில குறள்களை இரண்டு முறை மூன்று முறை கேட்க வேண்டியிருந்தாலும், அவை எனக்காக திரும்ப சொல்லப்பட்டது போல்தான் தெரிந்தது. இதைத்தான்,
“செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்” என்று வள்ளுவர் சொல்லியிருப்பாரோ என்று தோன்றியது. பரவசம், பேரின்பம், பேரானந்தம் இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி ஒரு மகிழ்ச்சியான மனநிலை.

ஜட்ஜ் கமிட்டியில்   பேராசிரியர்கள் உள்ளிட்ட 19  க்கும் மேற்பட்டோர்கள், நீதிபதிகளாக இருந்தனர். சரியான திட்டமிடல் என்பது மிக மிக முக்கிய அம்சமாக இருந்தது..கண்,காது, கை மூன்றும் ஒருங்கிணைந்து வேலை செய்தாலே  சரியாக செய்து விட முடியும் . அந்த அளவுக்கு திறமையான ஏற்பாடுகள் அவை.

அடுத்த சவால்

மதிப்பெண் அட்டவணைகள் சரிபார்த்து ரூம் இன்சார்ஜிடம் கொடுத்தாகி விட்டது. இனி சாவகாசமா சாயங்காலம் ப்ரோக்ராம் பார்க்கலாம். ஸ்டேஜ் மேனஜரான நண்பர் தமிழ்மணி பக்கத்திலே நின்று கொண்டு, ஏதாவது சின்னச் சின்ன வேலை பார்த்து கிட்டு அப்படியே ப்ரோக்ராம் என்ஜாய் பண்ணலாம் என்றிருந்தவனுக்கு அடுத்து வந்தது ஒரு பெரிய ஷாக்.

‘இங்கே பாருங்க.. இதை நீங்கதான் மேடையிலே சொல்லப் போறீங்க’ ன்னு மெயிலில் வந்த குண்டைத் தூக்கி போட்டார் வேலு.

‘சார் வேண்டாம் , வேற நல்லாத் தமிழ் பேசுறவங்க கிட்டே சொல்லலாம்’

‘நான் சொன்னா கேட்பீங்களா, மாட்டீங்களா’

‘சரி சார்’.

அவர்  நம்ம கிட்டே இப்படி சொன்னாங்கன்னா எல்லா விஷயத்தையும் யோசித்து பார்த்து விட்டார் என்றுதான் அர்த்தம்.

சரி மேட்டர் என்னன்னு படிச்சு பார்த்தா ‘அடடா இது ரொம்பவும் ஒவரா இருக்குதப்பா.. எப்படி சமாளிக்கப் போறேடா’ ன்னு மனசாட்சி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டது.

‘சரி சமாளிப்போம்’ன்னு வடிவேலு ஸ்டைலில் நினைத்துக் கொண்டே மற்ற வேலைகளுக்குள் போய்விட்டேன்.

வேளை வந்தது ….வேலையும் வந்தது….

எனது ஆரம்பகால வேலையின் போது முதன்முறையாக நான் சீனியர் மேனஜர்களுக்கு ஃபைனான்சியல் ப்ரசன்டேஷன் பண்ண வேண்டியதிருந்தது. எப்படி பண்ணப்போகிறேன் என்று ஒரே உதறல். என் அண்ணனுக்கு போன் பண்ணி சொன்ன போது சில டிப்ஸ் கொடுத்தார். அதை அப்படியே ஃபாலோ பண்ணினதால் தப்பிச்சேன். பாராட்டுகளும் கிடைத்தது. அந்த டிப்ஸ்ஸை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொண்டு சாயங்கால விழா நடக்கும் ஹாலுக்கு சென்றேன். இந்த வாட்டி, நிகழ்ச்சி ஆரம்பிக்க பத்து நிமிஷம் முன்னாடியே வந்துட்டேன்.

தமிழ் நண்பர்கள் மற்றும் விழாக்குழுவினர்களோடு, ஹலோ சொல்லி நலம் விசாரிச்சு முடிக்கவும் விழா ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

ப்ளேனோ தமிழ்ப்பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடிந்ததும், ஹேமா வந்தாங்க, நிகழ்ச்சிகளை பத்தி சொன்னாங்க. ரம்யா வந்தாங்க ஹாலில் என்னென்ன பண்ணக்கூடாதுன்னு பட்டியலிட்டாங்க. வேலு சாரும், விசாலாட்சியும் வரவேற்புரை ஆற்றினார்கள். அடுத்து அன்னபூரணியின் நடன அமைப்பில் ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தி’ கவியரசரின் பாடலுக்கு பிள்ளைங்க நடனம் ஆடினாங்க.. இந்த எஸ்பிபி & சித்ரா பாடலை ஏற்கனவே கேட்ட போது இருந்ததை விட, நடனத்துடன் கேட்க ரொம்ப நல்லா இருந்தது.

அப்படியே விழாவில் ஒன்றிப்போய், நான் என்ன பண்ணனும்ங்கிறத கிட்டத்தட்ட மறந்துட்டேன். விசாலாட்சி ‘அடுத்து உங்க டைம் வருது, ரெடியாக இருக்கீங்களா’ ன்னு கேட்ட போது தான் நிலைமையை உணர்ந்தேன். ‘கையில் பேப்பர் இல்லை’ . ஹேமா தான் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்திருந்தாங்க. அவங்க ஸ்டேஜில் இருந்ததால் உடனடியாக வாங்க முடியவில்லை. ஒரு வழியாக வாங்கி ஒன்றிரண்டு தடவை படித்து பார்த்து விட்டேன்.

அய்யா பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் வாழ்த்து செய்திதான் அது.

திருக்குறளுக்கு உரை எழுதிய அவரின் வாழ்த்துச் செய்திக்கு குரல் கொடுக்க நான் தகுதியானவன்தானா என்று ஒரு தயக்கம். மானசீகமாக அவருக்கு மனசுக்குள்ளேயே ஒரு வணக்கம் மற்றும் நன்றி சொல்லி விட்டு மேடையில் ஏறினேன். அய்யாவின் செய்திக்கு அப்படி ஒரு வரவேற்பு. பார்வையாளர் களுக்கு சர்ப்ரைஸ், பிரமிப்பு, பெருமிதம்.  குரல் கொடுத்த எனக்கு பரவசம். ஒரு வழியா சமாளிச்சுட்டேடான்னு எனக்குள்ளே இருந்து மெலிதான குரல் வந்தது.

தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடந்தது. கவனித்து பார்த்த போது தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி, தேசிய கீதம் பாடும் வரை ஒவ்வொரு  நிகழ்ச்சிக்கும் கைத்தட்டல்கள் ஆரவாரம் என்று அனைவரும் சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

திருக்குறள் விழா – திருவள்ளுவர் விழாவை,  இப்படி எல்லோரையும் கட்டிப்போட்டுவிடும் அளவுக்கு சிறப்பாக செய்திருந்த விழாக்குழுவினரிடம் கற்றுக்கொள்ள் நிறைய விஷயங்கள் இருக்கிறது. எல்லோருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.

விழாக் குழுவினரின்  ஈடுபாடு மெய்சிலிர்க்க வைக்கிறது. திருக்குறள் அறிஞரான சிறப்பு விருந்தினரே ஆச்சரியப்பட்டு, இதே முறையில் மற்ற ஊர்களிலும் திருக்குறள் போட்டி நடத்தி தாருங்கள் என்று வேண்டுகோள் கொடுக்கும் அளவிற்கு  சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.  எனக்குள்ளும் ஒரு ஆசை துளிர் விட்டுள்ளது.. என்வழி ஆசிரியரிடமும் பேசியுள்ளேன். சரியான நேரத்தில்  அனைவருக்கும் தெரிவிக்கிறோம்

திருக்குறளுடன் ஒரே நாளில் இரண்டு பெரிய அனுபவங்கள். திரும்ப திரும்ப மனதில் நிழலாடிக்கொண்டே இருந்தது. படிக்கணும் திருக்குறளை திரும்பவும் முதலிலிருந்து படிக்கணும்.. ஏழு வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், கவியரசர் குறிப்பிட்டது போல் ‘ஏழ்கடலை புகுத்தி’ சொல்லப்பட்டுள்ள  நெறிமுறைகளை நினைவில் நிறுத்திக் கொள்ள் வேண்டும்.

திருவள்ளுவரே இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்து புத்தி புகட்டியிருப்பாரோ?. துரைப்பாண்டி வாத்தியாரிடம் திருவள்ளுவர், திருக்குறள் குறித்து நிறைய கேட்க வேண்டும்…

ஆர் தினகர், டல்லாஸிலிருந்து ‘என்வழி’க்காக…
8 thoughts on “ஒரு சாமானியனின் திருக்குறள் அனுபவம்!

 1. senthil

  எல்லாரும் திரு குறள் வழி நடப்போம்.. நாட்டை காப்போம்

 2. மிஸ்டர் பாவலன்

  மிக நல்ல கட்டுரை.

  நடேசனும், குமரனும் உங்களுடன் ஜட்ஜாக
  அமர்ந்திருந்தால் விழா இன்னும் களை கட்டி இருக்கும்.
  இந்த வலையில் ஆழ்ந்த தமிழறிவு அவர்கள்
  எழுத்தில் வெளிப் படுகிறது.

  உங்களிடம் சிறந்த எழுத்தாற்றல் இருக்கிறது.
  மேலும் இது போன்ற கட்டுரைகள் எழுதுங்கள்.
  விழாவை நேரில் பார்த்தாப்படி இருக்கிறது.
  நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 3. குமரன்

  அன்பர் தினகர் அவர்களின் பதிவு மிக அருமை.

  மெல்லிய நகைச்சுவை இழையோடும் தெள்ளிய நடை படிக்கப் படிக்கத் திகட்டாத சுவை.

  ஜட்ஜ் ஆகித் தீர்ப்புச் சொல்வது கேட்டதுண்டு.
  இவரோ தீர்ப்பைக் கேட்டு ஜட்ஜ் ஆகியிருக்கிறார்.

  நம் தினகர் உள்ளிட்டோரை “வேலை வாங்குவதென் வேலை” என்பவருக்கு “வேலு” என்ற பெயர் பொருத்தமே.

  செய்வது எதுவாகினும் செம்மையாகச் செய்யவேண்டும் என்ற உந்துதல் இருப்போருக்கு சிறுவர் போட்டிக்கு ஜட்ஜ் வேலை செய்வதும் ஒருவித படபடப்பைத் தரும் என்பதை இந்தப் பதிவு தெளிவு படுத்துகிறது.

  மிஸ்டர் பாவலன்தான் தமது வழக்கமான நையாண்டிக்கு இப்போது என்னைக் குறிவைத்திருக்கிறார். நான் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் !!!

  ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி ….
  மிஸ்டர் பாவலன் செய்வார் குமரனை வைத்து நையாண்டி!

 4. மிஸ்டர் பாவலன்

  //ஜட்ஜ் ஆகித் தீர்ப்புச் சொல்வது கேட்டதுண்டு.///

  வழக்கறிஞர் குமரன் தனது அனுபவத்தில் ஜட்ஜ் பற்றி
  எழுதி இருக்கிறார். குமரன் கோர்ட் வளாகத்தில் களம்
  இறங்கினாலே இடம் களை கட்டிவிடும். “யுவர் ஹானர்!”
  என அவரது குரல் முழக்கம் சென்னை ஹைகோர்ட்டில்
  கேட்காதவர் இருக்க முடியாது. சைதாபேட்டையில் அவர்
  பிரபலமானவர்.

  //செய்வது எதுவாகினும் செம்மையாகச் செய்யவேண்டும் என்ற உந்துதல் இருப்போருக்கு சிறுவர் போட்டிக்கு ஜட்ஜ் வேலை செய்வதும் ஒருவித படபடப்பைத் தரும் என்பதை இந்தப் பதிவு தெளிவு படுத்துகிறது.///

  மிக்க உண்மை ! தினகர் சிறப்பாக, செப்பமாக, அவர் பணியை
  செய்திருக்கிறார் என்பது அவர் கட்டுரையில் தெள்ளத் தெளிவாக
  தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  நடேசனையும், “கௌரவம்” குமரனையும் நான் பாராட்டி எழுதியது
  உண்மை வரிகள். அந்த நல்ல பெயரை அவர்கள் தக்க வைத்துக்
  கொள்ள வேண்டும்! நையாண்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  “பணியும் என்றும் பெருமை” என்னும் குறள் நெறியில் அவர்கள்
  இருவரும் நடப்பதை இந்த வலை பாராட்டுகிறது.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 5. மிஸ்டர் பாவலன்

  ” நையாண்டியாக எடுத்துக் கொள்ள வேண்டாம்”
  என நான் எழுத நினைத்தது “நையாண்டியாக
  எடுத்துக் கொள்ள வேண்டும்” என வந்து விட்டது!
  I am sorry!

  -===மிஸ்டர் பாவலன் ===-

 6. Gopi

  தினகர்,

  மிக சிறந்த கட்டுரை.. படித்து மகிழ்ந்தேன்.

  நன்றி

  கோபி சண்முகம்.

 7. வேலு

  தினகர்,

  மாறியது நெஞ்சம்…. மாற்றியவர் யாரோ? கட்டுரைக்குப் பிறகு அடுத்த சிறந்த படைப்பு இது.

  உங்கள் தமிழ் தொண்டு வாழ்க.
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்,
  விசாலாக்ஷி & வேலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *