BREAKING NEWS
Search

பாலிவுட்டின் ‘எவர் கிரீன் காதல் மன்னன்’ ராஜேஷ் கன்னா மரணம்!

பாலிவுட்டின் ‘எவர் கிரீன் காதல் மன்னன்’ ராஜேஷ் கன்னா மரணம்!

மும்பை: இந்திய திரையுலகின் மிகப் பெரிய சாதனைக் கலைஞர், காதல் மன்னன், முதல் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்பட்ட ராஜேஷ் கன்னா புதன்கிழமை மரணமடைந்தார்.

பாலிவுட்டில் ராஜேஷ் கன்னா செய்துள்ள சாதனைகள் மகத்தானவை. 1966-ல் நடிகராக அறிமுகமானார் ராஜேஷ் கன்னா.

எடுத்த எடுப்பிலேயே நாஸீர் ஹூசேன் மற்றும் ஜிபி சிப்பியின் படங்களில் ஒப்பந்தமாகி, அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராஜேஷ் கன்னா. ஆராதனா அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தப் படத்தில் அத்தனை பாடல்களும் தேவ கானங்களாகத் திகழ்ந்தன.

அதன் பிறகு எத்தனை எத்தனை படங்கள்… 1969-ம் ஆண்டு முதல் 1972 ஆண்டு வரை தொடர்ந்து 15 சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் ராஜேஷ் கன்னா.

காகா, ஆர்கே என செல்லமாக அழைக்கப்பட்ட ராஜேஷ் கன்னா, பிரபல இசையமைப்பாளர் ஆர் டி பர்மன், பாடகர் கிஷோர் குமார் ஆகிய மூவரும் இணைந்த படங்கள் வெற்றி மேல் வெற்றியைக் குவித்தன. காலத்தை வென்ற எத்தனையோ க்ளாஸிக் பாடல்களை இந்தக் கூட்டணி படைத்தது.

கதி பதங், அமர் பிரேம், அப்னா தேஷ், மேரே ஜீவன் சாத்தி, அஜ்னபி, நமக் ஹரம், கர்ம், பிர் வொஹி ராத், ஆவாஸ், ஹம் தோனோ… இப்படி எத்தனோ படங்களில் ஆர்கே – ஆர்டி-கேகே கூட்டணி வெளுத்துக் கட்டியது.

கடைசி தோற்றம்…

சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயர் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது ராஜேஷ் கன்னாவுக்குதான். 1974-லேயே, பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் ராஜேஷ் கன்னா பற்றி பிபிசி ஒரு டாகுமென்டரி தயாரித்தது.

சென்னையுடன் அவருக்கு மிக நெருக்கமான தொடர்பிருந்தது. அவரது பல படங்கள் சென்னையில்தான் எடுக்கப்பட்டன. அமரர் எம்ஜிஆருடன் அவர் நெருங்கிப் பழகியவர். அந்தப் பழக்கம், அவருக்கு தயாரிப்பாளர் சின்னப்ப தேவருடன் நட்பை ஏற்படுத்தியது.

ஹாத்தி மேரி சாத்தி என்ற படத்தை (தமிழில் நல்ல நேரம்) ராஜேஷ்கன்னாவை வைத்து தயாரித்து பெரும் வெற்றி கண்டார் தேவர். இந்தப் படத்துக்காக தேவர் பெரும் தொகையை சம்பளமாகக் கொடுக்க, அதை வைத்துதான் அவர் தனது மும்பை ஆசீர்வாத் பங்களாவைக் கட்டி முடித்தாராம்!

அன்றைய நாட்களில் ராஜேஷ் கன்னா எப்போதெல்லாம் சென்னை வருகிறாரோ, அப்போது அவர் தங்கியிருந்த ஓட்டல் வாசலில் நூற்றுக்கணக்கான பெண்கள், கல்லூரி மாணவிகள் க்யூவில் நிற்பார்களாம் அவரைப் பார்க்கவும், ஆட்டோகிராப் வாங்கவும்!

69 வயதான ராஜேஷ் கன்னா மொத்தம் 163 படங்களில் நடித்திருந்தார். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள் அல்லது வெள்ளிவிழாப் படங்கள்தான்.

1992 முதல் 1996 வரை காங்கிரஸ் கட்சியின் எம்பியாகவும் பதவி வகித்தவர் ராஜேஷ் கன்னா.

குடும்பம்…

நடிகை டிம்பிள் கபாடியாவை 1973-ல் மணந்தார் ராஜேஷ் கன்னா. ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என இரு மகள்கள் பிறந்தனர். ஆனால் 1984-ம் ஆண்டு இருவரும் பிரிந்ததாக அறிவித்தனர். ஆனால் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. சில ஆண்டுகள் கழித்து, இருவரும் கசப்புகளை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். மகள் ட்விங்கிள் கன்னாவை பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமாருக்கும், இன்னொரு மகளை லண்டன் தொழிலதிபருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

ராஜேஷ் கன்னா கடந்த சில மாதங்களாக உடல் நலமின்றி இருந்தார். உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி 4 நாட்கள் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அவரது உடல் முழு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 20 தினங்களுக்குள் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு வார சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

ஆனால் அவர் உணவு உண்பதையே சுத்தமாக நிறுத்திவிட்டார். இதனால் அவர் உடல்நிலை மோசமாக, கடந்த ஜூலை 14-ம் தேதி மூன்றாவது முறையாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர், புதன்கிழமை பிற்பகலில் மனைவி டிம்பிள் கபாடியா, மகள்கள் அருகிலிருக்க மரணத்தைத் தழுவினார்.

கேன்சர்?

அவரது ஈரல் பாதிக்கப்பட்டிருந்ததாக, பின்னர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர்தான், ராஜேஷ்கன்னா கேன்சரில் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தகவல் வெளியானது.

ராஜேஷ்கன்னாவின் உடல் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங்

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி உள்பட ஏராளமான தலைவர்கள் ராஜேஷ்கன்னா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியும் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் கண்ணீர் அஞ்சலி

ராஜேஷ் கன்னாவின் மரணம் பாலிவுட்டை மட்டுமல்ல, இந்திய சினிமாவையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

பாலிவுட் சாதனையாளர்கள் அமிதாப் பச்சன், ரிஷிகபூர், ஷாரூக்கான், சல்மான்கான் என பலரும் அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ராஜேஷ் கன்னாவின் நினைவாக…

 

-என்வழி செய்திகள்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *