BREAKING NEWS
Search

தேமுதிக எம்எல்ஏக்கள் செய்வதை நீங்களும் ரசித்து ஆதரிக்கிறீர்களா?

தேமுதிக எம்எல்ஏக்கள் செய்வது அப்பட்டமான துரோகம்… கட்சி தலைமைக்கு மட்டுமல்ல, மக்களுக்கும்தான்!

jaya-arun-pandiyan-600
ன்னால் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற, விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவை அடுத்த தேர்தலுக்குள் கிட்டத்தட்ட இல்லாமலாக்குவது அல்லது மக்களிடம் இன்னும் நிமிர்ந்து நிற்க முடியாத இமேஜுடன் உள்ள திமுக பக்கம் துரத்துவது…. இந்த இரண்டிலுமே கிட்டத்தட்ட ஜெயித்துவிடுவார் போலிருக்கிறது முதல்வர் ஜெயலலிதா!

வெற்றிகரமாக தேமுதிகவின் 7வது எம்எல்ஏவும் தொகுதிப் பிரச்சினைக்காக ‘அம்மா’வைச் சந்தித்து ஆதரவு தந்து ஆசி பெற்றுத் திரும்பியிருக்கிறார். அவர் மாஃபா பாண்டியராஜன். விருதுநகர் தொகுதி எம்எல்ஏ.

படித்த இளைஞர்களுக்கான தேமுதிகவின் முகம் என விஜயகாந்த் பெரிதும் நம்பியது இந்த பாண்டியராஜனைத்தான். இவர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதில் நிபுணத்துவம் மிக்கவர் என்று பெரிதாக பாராட்டி போகுமிடமெல்லாம் அறிமுகப்படுத்தி வந்தார். அவர் செய்வது வர்த்தக ரீதியிலான ஒரு வேலைதான், அதில் கோடிகளில் பணம் புழங்குகிறது என்பதை அறிந்த பிறகும். மக்கள் சேவகனாக இந்த வேலைவாய்ப்பு வியாபாரியால் ஒருபோதும் இருக்க முடியாது என்பதை பாண்டியராஜனே நிரூபித்திருக்கிறார்.

விஜயகாந்த் கட்சி நல்லதா கெட்டதா… அந்தக் கட்சி தேவையா இல்லையா என்பதல்ல இங்கே சர்ச்சை.

விஜயகாந்த் கடந்த தேர்தலில் தனக்கு நெருக்கமானவர்கள், தன்னை எந்த சூழலிலும் கைவிட்டுப் போகாதவர்கள் என்று நம்பிய நான்கு பேர், கட்சிக்குள் இருந்து கொண்டே விஜயகாந்தை நிரடும் பெரும் கடப்பாறைகளாக மாறியுள்ளனர்.

பேராவூரணி தொகுதி எம்எல்ஏ நடிகர் அருண்பாண்டியன் அதில் முக்கியமானவர். அவரை திரையுலகில் பிரபல முகமாகப் பதிய வைத்தவர் விஜயகாந்த்தான். அரசியலில் எடுத்த எடுப்பிலேயே எம்எல்ஏ ஆக்கினார். அதற்கான பலனை அடுத்த சில மாதங்களில் காட்டி அம்மா விசுவாசியானார் அருண்பாண்டியன்.

அடுத்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இவரும் கேப்டன் கேப்டன் என உருக, அதற்கு இணையாக மைக்கேல் ராயப்பன் தகர்க்க முடியாத தேமுதிகவின் தூண் என்று வர்ணித்தார் விஜய்காந்த். அருண்பாண்டியன் பாணியில் எதிர்முகாம் தாவினார் இந்த மைக்கேல் ராயப்பன்.

இன்னொரு முக்கியமான எம்எல்ஏ, சுந்தர்ராஜன். இவரையும் கூட விஜயகாந்த்தான் சினிமாவில் கிராமத்து பண்ணையார் அல்லது பஞ்சாயத்து பேசுபவராக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார். தவசி போன்ற படங்களில் இவரைப் பார்க்கலாம். அரசியல் வட்டத்தில் யாரென்றே தெரியாத சுந்தரராஜனையும் எம்எல்ஏ ஆக்கினார் விஜயகாந்த். அவரும் தொகுதிப் பிரச்சினை பற்றி முதல்வருடன் பேசப் போனதாகப் போய்விட்டு வந்தவர், அடுத்து விஜயகாந்தை சகட்டு மேனிக்கு திட்டி வைத்தார்.

இப்போது மாஃபா பாண்டியராஜன்.

pandiyarajanjayalalitha1a

நிறைய பேர், இவர்களையெல்லாம் விஜயகாந்தே அதிமுக கோட்டைக்குள் அனுப்பி வேவு பார்க்கிறாரோ என்று கூடப் பேசினர். ஆனால் உண்மை அதுவல்ல. தனிப்பட்ட ஆதாயங்களே இந்த ‘தொகுதிப் பிரச்சினை பேச்சு’க்களின் பின்னணி என்பது புரிந்து போனது.

இவர்கள் எம்எல்ஏ ஆனது சர்வ நிச்சயமாக இவர்களின் தனிப்பட்ட செல்வாக்கால் அல்ல. விஜயகாந்த் என்ற பிரபலத்தின் ஆதரவு, கூடவே அதிமுகவின் செல்வாக்கு மட்டுமே. ஆனால் இவர்கள் இடத்தில் ஒரு எக்ஸ் ஒய்யை விஜய்காந்த் நிறுத்தியிருந்தாலும் வெற்றி சாத்தியப்பட்டிருக்கும். நிலைமை அப்படி.

‘இவர்கள் அதைச் செய்வார்கள், இதைச் செய்வார்கள்… முதல்முறை களத்தில் நிற்கிறார்கள்.. தப்பு பண்ண மாட்டார்கள்.. ஓட்டுப் போட்டுதான் பாருங்களேன்’, என வீதியாக பிரச்சாரம் செய்த விஜயகாந்துக்கு மட்டுமல்ல, அதைக் கொஞ்சமே கொஞ்சமாவது நம்பி வாக்களித்த மக்களுக்கும் பெரும் நம்பிக்கை துரோகத்தை இழைக்கிறார்கள்.

விஜயகாந்த் கட்சி எனும் பெருங்காயம், அதிமுக என்ற கடலில் கரைந்து காணாமல் போவதிலோ… விஜயகாந்தின் அரசியல் முடிவுக்கு வருவதிலோ நமக்கு வருத்தமோ சந்தோஷமோ இல்லை என்றாலும், மிக மோசமான அரசியல் சூழலுக்கு வித்திடுகிறது இந்த முதல்வருடன் தொகுதி பிரச்சினை குறித்து சந்திக்கப் போய் அப்படியே அவர் கட்சியில் ஐக்கியமாகும் போக்கு!

முதல் முறை எம்எல்ஏவாகி, சில வசதி வாய்ப்புகளை அனுபவித்த இவர்களே இத்தனை பெரிய தில்லாலங்கிடி வேலைகளைச் செய்யும்போது, இதே திருகுதாள வேலைகளில் மூழ்கி கரை கண்ட முதலைகளின் அயோக்கியத்தனங்களை எண்ணிப் பார்க்கவும் முடிகிறதா!!

இதற்கெல்லாம் ஊற்றுக்கண் எதுவென யோசித்துப் பார்த்தால்… சம கால அரசியலில் திமுக தலைவர் கலைஞர்தான். அதுவும் மிக சமீபமாகவே அதை இளம் தலைமுறை அரசியல் ஆர்வலர்கள் கண்கூடாகப் பார்க்க நேர்ந்தது.

அனிதா ‘அண்ணாச்சி’, முத்துசாமி என பலரை அவர்கள் இழுத்து மைனாரிட்டி திமுக அரசை (ஜெ தினசரி உச்சரித்த வார்த்தை இது!) மெஜாரிட்டியாக்க முயற்சித்தனர். மதிமுக என்ற கட்சியை சுத்தமாக அழிக்கவும் இதே உத்தியைப் பயன்படுத்தினர். அப்போதல்லாம் தினந்தோறும் யாராவது மாற்றுக்கட்சி எம்எல்ஏ அல்லது எம்பி அறிவாலயத்துக்கு வருவதாக வதந்தி கிளம்பும்… நிருபர்கள் கேமரா படையோடு அறிவாலய வாசலில் தவம் கிடப்பார்கள்.

அந்த அரசியல் நாகரீகம் அப்படியே தொடர்கிறது, இன்னும் கொஞ்சம் தீவிரத் தன்மையுடன்… ஆனால் ஒன்றைக் கவனியுங்கள்… இந்த அணி மாறும் படலம், அரசியல் பச்சோந்தித்தனத்தை மக்களும் மீடியாவும் கண்டிக்கவில்லை. ஒருவித பொழுதுபோக்கு மனப்பான்மையுடன் கொண்டாடுகிறார்கள்… ‘விஜயகாந்த கட்சியிலிருந்து இன்னும் 6 பேர் வரப் போகிறார்களாமே… அவர்கள் யார் யார்… எப்போது அடுத்த சந்திப்பு நடக்கும்?’ என்ற கேள்விகளுடன்… இந்த மனப்பான்மைதான் மிச்சமிருக்கிற எம்எல்ஏக்களையும் தொகுதிப் பிரச்சினைக்காக முதல்வரைப் பார்க்க தூண்டிவிடுகிறது.

முன்னெப்போதையும் விட இதுதான் இன்னும் மோசம்!

-விதுரன்
என்வழி ஸ்பெஷல்
17 thoughts on “தேமுதிக எம்எல்ஏக்கள் செய்வதை நீங்களும் ரசித்து ஆதரிக்கிறீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *