BREAKING NEWS
Search

காவிரி வழக்குத் தீர்ப்பு தமிழகத்துக்கு ஏமாற்றமே! – தலைவர் ரஜினிகாந்த் கருத்து

காவிரி தீர்ப்பு தமிழகத்துக்கு ஏமாற்றம்! – ரஜினி

சென்னை: காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு ஏமாற்றமளிப்பதாக தலைவர் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.

இந்நிலையில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு 192-க்கு பதில் 177.25 டிஎம்சி தண்ணீர்தான் கிடைக்கும். தமிழகத்திற்கு ஏற்கனவே திறக்கப்பட்டு வந்த நீரில் 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டுள்ளது. இந்த 14.75 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 5 டி.எம்.சி., தண்ணீரை பெங்களூருவுக்கு குடிநீருக்காக வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி இதுவரை ஆண்டிற்கு, தமிழகத்திற்கு 492 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, இனி தமிழகத்திற்கு ஆண்டிற்கு 404.1 டிஎம்சி மட்டுமே கிடைக்கும்.

கர்நாடகாவிற்கு 184.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். கேரளா மற்றும் புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவில் மாற்றமில்லை என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. கேரளாவுக்கு 30 டிஎம்சி.,க்கும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் கிடைக்கும்.

இந்தத் தீர்ப்பின் மூலம் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன. இறுதித் தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதின்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியானதிலிருந்து பல்வேறு கருத்துகள் பல தரப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வெளியாகி உள்ளது.

ஆனால் ரஜினி நேற்று எதுவும் உடனடியாகச் சொல்லவில்லை. அவர் மீடியாக்களை சந்திக்கவும் இல்லை. நேற்று மாலை 6 மணிக்கு மேல் ட்விட்டர் மூலம் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் ரஜினி.

அவரது ட்விட்டரில், “காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

-என்வழி




One thought on “காவிரி வழக்குத் தீர்ப்பு தமிழகத்துக்கு ஏமாற்றமே! – தலைவர் ரஜினிகாந்த் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *