BREAKING NEWS
Search

எப்பவும் ஒரே பேச்சு… அதான் தலைவர் ரஜினி!

அன்னைக்கு சொன்னதையே இன்னைக்கும் சொல்லும் தலைவர் ரஜினி… இதுக்காகவே இவர் முதல்வர் ஆகலாம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாரணாசியில் பேட்ட படப்பிடிப்பில் இருந்த 40 நாட்களும், ரஜினி மக்கள் மன்றம் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி போன்ற துணை அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அறிவிப்பையும் உடனுக்குடன் ரஜினி மக்கள் மன்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டும் வந்துள்ளனர். தற்போது இருக்கும் புதிதாக வந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும், இப்படி அறிக்கைகளை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலோ அல்லது ட்விட்டர் பக்கத்திலோ வெளியிட்டதாகத் தெரியவில்லை.

ரஜினிகாந்த் வெளிப்படைத் தன்மையை அறிமுகப்படுத்தியுள்ளதை இதில் காணமுடிகிறது. அதேபோல், ஒழுங்கு கட்டுப்பாடு சார்ந்த நீக்கங்களும் வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதில் தான் நீக்கப்பட்ட பலருக்கும் நெருடல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாராட்டுகள் பப்ளிக்காக இருக்கும் போது தண்டிப்பும் கண்டிப்பும் வெளிப்படையாக இருப்பதும் நியாயம்தானே.. தான் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படக்கூடாது என்று மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறதல்லவா? ஒரு சில ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளானவர்கள் ஊடகங்களுக்கு பால் வார்த்து பேட்டி கொடுத்ததால் ரஜினிகாந்த் நேரடியாகவே சாட்டையை சுழட்டியுள்ளார்.

அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் அவருடைய உத்தரவு பேரிலேயே எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தவர், பணம் சம்பாதிக்க ரஜினி மக்கள் மன்றத்திற்கு வரவேண்டாம் என்று மீண்டும் கர்ஜித்துள்ளார். கடந்த மே மாதம் அவர் உதித்த முதல் அரசியல் கொள்கையே இது. மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளார். ஒரு சில நிர்வாகிகள் மாவட்ட, நகர, ஒன்றிய பதவிகளுக்கு விலை நிர்ணயித்து வசூலித்ததாக ரஜினி ரசிகர்கள் சிலர் நம்மிடமே வருத்தப்பட்டது உண்டு. நம்மைப் போன்றவர்களுக்கே அது தெரியும் போது மன்றத் தலைவருக்கு தெரியாமல் போகுமா என்ன? உறுதியாக தெரிந்ததால் தான் முளையிலேயே கிள்ள நடவடிக்கை எடுத்துள்ளார் போலும்.

குடும்பத்தை விட்டு விட்டு மன்றப் பணிகளுக்கு வருவதை வரவேற்க மாட்டேன் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளார். குடும்பம் பெற்றோர்கள்தான் முதலில் என்று நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கூறி வருபவர், அரசியல் கட்சி ஆரம்பித்ததும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் குடும்பம் முக்கியம் என்கிறாரே! இந்த ஒரு காரணத்திற்காகவே பெண்களும் முதியவர்களும் நிச்சயம் ரஜினிகாந்த் கட்சிக்கு வாக்களிப்பார்கள்.

அன்றைக்குச் சொன்னைதை மீண்டும் நினைவுபடுத்தி இன்றைக்கும் சொல்கிறாரே.. அதாவது ஒரே சொல் அதே சொல் என்று உறுதியாக இருக்கிறாரே..! அந்த நேர்மை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே வேறு எந்த அரசியல்வாதிக்காவது இருக்கிறதா? இந்த ஒரு தகுதிக்காவது ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஆக வேண்டும்.

– ஆர்டிஎக்ஸ்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *