BREAKING NEWS
Search

ராஜபக்சவுக்கு தமிழர்கள் வழங்கிய தண்டனை – கதிர்

ராஜபக்சவுக்கு தமிழர்கள் வழங்கிய தண்டனை
 
-கதிர்
kathirதெரிந்த சைத்தான் தோற்கடிக்கப்பட்டு, தெரியாத தேவதை தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவது சரியா தவறா என்று தெரியவில்லை. அண்டை நாட்டிலும் ஜனநாயகம் வெற்றி பெற்றிருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்வோம்.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வி அடைந்திருக்கிறார். இப்படி நடக்கும் என்று இரண்டு மாதம் முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் சிரிப்பு வந்திருக்கும். நிச்சயமாக அவர்தான் மீண்டும் வருவார் என்று எல்லாரும் நம்பினார்கள். அவரது நம்பிக்கைக்குரிய சீடர் சிரிசேனா திடீரென எதிர் வரிசைக்கு தாவியதுதான் இந்த தேர்தலின் எதிர்பாராத திருப்புமுனை.

இரண்டு முறை அதிபராக இருந்தவர் ராஜபக்ச. மூன்றாவது முறையாக அந்த நாற்காலியில் தொடர விரும்பினார். ஒரு அதிபர் இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்று இலங்கை அரசியல் சாசனம் சொல்கிறது. அந்த சட்ட விதியை ராஜபக்ச திருத்தினார். தலைவிதியை திருத்தி எழுத இயலவில்லை. என்ன அதிகாரம் இருந்து என்ன பயன்? மக்கள் மனது வைத்தால்தான் மகுடம் நீடிக்கும். அதுதான் ஜனநாயகத்தின் மாண்பு.

இலங்கை மக்கள் ஜனாதிபதி என்கிறார்கள். நாம் அதிபர் என்கிறோம். சிலருக்கு இதனால் குழப்பம். நேரடியாக மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்வது அதிபர். மக்கள் தேர்வு செய்த எம்.பி., எம்.எல்.ஏ மூலமாக தேர்ந்து எடுக்கப்படுபவர் ஜனாதிபதி. அதிபருக்கு அதிகாரம் அதிகம். எக்சிகியூடிவ் பிரசிடென்ட் என்பார்கள். ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைவு. நாடாளுமன்றம், பிரதமர், அமைச்சரவை சொல்வதை ஜனாதிபதி மீறமுடியாது.

இலங்கை அப்படி இருந்த நாடுதான். 1978ல் ஜெயவர்தன அதை மாற்றி, முதல் அதிபர் ஆனார். சந்திரிகாவை பிரதமராக நியமித்தார். சந்திரிகா அதிபர் பதவிக்கு போட்டியிட்டபோது, அதிபர் பதவியை ஜனாதிபதி பதவியாக மாற்றி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீட்டுத் தருவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் நிறைவேற்றவில்லை.

மஹிந்த ராஜபக்ச அப்படி வாக்கு ஏதும் கொடுத்தவரில்லை. 1994 முதல் ஏழு ஆண்டுகள் தொழில் மற்றும் மீன் துறை அமைச்சராக ராஜபக்ச பதவி வகித்தார். கொடுத்த வாக்குறுதியை சந்திரிகா ஏன் நிறைவேற்றவில்லை என்பதை அருகில் இருந்து கவனித்தார். அதிகாரம் கையில் இருக்கும்வரைதான் செல்வாக்கு செல்லுபடி ஆகும் என்பதைப் புரிந்து கொண்டார். 2005 தேர்தல் அவரை முதல் முறையாக அதிபர் மாளிகையில் குடியமர்த்திய வேளையில், ஆயுள் உள்ளவரை அந்த மாளிகையை காலி செய்யாதிருக்க என்ன வழி என யோசித்தார். அதற்காக யாரையும் காலி செய்ய அப்போதிருந்தே அவர் தயாரானார்.

கொழும்பில் சட்டக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் அரசியல் நெளிவு சுழிவுகளை அவர் அனுபவங்களாக கற்றறிந்தார். 24 வயதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எம்.பி.யானபோது, நாடாளுமன்றத்தில் மோஸ்ட் ஜூனியர் அவர். அப்பா டான் ஆல்வின் ராஜபக்சவின் தொகுதியில் நின்று வென்றிருந்தார். அப்பா மட்டுமல்ல, தாத்தா டான் டேவிட் ராஜபக்ச காலத்தில் இருந்தே ஹம்பந்தோட்டா மாவட்டத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக குடும்பக் கொடி உயரத்தில் பறந்தது. ஆனால் தேசிய அரசியலில் சேனநாயக, பண்டாரநாயக குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. அதை உடைக்க ஆசை வளர்த்தார் மஹிந்த ராஜபக்ச.

அதிபர் தேர்தலில் கால் பதித்தபோது ‘பயங்கரவாதத்தை அடியோடு வீழ்த்திக் காட்டுகிறேன்’ என்று சபதம் செய்தார். நாட்டின் பெருவாரியான மக்கள் தன் பின்னால் திரள்வார்கள் என்று நம்பினார். அது பொய்க்கவில்லை. 2009ல் விடுதலைப் புலிகளுடன் ராணுவம் நடத்திய யுத்தம் உச்ச கட்டத்தை எட்டியபோது, மனித உரிமை மீறல் புகார்கள் எட்டுத் திக்கில் இருந்தும் அவர் மீது பாய்ந்தன. புலியின் வாலை பிடித்து விட்டேன்; இப்போது விட்டால் என்னை அது அடித்து விடும் என்று சொல்லி பிடிவாதமாக நின்றார். கால் நூற்றாண்டு காலமாக தொடர்ந்த வன்முறை முடிவுக்கு வந்தது என்று சிங்கள மக்கள் அவரை கொண்டாடினார்கள். அந்த சாக்கில் அதிபர் தேர்தலில் இரண்டாம் முறை வென்றார்.

வீழ்ச்சிக்கான விதைகளை அன்று முதல் அவரே தூவத் தொடங்கினார். தமிழர்களை முகாம்களில் இருந்து விடுவித்து அவரவர் நிலத்தையும் வீடுகளையும் ஒப்படைத்து மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்தவர் அதை நிறைவேற்றவில்லை. இந்தியா நெருக்கடி கொடுத்தபோது பாகிஸ்தானை புது நண்பனாக அறிவித்தார். போரில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க மேலைநாடுகள் அழுத்தம் கொடுத்தபோது, அவை வில்லனாக கருதும் சீனாவுடன் இவர் கைகோர்த்தார். இந்தியாவுக்கு எதிராக சீன முதலீடுகளுக்கும் கடற்படைக்கும் கதவுகளை விரியத் திறந்தார். தமிழர்களோடு மீண்டும் நெருக்கமாகும் முஸ்லிம்களுக்கு எதிரான பவுத்த பிக்குகள் தாக்குதலை காணாததுபோல் திரும்பிக் கொண்டார்.

வெளியுறவை இவ்வாறு சீர்கெடுத்த அதேவேளையில், சொந்த மண்ணில் ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தினார். அதிபரின் அதிகாரங்களை பெருக்கி, அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் அறிமுகம் செய்தார். அதை விமர்சித்த தலைமை நீதிபதியை விரட்டியடித்தார். எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் வாய்ப்பூட்டு மாட்டினார். அமைச்சர், சபாநாயகர், நீதிபதி, தூதர், செயலாளர் போன்ற அதிகாரமிக்க உயர் பதவிகளை குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்களைக் கொண்டு நிரப்பினார். நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்த விசுவாசிகள் வெறுத்துப் போனார்கள்.

கட் அவுட் கலாசாரத்தை அறிமுகம் செய்து தன்னை ஒரு சூப்பர் லீடராக சித்தரித்தார். நிர்வாகத்தில் ஊழல் ஊறித் திளைத்தது. பாரம்பரியமான இந்திய அரசியலை தமிழ்நாட்டு அரசியல் பாதைக்கு திருப்பி விட்டார் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்ததை பொருட்படுத்தவில்லை. இந்தியாவில் காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமைகள் செய்த தவறுகள் மொத்தத்தையும் ஒற்றை ஆளாக இலங்கையில் செய்து நாட்டை நாசமாக்கி சாதனை படைத்திருக்கிறார் மஹிந்த என்று ஊடகங்கள் கேலி செய்தன.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெயர் கெட்டுவிட்டது என்பதை ராஜபக்ச உணர்ந்தார். ஆனால், சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணம் அவருக்கு சுகம் தந்தது. உளவு அமைப்பிடம் கருத்து கேட்டபோது, உடனே தேர்தலை நடத்தினால் குறைந்த ஓட்டு வித்யாசத்திலாவது நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்; தாமதித்தால் ஜெயிப்பது கஷ்டம் என்று அட்வைஸ் கிடைத்தது. ஆகவே இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தபோதே அதிபர் தேர்தல் தேதியை அறிவித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நாடு பிளவு படாமல் காத்த துணிச்சலான தலைவன் என்ற பெயர் இருப்பதால், இத்தனைக்கு பிறகும் சிங்களர்களுக்கு அவரை கைவிட மனமில்லை.

மைத்ரிபால சிரிசேன திடீரென அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து, ஆளும் கட்சியுடன் இருந்த நீண்டகால உறவை முறித்து, வெளியேறிய வினாடியில்தான் ராஜபக்ச முகத்தில் முதல் தடவையாக அதிர்ச்சி படர்ந்தது. ஒற்றுமை இல்லாமல் சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளை இணைக்கும் காந்தம் ஆனார் சிரிசேன. ஜாக்கிரதையாகவே காய்களை நகர்த்தினார்.rajapaksa1

‘பிரிவினை கோஷம் மீண்டும் தலையெடுக்க விடமாட்டேன். வடக்கில் இருந்து ராணுவம் வாபஸ் ஆகாது. ராஜபக்சவை சர்வதேச கோர்ட் விசாரிக்க அனுமதிக்க மாட்டேன். பவுத்த மதத்தை காப்பேன்’ என்று வாக்குறுதி அளித்து ராஜபக்ச ரசிகர்கள் மனதை குளிரவைத்தார். அதே போல, ‘ஜனநாயக அமைப்புகளுக்கு புத்துயிர் அளிப்பேன். அதிபரின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மீட்பேன். பிரதமர் ஆட்சிமுறைக்கு திரும்புவேன். ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் ஆக்குவேன். 100 நாட்களில் இவற்றை செய்து முடிப்பேன்’ எனக்கூறி ராஜபக்ச மீது கடுப்பில் இருந்த சிங்களர்களையும் அறிவுஜீவிகளையும் ஈர்த்தார்.

சீனா பக்கம் சாய்ந்த நிலையை மாற்றி, இந்தியாவுடன் உறவை பலப்படுத்துவேன். உடமைகளை மீட்டுத் தருவேன் என்று சொல்லி தமிழர்கள் ஆதரவையும் வேண்டினார். இதன் பிறகுதான் முஸ்லிம் அமைப்புகளும் தமிழர் கூட்டமைப்பும் இடதுசாரி இயக்கங்களும் சிரிசேன பக்கம் வந்தன. இதற்கிடையே, அதிபர் தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் சார்பிலும் தமிழ்நாட்டு தமிழர்கள் சார்பிலும் சிலர் சென்னையில் கூடி விடுத்த வேண்டுகோள் வெளியானது.

நல்லவேளையாக இலங்கைவாழ் தமிழர்கள் அந்த தவறைச் செய்யவில்லை. ஜனநாயக அமைப்பில் நம்பிக்கை வைத்து தேர்தலில் முழுமையாக பங்கேற்று தங்கள் விருப்பத்தையும் (வெறுப்பை, கோபத்தை என்பது இன்னும் பொருத்தம்) பலத்தையும் உலகுக்கு காட்டியுள்ளனர்.

ஆம், இலங்கைவாழ் தமிழர்கள் ராஜபக்சவை தண்டித்துள்ளனர். பழி தீர்த்துவிட்டதாகவும் சொல்லலாம். அவர்கள் சிரிசேனவுக்கு ஓட்டளித்தனர் என்பதைவிட ராஜபக்சவுக்கு எதிராக ஓட்டளித்தனர் என்பதுதான் சரி. நாடு முழுமைக்குமான ஓட்டுப் பதிவுப் பட்டியலை பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக தமிழர்கள் தீர்ப்பு வழங்கியிருப்பது தெளிவாக தெரிகிறது. ஒருவேளை அவர்கள் ஒதுங்கி நின்றிருந்தால் ராஜபக்ச கனவு சுலபமாக நனவாகி இருக்கும் என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பதிவான மொத்த வாக்குகள் 1 கோடியே 22 லட்சத்து 64 ஆயிரத்து 377. சிரிசேனா பெற்றது 62 லட்சத்து 17 ஆயிரத்து 162. ராஜபக்ச 57,68,090. வித்தியாசம் 4 லட்சத்து 49 ஆயிரத்து சில்லரை. அதாவது சிங்களர் ஓட்டுகள் ராஜபக்சவுக்கும் சிரிசேனாவுக்கும் ஏறத்தாழ சம அளவில் கிடைத்துள்ளன. தமிழர்களின் ஓட்டுகளே ராஜபக்சவின் வீழ்ச்சியையும் சிரிசேனாவின் வெற்றியையும் தீர்மானித்துள்ளன.

இந்த தேர்தல் முடிவால் தமிழர்கள் வாழ்க்கையில் வசந்தம் திரும்பும் என சொல்ல முடியாதுதான். என்றாலும் நல்ல தொடக்கம். சிரிசேனா தன் வெற்றிக்கு காரணமானவர்களை அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிட முடியாது. நாடாளுமன்றம் சுதந்திரமாக செயல்படும்போது அனைத்து மக்களின் குரலும் எதிரொலிக்கும். இந்தியா பக்குவமாக செயல்பட்டால் வழிக்கு கொண்டுவரலாம்.

வன்முறை இல்லாமல் அமைதியாக நடந்த தேர்தலும், முழுமையாக முடிவு தெரியுமுன்பே புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்து அதிபர் மாளிகையை விட்டு ராஜபக்ச வெளியேறியதும், ஆரோக்கியமான அறிகுறிகள். இங்கிருப்பவர்கள் ஓவராகக் கொண்டாடி சிங்களர்கள் மனதில் பீதியை கிளப்பி அதன் மூலம் சிரிசேனாவுக்கு நெருக்கடி ஏற்படாதிருக்க வேண்டும் என்று டெல்லி பிரார்த்திக்கிறது.

-நன்றி: ஒன்இந்தியா
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *