BREAKING NEWS
Search

சிறுநீரை குடிக்க வைத்து மாணவர் சித்ரவதை – தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது

சிறுநீரை குடிக்க வைத்து மாணவர் சித்ரவதை – தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது

பெரம்பலூர்: சிறுநீரை குடிக்க வைத்து வற்புறுத்தி மாணவரை சித்ரவதை செய்த பள்ளி ஆசிரியர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அகரம்சிகூரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பரத்ராஜ் (வயது 16) என்ற மாணவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்த தேசிங்குராஜன் மகனான பரத்ராஜ் பள்ளி அருகில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தான்.

கடந்த 19-ந் தேதி இரவு விடுதியில் மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தனர். அப்போது பரத்ராஜ் சிறுநீர் கழிக்க வெளியில் செல்ல அனுமதிக்குமாறு அங்கு இருந்த ஆசிரியர்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள் படிக்காமல் அடிக்கடி வெளியில் செல்கிறாயா என கேட்டு பரத்ராஜை சிறுநீரை இங்கேயே குடி என்று வற்புறுத்தி பிரம்பால் அடித்ததாகவும் புகார் செய்யப்பட்டது.

அடுத்த நாள் மாணவன் பரத்ராஜ் விடுதியில் இருந்து வெளியேறி சொந்த ஊரான கும்பகோணம் சென்று விட்டான். இந்த சம்பவம் குறித்து மாணவனின் தந்தை தேசிங்குராஜன் கும்பகோணம் மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனே கும்பகோணம் போலீசார் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசுக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் விடுதிக்கும் தகவல் தெரிவித்தனர்.

பரத்ராஜ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மல்லிகா, மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் நேற்று காலை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கருப்பையா, சக்திவேல், இளையராஜா ஆகிய 3 பேரும் மாணவன் பரத்ராஜை அடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மல்லிகா உத்தரவிட்டார்.

தலைமை ஆசிரியர் மறுப்பு

இதற்கிடையே கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் பரத்ராஜை பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு நேற்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மாணவன் பரத்ராஜ்க்கு ஏற்கனவே புகையிலை போடும் பழக்கம் இருந்து உள்ளது. ஹேன்ஸ் எனப்படும் புகையிலை பாக்கெட்டை மாணவன் பரத்ராஜ் பையில் வைத்து இருந்ததை மற்ற மாணவர்கள் பார்த்து ஆசிரியர்களிடம் சொல்லி உள்ளனர். இததைத்தொடர்ந்து அந்த மாணவனை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்தனர். இனிமேல் புகையிலை போடக்கூடாது என்று அறிவுறுத்தினர். ஆசிரியர்கள் கண்டித்த பின்னரும் அந்த புகையிலை பாக்கெட்டை அவன் தூக்கிப்போடாமல் மறைத்து வைத்து இருந்ததால் மாணவனை மீண்டும் கண்டித்த ஆசிரியர்கள் புகையிலை பாக்கெட்டை பறித்துக்கொண்டதுடன் மாணவனையும் அடித்தனர். ஆனால் சிறுநீரை குடிக்க சொல்லி சித்ரவதை செய்யதாக சொல்வதில் சிறிதளவும் உண்மை இல்லை,” என்றார்.

ஆனால் ஆசிரியர்கள் கடுமையாக அடித்ததில், அந்த மாணவனின் விரல்கள், தொடைகள் கடுமையாக வீங்கியிருந்தது குறித்து அவர் எதுவும் பேசவில்லை!

மாணவனை சிறுநீர் குடிக்க வைத்து அடித்த தனியார் பள்ளி ஆசிரியர்கள்

இந்த நிலையில் நேற்று மதியம் ஆசிரியர்கள் கருப்பையா, சக்திவேல், இளையராஜா ஆகிய 3 பேரையும் மங்களமேடு போலீசார் கைது செய்தனர். மாணவன் பரத்ராஜை அடித்து துன்புறுத்திய வழக்கில் இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பள்ளிகள் என்பவை மாணவர்களை பண்புள்ளவர்களாக மாற்றத்தான். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலான ஆசிரியர்கள் வக்கிர புத்தி கொண்டவர்களாகவும்,  வெறும் பணத்தில் மட்டுமே கவனமாகவும் உள்ளதன் விளைவுதான் இந்த மாதிரி சம்பவங்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மேற்கு வங்கத்தில் ஒரு 6 வயதி சிறுமியை துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருந்தது. அடுத்து தமிழகத்திலும் இப்படியொரு அவலம் அரங்கேறியுள்ளது.

இன்னும் வெளியில் சொல்லாமல் மறைக்கப்பட்ட பள்ளிகள், அவலங்கள் எவ்வளவோ!

இப்படி ஒரு கேவலமான சம்பவம் நடந்தும் அதை வெளிப்படுத்தி, கொடுமைக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதில் காட்டும் அக்கறையைவிட, குற்றவாளிகளை மறைக்கவும் காப்பாற்றவுமே தலைமை ஆசிரியர் முனைப்பு காட்டுவதுதான் கொடுமையின் உச்சம்!

இந்த அவலம் வெளியில் தெரிந்தால் அதை கவுரவப் பிரச்சினையாகக் கருதும் மாநில அரசும் போலீசும், வழக்கை நீர்த்துப்போக வைப்பதில் குறியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

என்வழி செய்திகள்




One thought on “சிறுநீரை குடிக்க வைத்து மாணவர் சித்ரவதை – தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது

  1. குமரன்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம் சிகூர் என்ற கிராமத்தில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி (சிறுமலர் பள்ளி) யில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

    இந்த ‘சிறுமலர்’ பள்ளி இப்படி ‘சிறுநீரு’க்குப் புகழ் பெறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்!

    பொதுவாகவே ஆசிரியர்களும் இப்போதெல்லாம் தரம் தாழ்ந்து விட்டமை வேதனை தரும் விஷயம்.

    சென்னையில் ஒரு பள்ளி ஆசிரியை மாணவனோடு ஓடிப்போனார் என்ற செய்தி சில மாதங்களுக்கும் முன்னாள் வருத்தம் தந்தது.

    திருவண்ணாமலையில் உள்ள செயின்ட் மவுன்ட் மேல் நிலைப் பள்ளியில் நிர்வாகமும் ஆசிரியர்களும் அலுவலகப் பியூன்களும் என்று எல்லாரும் கூடி ஒற்றுமையாக வேலைபார்த்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைகளை பிட் எடுத்துக் கொடுத்து எழுதவைத்ததைக் கையும் களவுமாக மாவட்ட கலெக்டரே பிடித்துக் கொடுத்தார். இது சென்ற மார்ச் ஏப்ரலில் நடந்தது. இந்த வழக்கையும் அப்போதைக்கு ஏதோ பதிவு செய்து மக்களை ஏமாற்றிவிட்டு, அழகாக அமைதியாக மூடி முடித்து விட்டார்கள். அந்தப் பள்ளி இப்போது முழுமையாக நடக்கிறது, இன்னமும் இதே மாதிரி ஊழலைத் தொடர்ந்து செய்யும். அந்த கலெக்டர் இந்த வழக்கை மூட விட மாட்டார் என்பதால் அவரை மதுரைக்கு மாற்றி காரியத்தை பள்ளி நிர்வாகத்துக்குச் சுமுகமாக மாநில அரசு முடித்துக் கொடுத்து விட்டது.

    அதுபோலவே இந்த சிறுநீர்ப் பள்ளி விவகாரமும், சில நாள் கழித்து பள்ளி நிர்வாகத்துடன் சுமுகமாக முடிக்கப் படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *