BREAKING NEWS
Search

இதை நாங்க எதிர்ப்பார்க்கவே இல்ல… – விழி பிதுங்கிய போலீஸ்… மாலையில் அனைவரும் விடுதலை!!

சிறை நிரப்பும் போராட்டத்தில் குவிந்த திமுகவினர் – சமாளிக்க வழியின்றி திணறிய ஜெ அரசு -மாலையில் அனைவரும் விடுதலை!


திமுகவா… அப்படி ஒரு கட்சி இருக்கா.. சிறை நிரப்பும் போரா… வரட்டும்… நிரந்தரமா பிடிச்சி உள்ள வச்சிடறோம்…. என்ன மிஞ்சிப்போனா 10 ஆயிரம் பேர் வருவாங்களா… வரட்டும், ஜெயிலெல்லாம் காலியாத்தான் கிடக்கு…!

-நேற்று வரை இப்படித்தான் திமுக போராட்டம் பற்றி போலீசார் கமெண்ட் அடித்து வந்தனர். நேற்று முன்தினம் கூட, தமிழக சிறைகளில் குற்றவாளிகள் குறைந்துவிட்டார்கள். திமுகவினருக்கு தாராளமாய் இடம் இருக்கு, என்று கூறி, விரிவாக அறிக்கையும் தந்தார்கள்.

ஆனால் இன்று காலை 8 மணியிலிருந்து குவிந்த திமுக தொண்டர்கள், அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகளைப் பார்த்து தமிழக போலீஸ் உண்மையிலேயே திணறிவிட்டது என்பதே 100 சதவீத உண்மை.

“என்னய்யா இவங்களோட ரோதனையாப் போச்சு… இவ்ளோ பேரு எங்கிருந்து வந்தார்கள்? எந்த ஜெயில்ல வைக்கிறது… மண்டபங்கள் கூட பத்தாதே… இவங்களுக்கு சாப்பாடெல்லாம் வாங்கித் தரணுமே…” என்று தலையில் அடித்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது.

இப்போதைய நிலவரப்படி 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்களை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைகள் உள்ளன. இதில் 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் சேர்த்தாலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடியும். தற்போது சிறைகளில் 13,970 கைதிகள் உள்ளனர்.

இன்று நடந்த திமுக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு சில ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று அரசும், காவல்துறையும் எதிர்பார்த்திருந்தன. அப்படித்தான் முதல்வருக்கு தகவலும் தெரிவித்திருந்தனர்.

இன்றைய தேதிக்கு தமிழகத்தில் காலியாக ஒரு கல்யாண மண்டபம் கூட இல்லை என்பதுதான் விசேஷம்.

அடுத்து இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும். ஆனால் இத்தனை பேரையும் எப்படி சிறைகளில் அடைப்பது என்று தெரியாமல் காவல்துறையினர் விழித்துக் கொண்டுள்ளனராம்.

சென்னையில் மட்டும் 50,000 முதல் 60000 பேர் வரை கைதாகியுள்ளனர். ஆனால் புழல் சிறையில் இத்தனை பேரையும் அடைக்க முடியாது.

சரி வேலூருக்கும் பிற ஊர்களுக்கும் கொண்டு போவதாக இருந்தாலும், அந்தப் பகுதிகளிலும் பல ஆயிரம் பேர் கைதாகியுள்ளார்களே. சின்னச் சின்ன ஊர்களில் கூட 1000 பேர் வரை கைதாகியுள்ளது அரசை திகைக்க வைத்துள்ளது.

பலர் பாய், தலையணையுடன் கைதாக முன் வந்ததில், அப்படியே ஷாக்கடித்து நின்றதாம் போலீஸ்!

திமுகவைப் பொறுத்தவரை இந்தப் போராட்டம் உண்மையிலேயே பிரமாண்ட வெற்றிதான். திமுகவினரை கைது செய்வதுதானே நோக்கம்.. இதோ கைது செய்யுங்கள்… போடுங்கள் பொய்வழக்கு என்று அவர்களாக கைதாகியுள்ளனர்.

இதில் பொதுமக்களுக்கு என்ன நன்மை? என்ற கேள்வியை நேற்று திமுக தலைவர் கருணாநிதியிடம் ஒரு செய்தியாளர் முன்வைக்க, அவர் சட்டென்று சொன்னார், “அவர்கள் பிரச்சினைகளுக்கும் சேர்த்துதான் போராட்டம். மக்கள் வேறு திமுக வேறல்ல…,” என்றார்.

அதை ஸ்டாலின், கனிமொழி, குஷ்பு போன்றவர்கள் இன்றைய போராட்டத்தில் சரியாகவே பிரதிபலித்தனர்.

இந்தப் போராட்டம் திமுகவினருக்காக அல்ல, மக்களுக்கும் அவர்கள் இன்று படும் அல்லல்களை நீக்கக் கோரியும்தான் என்று திரும்பத் திரும்ப கூறியபடி கைதாகியது குறிப்பிடத்தக்கது!

மாலையில் அனைவரும் விடுதலை

கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதானதால் அவர்களை அடைக்க சிறையில் இடமில்லை என்று காவல்துறை தரப்பில் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், கொடநாட்டில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டனர். அதன் இறுதியில், முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி அத்தனை பேரையும் மாலை 6 மணியளவில் போலீஸார் விடுவித்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து காலையில் கைதான மு.க.ஸ்டாலின், கனிமொழி, குஷ்பு, தயாநிதி மாறன் உள்ளிட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.

-என்வழி செய்திகள்
5 thoughts on “இதை நாங்க எதிர்ப்பார்க்கவே இல்ல… – விழி பிதுங்கிய போலீஸ்… மாலையில் அனைவரும் விடுதலை!!

 1. குமரன்

  இன்றைய மாலைச் செய்தி:

  /// சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மாலை விடுதலை செய்யப்பட்டார். மாலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், அரசின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தி.மு.க.,வினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் போலீசாரின் தகவல்படி 93 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. சிறையில் அடைக்க வழியில்லாததால் போலீசார் விடுதலை செய்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிறையில் அடைக்க முடியாத அளவிற்கு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என கூறினார்.///

 2. தினகர்

  “என்னய்யா இவங்களோட ரோதனையாப் போச்சு… இவ்ளோ பேரு எங்கிருந்து வந்தார்கள்? எந்த ஜெயில்ல வைக்கிறது… மண்டபங்கள் கூட பத்தாதே”

  போலீஸ்காரர்கள் மட்டுமல்ல, அம்மாவின் தீவிர விசுவாசிகள் பலருக்கு வயித்தெரிச்சலால் அல்சர் வந்து விட்டது..

  ஆளும்கட்சியை எதிராக எதிர்கட்சியினரிடம் ‘எழுச்சி’ இருப்பது தான் ஜனநாயகத்திற்கு வலுவானது..

  2014 தேர்தல் அதிமுகவை மக்கள் எடை போடும் தேர்தலாகவே அமையும். அன்றாடம் பஸ்ஸில் டிக்கெட் எடுக்கும் போது மக்கள் குமுறுவது வாடிக்கையான விஷயமாகி விட்டது

  மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் ஆகிய துறைகளின் நஷ்டத்தை கணித்து, மற்ற துறைகளின் லாபத்திலிருந்து சமாளித்து இருந்தால் மக்களும் சிரமப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த ஆட்சி மீது அதிருப்தியும் ஆகி இருக்காது. திமுகவினர் மீது வழக்கு போட்டு விட்டார்கள் என்று பொதுமக்கள் வருத்தப்பட போவதில்லை. பாக்கெட்டில் கை வைக்கும் போது ‘திமுக ஆட்சி பரவாயில்லையே’ என்று வாய்விட்டு சொல்வதையும் கேட்கலாம். அது தான் அடுத்த தேர்தலை நிர்ணயிக்க போகிறது.

  தனது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இந்த போராட்டம் மூலம் கலைஞர் சரியான அரசியல் செய்து விட்டார். ஆளும் கட்சியை திணறடித்து விட்டோம் என்ற பெருமிதத்திலேயே திமுக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது

 3. Manoharan

  இதிலென்ன பெருமை. வேலை வெட்டி இல்லாமல் காலையில் பையை தூக்கி கொண்டு போனார்கள். 15 நாள் சிறையில் அடிப்பார்கள், படம் காட்டலாம் செய்திகளில் தினமும் இடம் பெறலாம் என்று நினைத்தார்கள், ஆனால் இந்த வெட்டி பயல்களை சிறையில் அடைப்பது வேஸ்ட், இவர்களுக்கு ஒரு சிறை, நாலு போலீஸ் , சாப்பாடு என்று போடுமளவுக்கு கூட இவர்கள் தகுதியானவர்கள் இல்லை என்று மாலையிலேயே ஓடிப்போ என்று விரட்டிவிட்டது அரசு. எத்தனையோ பில்டப் கொடுத்தோம் இப்படி புச்வானமாகிவிட்டதே என்று கருணாநிதி மண்டை காய்ந்து உட்கார்ந்திருக்கிறார். ஒருநாள் கூத்துக்கு இவ்வளவு மெனக்கேட்டுவிட்டோமே, கடைசிக்கு இது ஒரு பெரிய செய்தியாகக் கூட வரலியே என்று ஸ்டாலின் புலம்பிக்கொண்டிருக்கிறார்.

 4. Rajmohan

  If ppl r against ADMK gov’t, does’t mean that, they are or will support DMK…

  1st para, whether public has commented like that or police ….clarify!

  Article Intention may like that, “after seeing DMK ppl’s arrest so far, public supported DMK party to bring this protest to big success…….

 5. தினகர்

  ”இவர்களுக்கு ஒரு சிறை, நாலு போலீஸ் , சாப்பாடு என்று போடுமளவுக்கு கூட இவர்கள் தகுதியானவர்கள் இல்லை என்று மாலையிலேயே ஓடிப்போ என்று விரட்டிவிட்டது அரசு.”

  முந்தைய நாள், ஜெயில் எல்லாம் காலியாகத்தான் இருக்கிறது. எல்லோருக்கும் உள்ளே தாராளமாக இடம் இருக்கு. உள்ளே புடிச்சு போடப்போறோம்ன்னு எகத்தாளமா பேசியதும் இந்த அரசு தானே?.

  இத்தனை பேருக்கு இடம் இல்லை என்ற உண்மையை மறைக்க, ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் கதையா, ப்ளேட்டை மாத்தி போட்டு கரியை பூசிக்கொண்டது அதிமுக அரசும் அதன் முதல்வரும் தான்..

  இவங்களை எல்லாம் புடிச்சு உள்ளே போட தகுதியில்லேன்னா, ஒரு கேஸில் ஜாமீன் கிடைச்சு வெளியே வந்த உடனேயே, வாசலிலேயே மடக்கி அடுத்த கேஸ் ஏன் போடனும்..

  இதையெல்லாம் நிறுத்திட்டு, மக்களுக்கு என்ன நல்லது செய்யலாம்ன்னு யோசிச்சா, அடுத்த தேர்தலில் ஏதாவது கொஞ்சம் ஓட்டு கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *