BREAKING NEWS
Search

தெரியுமா… முத்து படத்தில் ‘தலைவர்’ பேசிய பஞ்ச் டயலாக்கை எழுதியவர் அவ்வையார்!!

தெரியுமா… முத்து படத்தில் ‘தலைவர்’ பேசிய பஞ்ச் டயலாக்கை எழுதியவர் அவ்வையார்!!

TK10
டல்லாஸ்(யு.எஸ்): தமிழகத்தில்கூட தாய் மொழியான தமிழில் இத்தனைப் போட்டிகள் நடக்கிறதா… தெரியவில்லை!

ஆனால் அமெரிக்காவிலோ, திருக்குறள், ஆத்திச்சூடி, நல்வழி, மூதுரை, கொன்றை வேந்தன், இலக்கிய பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என வாரந்தோறும் தமிழ்ப் போட்டிகள்.. அதில் பங்கேற்கிறார்கள் பல நூறு குழந்தைகள். ஜெயித்து சந்தோஷமாய் வீடு திரும்புகிறார்கள்.

அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் முக்கிய அமைப்புகளுள் ஒன்றான சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சமீபத்தில் நடத்திய திருக்குறள் போட்டியின் வெற்றி பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

இந்த திருக்குறள் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள் மூன்று, நான்கு என பரிசுகளை அள்ளிச் சென்றுள்ளார்கள். சனிக்கிழமை நடைபெற்ற ’தமிழ் ஆராதனை விழா’வில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, டெஸ்லா மோட்டார்ஸ் சி.ஐ.ஓ (Chief Information Officer) ஜெய் விஜயன் கலந்து கொண்டார்.

TK7

இந்த விழாவில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியானது. அதுதான், முத்து படத்தில் சூப்பர் ஸ்டார் பேசிய ஒரு பஞ்ச் வசனம் அவ்வையாருடையது என்பது.

திரைப்படங்களில் திருக்குறள் என்ற தலைப்பில், வெவ்வேறு திரைப்படங்களின் பாடல் காட்சிகள் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து திரைப்படத்தில் வரும் ’கிடைக்கிறது கிடைக்காம இருக்காது’ என்ற பஞ்ச், அவ்வை மொழி என்ற செய்திகேட்ட பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் நிலையில், திருக்குறள், மூதுரை, கொன்றை வேந்தன் மற்றும் பேச்சுப்போட்டிகளில் முதல் பரிசை 14 வயது சீதா தட்டிச்சென்றார். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்த இவர் 505 குறள்களை அனாயசமாக சொல்லி புதிய சாதனை படைத்துள்ளார்.

TK4
திருக்குறள் போட்டியில் 153 குழந்தைகள் கலந்து கொண்டு 5150  தடவை குறள்களை ஒப்புவித்துள்ளனர். மழலைப் பிரிவில் பங்கேற்ற இனியா, திருக்குறள், ஆத்திச்சூடி, மூதுரை ஆகிய மூன்று போட்டிகளிலும் பரிசுகளை வென்றாள். 405 குறள்களை சொல்லி அதிகபட்ச பரிசுத்தொகையான 327 டாலர்களை பெற்றார் மிதுன். பங்கேற்ற  நான்கு போட்டிகளிலும் பரிசுகளை வென்றார் தர்ஷிணி.

பேச்சுப் போட்டியில் 25 குழந்தைகள் பங்கேற்றேனர். கட்டுரைப் போட்டியில் 15 பேரும், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை உள்ளடக்கிய அவ்வை அமுதம் போட்டியில் மழலை முதல் நிலை 3 வரை 75 குழந்தைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர். கீதா பாண்டியன் பரிசுகளை வழங்கினார்.

திருக்குறள் போட்டி மழலை பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் ராணி அன்பரசுவும்,  நிலை 1 வெற்றியாளர்களுக்கு டாக்டர் லதா வேலுச்சாமியும் பரிசுகளை வழங்கினார்கள். முதன் முறையாக கணிணி மூலம் நடைபெற்ற இந்த போட்டிக்கான மென்பொருளை வடிவமைத்த sumtwo நிறுவனத்தின் கண்ணனிடம் நிலை 2 வெற்றியாளர்கள் பரிசுகளை பெற்றுக் கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகள்

பரிசளிப்பு விழா என்றால் கூட முழு நேர கலை நிகழ்ச்சி போல் வடிவமைத்திருந்தார்கள். திருக்குறளின் முதல் அதிகாரத்தின் அனைத்து குறள்களையும் கொண்ட பாடலுக்கு, புவனாவின் இயக்கத்தில் குழந்தைகள் நடனம் ஆடினார்கள். அவ்வை அமுதம் குறித்தும், பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள் ஏன் நடத்தப்படுகின்றன என்பது குறித்தும் டாக்டர் தீபா, விவேக், பழநிசாமி, முனைவர் சித்ரா, உமா மற்றும் ஜெய்சங்கர் எடுத்துரைத்தனர்.

TK1

டி.ராஜேந்தர் பேட்டி காண்பது போலவும் எம்.ஜிஆர், சிவாஜி, ரஜினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் திருக்குறள் கூறுவது போலவும்,வீடியோவுடன் கூடிய மிமிக்ரி காட்சி ஒளிபரப்பப்பட்டது.

சிறப்பு விருந்தினர் ஜெய் விஜயன்

சிறப்பு விருந்தினர் டெஸ்லா மோட்டார்ஸ் சி.ஐ.ஓ ஜெய் விஜயன், மிகுந்த தமிழார்வத்துடன் பணியாற்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையினரின் பணிகள் குறித்து பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். பெரியவர்கள் பிரிவில் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 1330 குறள்களையும் சொல்லி சாதனை படைத்த கீதா அருணாச்சலத்திற்கு சிறப்புக் கேடயம் வழங்கி கவுரவித்தார்.

Jay Vijayan 2

முன்னதாக நிலை மூன்று பிரிவில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வளர்மதி ஜெய் பரிசுகளை வழங்கினார். விழாவில் மொத்தமாக 74 பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை டாக்டர் ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் செய்திருந்தனர். ஜெய்சங்கர் வரவேற்புரை ஆற்றினார். ராஜி பிரபாகர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அறக்கட்டளையின் இயக்குனர்கள் வேலு ராமன், விசாலாட்சி வேலு நன்றியுரை வழங்கினார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் தமிழகமே மறந்து போன தமிழ் இலக்கியங்களை எல்லாம் அமெரிக்காவில் தான் தேடவேண்டியிருக்கும் போலிருக்கே!

-சின்னமணி
புகைப்படங்கள் : சுதீர் & விஜய்
2 thoughts on “தெரியுமா… முத்து படத்தில் ‘தலைவர்’ பேசிய பஞ்ச் டயலாக்கை எழுதியவர் அவ்வையார்!!

 1. anbudan ravi

  நண்பர் வேலு ராமனுக்கு வாழ்த்துக்கள். இவர் தமிழுக்கு செய்து வரும் தொண்டுகள் மகத்தானவை.

  அன்புடன் ரவி.

 2. பாண்டியன்

  தலைவர் பழந்தமிழ் இலக்கியங்களான வள்ளுவரின் குறள் , அவ்வையாரின் பொன்மொழிகள் முதல் கல்கியின் பொன்னியின் செல்வன், தற்போதைய எஸ்ரா என அனைத்து படைப்புகளையும் படித்து பின்பற்றுகிறார் என்பதை விளக்க இந்த ஒரு சான்று போதாதா?

  அமெரிக்காவில் தமிழைப் பரப்பும் சாஸ்தா அறக்கட்டளை இயக்குனர்கள் வேலுராமன் விசாலாட்சி வேலுக்கு பாராட்டுக்கள்.

  டெஸ்லா மோட்டார்ஸில் ஒரு தமிழர் “சி.ஐ.ஒ ஜெய் விஜயன்” என்ற கூடுதல் தகவலுக்கும் பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *