BREAKING NEWS
Search

தமிழகம் வந்த சிங்களர்கள் மீது தாக்குதல் – இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் – இலங்கையருக்கு எச்சரிக்கை!

தமிழகம் வந்த சிங்களர்கள் மீது தாக்குதல் – இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் – இலங்கையருக்கு எச்சரிக்கை!

திருச்சி: சுற்றுலாவாக தமிழகம் வந்த சிங்களர்களுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அவர்கள் சென்ற வேன்கள் கல் வீசி தாக்கப்பட்டன. இதனால் சிங்களர்களை தனி விமானம் மூலம் இலங்கை திருப்பி அனுப்பப்பட்டனர்.

இலங்கையில் உள்ள புத்தலம் மாவட்டத்தில் உள்ள சிலாபம் எனும் கிராமத்தை சேர்ந்த 184 பேர் தமிழ்நாட்டில் 12 நாட்கள் ஆன்மிக சுற்றுப்பயணமாக கடந்த 2-ந் தேதி விமானம் மூலம் திருச்சி வந்தனர். நேற்று முன்தினம் பூண்டி மாதா கோவிலுக்கு வேனில் சென்றனர்.

பூண்டி மாதா கோவிலுக்கு வந்த சிங்களர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழ் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சிங்களர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பூண்டியில் அன்றிரவு தங்கினர்.

வேளாங்கண்ணியில் கடும் எதிர்ப்பு

அவர்கள் நேற்று அதிகாலை வேனில் புறப்பட்டு வேளாங்கண்ணி சென்றனர். வேளாங்கண்ணியிலும் சிங்களர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்த 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் 184 சிங்களர்களும் தங்களது நாடு திரும்ப முடிவு செய்தனர். அங்கிருந்து அவர்களை திருச்சிக்கு 7 வேன்களில் போலீசார் அனுப்பி வைத்தனர். பாதுகாப்பிற்கு ஒரு வேனில் போலீசாரும் உடன் வந்தனர். வேன் வருகிற வழியெங்கும் சிங்களர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. திருவாரூர் பைபாஸ் சாலையில் வேன்கள் மீது செருப்புகள் வீசப்பட்டன.

கல் வீசி தாக்குதல்

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே நேற்று மதியம் வேன்கள் வந்த போது ஒரு வேன் திடீரென பஞ்சரானது. இதனால் அந்த வேனில் இருந்தவர்களை மற்ற வேன்களில் ஏற்றினர். அந்த வேன்கள் காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது 2 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று திடீரென இறங்கி சிங்களர்களின் வேன்களை நோக்கி கல்வீசி தாக்கியது.

இதில் 2 வேன்களில் முன்பக்க கண்ணாடியும், ஒரு வேனில் ஜன்னல் கண்ணாடியும் நொறுங்கின. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. வேனில் இருந்த சிங்களர்களின் அலறல் சத்தத்தை கேட்டு பாதுகாப்பிற்கு வந்த போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் கல்வீசிய கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டது.

விமானநிலையத்தில் பாதுகாப்பு

திருச்சி விமானநிலையத்திலும் சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என கருதிய போலீசார் பலத்த ஏற்பாடுகள் செய்தனர். சிங்களர்களுக்கு கறுப்பு கொடி காட்டுவதற்காக திரண்டிருந்த ம.தி. மு.க.வினர் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று மதியம் 3 மணி அளவில் சிங்களர்கள் வந்த வேன் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. முதலுதவியும், மதிய உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அதன்பின்பு பழைய விமான நிலையத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இலங்கை அனுப்ப ஏற்பாடு

சிங்களர்கள் சிலர் கூறுகையில், “நாங்கள் என்ன பாவம் செய்தோம். மாதா கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக நாங்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து இங்கு வந்தோம். ஆனால் இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்களுடன் சில தமிழர்களும் உள்ளனர். இது எங்களுக்கு ஒரு கசப்பான அனுபவம். இனிமேல் இங்கே வரமாட்டோம்” என்றனர்.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் ராஜகருணா கூறும்போது, “இலங்கையில் இருந்து வேளாங்கண்ணி, பூண்டி மாதா கோவில்களுக்கு வந்த பக்தர் களை சிலர் பின்தொடர்ந்து தடுத்து, கற்களை வீசி தாக்கியதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல இலங்கை அரசு விசேஷ விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது,” என்றார்.

இதன் அடிப்படையில் கொழும்பில் இருந்து ஒரு தனி விமானம் நேற்று இரவு 9.40 மணிக்கு திருச்சி வந்தது. அந்த விமானத்தில் 184 சிங்கள பயணிகளும் ஏற்றப்பட்டனர். இரவு 10.50 மணிக்கு அந்த விமானம் திருச்சியில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டு சென்றது.

தமிழகம் செல்ல வேண்டாம் – சிங்களர்களுக்கு எச்சரிக்கை

இதற்கிடையே இலங்கை வெளியுறவு அமைச்சகம் நேற்று, இலங்கை மக்கள் தமிழகம் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்கள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவாகவும், மத ரீதியாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காகவும், தொழில்ரீதியான பயிற்சிக்காகவும் செல்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டுக்கு செல்லும் இலங்கை மக்களுக்கு எதிரான மிரட்டல்கள் அதிகரித்துள்ளன. எனவே அவர்களது பாதுகாப்பு கருதி இலங்கை மக்கள் தமிழ்நாட்டுக்கு மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அப்படி கட்டாயம் தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டுமென்றால், சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-என்வழி செய்திகள்




7 thoughts on “தமிழகம் வந்த சிங்களர்கள் மீது தாக்குதல் – இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் – இலங்கையருக்கு எச்சரிக்கை!

  1. Muthu

    We also should send out Singala Cricket players who play for Chennai Super KIngs… Please spread this message…

  2. நாஞ்சில்மகன்

    இவர்கள் செய்த பாவம் என்ன? என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நமது மக்கள் இந்த காரியத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள். இலங்கை தலைநகர் கொழும்புவில் இதே போல் சிங்களர்கள் செய்தால் ஒரு தமிழன் வாழ முடியாது. இன்றும் கொழும்வில் பெரும்பாண்மை இனம் சிங்களர்கள்தான். நம் தமிழ்இனம் இன்னும் 20 லட்சம் பேர் இலங்கையில் இருப்பதை மறந்து விடாதீர்கள். இதனால் பாதிக்கபட போவது கண்டிப்பாக இலங்கை தமிழன்தான். நமது எதிரி சிங்கள ராணுவம்தான் சிங்கள பக்தர்கள் அல்ல. ராஜபக்சேயின் மைத்துனர் ஒரு தமிழர் என்று தெரியாமல் தாக்குதல் கொடுத்தவர்கள்தான் நம் ஆட்கள். கருணாநிதி இந்த ஒரு விஷயத்தில் கூறியி்ருப்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

    தமிழ்நாட்டிற்கு இலங்கையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்துவது இருநாட்டு உறவுகளை பாதிப்பதோடு இல்லாமல், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராகவும் திரும்பி விடும்.

    இலங்கை தமிழர்களுக்கும் இங்குள்ள தமிழர்களுக்கும் உள்ள உறவு என்பது தொப்புள் கொடி உறவு போல். இதில் திடீரென்று விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவதும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவைக் கெடுக்கக்கூடியதாகும். மேலும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் அவர்கள் மறு குடியமர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஐ.நா. குழு செப் 14-ல் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஒரு பிரச்சினையை நாமே உருவாக்குவது என்பது, இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு மேலும் இன்னலையும், மறுவாழ்வுப் பணியிலே குந்தகத்தையும் ஏற்படுத்துகின்ற செயலாகவே அமைந்து விடும். இலங்கையில் இன்னும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் வாழ்வதற்கே சிரமப்படுகின்றனர். இந்த சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அவர்களை மேலும் கொடிய துன்பங்களுக்கு ஆட்படுத்துகின்ற நிலையை இங்கே உள்ள நாம் ஏற்படுத்தி விடக்கூடாது.

    எனவே தமிழக மக்கள் எந்த வகையிலான எதிர்மறை உணர்ச்சிகளுக்கும், தூண்டுதல்களுக்கும் இடம் கொடுத்து விடாமல், அமைதி காக்குமாறு மிகுந்த அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

  3. devaraj

    This is very unfortunate. Politics should never be mixed in these issues.
    People have come for prayers and some sport events., they have been forced to go back.
    What about cricketers , and so many other things were Indians go there and they visiting us.
    Sending back military is absolutely right, sending back Rajabakse is right, but attacking ordinary people and children, are we living in civilized world. SHAME.

    Cheers
    Dev.

  4. devaraj

    Will all tamils not watch a single T20 international world cup match due to be held in Ceylon.
    Will all unite and do this. Sure NO.
    Fantastic, but continue attack on ordinary people.
    cheers
    Dev.

  5. குமரன்

    தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்பது இவர்களது செயலுக்கு வெகு பொருத்தம். இது குறித்த கருணாநிதியின் அறிக்கை அவரது முதிர்ந்த அரசியல் அனுபவத்தின் பேரில் அமைந்த நல்லதொரு அறிவுரை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *