Breaking News

ராஜீவைக் கொன்றது அமெரிக்காதான்… பிரபாகரன் அல்ல! -இலங்கை அமைச்சர்

ராஜீவைக் கொன்றது அமெரிக்காதான்… பிரபாகரன் அல்ல! -இலங்கை அமைச்சர்

கொழும்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார். மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு அவர் என்ன முட்டாளா.

இந்த காரியத்தை செய்தது அமெரிக்காதான். பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விமல் வீரவன்ச கூறுகையில், அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.

ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது. பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.

காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து இலங்கைக்காரர்கள் இந்த விவகாரத்தைக் கையிலெடுப்பது பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

மாலத்தீவுகள் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு அணியாகவும், இலங்கையும் சீனாவும் ஒரு அணியாகவும் உள்ளன. தெற்காசியாவில் இந்தியாவின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். ஆனால் சீனா வலுவாகக் காலூன்ற இடம் கொடுத்து வருகிறது இலங்கை. மாலத்தீவை கபளீகரம் செய்யும் சீனாவின் முயற்சி இன்று வரை நிறைவேறாமல் உள்ளதற்கு காரணம் இந்தியாவும் அமெரிக்காவும்தான்.

இந்த ஆதிக்கப் போரில், இந்தியாவை வலுவிழக்கச் செய்யும் உத்திதான், திடீரென ராஜீவ் காந்தி கொலை பற்றி இலங்கை அமைச்சர் பேச ஆரம்பித்திருப்பது என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

“புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக் கொண்டு பல்லாயிரம் தமிழரைக் கொல்ல, இந்தியாவின் உதவியைப் பெற்றது இலங்கை. அன்றைக்கு, அந்த உதவியைப் பெறுவதற்காக, ராஜீவை பிரபாகரன் கொன்றதாகக் கூறினார்கள். இன்று அதே இலங்கை, இந்தியாவை வீழ்த்த ராஜீவ் கொலையை அமெரிக்கா செய்ததாகக் கூறுகிறது. இலங்கையின் படு கேவலமான அரசியல் உத்தி இது. பலமுறை இப்படி ஸ்டன்ட் அடித்து மூக்குடைபட்டுள்ளது இலங்கை,” என்று கூறியுள்ளனர்.

-என்வழி செய்திகள்

Related Posts with Thumbnails