Breaking News

விமானம் கண்டுபிடித்த ரைட்ஸ் சகோதரர்கள் ஊரில் தமிழர் திருவிழா!

February 16, 2012 by  
Filed under World, உலகம் & இலங்கை

விமானம் கண்டுபிடித்த ரைட்ஸ் சகோதரர்கள் ஊரில் தமிழர் திருவிழா!

டேட்டன் (வட அமெரிக்கா): ரைட்ஸ் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தில் நம்ம தமிழர்கள் பறப்பது பெருமையோ இல்லையோ…  ஆனால் ரைட்ஸ் சகோதரர்கள் பிறந்த ஊரான டேட்டனில் பெருமளவு தமிழர்கள் வசிக்கிறார்கள் என்பது நிச்சயம் பெருமைதான்.

அதுவும் எப்படி… சங்கம் வைத்து தமிழைக் கொண்டாடும் அளவுக்கு!

கடந்த பிப்ரவரி 11 சனிக்கிழமை,  வட அமெரிக்காவின் ஓஹாயோ மாகாணம் டேட்டனில் தமிழர் திருவிழா கொண்டாடப்பட்டது. இருநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்று அந்தப் பகுதியையே ‘குட்டி தமிழ் நாடு’ எனும் அளவுக்கு தமிழ்ச் சூழலை உருவாக்கி விட்டார்கள்.

நிகழ்ச்சியில் பெரியவர்களுடன் இணைந்து மழலைகளும் இனிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

வந்திருந்தவர்களை ராஜ் ஜேசுதாசன் வரவேற்றார். நீண்ட முயற்சிகளுக்கு பிறகு டேட்டனில் தமிழ்ச் சங்கம் எப்படி உருவாயிற்று என்று அவர் விவரித்தார்.

நிகழ்ச்சி நிரலை வாசலில் கையேடாக கொடுப்பது வழக்கம். இங்கே அதை முழுப்பாடலாகவும் பாடிவிட்டார் அரசு.

பாரதியாரின் ஒடி விளையாடு பாப்பாவை ஒரு குட்டிப் பாப்பாவே பாடினால் எப்படியிருக்கும்? ப்ரீத்தி மூச்சு விடாமல் பத்து நிமிடத்தில் மூன்று பாரதியார் பாடல்களை பாடி பரவசப்படுத்தி விட்டார். அடுத்து அலைபாயுதே கண்ணா என்று  பாரம்பரிய பரதநாட்டிய நடனத்தில் பம்பரமாக சுழன்று சுழன்று ஆடியவர்கள் சாகித்தியும் ஷிவானியும்.

கோலாட்டம்

நம்ம ஊர் கிராமப்புறங்களில்  கோலாட்டம் என்பது  எந்த அளவுக்கு மக்களுக்கு ஞாபகம் இருக்கோ தெரியாது. இங்கே கோகுலத்து கோபியர்களாக மாறி கோலாட்டம் போட்டனர் இளம் பெண்கள்.

இந்த பக்திப் பரவசமான நிலையை ஒரே நொடியில் மாற்றி விட்டார்கள் புலி உருமுது என்ற கோஷத்துடன் டேட்டன் லிட்டில் மாஸ்டர்கள்.

டேட்டனில் தமிழர்கள் அன்றும் இன்றும் எப்படி இருந்தார்கள், இருக்கிறார்கள் என்று தமிழ் முன்னோடி நடராஜன் உரையாற்றியது மலரும் நினைவுகளாகவும் , புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும் உறவுப் பாலமாகவும் இருந்தது.

ஒய்யாலே ஒய்யாலே என்று ஆரம்பித்து, மேகம் கருக்குது மின்னலடிக்குது என்று ‘குஷி’ யாகி உப்புக்கருவாடு சுவைக்கு வந்து மெட்லியில் ஆட்டம்போட்டு, வந்தவர்களையும் ஆடவைத்து விட்டார்கள் ஷிவானியும் கேத்தரினும்.

சின்ன சின்ன ஆசை என்று கரோக்கியுடன் குரலுக்கு பதில் வயலினில் – கிட்டத்தட்ட குரல் அளவுக்கு -துல்லியமாக இசைத்தார்கள் மாள்விக்கா & ஏமி. குன்னக்குடி வைத்தியநாதனின் வயலினை கேட்ட அனுபவம் பெற்ற பெரியவர்கள் மெய் சிலிர்த்து விட்டார்கள்.

கொலவெறி

உலகெங்கும் பற்றிக்கொண்ட ‘கொலவெறி’ டேட்டனையும் விட்டு வைக்கவில்லை. அந்த வெறித்தனமான ஆட்டத்தை பார்த்து பெரியவர்கள் கூட அசந்து விட்டார்கள். டேட்டன் தமிழ்சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி செல்வம் பேசினார்.


முதல் கட்ட நடவடிக்கையாக மார்ச் 3 ஆம் தேதி முதல் தமிழ்ப் பள்ளி ஆரம்பிக்கப்படுகிறது. தமிழ் மொழியையும் தமிழ் மொழியில் உள்ள திருக்குறள் உள்ளிட்ட நெறிமுறைகளையும் தமிழ்க் குடும்ப மாணவ மாணவியர்களுக்கு கற்றுத்தருவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு டேட்டன் தமிழ்ப் பள்ளி செயல்படும். மயாமிஸ்பர்க், எண் 2700 Lyons Road Administrative Government Center  ல் தமிழ்ப் பள்ளி வகுப்புகள், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெறும் என்று அறிவித்தனர்.

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி

மூன்று மணி நேரம் நடந்த தமிழர் திருவிழாவின் முக்கிய அம்சமே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர்கள் ஆறாம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் மட்டுமே. குழந்தைகளைக் கொண்டு முழு நீள கலை நிகழ்ச்சிகள் நடத்த முடியுமா? என்ற சவாலன கேள்வியை எழுப்பிய தமிழ் சங்க நிர்வாகிகளே வியக்கும் வண்ணம் சிறுவர் சிறுமிகள் அற்புதமாக பார்வையாளர்களை கட்டிப்போட்டு விட்டார்கள்.

பெரியவர்களுக்கும் ஏதாவது பங்கு இருக்க வேண்டாமா? என்ற கேள்விக்கு விடையாக ‘ஒரு வார்த்தை  ஒரு சொல்’ போட்டி நடந்தது. தமிழ்ச் சொற்களுக்கு தடுமாறியவர்களின் காட்சிகள் வடிவேலு காமெடிக்கு இணையாக இருந்தன. மீனாள் நன்றி கூற, இந்திய அமெரிக்க தேசிய கீதங்களுடன் விழா நிறைவுற்றது. அறுசுவை இரவு உணவும் வழங்கப் பட்டது.

நிகழ்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் சங்க நிர்வாகிகள் ராஜ், செல்வம், அனந்தபத்மநாபன், மீனாள், அனந்தகுமார், ஜெயந்தி, மஞ்சு, சுமா,  பழனி, மஞ்சுளா மற்றும் என்வழி நண்பர்கள் செய்து இருந்தனர்.

-என்வழி ஸ்பெஷல்

படங்கள் : விஜய்

கோச்சடையான்… இசை ஏ ஆர் ரஹ்மான்!

December 7, 2011 by  
Filed under Popcorn

கோச்சடையான்… இசை ஏ ஆர் ரஹ்மான்!

 

படத்தில் நடுவிலிருக்கும் இளைஞர் பெயர் அனிருத். 'கொலவெறி'... பாடலின் இசையமைப்பாளர்!

ஜினி அடுத்து நடிக்கும் முப்பரிமாண படம் கோச்சடையானுக்கு இசையமைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினி.

இந்த 2011ம் ஆண்டு ஏ ஆர் ரஹ்மான் ஒரு தமிழ்ப் படத்துக்குக் கூட இசையமைக்க ஒப்புக் கொள்ளவில்லை. 2010ன் இறுதியில் ராணாவுக்கு ஒப்புக் கொண்டார். அந்தப் படமும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போன நிலையில், இவர் ஒப்புக் கொண்டுள்ள ஒரே தமிழ்ப் படம் கோச்சடையான்தான் என்கிறார்கள்.

இதுகுறித்து சௌந்தர்யா கூறுகையில், “நான் எப்போதுமே ரஹ்மானுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்புபவள். அவர் மீது அத்தனை அன்பு, மரியாதை எனக்கு. அவர்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

முத்து, படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரனைத் தொடர்ந்து, கோச்சடையானில் ரஜினியுடன் கைகோர்க்கிறார் ரஹ்மான் (ரிசல்ட் தெரியாத சுல்தான், அடுத்த ஆண்டு தொடங்கப் போவதாக கூறப்படும் ராணாவுக்கும் இவர்தான் இசை!)

கொலவெறிக்கு யு ட்யூப் கோல்ட் விருது!

னுஷ் எழுதிப் பாடி இன்று மிகப் பிரபலமான வீடியோ எனப் பேசப்படும் கொலவெறி தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப்பின் கோல்ட் விருது கிடைத்துள்ளது.

தமிழும் இல்லாமல், ஆங்கிலத்திலும் சேராமல் தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடல் ஊடகங்களின் தயவால் மிகப் பிரபலமாகிவிட்டது.

ஒரு கோடி பேருக்கும் மேல் பார்க்கப்பட்ட இந்தப் பாடல் குறித்து டைம் பத்திரிகையே தனது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கொல வெறி பாடலுக்கு யு ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற வகையில் ‘யு ட்யூப்கோல்ட்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் ’3′ படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. விரைவில் படத்தின் முழு ஆடியோவும் வெளியாக உள்ளது (ரஜினி வெளியிடுகிறார்?).

இந்தப் பாடலுக்கு இசையமைத்த அனிருத், ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது!

-என்வழி

Related Posts with Thumbnails