Breaking News

அசின் படத்தைப் புறக்கணிக்க ஈழத் தமிழர் கோரிக்கை!

November 20, 2010 by  
Filed under உலகம் & இலங்கை

அசின் படத்தைப் புறக்கணிக்க ஈழத் தமிழர் கோரிக்கை!

லங்கை அரசின் இன அழிப்புக்கு துணைபோகும்  அசின் நடித்துள்ள, காவலன் படத்தைப் புறக்கணிக்குமாறு, ஈழத் தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுகுறித்து ஈழத் தமிழ் இணையதளமான தமிழ்வின்  வெளியிட்டுள்ள செய்தி:

அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களே! வெகு விரைவில் வெளிவர இருக்கும் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன் வைக்க விரும்புகின்றோம்.

முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின். பின்பு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே சென்றேன் என பல்டியடித்தார்.

எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம் எதுவெனில், ஒருவருக்கு கண் சிகிச்சை முடிந்த பின் நீங்கள் முதலில் யாரைப் பார்க்க விரும்புகின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் அசினை மட்டுமே பார்க்க விரும்புகின்றேன் என அவர் கூறியதாக அசின் பேட்டிகளில் கூறினார்.

இதிலிருந்தே சிங்களம் செய்ய நினைக்கும் பரப்புரை என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.

ஆம். தமிழினத்தை அனைத்து விதமான போதைக்குள்ளும் வைத்திருக்க விரும்பும் சிங்களம் தன் முதல் பார்வையே நடிகைமேல்தான் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் எனவும் அதை விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருந்ததாகவும் பிரச்சாரங்கள் செய்கின்றார்கள்.

இது நிச்சயம் அசின் என்ற ஒரு நடிகைக்கு எதிரான அல்லது விஜய்க்கு எதிரான பிரச்சாரம் அல்ல… பேரினவதாத்தின் தந்திரத்திற்கு எதிரான பிரச்சாரம்.

சற்று யோசித்துப் பாருங்கள்… பல பல கோடிகள் திட்டங்களோடும் உதவிகளோடும் சென்ற இந்திய குழுவுடன், திருமாவளவன், கனிமொழி, பாலு போன்றோர் சென்றபோது ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ… ஏன் முதலமைச்சர் கூட அவர்களோடு செல்லவில்லை.

ஆனால் இந்திய அளவில் கூட புகழ் பெறாத ஒரு நடிகையோடு அவர் சென்ற இடம் முழுவதும் அந்த நாட்டின் முதல் பெண்மணியான ஜனாதிபதியின் மனைவி உடன் சென்று வந்ததன் மர்மம் என்ன?

அசினோடு சென்ற சல்மான் கானுக்கோ அல்லது உண்மையில் உதவிகள் செய்ய முயலும் விவேக் ஒபராய்க்கோ கூட இந்த கௌரவங்கள் வழங்கப்படவில்லையே.

அதோடு அசின் நடத்திய முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் என கூறப்படுவோருக்கு 10க்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக கண் பார்வை பறிக்கப்பட்டுள்ளது சிகிச்சை எனும் பெயரால். சிறு வலி என்றாலும் கால்களை அகற்றியும் கைகளை அகற்றியும் தமிழர்களை முடவர்களாக்கியுள்ளது சிங்கள அரசு.

இவைகள் அனைத்தும் சிங்கள அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கையே தவிர வேறில்லை. அதற்கு துணைபோகும் அனைவரையும் புறக்கணிப்போம்.

இப்படப் புறக்கணிப்பு ஒரு பாடமாக அனைவருக்கும் அமைய வேண்டும். ஏற்கனவே பல கடிதங்ளை தமிழ் நாட்டின் பல திரைப்பட சங்கங்களுக்கு அனுப்பியிருந்தோம். அசின் மன்னிப்பு கோருவார் என அவர்களால் சொல்லப்பட்டாலும் இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை. மாறாக மேலும் திமிராகவே பேசி வருகிறார் அசின். உதவி செய்யவே சென்றேன் என்றவர், இயக்குனர் படப்பிடிப்பு இலங்கையில் வைத்த்தற்கு நான் மன்னிப்பு கோர மாட்டேன் என்றார்.

ஆனால் கூடவே, ‘தமிழர்களை சிங்கள அரசு நன்றாக பராமரிப்பதாக” வேறு நற்சாட்சிப் பத்திரம் வேறு வாசிக்கிறார்.

படப்பிடிப்புக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதியின் மனைவியே உதவி செய்வeரா? ஆச்சரியமான நாடுதான் இலங்கை. இலங்கை அரசின் ஊதுகுழல்கள் அனைவரையும் துடைத்தெறிவோம்..!

-இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காவலன் படம் ஏற்கெனவே பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது.

காவலனை ரிலீஸ் பண்ண விடமாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்களின் ஒரு பிரிவினரும் விநியோகஸ்தர்களும் ஏற்கெனவே பிரச்சினை செய்து வரும் நிலையில்  அசின் விவகாரமும் சேர்ந்துள்ளதால், இந்தப் படத்துக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

அசின் நடத்திய முகாமில் பார்வை இழந்த 10 தமிழர்கள்!!

October 15, 2010 by  
Filed under உலகம் & இலங்கை

அசின் நடத்திய முகாமில் பங்கேற்ற 10 தமிழருக்கு பார்வை போனது!!

தேன்கூடு என்று நினைத்து குளவிக்கூட்டில் கையைவிட்ட கதையாகிவிட்டது அசின் விவகாரம்.

ராஜபக்சே அரசு தந்த சில சலுகைகள் மற்றும் பரிசுகளுக்கு ஆசைப்பட்டு இலங்கைக்குப் போய், அவரது கொபசெ ரேஞ்சுக்கு மருத்துவமனைகளைப் பார்வையிட்டும, இலவச கண் சிகிச்சை முகாம்களைத் துவக்கிவைத்தும் தனது சிங்கள விசுவாசத்தைக் காட்டினார் அசின். ஏராளமான தமிழர்களுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாம்களில் வசிப்பவர்களில் 10 ஆயிரம் ஈழத்தமிழர்களுக்கு கண் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் அசின்.

இந்த நிலையில் அசின் நடத்திய மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்ற 10 பேருக்கு பார்வை பறிபோய் விட்டதாக மே 17 அமைப்பின் பொறுப்பாளர் திருமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நடிகை அசின் இலங்கை அரசுடன் சேர்ந்து நடத்திய கண் சிகிச்சை முகாமில் உள்நோக்கம் உள்ளது.

ஈழத் தமிழர் முகாம்களுக்குள் செல்ல பன்னாட்டு அமைப்புகளை சிங்கள அரசு தடுக்கிறது. ஆனால் அசினை மட்டும் அனுமதித்தனர், சகல அரசு உதவிகளுடனும்.

இப்போது இந்த முகாம்களில் சிகிச்சைப் பெற்ற 10 பேருக்கு பார்வை முற்றிலுமாக பறிபோய் உள்ளது. இன்னு் பலர் வெவ்வேறு சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அசின், இந்தி படப்பிடிப்புக்காக அவர் இலங்கை சென்றது தவறு. அசின் படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தமிழ் பிலிம் சேம்பர் அனுமதிக்கக்கூடாது.

படப்பிடிப்புக்கு இலங்கை செல்லும் நடிகர், நடிகைகளின் படங்கள் தென் இந்தியாவில் திரையிடப்படமாட்டாது என திரைப்படக்கூட்டுக்குழு அறிவித்தது. அதை மீறி அசின் இலங்கை சென்று வந்துள்ளார். எனவே ரெடி படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது.

இந்தி நடிகர் விவேக் ஓபராயும் இலங்கை சென்று வந்துள்ளார். அவரது ரத்த சரித்திரம் படத்தையும் தென் இந்தியாவில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது, என்றார்.

அசின் சென்னைக்கு வந்தால் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

அசினுக்கு கறுப்புக் கொடி… 4 பேர் கைது!

October 4, 2010 by  
Filed under General

அசினுக்கு கறுப்புக் கொடி… 4 பேர் கைது!


டிகை அசினுக்கு கறுப்புக் கொடி காட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே விஜய்யுடன் காவலன் படப்பிடிப்பில் அவர் பங்கேற்ற போது இந்த போராட்டம் நடந்தது.

ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்ததைக் கண்டிக்கும் வகையில் தமிழ் நட்சத்திரங்கள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்தன.

ஆனால் தடையை மீறி நடிகை அசின் இலங்கை சென்றுவந்தார். அவருக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் திடீரென்று ஆதரவு தெரிவித்ததால், தடையை மீறியதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவும் இல்லை.

ஆனால் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அசினுக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த எதிர்ப்பினால் அவர் இனி தமிழகம் வரமுடியாது என்ற நிலை இருந்தது.

ஆனால் இதற்கெல்லாம் அசின் கவலைப்பட்டவராகத் தெரியவில்லை. தனது செயலை நியாயப்படுத்தியதுடன், விஜய்யுடன் காவலன் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தார், பலத்து பாதுகாப்புடன். எந்த எதிர்ப்பும் இல்லை.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இலங்கை சென்றது குறித்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல மறுத்தார்.

இந்நிலையில் காவலன் படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நடந்து வருகிறது. நடிகர் விஜய்-அசின் நடிக்கும் இப்படத்தில் வடிவேல் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

நேற்று நடிகர் விஜய்-அசின் நடித்த காட்சிகள் மேட்டுப் பாளையத்தில் படமாக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் இந்த படப்பிடிப்பு நடந்தது. விஜயை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களைப் பார்த்து கும்பிட்டபடி விஜய் வந்தார்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள அசின் மேட்டுப்பாளையம் வந்தார். நடிகர் வடிவேலு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படப்பிடிப்பு 5 நாட்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் நடக்கிறது.

அசின் படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு எதிராக திடீரென்று கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த இந்தப் போராட்டத்தின்போது, ‘அசின் இனி தமிழ்ப்படங்களில் நடிக்கக்கூடாது… தமிழகத்துக்கும் வரக்கூடாது’ என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

உடனடியாக போலீசார் வந்து கறுப்புக் கொடி காட்டியவர்களில் 4 பேரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெரியார் திராவிடர் கழகம், அசின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் இனி இதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ளது.

ஒருவேளை அசின் மன்னிப்புக் கேட்காவிட்டால் என்ன செய்யும் நடிகர் சங்கம்?

September 14, 2010 by  
Filed under Uncategorized

சங்கத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை… அசின் மீது நடவடிக்கை நிச்சயம்! – சொல்கிறார் ராதாரவி

சென்னை: நடிகர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி இலங்கைக்குப் போன நடிகை அசின் மீது நடவடிக்கை நிச்சயம் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறினார்.

வன்னிப் போரில் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்தது. அதன் படி இலங்கையில் நடந்த ஐஃபா விழாவை பெரும்பான்மையான இந்திய கலைஞர்கள் புறக்கணித்தனர். அதே போல  படப்பிடிப்புக்காகவும் இலங்கை செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இதனை மீறி இலங்கையில் நடந்த ரெடி என்ற இந்தி படப்பிடிப்புக்கு அசின் சென்றார். படப்பிடிப்போடு நிற்கவில்லை அவர்.

ராஜபக்சே அரசின் ஊதுகுழலாக மாறி, இலங்கை தமிழர் பகுதிகளில் அதிபர் ராஜபக்சே மனைவியுடன் இணைந்து சுற்றுப்பயணமும் செய்தார். இலங்கை அரசு தமிழர்களைச் சிறப்பாகப் பராமரிப்பதாக சான்றிதழ் வழங்கினார். மேலும் விஜய் உள்ளிட்ட தமிழ் நடிகர்களைப் பார்க்க ஈழத்த்து மக்கள் ஆர்வத்துடன் உள்ளதாக மறைமுக அழைப்பும் விடுத்தார். சூர்யா போன்ற நடிகர்கள் உதவத் தயாராக உள்ளதாகவும் கொழும்பில் வைத்துப் பேட்டிகள் கொடுத்தார்.

இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சங்கத்தின் கூட்டத்தில் அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, செயற் குழு உறுப்பினர் போன்றோர் அசினுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர் நடிகர் சங்கத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் இந்த நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அசினுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்துவிட்டார். இலங்கைக்கு நடிகர் நடிகைகள் சென்றால் தடை விதிக்கக் கூடாது என்றெல்லாம் பகிரங்கமாகவே அவர் கூற, நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து பெரும் கேள்விக் குறி எழுந்தது.

இறுதியில் அசின் நடிகர் சங்கத்துக்கு வந்து விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் பொதுச் செயலாளர் ராதாரவி.

இதையடுத்து அசின் நடிகர் சங்கத்துக்கு வந்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் வரவில்லை.

எனவே அசினுக்கு ராதாரவி மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இலங்கைக்கு நடிகர், நடிகைகள் யாரும் செல்லக்கூடாது என திரைப்பட கூட்டமைப்பு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதை மீறி அசின் இலங்கை சென்றார்.

இந்திப் படங்களில் நடிப்பதால் தயாரிப்பாளர் சொல்வதை கேட்க வேண்டி உள்ளது என்றும், தயாரிப்பாளர் படப்பிடிப்புக்காக எங்கு போகச் சொல்கிறாரோ அங்கு போகத்தான் வேண்டும் என்றும் அசின் கூறி இருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

ஆனால் அவர் கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு போக வில்லையா? தொழில் நிமித்தமாக எத்தனையோ பேர் போகவில்லையா? என்றெல்லாம் பேசுகிறார்.

நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் என்று அறிக்கை கொடுத்து இருக்கிறார். ஆனால் இதுவரை சங்கத்துக்கு விளக்க கடிதம் எதுவும் அனுப்பவில்லை. சங்கம் எடுக்கும் முடிவுகளை யாராலும் மாற்ற முடியாது…” என்றார்.

ஒருவேளை இந்த முறையும் அசின் மன்னிப்புக் கேட்கா விட்டால் என்ன செய்யும் நடிகர் சங்கம்? மறுபடியும் ஒரு கண்டனத்தைப் பதிவு செய்துவிட்டு கம்மென்று ஆகிவிடுமோ என்று கேள்வி எழுப்பியுள்ளனர் தமிழ் உணர்வாளர்கள்.

-என்வழி

பில்லா -2வில் கைகோர்க்கும் விஷ்ணு – அஜீத்!

July 29, 2010 by  
Filed under Popcorn

யார் கூப்பிட்டாலும் இலங்கைக்குப் போயிருக்க மாட்டேன்! – த்ரிஷா

சின் இலங்கைப் போனதும், அங்கு ராஜபக்சே அரசின் விளம்பரத் தூதராக மாறி பேட்டிகள் அளித்ததும் இப்போது மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பல்டி அடித்திருப்பதும் நேற்றைய இன்றைய செய்திகள்.

இந்தப் பரபரப்பான கேப்பில் விமானம் விட்டிருக்கிறார் த்ரிஷா!

இன்று அவர் அளித்த ஒரு பேட்டியில், “நானாக இருந்தால் நடிகர் சங்கத்தை கேட்காமல் எதுவுமே செய்ய மாட்டேன். அதுவும் இலங்கை போகிற விஷயத்தில் யார் கூப்பிட்டாலும் ‘நோ’ சொல்லியிருப்பேன். அது தனிப்பட்ட அழைப்பாக இருந்தாலும் சரி, படப்பிடிப்பாக இருந்தாலும் சரி. பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைதி காப்பதுதான் சரியானது..”

-எப்படி!

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ராவண்!

ம்… ராவண் படம் டிவியில் ஒளிபரப்பாகப் போகிறது.

மாபெரும் தோல்வியைத் தழுவி ரிலையன்ஸ் தலையில் துண்டு விழக் காரணமாக இருந்த ராவண் திரைப்படம் இன்னொரு சாதனையைப் படைக்கப் போகிறது.

வெளியான 50 வது நாளில் உலகத் தொலைக் காட்சிகளில் முதல்முறையாக ஒளிபரப்பாகப் போகிறது.

அதாவது அபிஷேக் – ஐஸ்வர்யா ராய் நடித்த இந்திப் படம் ஒளிபரப்பாகிறது. இந்தியில் இத்தனை குறுகிய காலத்துக்குள் டிவிக்கு வந்த முதல்படம் என்ற ‘பெருமை’ ராவணுக்கே உண்டு என நக்கலடித்துள்ளன வட இந்திய மீடியாக்கள்.

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி ‘கலர்ஸ் சேனலில்’ ராவண் வெளியாகிறது!

பில்லா -2வில் கைகோர்க்கும் விஷ்ணு – அஜீத்!

பில்லா படத்துக்குப் பிறகு அதன் தொடர்ச்சியை உருவாக்கப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார் இயக்குநர் விஷ்ணு வர்தன். ஆனால் அஜீத் தரப்பில் மவுனம் காக்கப்பட்டது.

சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட இழுபறிதான் காரணம் என்று கூறப்பட்டது. இப்போது எல்லா பிணக்குகளும் தீர்ந்து போக, பில்லா – 2 படத்துக்கான மொத்த கால்ஷீட்டையும் ஒரே தவலணையாகத் தந்துவிட்டாராம் விஷ்ணுவுக்கு.

இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் விஷ்ணு!

ரெடி படத்தை தமிழகத்திலும் திரையிடுவேன்! – சல்மான் கான்

July 1, 2010 by  
Filed under Cinema

தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பின் தடை குறித்து கவலையில்லை! – சல்மான் கான்

கொழும்பு: கிட்டத்தட்ட இலங்கை அரசின் பிஆர்ஓவாகவே மாறிவிட்டார் சல்மான்கான். அதோடு நிற்காமல், தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பின் தடை உள்ளிட்ட முடிவுகள் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும், திட்டமிட்டபடி ரெடி படத்தை தமிழகத்திலும் வெளியிடுவேன் என்றும் சவால் விட்டுள்ளார்.

சல்மான்கான் மற்றும் நடிகை அசின் ஆகியோரடங்கிய குழு, ‘ரெடி’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பை இலங்கையில் ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான பிரஸ் மீட் நேற்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடந்தது.

இதில், தென்னிந்தியாவில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சல்மான்கான், “நான் ஒரு நடிகன், அரசியல்வாதியல்ல. ‘ரெடி’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் போராட்ட நடவடிக்கைகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை.

இந்த விஷயம் குறித்து இதுவரை எனக்கு எந்த நெருக்கடியும் வரவில்லை. யாருடனும் நான் பேசவில்லை.

இப்போது நான் நடிக்கும் ரெடி திரைப்படத்தினை தென்னிந்தியாவில் திரையிடுவதிலும் எந்தப் பிரச்சினையும் வராது. சென்னையிலும் வழக்கம்போல திரையிடுவேன். படத்தின் ஒருசில காட்சிகள் மொரிஷியஸ் தீவுகளில் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான காட்சிகள் இலங்கையிலேயே எடுக்கப்படவுள்ளன.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, இயற்கை எழில் சூழ்ந்த நிலையிலும், படப்பிடிப்புக்கு ஏற்ற வகையிலும் உள்ளது. எனவே அதை புறக்கணிப்பது தேவையற்றது” என்றார்.

அசினுக்கு நடிகர் சங்கம் கண்டனம்.. தமிழில் நடிக்க தடை!

July 1, 2010 by  
Filed under Cinema

அசினுக்கு நடிகர் சங்கம் கண்டனம்… தமிழில் நடிக்க தடை!

லங்கையில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்ததையும் மீறி, இந்திப் படத்துக்காக இலங்கை சென்ற நடிகை அசினுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிப் படங்களில் அசின் நடிப்பதற்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தென்னிந்திய திரைத்துறையினர் புறக்கணித்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான் உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை.

மேலும் தமிழ் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், நடிகர்-நடிகைகள் யாரும் படப்பிடிப்புக்காக இலங்கை செல்லக்கூடாது என்றும் பிலிம்சேம்பர், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து அறிவித்துள்ளன.

இந்த கூட்டமைப்பு எடுத்த முடிவை இப்போது நடிகை அசின் மீறி இருக்கிறார்.

சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கும் ‘ரெடி’ என்ற இந்தி படத்தில், அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக, அசின் இலங்கை சென்று இருக்கிறார்.

முதலில் மொரீஷியஸில் நடக்கவிருந்த படப்பிடிப்பு இது. ஆனால் ராஜபக்சே அரசு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக சல்மான்கானுக்கு கூறியது. மேலும் தமிழ் மக்கள் அனுமதிக்கப்படாத வடக்கு இலங்கையின் சில பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது (இப்போது கண்ணி வெடியே வெடிக்காதா?)

கேரளாவை சேர்ந்த அசின், உள்ளம் கேட்குதே என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அதற்கு முன்பு வரை மலையாளம், தெலுங்கில் இரண்டாம் நிலை நாயகியாக ஓரிரு படங்களில் நடித்திருந்தார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி, போக்கிரி, கஜினி, தசாவதாரம் ஆகிய தமிழ்ப் படங்களின் மூலம் தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகி ஆனார். பிற மொழி படவுலகிலும் அவரை கவனிக்க ஆரம்பித்தனர்.

கஜினி (இந்தி) படத்தின் மூலம் மும்பை பட உலகுக்கு அசின் அறிமுகமானார். அவர் நடித்து அடுத்து வெளி வந்த ‘லண்டன் ட்ரீம்ஸ்’ என்ற இந்தி படம் படு தோல்வி அடைந்தது.

வேறு புதிய படங்கள் எதுவும் இல்லாமல் சும்மா இருந்த அசின் கவனம் மீண்டும் தமிழ் பட உலகம் பக்கம் திரும்பியது. விஜய் நடிக்கும் ‘காவல்காரன்’ என்ற படத்தில், அவர் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் நடித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு மீண்டும் ‘ரெடி’ படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இந்தி பட உலகில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்று கருதிய அவர், ‘காவல்காரன்’ படத்தின் இயக்குநர் சித்திக்கிடம் கேட்டுக் கொண்டு, அந்த படத்தின் கால்ஷீட் தேதிகளை இந்தி படத்துக்கு கொடுத்து விட்டார். போகவேண்டாம் என்ற விஜய்யின் வேண்டுகோளையும் புறக்கணித்தார்.

தமிழ் நடிகர்-நடிகைகள் யாரும் இலங்கை சென்று நடிக்கக் கூடாது என்ற கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறி, அசின் இலங்கை சென்று இந்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நடிகர் சங்க செயலாளர் ராதாரவியிடம் கேட்கப்பட்டது (ஏற்கெனவே ராதாரவி இதுகுறித்து நமக்களித்த பேட்டியை வெளியிட்டுள்ளோம்).

அதற்கு பதில் அளித்து, ராதாரவி கூறியதாவது:

“கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை அசின் மீறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி கூட்டமைப்புடன் கலந்து பேசிக் கொண்டுள்ளோம். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க தடை விதிப்பது குறித்து முடிவு செய்வோம்…” என்றார்.

சிவப்புக் கம்பள வரவேற்பு… Z பிரிவு பாதுகாப்பு… ஆனந்தத்தில் அசின்!

June 26, 2010 by  
Filed under Popcorn

மீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆண்டனி!

சிங்கள ராணுவம் தமிழீழ விடுதலைப் படையைத் தோற்கடித்ததைக் கொண்டாடும் சிங்களப் பாடலுக்கு இசையமைத்தார் என புலம்பெயர் தமிழர்கள் கோபப்பட்ட விஜய் ஆண்டனி, மீண்டும் விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இசையமைக்கிறார்.

வேட்டைக்காரன் படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்தததால், வேலாயுதத்துக்கும் இவரே இசையமைக்கட்டும் என்று விஜய் சொல்ல, அதற்கு இயக்குநர் ஜெயம் ராஜாவும் ஒப்புக்கொண்டாராம்!

சிவப்புக் கம்பள வரவேற்பு… Z பிரிவு பாதுகாப்பு… ஆனந்தத்தில் அசின்!

ந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள அசின் – சல்மான்கான் ஜோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துள்ளது ராஜபக்சே அரசாங்கம். உச்சபட்சமாக இஸட் பிரிவு பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.

ஐஃபா விழாவுக்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முதல்நிலை நடிகர்கள் போகாமல் புறக்கணித்தபோது விவேக் ஓபராய், சல்மான் கான் ஆகியோர் மட்டுமே இலங்கைக்குச் சென்றார்கள். அதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வடக்கு புணரமைப்புத் திட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை வழங்கியுள்ளது இலங்கை அரசு.

இந்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்குப் போன சல்மானும் விவேக்கும் இன்னும் கூட இந்தியாவுக்குத் திரும்பவில்லை. இருவரும் கிட்டத்தட்ட இலங்கையின் நிரந்தர விருந்தாளிகளாகிவிட்டனர்.

வடக்கு இலங்கையில் இதுவரை சினிமாக்காரர்களின் கால்படாத பல லொக்கேஷன்களில் சல்மான்கான் தனது ‘ரெடி’ படத்தை எடுக்கிவிருக்கிறார்.

உண்மையில் இந்தப் படத்தை மொரீஷியஸில் எடுக்கத் திட்டமிட்டிருந்தாராம் சல்மான். ஆனால் ராஜபக்சேயின் உபசரிப்பைப் பார்த்த பிறகு வேறு எந்த நாடும் வேண்டாம், இலங்கையே போதும் என்று முடிவு செய்துவிட்டாராம்!

‘இன்டர்வியூ வேணும்னா வரச் சொல்லுங்க!’

பொதுவாகவே, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் வீட்டு வாசலில் தவம் கிடந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள் மணிரத்னம் போன்ற இயக்குநர்கள். ஆங்கிலப் பத்திரிகைகள், குறிப்பாக வட இந்திய மீடியாவுக்கே முக்கியத்துவம் தருவார்கள்.

ராவணன் படத்துக்காக இதுவரை ஒருமுறை கூட மணிரத்னம் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்ததே இல்லை. வட இந்திய சேனல்கள் சிலவற்றுக்கு சென்னையில் அவர் அளித்த பேட்டியைத்தான் முன்னணி நாளிதழ் உள்ளிட்டவை வெளியிட்டன.

இந்த நிலையில் ராவண் அவுட்டாகிவிட்டது. ராவணன்தான் ஓரளவு கைகொடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் தனது பிஆர்ஓவை அழைத்த இயக்குநர், “தமிழ் பத்திரிகைகள் யாருக்காவது என்னுடைய பேட்டி வேணும்னா வரச் சொல்லுங்க” என்றாராம்.

அடடா… என்ன பெருந்தன்மை!

கருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும் சினிமாக்காரர்கள்!

June 15, 2010 by  
Filed under Popcorn

கருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும் சினிமாக்காரர்கள்!

டுத்த பாராட்டு விழாவுக்கு தயாராகிறார் முதல்வர் கருணாநிதி. அவருக்கு விழா எடுக்க சளைக்காமல் தயாராகிறது திரைப்படத் துறையும்.

இந்த முறை எந்த சாதனைக்காக விழா என்கிறீர்களா?

75 ஆண்டுகளுக்கும் மேல் ஓயாமல் எழுதி வரும் கருணாநிதியை கவுரவிக்கும் பொருட்டு அண்ணா விருது வழங்குகிறார்களாம்.

அகில இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி சென்னையில் நடக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டில் இந்த விருது வழங்கப்படும் என்றார் ‘ஃபெப்ஸி’ தலைவர் வி.சி.குகநாதன்.

இலங்கை போகும் அசின்!

லங்கையில் எந்தப் படப்பிடிப்பும் நடத்தக்கூடாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திப் பட ஷூட்டிங்குக்காக இலங்கையின் ‘புதிய டார்லிங்’ சல்மான்கான் அழைப்பின்பேரில் கொழும்பு செல்கிறார் அசின்!

அப்படின்னா தடை?

‘அதுபற்றி காவல்காரன் ஹீரோ விஜய்தானே கவலைப்படணும், நமக்கென்ன?’ என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது அம்மணி. விஷயம் அறிந்ததும் துடித்துப் போன ஹீரோ, நிலைமையின் தீவிரத்தை விளக்கியுள்ளார்.

ஆனால் அம்மணிக்கு, சல்மான்கானை விட மனசில்லை. இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லையாம்.

தொழில் அதிபர்களை விட்டுடறாங்க.. சினிமாக்காரங்களைப் பிடிச்சிக்கிறாங்க!

டைசியில் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது… ஆம், ஐஃபா விழாவுக்குப் போகக் கூடாது என்றெல்லாம் அறிக்கைவிட்ட சரத்குமாரின் உண்மையான மனநிலை பளிச்சென்று வெளியில் வந்துள்ளது.

‘ஆ ஊன்னா… இலங்கைக்குப் போகாதீங்க.. போனா தடைன்னு சொல்றாங்க. ஆனா தொழிலதிபர்கள் பிஸினஸ் பண்ணிக்கிட்டுதானே இருக்காங்க. இதில் நடிகர் நடிகைகளை மட்டும் டார்கெட் பண்ணா எப்படி? அவங்களும் தொழில்முறை கலைஞர்கள்தானே?’ என்று ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார் சரத்குமார்… அதாவது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்.

இந்தி நடிகர்கள் யாரும் இலங்கை பட விழாவுக்குப் போகக் கூடாது என்று அறிக்கை விட்டவர் இவர்தான். இதே அறிக்கையை ஆங்கிலத்தில் கடிதமாக்கி அதில் கையெழுத்துப் போட்டு அனுப்பியவரும் இவரேதான்.

நல்ல ஒற்றுமை…. தமிழனை அசைச்சிக்க முடியாது!

-என்வழி

சிவகாசி விவகாரம்: மன்னிப்பு கேட்கிறார் விஜய்!

July 17, 2009 by  
Filed under Cinema

சிவகாசி விவகாரம்: மன்னிப்பு கேட்கிறார் விஜய்!


சென்னை:
சிவகாசி படத்தில் வக்கீல்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதற்காக நடிகர் விஜய், இயக்குநர் பேரரசு vijay-apology2மற்றும் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டால் ஏற்றுக் கொள்வோம் என வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பிரச்சினையை முடிக்க, விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கும் சூழல் உருவாகியுள்ளது.

பட அதிபர் ஏ.எம்.ரத்னம் தயாரித்த படம் சிவகாசி. பேரரசு இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய், காமெடி நடிகர் பாஸ்கர், நடிகை அசின் ஆகியோர் நடித்தனர்.

2005-ம் ஆண்டு தீபாவளிக்கு இந்தப் படம் வெளிவந்தது.

படத்தில் வக்கீல் வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் நடித்திருந்தார். அவர் வருகிற காட்சிகள் வக்கீல்களின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இருப்பதாக தமிழ்நாட்டில் உள்ள 13 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் வக்கீல்கள் வழக்கு தொடர்ந்தனர்.

வக்கீல்களை தாக்கும் வகையில் படம் எடுக்கப்படவில்லை என்றும் ஆகவே 13 கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பட அதிபர் ரத்னம், நடிகர் விஜய், இயக்குனர் பேரரசு ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

விஜய் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?

இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விஜய் தரப்பில் வக்கீல் பீமனும், வக்கீல்கள் சார்பில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரனும் ஆஜர் ஆகி வாதாடினார்கள்.

பீமன்: சிவகாசி படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கவில்லை. அதிலுள்ள கருத்துக்கள் அவதூறு என்ற பிரிவில் வராது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரபாகரன்: இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆகியோர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்படவில்லை. வர்த்தகத்துக்காக மலிவான காமெடிக்கு வக்கீல்களை இழுத்துள்ளனர்.

ஆகவே இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 499, 500 பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை ஐகோர்ட்டு ரத்து செய்யக்கூடாது. ஏற்கனவே ஒரு புகைப்படத்தை விமர்சனம் செய்ததற்கே அவதூறு என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளது, என்றார் அவர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒரு வேளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? என்று பிரபாகரனிடம் கேட்டார்.

“பட அதிபர் ரத்னம், இயக்குனர் பேரரசு, நடிகர் விஜய் ஆகிய மூன்று பேரும் கோர்ட்டுக்கு வந்து எழுத்து மூலமாக மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்தால் அதை இக்கோர்ட்டு பரிசீலித்து எந்த உத்தரவை பிறப்பித்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு கோர்ட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்…”, என்று பதிலளித்தார் பிரபாகரன்.

பின்னர் வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதற்கிடையில், விஜய்யை எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து வைக்குமாறு ஏஎம் ரத்னம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நீதிபதியே இந்த யோசனையைத் தெரிவித்திருப்பதால், விஜய் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே அடுத்த விசாரணையின்போது விஜய் மன்னிப்புக் கேட்பார் எனத் தெரிகிறது.

Related Posts with Thumbnails